Thursday 16 August 2018

சுதந்திரத்துக்கு வித்திட்ட புரட்சி

சுதந்திரத்துக்கு வித்திட்ட புரட்சி வரலாற்று ஆய்வாளர் நரசய்யா 1942-ம் ஆண்டு ஜூலை 14-ந்தேதி கூடிய காங்கிரஸ் செயற்குழு ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. தொடர்ந்து ஆகஸ்டு 8-ந்தேதி நடந்த காங்கிரஸ் பொதுக்குழுவில் செயற்குழுவின் தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் குறித்து பேசிய காந்தியடிகள், ‘நீங்கள் ஒவ்வொருவரும் இந்த நிமிடத்திலிருந்து உங்களையே சுதந்திரம் பெற்றவர்களாக நினைத்துக் கொள்ள வேண்டும். முழு சுதந்திரம் தான் நமது லட்சியம்.

ஆகையால் நாம் செய்வோம் அல்லது செத்து மடிவோம்’ என்றார். இந்த சொல்லாட்சி, இந்தியர்களை போராட்டத்தில் முழு மனதுடன் இறக்கியது. ஆனால் சில காங்கிரஸ்காரர்கள் இதை விரும்பவில்லை. முக்கியமாக, காந்தியடிகளுக்கு மிக நெருக்கமாக கருதப்பட்ட ராஜாஜியே இதை எதிர்த்தார். காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் முடிந்து நேரம் நள்ளிரவை எட்டிக்கொண்டு இருந்தது. காலைப் பொழுது விடியும் முன்னே, காந்தியடிகள், ஆசாத் போன்ற முக்கிய தலைவர்களை ஆங்கிலேய அரசு அதிரடியாக கைது செய்தது. அப்போது கைது செய்யப்பட்ட நேரு பல மாதங்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. ஆங்கில அரசு காங்கிரசை தடைச்சட்டம் மூலம் செயலற்றதாக ஆக்கியது.

ஆங்கிலேய அரசின் கைது நடவடிக்கை போராட்டத்தை வலுவிழக்க செய்வதற்கு பதில், மக்களை இன்னும் தூண்டியது. மக்கள் அனைவரும் போராட்ட களத்தில் குதிக்க தொடங்கினர். அதன்பிறகே விடுதலைக்கான போராட்டம் வெகுஜன மக்களின் போராட்டமானது. தமிழகத்தில் ராஜாஜி அந்த இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றாலும், தென்னகத்துக் காங்கிரஸ் கட்சி இப்போராட்டத்தை தீவிரமாகவே முன்னெடுத்தது. காந்தியடிகளின் தீர்மானத்தை ஆதரிக்காது, ராஜாஜி காரியக் கமிட்டியில் இருந்தும், ராஜினாமா செய்து விலகிக் கொண்டார்.

தென்னிந்தியாவில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் விளைவு ஆந்திராவின் பீமாவரத்தில் (மேற்கு கோதாவரி ஜில்லா) அதிகமாக இருந்தது. கோவையிலும் ராணுவ விமானத் தளம் தீவிரவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டது. அச்சம் கொண்ட ஆங்கில அரசு, அதன் விளைவாக அந்தப் பகுதியிலிருந்த எல்லா ஆண்களையும் கைது செய்து ஒரு சிறிய இடத்தில் அடைத்தது. அப்போது ராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 30 பேர் இறந்தனர். தமிழ் நாட்டின் எல்லா எந்திரத் தறிகளின் (மில்ஸ்) தொழிலாளிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அன்றைய நன்கறியப்பட்ட பக்கிங்க்ஹாம் கர்நாடிக் மில்ஸ் மூடப்பட்டது. ராமநாதபுரம் பகுதியில் தபால் தந்தி இலாகா முற்றிலும் மூடப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இப்போராட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர். கல்லூரிகள் மூடப்பட்டன. அந்த சமயத்தில் அரசு ஆணையின் படி ராணுவம் கட்டுப்பாட்டிற்காக அனுப்பப்பட்டது.

அன்று ராணுவம் செய்த அட்டூழியம், அடக்குமுறைக்கு அளவே கிடையாது என்று கூறப்பட்டது. இதை பற்றி டி.டி.கிருஷ்ணமாச்சாரி சொன்னபோது, ‘கிராமங்கள் கொளுத்தப்பட்டன. ராணுவத்தினரால் கிராமங்கள் சூறையாடப்பட்டன. ஆண்களெல்லாம் கைது செய்யப்பட்ட நிலையில், பெண்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளானார்கள்’ என்றார். மேலும், பலரின் மனைவிமார்கள் போலீஸ்காரர்களால் கற்பழிக்கப்பட்டார்கள் என்றும், மிகக் கேவலமாக நடத்தப்பட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கம் வன்முறையைத் தூண்டிவிட்டதாகப் பலர் குற்றம் சாட்டினர்.

ஆனாலும், இரண்டே மாதத்தில் நசுக்கப்பட்ட இவ்வியக்கம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய பகுதியாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆங்கிலேயர்களால் கர்மவீரர் காமராஜர் தேடப்பட்டார். அவர் அவ்வளவு எளிதாக போலீசாரிடம் அகப்பட விரும்பவில்லை. உடனடியாக அகப்படவும் இல்லை. அவர் தலைமறைவாகி மாறுவேடத்தில் பல இடங்களில் போராட்டத்திற்கான உதவிகளை ரகசியமாக மேற்கொண்டார். காமராஜருக்கு உதவிய முக்கியஸ்தர்களில் ஒருவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த கல்யாணராமையர் ஆவார். அவரைத் தவிர அதே ஊரின் ஜனாப் முகம்மது சுலைமான் கூட இவ்வாறான இயக்கத்திற்கு காமராஜரின் உறுதுணையாளராகவும், ஊன்றுகோலாகவும் இருந்தார்.

காமராஜரைத் தேடிக் கொண்டிருந்த போலீஸ் விருது நகர் அருகே உள்ள கிராமத்தில் அவரை இறுதியில் கைது செய்தது. ஆங்கிலேயர் நோக்கில் இயக்கம் ஒடுக்கப்பட்டாலும், இந்தியாவில் மக்கள் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை காங்கிரசுக்கு ஏற்பட்டது. அதே போல மக்களும் இப்போராட்டத்தைத் தாமாகவே ஏற்றனர். ஆனால் எதிர்பாராத இவ்விளைவுகளாலும், மக்கள் அவதியையும் கண்டு மனம் சோர்ந்த காந்தியடிகள், தாம் சரியாக ஏற்பாடுகள் செய்யவில்லை என எண்ணி அதற்குப் பிராயச்சித்தமாக 21 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

ஒரு உலக போர்போல, இவ்வியக்கத்தை கட்டுப்படுத்த ஆங்கில அரசு ராணுவத்தை ஏவி மூர்க்கத்தனமாக களத்தில் இறக்கியது என்பதை நினைக்கையில் அவர்கள் இவ்வியக்கத்தால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம். காங்கிரஸ் தலைவர்கள் சிறையிலிருந்த கணத்தில் இரண்டாவது நிலையிலிருந்த ராம் மனோஹர் லோஹியா போன்றவர்கள் தலைமையேற்றனர். ஆங்கில அரசு இந்திய பாதுகாப்புச் சட்டம் 41-ன் கீழ், அடக்குமுறையைத் தீவிரமாக முடுக்கி விட்டது. இதன்படி பத்திரிகைகள் கூடக் கட்டுப்பாட்டில் வந்தன. ஆங்கில அரசு 12-3-1943 அன்று அளித்த அறிக்கையின் படி, இவ்வியக்கத்தின் முடிவில், இந்தியாவில் மொத்தமாக 538 தடவை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 940 மனிதர்கள் கொல்லப்பட்டனர். 459 பேர் காயமடைந்தனர் என்பதாகும். ஆனால் உண்மையில் இதை விட மிக அதிகமாகவே நடந்தன. எது எப்படியோ, சுதந்திரத்துக்கு வித்திட்ட இந்த ஆகஸ்டு புரட்சி, இந்திய அரசியலில் ஓர் திருப்புமுனை என்றே கொள்ளலாம். நாளை (ஆகஸ்டு 15 -ந் தேதி) சுதந்திரதினம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts