Friday 17 August 2018

நாட்டு நலனை பாதுகாக்கும் வெளியுறவுக் கொள்கை தேவை

நாட்டு நலனை பாதுகாக்கும் வெளியுறவுக் கொள்கை தேவை ஜி. ராமகிருஷ்ணன், சி.பி.ஐ.(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஒரு நாட்டினுடைய வெளியுறவுக் கொள்கை அந்நாட்டின் சுதந்திரம், இறையாண்மை, தேச நலன் ஆகிய விழுமியங்களை பாதுகாக்கக் கூடியதாக இருக்க வேண்டும். தற்போது அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக எடுத்து வரும் சில நடவடிக்கைகள் உலக நாடுகள் பலவற்றையும், இந்தியாவையும் கடுமையாக பாதிக்கின்றன. பாதிப்புக்குள்ளாகும் நமது தேச நலனை பாதுகாக்க மத்திய பா.ஜ.க அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் அமெரிக்க அரசோடு சமரசம் செய்து கொள்ளும் போக்கையே கடைபிடித்து வருகிறது. ஈரானுடன் ஏற்கனவே வளர்ச்சியடைந்த 7 நாடுகள் போட்ட அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலக்கி கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து விட்டார். ஏழு நாடுகளுக்கும் (ஜி7) ஈரானுக்கும் ஏற்பட்ட ஒப்பந்த விதிகளின் அடிப்படையில் ஈரான் அரசு செயல்பட்டு வருவதால் ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய 6 நாடுகள் அமெரிக்காவினுடைய அணுகுமுறையை ஏற்க முடியாது என்று தெரிவித்து விட்டன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்ட அமெரிக்கா அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. எந்த நாடும் ஈரானிலிருந்து இறக்குமதியோ அல்லது ஈரானுக்கு ஏற்றுமதியோ செய்யக் கூடாது என்பது தான் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையின் நோக்கம். இதையும் அந்தஆறு நாடுகள் ஏற்கவில்லை. அமெரிக்க அரசின் இந்த முடிவு இந்தியாவை கடுமையாக பாதிக்கிறது. காரணம், இந்தியா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது மட்டுமல்ல,வர்த்தகமும் செய்து வருகிறது. இரண்டு நாட்டு வளர்ச்சியையும் பாதிக்கும்.ஈரானில் ஜாபகார் துறைமுகத்தின் கட்டுமானப் பணியை இந்தியா நிறைவு செய்துள்ளது. இந்தியாவிலிருந்து கடல் வழியாக ஜாபகார் துறைமுகம் சென்று, அங்கிருந்து (பாகிஸ்தான் செல்லாமல்) ஆப்கானிஸ்தானத்திற்கு ஈரான் நாட்டு தரைவழியாக செல்ல முடியும். இதன் மூலம் ஆப்கானிஸ்தானத்திற்கும், இந்தியாவிற்கும் இடையிலும் வர்த்தக உறவு மேம்படும் வாய்ப்பு உள்ளது. தற்போது ஈரான் நாட்டுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை ஈரான், ஆப்கானிஸ்தான் நாட்டு நலன்களை பாதிப்பதோடு இந்த இரண்டு நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகத்தையும் கடுமையாக பாதிக்கிறது. இந்தியாவின் எண்ணெய் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.இவ்வாண்டு மார்ச் வரையிலான ஓராண்டில் 2 கோடியே 26 லட்சம் டன் கச்சாய் எண்ணெய் ஈரானிலிருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும் ஈராக் மற்றும் சவுதி அரேபியாவை விட ஈரான் ஒப்பீட்டளவில் நமது நாட்டிற்கு அருகில் உள்ளது. மேலும் ஈரானுடனான வர்த்தகம் டாலரை தவிர்த்து நமது நாணயம் ரூபாயிலேயே செய்யும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் செலவு குறைகிறது. ஐ.நா. மன்றத்தினுடைய தடையைத் தான் இந்தியா ஏற்கும்; தனிப்பட்ட நாடு விதிக்கும் நிபந்தனையை இந்தியா ஏற்காது என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது. அந்த முடிவில் உறுதியாக நிற்காமல் அமெரிக்காவினுடைய நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து தற்போது இந்தியா ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்தி விட்டது. இது தேச நலனுக்கு பாதகமானது. இதனை பகிரங்கமாக அறிவிப்பதற்கும் இந்திய அரசு தயாராக இல்லை. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் வெற்றி பெற்று பொறுப்பேற்ற பிறகு பல நாடுகளோடு ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்கள், உடன்பாடுகளிலிருந்து விலகி வருகிறது. கோயோட்டோ பருவநிலை மாற்றம் பேச்சுவார்த்தையிலிருந்து அமெரிக்கா விலகி விட்டது. மேலும் வட அட்லாண்டிக் நாடுகளோடு கையெழுத்திட்ட வர்த்தக ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்கா விலகி விட்டது. அமெரிக்கா உலக வர்த்தக நிறுவன விதிகளுக்கு முரணாக அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், கனடா, மெக்சிக்கோ, இந்தியா போன்ற உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவை உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா தொடுத்துள்ள ‘வர்த்தகப் போர்‘ என்றும், இதனால் உலகப் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும் எனவும் வல்லுனர்கள் கூறுகிறார்கள். 1948ல் மேலை நாடுகள் உருவாக்கிய ‘வரி மற்றும் வர்த்தக பொது ஒப்பந்தம்‘ 1995ல் உலக வர்த்தக நிறுவனமாகமாற்றப்பட்டது. இதில் தற்போது இந்தியா உள்ளிட்டு 164 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உலக நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதி, இறக்குமதி குறித்தும், வரி விதிப்புகள் குறித்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுகளை எட்டுவதோடு, நாடுகளுக்கு இடையிலான தாவாக்களுக்கும் தீர்வு காண்பதற்கு இந்த நிறுவனம் வழிவகுக்கிறது. ஆனால் சமீபத்தில் அமெரிக்க அரசு உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளுக்கு முரணாக எதேச்சதிகாரமாக இறக்குமதி வரியை உயர்த்தியதை எதிர்த்து, சீனா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டு பதிலடி கொடுக்கின்ற வகையில், அமெரிக்கப் பொருட்கள் மீது இறக்குமதி வரியை அதிகரித்துள்ளன. அமெரிக்காவை பெரும்பான்மையாக நம்பியிருக்கும் கனடா, மெக்சிக்கோ நாடுகளும்கூட அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளன. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 25 சதவீதமும், அலுமினியத்திற்கு 10 சதவீதம் வரியை அமெரிக்க அரசு உயர்த்தியுள்ளது. இது இந்தியாவினுடைய ஏற்றுமதியை பாதிக்கிறது. ‘ இத்தகைய பின்னணியில் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை உயர்த்தினால், நாம் இறக்குமதி செய்யும் அமெரிக்க பொருட்களுக்கு இந்திய அரசு வரியை உயர்த்த வேண்டும். உலக வர்த்தக நிறுவனத்தின் விதிப்படி நமது நாட்டுக்கு இந்த உரிமை உள்ளது. இத்தகைய முறையில் நமது நாட்டின் நலனை பாதுகாப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி குறித்த பிரச்சினையிலும், இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அரசு வரியை உயர்த்தியுள்ள பிரச்சினையிலும் இந்திய தேசத்தின் நலனை பாதுகாக்கக் கூடிய ஒரு உறுதியான நிலைபாட்டை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்பதே தேசப்பற்றுள்ள மக்களின் எதிர்பார்ப்பு.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts