Thursday 16 August 2018

சபரிமலையில் பெண்களுக்கான தடை சரியே...!

சபரிமலையில் பெண்களுக்கான தடை சரியே...! உச்சநீதிமன்ற மூத்த வக்கீல் கே.பராசரன் கடவுள் தேசம் என்று புகழப்படும் கேரள மாநிலத்தில் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் உலக பிரசித்திபெற்றது. சபரிமலை அய்யப்பன் சன்னிதானத்துக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் சபரிமலையில் உள்ள நடைமுறைகளை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்கள். இந்த நிலையில், சபரி மலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்தும், அனைத்து பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியும் இந்திய இளம் வக்கீல்கள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, மூத்த வக்கீல் கே.பராசரன் முன்வைத்த வாதங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் தனது வாதத்தில் முன்வைத்த விவரம் வருமாறு:- சபரிமலையில் வணங்கப்படும் சுவாமி அய்யப்பன் விக்கிரகம் ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி தன்மை கொண்டதாகும். இதனால் அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் சடங்கு மற்றும் வெகுநீண்ட பாரம்பரியத்தின் அடிப்படையில் 10 வயதில் இருந்து 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை. இது பகுத்தறிவின் அடிப்படையில் கொண்ட நம்பிக்கையா இல்லையா என்பது அல்ல. இது மத நம்பிக்கையின் அடிப்படையிலானது. இந்த ஆலயத்தின் மூல விக்கிரகத்தின் புனிதத்தன்மையுடன் தொடர்புடையது. மதம் என்பது நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது. மத ரீதியிலான நம்பிக்கையானது, அதில் நம்பிக்கை கொண்டவர்களால் புனிதமாக கருதப்படுவது. சபரிமலையில் பெண்களுக்கான அனுமதி மறுப்பு என்பது பெண்மை மீதான வெறுப்பு அல்லது பாரபட்சத் தன்மை கொண்ட பார்வையால் விளைந்தது என்ற வாதம் முற்றிலும் தவறானது. கேரளா மாநிலத்தின் மகளிர் சமூக ரீதியான பெரும் முன்னேற்றம் கண்டவர்கள். அவர்களுடைய கல்வியின் பின்புலத்தில் கேரளப் பெண்களில் பெரும்பாலானோர் சபரிமலையில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. கேரளாவில் உள்ள இந்து சமுதாயத்தினர் தாய்வழி மரபு முறைமையை கடைப்பிடிப்பவர்கள். எனவே, அங்கு பெண்கள் கட்டுப்பாட்டுக்குள் அடைக்கப்படுகின்றனர் என்று கூறுவது ஆதாரமற்றது. தவறானது. எனவே, இந்த விஷயத்தை ஆணாதிக்க பார்வையிலோ, வெறுப்பின் அடிப்படையிலோ, பாரபட்சத்தின் அடிப்படையிலோ அணுகுவது கூடாது. சபரிமலை ஆலயத்தில் உள்ள சாமி அய்யப்பன் விக்கிரகம் நைஷ்டிக பிரம்மச்சரியத்தன்மை கொண்ட விக்கிரகம் என்பதால் 10 வயதில் இருந்து 50 வயது வரையிலான பெண்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுக்கும் நடைமுறை பெண்கள் மீதான வெறுப்பு அல்லது ஆணாதிக்கம் சார்ந்தது அல்ல. இது அங்குள்ள சாமி அய்யப்பன் விக்கிரகத்தின் குணாதிசயத்தின் அடிப்படையில் உருவானதாகும். சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு விக்கிரகத்துக்கும் தனித்துவம் கொண்ட குணாதிசயம் உண்டு. சாமி அய்யப்பன் தீவிர நைஷ்டிக பிரம்மச்சாரி. ராமாயணத்தில் சுந்தர காண்டத்தில் நைஷ்டிக பிரம்மச்சரியம் என்பதற்கு மிகவும் விரிவான விளக்கம் உள்ளது. மேலும் ஆதி சங்கரர் உரையின் அடிப்படையில் அய்யப்பன் பெரும் யோகி ஆவார். அய்யப்பன் விக்கிரகத்தின் தீவிர பிரம்மச்சரிய தன்மை தனித்துவத் தன்மை கொண்டது. சட்டரீதியாக அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து உரிமையும் கொண்டதாகும். சபரிமலைக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்க வேண்டும். எனவே, அவர்கள் பெண்களை முற்றாக விலக்கி வைக்க வேண்டும். அங்கு அனைத்து பெண்களுக்கும் தடை விதிக்கப்படவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கும் நடைமுறையை கோர்ட்டு ரத்து செய்தால் அது அந்த ஆலயத்தின் அடிப்படை தன்மையில் மாறுதல்களை ஏற்படுத்தும். அரசியல் சட்டப்பிரிவு 25(1) வழங்கும் அடிப்படை உரிமை இந்த ஆலயத்தின் பக்தர்களுக்கு மறுக்கப்படும் விளைவை ஏற்படுத்தும். இது ஆலயம் தொடர்பான பிரச்சினை சமூகப்பிரச்சினை அல்ல. இது மதம் சார்ந்த பிரச்சினையாகும். ஒரு ஆலயத்தில் வழிபடுகிறவர்களின் பார்வை மட்டும் இன்றி அங்கு வழிபடும் விக்கிரகத்தின் அடிப்படைத் தன்மையும் மிகவும் முக்கியமானதாகும். பக்தர்கள் யாராவது பிரம்மச்சாரியின் விக்கிரகத்தை தான் வழிபடவில்லை என்று நினைத்தால், அவர் அந்த ஆலயத்துக்கு வழிபடுவதற்கு போகத் தேவை இல்லை. கேரளாவில் உள்ள மற்ற அய்யப்பன் ஆலயங்களில் எந்தப் பாகுபாடும் இன்றி வழிபடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையில் 10 வயதில் இருந்து 50 வயது வரையில் உள்ள பெண்கள் செல்வது என்பது சாமி அய்யப்பன் மேற்கொண்ட தவத்தை கலைக்கும் முயற்சியாகும். அங்கு தவத்தில் உள்ள சாமி அய்யப்பன் பெண்களின் வருகையை விரும்பவில்லை என்பது ஐதீகமாகும். சாமி அய்யப்பன் மேற்கொள்ளும் நைஷ்டிக பிரம்மச்சரியத் தன்மை அரசியல் சட்டத்தின் அடிப்படையில் காக்கப்படுகிறது. இதில் நீதித்துறை குறுக்கிட முடியாது. ஒரு நாட்டின் குடியரசு மதத்தையும் அது சார்ந்த மரபையும் பாதுகாக்க வேண்டும். தகுதி மற்றும் அறிவாற்றல் எங்கிருந்து வந்தாலும் அதனை இந்துமதம் மதித்து ஏற்றுக் கொள்கிறது. செயல்பாட்டாளர்களின் குரலைக் கேட்கும் நீதிமன்றம் ஒரு மரபை காக்கக் கோரும் குரல்களையும் மதிக்க வேண்டும். நம் முன்னோர்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர்களை விட அனைத்தும் நமக்கு அதிகம் தெரியும் என்றும் நமக்கு நாமே தீர்மானித்துக் கொள்வது தவறானதாகும். இது போன்ற தேவைக்கு அதிகமான செயல்பாடுகள் விஸ்வாமித்திரரின் திரிசங்கு சொர்க்கம் போன்ற நிலையை ஏற்படுத்தி விடும். எங்கும் இல்லாமல் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுவிடும். வாதத்தை முடிப்பதற்கு முன்பு ஒன்றை கூற விரும்புகிறேன். நான் புதிய வழக்குகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்தி விட்டேன். அரசியல் சட்டத்தின் மீது நான் கொண்ட அளவற்ற அபிமானத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கை நான் ஏற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் தனது வாதத்தை முன்வைத்தார்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts