Sunday, 5 August 2018

தியாகச் சுடர் சிவாவின் கனவு நனவாகிறது

தியாகச் சுடர் சிவாவின் கனவு நனவாகிறது சுப்பிரமணிய சிவா குமரி அனந்தன், தலைவர், காந்தி பேரவை சிவம் பேசினால் சவமும் எழுந்து நிற்கும் என மக்கள் பேசும் வகையில் கனல் தெறிக்கப்பேசும் பேச்சாளர் தியாகி சுப்பிரமணிய சிவா. இவர் சிவா என்றும் சிவம் என்றும் அழைக்கப்பட்டார். இவரின் வரலாறு பல திருப்பங்களைக் கொண்டது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் ராஜம் அய்யருக்கும், நாகம்மாளுக்கும் 1884-ம் ஆண்டு பிறந்தார். குடும்பச்சூழ்நிலையால் ராஜம் அய்யர் குடும்பம் மதுரைக்கு குடிபெயர்ந்தது. சிவம் முதலில் மதுரை கட்டிசெட்டி மண்டபத்திலிருந்த ஆரம்பப்பள்ளியில் படித்தார். பின்னர் மதுரை சேதுபதி பள்ளியில் சேர்ந்து படித்தார். குடும்ப வறுமையைச் சமாளிக்க முடியாததால் அந்தணர்களுக்கு உணவும் கல்வியும் கொடுக்கும் திருவனந்தபுரத்திற்கு சென்றார்கள். திருவனந்தபுரம் நகர உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார் சிவா. அங்கே இலக்கிய மன்றச் செயலாளரானார். சொற்பொழிவாற்றும் திறனை வளர்த்துக்கொள்வதற்கு அதிக வாய்ப்பு கிடைத்தது. சிவாவுக்கு 16-வது வயதிலேயே மீனாட்சி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டே குடும்பம் கோவைக்குச்சென்றது. அங்கே புனித மைக்கேல் பள்ளியில் சேர்ந்து படித்தார். பிறகு தன் மகன் ஏதேனும் வேலையில் சேர்ந்தால் நல்ல முறையில் குடும்பத்தில் அக்கறைக்காட்டுவான் என்று சிவாவின் தந்தை நினைத்தார். சிவகாசியில் உள்ள போலீஸ் அதிகாரியின் பணியாளராகச் சேர்த்துவிட்டார். அந்நிய ஏகாதிபத்திய காவல்துறையிடம் பணிபுரிவதா என்று எண்ணிய சிவா ஒரு நாளிலேயே வேலையை விட்டுவிட்டார். திருவனந்தபுரம் சென்ற சிவா கொட்டாரக்கரையில் ராஜயோகமும் தர்க்க சாஸ்திரமும் கற்றார். வங்காளப்பிரிவினையால் நாடே கொந்தளித்துப் போயிருந்த நேரம். தான் இருந்த வீட்டிலேயே பெண்கள் கூட்டத்தை கூட்டி துணிகளில் வண்ண நூல்களில் வந்தேமாதரம் என்று எழுதச்செய்தார். இவருடைய நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருந்த திருவிதாங்கூர் அரசு இவரை திருவனந்தபுரத்தைவிட்டு வெளியேற்றி விட்டது. கட்டிய வேட்டியோடும் சட்டையோடும் தலைப்பாகையோடும் கையில் தடியோடு நடந்தே தூத்துக்குடி வந்து சேர்ந்தார். அங்கே வ.உ.சிதம்பரனாரோடும், பாரதியாரோடும் நட்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் இருந்த கோரல் மில்லின் வெள்ளைக்கார முதலாளிகள் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களை கசக்கி பிழிந்து எடுத்தனர். கூலியோ மிகக்குறைவு. இதை எதிர்த்துப்போரிட்ட சிதம்பரனாரோடு சிவாவும் சேர்ந்து கொண்டார். ஒருநாள் சிதம்பரனார் மேடையில் பேசும் போது மக்களைப்பார்த்து, ‘நான் ஏன் சுதேசி கப்பல் கம்பெனி நடத்துகிறேன் தெரியுமா? வணிகம் செய்ய வந்து நம்மை அடிமைப்படுத்தி அடக்கி ஆளும் வெள்ளைக்காரர்களை மூட்டை முடிச்சுகளோடு கப்பல் ஏற்றி அனுப்பத்தான்’ என்றார். உடனே மேடையில் அமர்ந்திருந்த சுப்பிரமணியசிவா வேகமாக எழுந்தார். ‘மூட்டை முடிச்சுகள் எல்லாம், நம்மைச் சுரண்டிச் சேர்த்தவை. வெறும் வெள்ளைக்காரர்களை மட்டும் அனுப்புங்கள்’ என்று முழங்கினார். காவல்துறை இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது. சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 20 வருடம் விடுதலை வேண்டும் என்று கேட்டதற்கும், இன்னொரு 20 வருடம் சிவாவிற்கு உணவு அளித்து தன் வீட்டிலேயே தங்க வைத்ததற்காகவும் இந்த இரட்டை ஆயுள் தண்டனை. சிவாவிற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது. தேச பக்தியுள்ள வழக்கறிஞர்களும் நண்பர்களும் லண்டன் நீதிமன்றத்தில் மனு கொடுத்து தண்டனை காலத்தை குறைத்தார்கள். திருச்சி சிறையிலும், பின்னர் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்ட சிவாவிற்கு சுண்ணாம்பு கரைசலில் ஊற வைத்த ஆட்டு ரோமத்தை நரம்பு கட்டிய வில்லில் வைத்து அடித்து மென்மைப்படுத்தி கம்பளி ஆடைகள் தயாரிப்பதற்காக சிறை அதிகாரிகள் பணித்தனர். ஆட்டு ரோமத்துகள்கள் மூக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்றதால் இருமலில் தொடங்கி தொழுநோயாக மாறிற்று. தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த சிவா மயிலாப்பூரில் வந்து குடியேறினார். ஒரு மாத பத்திரிகையை தொடங்கினார். பாரதியின் ஓடி விளையாடு பாப்பா என்ற பாடல் இந்த பத்திரிகையில் தான் வந்தது. 30 கோடியாக இருக்கின்ற இந்தியர்களை ஒன்றுபடவிடாமல் அவர்களின் மதப்பிரிவுகளாலும் சாதி வேற்றுமைகளாலும் எந்நாளும் பிரித்தே வைத்துவிடலாம் என்று வெள்ளையர்கள் நினைக்கிறார்கள் என்று நினைத்த சிவா பாப்பாரப்பட்டியில் தேச பக்தர் சின்னமுத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியோடு ஏறத்தாழ 7 ஏக்கர் நிலம் வாங்கினார். அதில் பாரத ஆசிரமும் பாரத மாதா கோவிலும் எழுப்ப திட்டமிட்டு நன்கொடைகள் பெறுவதற்கு நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்தார். திருவாரூரில் அவரை ஆங்கில அரசு பேருந்திலோ ரெயிலிலோ ஏறக்கூடாது, தொழுநோய் மற்ற பயனாளிகளையும் தொற்றிக்கொள்ளும் என்று தடை விதித்தது. ஆனாலும் தன் முயற்சியில் தளர்ச்சியடையாமல் மாட்டு வண்டியிலும் கால்நடையாகவும் நாடெங்கும் சென்று பாரத மாதா கோயில் கட்ட நன்கொடைகள் பெற்றார். பாப்பாரப்பட்டிக்கு திரும்பிய சிவா அங்கே பாரத ஆசிரமம் அமைத்தார். இதில் உறுப்பினராவோர் புகைப்பிடிக்கக்கூடாது, மது குடிக்கக்கூடாது என்று விதி வகுத்தார். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து பாரதியின் பாடலைப் பாடிக்கொண்டு தெருக்களில் வாழும் மக்களிடம் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தினார்கள். சிவா அமைக்க விரும்பிய ஆலயத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட எந்த மதத்தினரும் அந்தணர்கள், அரிசனங்கள் என்று பேதம் பார்க்காமலும் அனைவரும் கருவறை வரை சென்று அர்ச்சகர் இல்லாமலேயே வழிபடலாம் என்று சமத்துவ பொதுக்கோவிலாக இந்த பாரத மாதா ஆலயத்தை எழுப்ப விரும்பினார். நேதாஜியின் குருநாதராகிய சித்தரஞ்சன் தாசை பாப்பாரப்பட்டிக்கு அழைத்து வந்து 22-6-1923 அன்று அடிக்கல் நாட்டச்செய்தார். இந்த ஒருமைப்பாட்டுக்கோவில் எழ வேண்டும் என்று 1977-ல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நான், சென்னையில் இருந்து நடைப்பயணமாக கோவைக்கு சென்று சிறைச்சாலையிலே வ.உ.சி. இழுத்த செக்கிற்கு மாலை அணிவித்து நடைப்பயணத்தை நிறைவு செய்தேன். அதன் பின்னர் 2001-ம் ஆண்டு முதல் சமத்துவ பொதுக்கோவிலாக சிவா கண்ட கனவை நனவாக்குங்கள் என்று அனைத்து கட்சி தலைவர்கள் காந்தியடிகள் படம் பொறித்த கொடியை எடுத்துக்கொடுத்து என்னை வழியனுப்ப பல நடைப்பயணங்கள், உண்ணா நோன்பும் மேற்கொண்டோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தும் மனுக்கள் அளித்தும் வேண்டினோம். தமிழக அரசு சிவாவின் கனவை நனவாக்குவோம் என்று முடிவெடுத்து அறிவித்திருப்பது எல்லோரும் ஓர் குலம் என்பதை நிலைநாட்டும் அரிய பெருமைக்குரிய செயலாகும். வாழ்க சிவாவின் புகழ்! நிறைவேறட்டும் சிவாவின் மக்களை ஒன்றுபடுத்தும் நோக்கம்! நாளை (ஜூலை 23-ந்தேதி) சுப்பிரமணிய சிவாவின் நினைவு தினம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts