Sunday 5 August 2018

கற்றல் குறைபாட்டை போக்க வழி என்ன?

கற்றல் குறைபாட்டை போக்க வழி என்ன? கலையரசி, சிறப்பு கல்வி பயிற்சியாளர்

பிறப்பதற்கரிய பிறவியான மானிடப்பிறவி எடுத்தாலும், வெளிப்புற அங்க குறைபாடுகள் இல்லாமல் பிறப்பது அரிது. அதைவிட அரிது முறைப்படி கல்வி கற்று ஞானத்தைப் பெறுவது என்பது அவ்வையின் வாக்கு. பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் முறைப்படி கல்வி கற்கும் திறன் ஒரே அளவாக அமைவதில்லை. ஒத்த வயதுடைய குழந்தைகளின் சராசரி கற்கும் திறனைவிட, அளவில் குறைவான கற்றல் திறனுள்ள குழந்தையை கற்றல் குறைபாடுள்ள குழந்தையாகக் கருதுகிறோம்.

முறைசார்ந்த கல்விமுறையில் எழுத்துகளையும், சொற்களையும், எண்களையும் வாசிப்பதிலும், புரிந்து கொள்வதிலும், புரிந்து கொண்டதை கோர்வையாக சொல்வதிலும், மனனம் செய்வதிலும், நினைவூட்டுவதிலும், எழுதுவதிலும் அந்த வயதிற்குரிய சராசரி குழந்தையைவிட சிரமப்படுவதை கற்றல் குறைபாடு என்கிறோம்.

கற்றல் குறைபாடு என்பது பத்து குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு என்ற விகிதத்தில் காணப்படுகிறது. பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு நான்கு மடங்கு எண்ணிக்கையில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் புத்தி கூர்மையில் இந்த குழந்தைகள் பெரும்பாலும் சராசரி அளவு அல்லது இதைவிட சற்று அதிக அளவு கூர்மை பெற்றவர்களாக உள்ளனர்.

குழந்தைகளிடம் பின்வரும் அறிகுறிகள் தென்படுவதை வைத்து அவர்களை உரிய மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதித்து கற்றல் குறைபாடு உள்ளதா? என்பதை தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டும். அந்த அறிகுறிகள் சரளமாக வாசிக்க சிரமப்படுவது, ஒரே மாதிரி உச்சரிப்புள்ள சொற்களை மாற்றி வாசிப்பது, வலது, இடது புறங்களில் மாறிவரும் எழுத்துக்களில் தடுமாற்றம் கொள்வது, சொற்களில் எழுத்துகளை மாற்றி எழுதுவது, படிப்பதில், எழுதுவதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது, சொல்ல வருவதை கோர்வையாக சொல்ல முடியாமல் தவிப்பது, கவனத்தை அதிகமாக சிதறவிடுவது, கையெழுத்து மோசமாக இருப்பது போன்றவையாகும்.

குறைப்பிரசவம், பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள், பிறந்த குழந்தையின் எடை குறைந்திருப்பது, கருவுற்ற காலத்தில் தாய் உட்கொள்ளும் சில மருந்துகள் மற்றும் மதுவகைகள், பெற்றோர்களின் புகைபிடிக்கும் பழக்கம், குழந்தை வந்த பரம்பரையில் அந்த குறைபாடுள்ளோர் இருப்பது, குழந்தை வளரும் சுற்றுச்சூழல் போன்றவைகள் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட காரணிகள் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளில் பலர் மற்ற துறைகளில் ஈடுபாடும், சிறந்த அறிவும், ஆற்றலும் பெற்றிருப்பதை காணமுடிகிறது. குழந்தைகள் வெளிப்படுத்தும் ஆர்வத்தை கவனித்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறனை கண்டறிந்து அந்த திறன்களை வளர்க்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதனை மேன்மேலும் வளர்க்கும் வண்ணம் அவர்களை ஊக்கப்படுத்துவதையும், உற்சாகப்படுத்துவதையும் செய்ய வேண்டும்.

அப்போது தான் அவர்கள் விரும்பும் துறைகளில் உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும். இத்தகைய குழந்தைகள் விளையாட்டு, ஓவியம், நாடகம், ஆடை, அணிகலன்கள் வடிவமைப்பு, அறிவியல், கட்டிடக்கலை, தோட்டக்கலை, சமையல் கலை, இசை, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்புக்கலை போன்ற பல்வேறு துறைகளில் நாட்டம் உடையவர்களாக உள்ளனர்.

கற்றல் குறைபாடு உள்ளதை முறைப்படி பெற்றோர்கள் உறுதிசெய்து கொண்டபின் அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை மருத்துவர் ஆலோசனைப்படியோ, அல்லது இதற்கென பயிற்சிபெற்ற உளவியலாளர் ஆலோசனைப்படியோ அளிக்க வேண்டும்.

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உரிய மருத்துவ சான்றிதழ் இருந்தால் அரசாங்கம் பொதுத்தேர்வில் சில சலுகைகள் வழங்குகின்றது.

பெற்றோர் கற்பதில் மிகவும் சிரமப்படும் குழந்தைகளை இதற்கென இயங்கும் சிறப்புப் பள்ளியில் அனுமதிக்க வேண்டும். சாதாரணப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை நிவர்த்தி வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டும். பெற்றோர் குழந்தைகளை குற்றம், குறை சொல்லாமல், மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாமல் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இக்குறைகளை நீக்க மருந்துகள் இல்லை. தொடர் பயிற்சிகளின் மூலமே இதனை சரிசெய்ய முடியும். குழந்தையின் குறைகளின் அளவைப் பொறுத்தே பயிற்சியின் காலமும், தன்மையும் அமையும். பெற்றோரின் புரிதலும், அனுசரனையும், ஆதரவும் குழந்தைகளை இக்குறையிலிருந்து விரைவில் மேன்மையடைய உதவும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts