எண்ணங்கள் தூய்மையாக வண்ணங்கள் தீட்டுவோம்!
பேராசிரியர் எ.சோதி
இன்று (ஆகஸ்டு 2-ந்தேதி) தேசிய வண்ண புத்தக தினம்.
வண்ண மயமான உலகத்தில் நாம் வாழ்கிறோம். பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களின் அழகில் மயங்காதோர் யார்? நீல வானும் நீலக் கடலும் நம் கண்ணைவிட்டு நீங்குமா? வானவில்லும் மயிலின் தோகை விரிப்பும் பல வண்ணங்களை நம் கண் முன் நிறுத்தவில்லையா?
சிவப்பு, நீலம், பச்சை, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை இப்படி ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு அழகு.
வண்ணப் பொடிகளை ஒருவர் மேல் ஒருவர் வாரி இறைத்து மகிழ்ச்சியில் திளைக்கும் திருவிழாவாக ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாதம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பல வண்ணக் கோலங்களால் அழகு படுத்துகிறார்கள். வண்ணங்களுடன் கற்பனையும் கலை உணர்வும் நிறைந்து தெருவே அழகில் மிளிர்கிறது.
வண்ணங்களில் எல்லோரும் ஈடுபாடு காட்டினாலும் குழந்தைகளே அதிக ஈடுபாடு காட்டுகின்றன. வண்ண வண்ணப் பொம்மைகளுடன் விளையாடுவதில் குழந்தைகளுக்குத்தான் எவ்வளவு மகிழ்ச்சி!
வண்ணங்களில் உள்ள ஈடுபாட்டால் வண்ணம் தீட்டுவதிலும் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்று வெளிவரும் நாள், வார, மாத இதழ்கள் சிறுவர் பகுதியில் வண்ணம் தீட்டும் பகுதி இடம் பெறுகிறது. அவர்களின் வண்ணம் தீட்டும் ஆர்வம் வீட்டுச் சுவரையும் விட்டு வைப்பது இல்லை.
புத்தகங்களில் வண்ணங்கள் தீட்டுவது குழந்தைகளுக்கே உரியது. பெரியவர்களுக்கு உரியது அல்ல என்று நினைக்கிறோம். இந்த எண்ணம் தவறு. பெரியவர்களும் புத்தகங்களில் வண்ணம் தீட்டுவதைப் பொழுதுப்போக்காகக் கொள்ள வேண்டும். இந்த எண்ணத்தில்தான் தேசிய வண்ணப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
வண்ணங்களின் அருமை, பெருமைகள் எங்களுக்கும் தெரியும். குழந்தைகளைப் போலப் புத்தகங்களில் வண்ணம் தீட்ட நாங்களும் குழந்தைகளா? பெரியவர்களாகிய எங்களைக் குழந்தைகளாகச் சொல்கிறீர்களே. இது நியாயமா? என்ற கேள்வி எழும்.
குழந்தைகளுக்கு எண்ணற்ற கதைகள் சொன்னவர் ஈசாப். அவருடைய கதைகள் உலகப் புகழ் பெற்றவை. வாய்ப்பு கிடைத்தால் குழந்தைகளுடன் குழந்தையாக அவர் விளையாடி மகிழ்வார்.
குழந்தைகளுடன் அவர் விளையாடுவதைப் பார்த்த ஒருவர் ‘எவ்வளவு பெரியவர் நீங்கள்? குழந்தைகளுடன் விளையாடுகிறீர்களே’ என்று கேட்டார்.
அதற்கு ஈசாப், ‘வில்லில் எப்போதும் நாணைப் பூட்டி வைப்பார்களா?’ என்று கேட்டார்.
‘எப்போதும் பூட்டி வைக்க மாட்டார்கள். வேட்டைக்குச் செல்லும் போதுதான் வில்லில் நாணைப் பூட்டி இருப்பார்கள். வேட்டை முடிந்ததும் நாணை அவிழ்த்து விடுவார்கள்’ என்று பதில் சொன்னார் அவர்.
‘எப்போதும் வில்லில் நாணைப் பூட்டி இருந்தால் நாண் தளர்ந்து விடும். வேட்டைக்குப் பயன்படாது. அதைப் போலத்தான் நானும் செயல்படுகிறேன். குழந்தைகளோடு குழந்தையாக விளையாடுகிறேன். மன அழுத்தம், பரபரப்பில் இருந்து விடுபடுகிறேன். கவலை நீங்கி மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறேன்’ என்றார் ஈசாப்.
குழந்தைகளைப் போலப் பெரியவர்களாகிய நாமும் வண்ணம் தீட்டுவதைப் பொழுதுபோக்காகக் கொண்டால் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கலாம்.
காலம் மாறுவது போல எண்ணங்களும மாறுகின்றன. பெரியவர்களும் வண்ணம் தீட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
அமெரிக்காவில் பெரும்பாலான பெரியவர்கள் விரும்பும் சிறந்த பொழுதுபோக்காக வண்ணம் தீட்டுதல் உள்ளது.
இன்று அவர்களுக்காக வண்ணம் தீட்டும் புத்தகங்கள் நிறைய வெளிவருகின்றன. நுணுக்கமாக வண்ணம் தீட்டும்படி அவை அமைந்துள்ளன. கலைத்திறமையை வளர்த்து அவர்களைப் பெருமைப்படுத்துகின்றன.
நீண்ட பயணத்தின் போது வண்ணம் தீட்டும் புத்தகம் இருந்தால் போதும். பொழுது போவது தெரியாது. தனிமையை உணர மாட்டோம்.
வண்ணம் தீட்டும் பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த மருந்து என்று உளவியல் மருத்துவர்கள் சொல்கிறார்கள். வண்ணம் தீட்டும் பயிற்சியை யோகம் என்றும் தியானம் என்றும் புகழ்கிறார்கள்.
சொற்களால் வெளிப்படுத்த முடியாதவற்றை வண்ணம் தீட்டுவதால் வெளிப்படுத்தலாம். நம்முள் உள்ள கலை உணர்வை வெளிக்கொண்டுவரும் முயற்சி இது.
இன்று பெரியவர்கள் பலர் வண்ணம் தீட்டுவதை இனிய பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் இதில் ஈடுபாடு காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.
நண்பர்களுடன் சேர்ந்து வண்ணம் தீட்டும் குழு அமையுங்கள். ஒன்றாக வண்ணம் தீட்டுங்கள். எண்ணங்கள் தூய்மையாகும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளையுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment