Thursday 16 August 2018

நம்பிக்கை கொடுக்கும் பிரதமரின் திட்டம்

விவசாயம் என்பது ஒவ்வொரு விவசாயியின் வாழ்வாதாரமாக மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கான முதுகெலும்பாகவும் விளங்குகிறது. நாட்டின் பொருளாதாரம் அல்லது முன்னேற்றம் என்பது தொழில் வளர்ச்சியையும், விவசாய வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளது. ஏறத்தாழ பாதிக்கும்மேல் உள்ள மக்கள் விவசாயத்தையே நம்பியிருக்கிறார்கள். மீதி பாதிபேர் மட்டுமல்லாமல், 100 சதவீத மக்களும் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை சார்ந்தே இருக்கிறார்கள். ஏனெனில், உணவு இல்லாமல் நிச்சயமாக உயிர்வாழ முடியாது. எனவே, உணவு உற்பத்தியில் ஏற்படும் சிறு பின்னடைவுக்கூட ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், வேகமான விவசாய வளர்ச்சியானது, நாட்டில் வறுமையை போக்கும் ஒரு உந்துசக்தியாகவும் விளங்குகிறது. இந்தநிலையில், விவசாயி விளைவிக்கும் விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைக்காததால், ஏராளமான விவசாயிகள் பரம்பரை பரம்பரையாக வைத்திருந்த விவசாய நிலத்தை ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்றுவிட்டு, வேறுதொழில் பார்க்கச்செல்லும் அவல நிலையும் நாட்டில் நிலவிவருகிறது. இதை நன்கு அறிந்த காரணத்தினால்தான், பிரதமர் 2022-ல் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று உறுதியளித்தார். விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்காக தன் நடவடிக்கையையும் தொடங்கிவிட்டார். சமீபத்தில் நெல், நிலக்கடலை, உளுந்தம்பருப்பு, மக்காச்சோளம், பருத்தி, துவரம்பருப்பு, கம்பு, கேழ்வரகு, பாசிப்பருப்பு, சூரியகாந்தி விதை, எள், சோளம், சோயாபீன்ஸ், கருஞ்சீரகம் ஆகிய உணவு தானியங்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி உத்தரவிட்டார். இது முழுமையாக போதாது என்று விவசாயிகள் மனதில் இருந்தாலும், அந்த இலக்கை நோக்கி வேகமாக செல்லப்போகிறார் என்பதை ‘தினத்தந்தி’க்கு அவர் அளித்த பேட்டியில் கோடிட்டு காட்டிவிட்டார். வேளாண்சுழற்சி மூலமாக விவசாயிகளின் நலனை உயர்த்துவதற்காக நடவடிக்கை எடுப்பதோடு, 4 அம்ச திட்டங்கள் மூலம் விவசாயியின் வருமானத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்துவருவதாக கூறியிருக்கிறார். முதலாவதாக விதை, உரம், பூச்சிமருந்து போன்ற இடுபொருட்கள் விலைகுறைப்பு, 2-வதாக வேளாண் தொடர்பான துணை தொழில்கள், அதாவது கோழிவளர்ப்பு, மாடுவளர்ப்பு, மீன்வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் போன்ற பல துணைதொழில்கள் மூலமாக விவசாயிகள் கூடுதல் வருமானம் பெருவதை ஊக்குவித்தல், 3-வதாக அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை மிகவும் குறைத்தல், 4-வதாக விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைக்கச்செய்தல் போன்ற தன் நோக்கத்தை அறிவித்துள்ளார். நம்பிக்கையளிக்கும் இந்த 4 நோக்கங்களையும் நிறைவேற்றுவதையே இலக்காக கொண்டு மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் இணைந்து செயல்பட்டால், விவசாயிகளின் வருமானம் 2022-ல் அல்ல அதற்கு முன்பே இரட்டிப்பாகும் நிலை ஏற்பட்டுவிடும். ஏற்கனவே மாநில அரசு நிறைவேற்றிய வேளாண் விளைபொருட்கள், சந்தைப்படுத்துதல் சட்டத்தை மிகத்தீவிரமாக நிறைவேற்றவேண்டும். மின்னணு முறையிலான தேசிய வேளாண்சந்தை முயற்சி பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி, கிராமத்திலுள்ள விவசாயிகள்கூட அதன் பலனை பெறச்செய்யவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயம் செழிக்க வேண்டுமென்றால், அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு, நீர்ப்பாசன வசதிகள் மேம்படுத்தப்படவேண்டும். எனவே, அடுத்த 3 ஆண்டுகளுக்கு பிரதமரின் 4 அம்சதிட்டங்களுக்காக முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தினால், விவசாயிகளின் வாழ்வில் வளம் பெருகுவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரமும் உயரும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts