Thursday 16 August 2018

வாழ்வதற்கு வசதியான நகரங்கள்

மத்திய அரசாங்கத்தின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், இந்தியாவில் உள்ள 111 பெரிய நகரங்களில் மக்கள் வாழ்வதற்கு தேவையான வசதிகள் எந்தவகையில் இருக்கிறது? என்பதை ஆய்வுசெய்து முதல் தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பீடு கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி தொடங்கியது. நிர்வாகம், அடையாளம் மற்றும் கலாசாரம், கல்வி, பொதுசுகாதாரம், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு, வீட்டுவசதி மற்றும் உள்ளடக்கிய வசதிகள் பொதுவெளியிடங்கள், நிலத்தின் பயன்பாடு, மின்சார சப்ளை, போக்குவரத்து, குடிநீர் சப்ளை, கழிவு நீர்நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை நிர்வாகம், குறைவான மாசு ஆகிய 15 பிரிவுகளின் கீழ் 78 குறியீடுகளை வைத்து அனைத்து நகரங்களிலும் மதிப்பீடு செய்யப்பட்டது. ஒட்டுமொத்த வசதிகளையும் கணக்கிட்டு பார்த்த பட்டியலில், தமிழ்நாட்டிலுள்ள சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 12 மாநகராட்சிகளில், ஒரு மாநகராட்சியும் முதல் 10 இடங்களில் இல்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியதாகும். திருச்சி 12-வது இடத்திலும், சென்னை நகரம் 14-வது இடத்திலும், கோயம்புத்தூர் (25), ஈரோடு (26), மதுரை (28), திருப்பூர் (29), திருநெல்வேலி (37), திண்டுக்கல் (40), சேலம் (42), தஞ்சாவூர் (43), தூத்துக்குடி (44), திண்டுக்கல் (48) என்ற பட்டியலிலும் இருக்கிறது. 40 லட்சம் மக்கள் தொகைக்குமேல் உள்ள பெருநகரங்களின் பட்டியலில் சென்னை 2-வது இடத்தில் இருக்கிறது. சென்னை நகரத்தை பொறுத்தமட்டில், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில் மதிப்பெண்களை கூட்டியிருந்தாலும், மின்சார வசதி, வீட்டுவசதி, வெளியிடங்கள், திடக்கழிவு மேலாண்மையில் வசதிகுறைவு இருக்கிறது என்பதுதான் அந்தப்பட்டியல் காட்டும் உண்மையாகும். மருத்துவவசதியை கணக்கிட்டால், சென்னை நகரம் மிகஉயர்ந்த வசதிகளில் இருக்கிறது. உலக சுகாதாரநிறுவனம் 10 ஆயிரம் மக்களுக்கு 10 டாக்டர்கள் இருக்கவேண்டும் என்று நிர்ணயித்து இருக்கிறது. ஆனால், சென்னையில் 18 டாக்டர்கள் இருக்கிறார்கள். சுகாதாரத்தில் திருச்சி முதலிடத்தில் இருக்கிறது. நகரை சுத்தமாக வைத்ததில் திருச்சி மாநகராட்சியின் சேவையை பாராட்ட வேண்டுமென்றாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் நிச்சயமாக செய்திருக்க முடியாது. இதுபோல, குடிநீர் வழங்குவதில் ஈரோடு முதல் இடத்திலும், வீட்டுவசதி மற்றும் உள்ளடக்கிய வசதியில் வேலூர் 3-வது இடத்திலும் இருக்கிறது. அடையாளம் மற்றும் கலாசாரத்திலும், குறைவான மாசு என்பதிலும் திருச்சி 3-வது இடத்திலும், மின்சார சப்ளையில் 2-வது இடத்திலும், போக்குவரத்து வசதியில் சென்னை 3-வது இடத்திலும் இருக்கிறது. மாநகராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதும் இந்தநிலைக்கு முக்கிய காரணமாகும். தமிழக அரசும், மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும், இந்த மதிப்பீட்டை அடிப்படையாக வைத்து, 15 பிரிவுகளிலும் முதல்இடத்திற்கு வரவேண்டும் என்பதை இலக்காகக்கொண்டு செயல்படவேண்டும். மத்திய அரசாங்கம் மாநகராட்சிகள் பட்டியலை எடுத்துக்கொண்டதைப்போல தமிழக அரசு, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் இதுபோன்ற வசதிகளை அடிப்படையாக வைத்து ஒரு தரவரிசை பட்டியல் தயாரித்து வெளியிட்டால், நிறை இருந்தால் பாராட்டவும், குறை இருந்தால் ஊக்குவிக்கவும் முடியும். Location: Chennai Edition: Tiruvallur Date : 15/08/2018 Page : 04 Stories : 4 சுதந்திரத்தின் மாண்பைக் காப்போம் வாழ்வதற்கு வசதியான நகரங்கள் வேண்டவே வேண்டாம் சூதாட்டம் எதிரொலி

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts