சுமந்தவர்களை சுமையாக்கலாமா?

சுமந்தவர்களை சுமையாக்கலாமா? கே.சண்முகசுந்தரம், தமிழ்நாடு சமூகநலத்துறை உயர்நிலை ஆலோசனைக்குழு உறுப்பினர் “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்! இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற கவிஞரின் வாக்கிற்கிணங்க நம் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் இன்புற்று வாழ்வதே நமக்குச் சிறப்பு. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியவர் வரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இது பொருந்தும். வயது முதிர்ச்சி என்பது இயற்கையானது. இன்றைய இளைஞன் எதிர்கால முதியவன் என்பது பொதுவிதி. நம் நாடு அனைத்துத் துறைகளில் ஓரளவு வளர்ச்சி கண்டிருப்பதற்கு இன்றைய முதியவர்கள் அன்று ஆற்றிய பணிகளே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அகில உலகமே நம் நாட்டில் நிலவும் கூட்டுக் குடும்ப முறையைப் பார்த்து வியந்து வரும் நிலையில், தற்போது கூட்டுக் குடும்ப முறை, மக்களிடம் ஏற்பட்டுவரும் சகிப்புத் தன்மை குறைவால் அருகி வருகிறது. கூட்டுக் குடும்பம் என்பது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, குடும்பத் தலைவன், தலைவி மற்றும் குழந்தைகள் என அனைவரையும் கொண்டது. இம்முறையில் குடும்பத்தில் அனைவரிடமும் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு, ஒருவருக்கொருவர் உதவி, கூட்டு ஆலோசனை என அனைத்து நல்ல அம்சங்களும் காணப்பட்டதால் குடும்பம் செழித்தது. வளர்ச்சி காணப்பட்டது. குடும்பத்தில் பெரியவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட்டனர். ஆனால் இன்று பிள்ளைகளுக்கு பெற்றோர்களே பெரும் சுமையாக காணப்படுகின்றனர். இதனால் பெற்றோர்களையும் தாத்தா பாட்டிகளையும் வெறுத்து ஒதுக்கும் நிலை பரவலாகப் பெருகிவருகிறது. இதனால் மூத்த குடிமக்கள் நலனும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விட்டது. இதன் தொடர்ச்சியாக கணவன், மனைவிக்கிடையே பிரச்சினை தொடங்கி மன அழுத்தம், மனச்சிதைவு, விவாகரத்து குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க இயலாமை என எண்ணற்ற பிரச்சினைகள் சங்கிலித்தொடராய் தோன்றி பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. உலக அளவில் மூத்த குடிமக்கள் அதிகம் வாழும் நாடுகள் வரிசையில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. மேலும் 2050-ல் இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் மூத்த குடிமக்களாக இருப்பர் என எச்சரிக்கப்படுகிறது. எனவே மூத்த குடிமக்கள் நலன் சார்ந்து திட்டமிடல் என்பது சமூகத்திற்கும் அரசுக்கும் அவசியமாகிறது. தற்போது மூத்த குடிமக்களில் இந்தியாவில் 10 சதவீதம் பேர் தங்களுக்கு எவ்வித துணையும் இன்றி தனித்து வாழ்வதாகவும், 11 சதவீதம் பேர் கணவன் அல்லது மனைவியுடன் மட்டும் வாழ்ந்து வருவதாகவும், மீதி உள்ளவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் தனித்து வாழ்ந்து வருபவர்களும், கணவன் அல்லது மனைவியுடன் மட்டும் வாழ்ந்து வருபவர்களும் உதவிக்கு ஆள் இல்லாமல் அல்லல் படுகின்றனர் என்றால், குடும்பத்துடன் வாழும் முதியவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களால் அல்லலுக்கு ஆளாகின்றனர். இப்படிப்பட்டவர்கள் மன அழுத்தத்திற்கும், நோய்களுக்கும் ஆட்பட்டு வெளியே கூற முடியாமல் தவித்து வருவது கண்கூடு. நாம் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகிய நிலையிலும் முதியோர் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு ஒரு சரியான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை என்பது அனைவரும் வேதனைப்பட வேண்டிய விஷயம். இதற்கு முன்பு மூத்த குடிமக்கள் நலன்கருதிக் கொண்டுவந்த சட்டம், தெளிவு இல்லாத காரணத்தால் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இனி கொண்டுவரப்பட இருக்கின்ற சட்ட மசோதாக்கள் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாகவும் மூத்த குடிமக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். ஒன்றிய அளவிலிருந்த மாவட்டம், மாநிலம் என அனைத்து மட்டங்களிலும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு காப்பகங்கள் நிறுவப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். நல்ல மனம் படைத்த செல்வந்தர்களும், தொழில் அதிபர்களும், சமூக ஆர்வலர்களும், ஆதரவற்ற மூத்த குடிமக்கள் நலனில் அக்கறை செலுத்தி மருத்துவ உதவி வழங்குதல், அன்னதானம் வழங்குதல் முதலான நற்காரியங்களில் ஈடுபடலாம். மத்திய அரசினைப் பொறுத்தவரை ரெயில் பயணங்களுக்கு முதியோருக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்குகிறது. தமிழக அரசும் முதியோருக்கு பாதிக் கட்டணத்தில் அரசு பஸ்களில் கட்டணச் சலுகை வழங்கலாம். மேலும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்திக் கொடுக்கலாம். அரசு அலுவலகங்களிலும், காவல் நிலையங்களிலும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிவுடன் கவனித்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். இது போன்று பல்வேறு நலத்திட்ட பணிகளை ஆதரவற்ற முதியோருக்கு செய்யலாம். எல்லாவற்றிற்கும் மேலாக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நீதிபோதனைக் கதைகள் மூலம் வீட்டிலும் வெளியிலும் உள்ள பெரியவர்களுக்கு எவ்வாறு உரிய மரியாதை வழங்க வேண்டும் என்று கற்பித்துக் கொடுக்கலாம். ஒரு நாட்டின் வரலாறு தெரியாதவர்களால் எவ்வாறு நல்லாட்சி வழங்க முடியாதோ? அதேபோல் குடும்பத்தின் வரலாறை அறியாத குடும்பத்தலைவனால் சிறப்பான குடும்ப நிர்வாகத்தை வழங்க இயலாது. நல்ல குடும்ப பாரம்பரியத்தையும் உருவாக்க முடியாது. பாரம்பரியம் என்பது நல்ல குடும்பத்திற்கு உரியது. மூதாதையர்கள் உருவாக்கித் தந்ததே பாரம்பரியம். இத்தகைய பாரம்பரியம் இல்லாத குடும்பத்தில் பெண் கொடுக்கவோ, எடுக்கவோ யோசிப்பர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. எனவே தான் தொன்று தொட்டு மூன்று தலைமுறை மூதாதையர்களை வணங்கி திதி கொடுக்கும் முறை இந்தியக் கலாசாரத்தில் வேரூன்றி உள்ளது. தாய், தந்தைக்கே உணவளிக்காதவன் பிற உயிர்களுக்கு பரிவுகாட்டுவதும், அவற்றை வழிபாடு செய்வதும் எந்த நற்பலனையும் ஈட்டித்தராது. ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு தமிழனும் தன் வீட்டில் உள்ள முதியோரை நேசித்து அன்பு செலுத்தினால் நம் கலாசாரம் மேலும் மேன்மை பெறும். பெற்றோராய் நம்மை தூக்கி சுமந்தோரை, முதுமை வந்ததும் சுமையாக கருதலாமா? சிந்தித்து விழிப்போம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

Comments