இருப்பதைக் காத்து நிலைநிறுத்துக!
By பழ. நெடுமாறன் |
உலகில் தமிழர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்க ஆண்டுதோறும் ரூ.5 கோடி ஒதுக்கப்படும் என்றும், இரண்டாண்டுகளுக்கொருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு நடத்தப்படும் என்றும், அந்த அமைப்புகள் மேற்கொண்டு வரும் தமிழாய்வுகள், எழுத்தாளர்களின் படைப்புகள், மொழிபெயர்ப்புகள், தமிழ் இலக்கியப் பணிகள் அம்மாநாட்டில் ஒன்றிணைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் கடந்த சூன் 28-ஆம் தேதியன்று அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே.
எனினும், இதே நோக்கங்களுக்காக ஏற்கெனவே தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளைக் கட்டிக்காக்கவேண்டிய முக்கியமான பணி எதிர்நோக்கியிருக்கக்கூடிய சூழ்நிலையில், புதியதொரு அமைப்பை உருவாக்குவது இன்றைய தேவையா? என்ற கேள்வி எழுகிறது.
தில்லியில் உலக கீழ்த்திசை மொழி அறிஞர்களின் மாநாடு நடைபெற்றதையொட்டி அதில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களின் கூட்டத்தினை தனிநாயகம் அடிகளும், முனைவர் வ.அய். சுப்பிரமணியமும் 07-12-1964 அன்று கூட்டினார்கள். இக்கூட்டத்திற்கு மூத்த தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்' அமைப்பதென முடிவு செய்யப்பட்டது. இம்மன்றத்தின் தலைவராக பிரான்சு நாட்டுத் தமிழறிஞர் ழான் ஃ பிலியோசா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவரை இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய கண்டத்தில் எந்த மொழிக்கும் இத்தகைய உலகளாவிய அமைப்பு உருவாக்கப்படவில்லை. இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட பிறகே வேறு சில மொழிகளுக்கு உலகளாவிய அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த அமைப்பு 1966-ஆம் ஆண்டிலிருந்து 1995-ஆம் ஆண்டு வரை இரண்டாண்டுகளுக்கொருமுறை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தியது. மலேசியா, தமிழ்நாடு, பிரான்சு, இலங்கை, மோரீஷஸ் ஆகிய நாடுகளில் இதுவரை எட்டு மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அவற்றுள் மூன்று மாநாடுகள் தமிழ்நாட்டில் நடைபெற்றன.
1968-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ் உயராய்வு மையம்' தொடங்குவதென முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வு மையம் குறித்த அறிக்கையை வ.அய். சுப்பிரமணியம் தயாரித்தார். யுனெஸ்கோ' அமைப்பு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்' குறித்த 10 ஆண்டு திட்டம் ஒன்றினை வகுப்பதற்காக 19 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. அக்குழு வரைந்த விரிவான திட்டத்தை இந்திய அரசு யுனெஸ்கோ'வில் கொண்டு வந்தது. இத்தீர்மானத்திற்கு மலேசியா, சிங்கப்பூர் நாடுகள்ஆதரவு தெரிவித்தன.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மேலாண்மைக் குழுவுக்கும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை எளிதாக்கும் முறையில் பேராசிரியர் ஃபிலியோசா, பேராசிரியர் கே.கே. பிள்ளை, தனிநாயகம் அடிகள், வ.அய். சுப்பிரமணியம், ஏ. சுப்பையா ஆகிய ஐவர் கொண்ட குழுவை மன்றம் நியமித்தது. பாரிஸ் மாநாட்டில் தொடக்கவுரை ஆற்றிய யுனெஸ்கோ' மேலாண்மை இயக்குநர் மால்கம் ஆதிசேசையா உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பற்றி குறிப்பிட்டார். 1971-ஆம் ஆண்டில் யுனெஸ்கோ' பொதுப் பேரவை நடைபெற்றபோது சென்னையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தும் தீர்மானத்தை இந்தியா முன்மொழிய, பிரான்சு வழிமொழிய, ஒருமனதாக அந்த அவை ஏற்றது. 1974-ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மேலாண்மைக் குழுவின் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் கொண்டுவரப்படாமல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் கீழ் இயங்குமாறு செய்யப்பட்டது. எனவே, போதுமான நிதி உதவியோ, அதிகாரமோ இல்லாமல் செயல்பட வேண்டிய நிலை தற்போதும் நீடிக்கிறது. சுயாதிக்கம் உள்ள அமைப்பாக இது மாற்றியமைக்கப்படாத வரையில் இதனுடைய நோக்கம் முழுமையாக நிறைவேறாது.
1981-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அறிவித்தார். அதன்படி 15-09-1981-இல் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இதன் முதலாவது துணைவேந்தராக வ.அய். சுப்பிரமணியம் பொறுப்பேற்று உறுதியான அடித்தளத்தை அமைத்தார். ஆனாலும், போதுமான நிதி வசதியின்மை, அரசின் ஒத்துழைப்பின்மை போன்ற காரணங்களினால் அவர் பதவி விலக நேர்ந்தது.
உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகமாக இது செயல்பட வேண்டுமானால் முதலில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இது முழுமையாக விடுவிக்கப்படவேண்டும். உலக நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் அங்கம் வகிக்கும் வகையில் இதன் ஆட்சிக்குழு திருத்தியமைக்கப்பட வேண்டும். இப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பதிவாளர் போன்ற அலுவலர்கள் தேர்விலும், நியமனத்திலும் உலகத் தமிழறிஞர்களின் கண்காணிப்பு இருக்கவேண்டும். பிறநாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவி முதல் பேராசிரியர் பதவி வரை பொறுப்பேற்பதற்கு எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது. இதற்கான நிதியினை தமிழக அரசு, இந்திய அரசு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை அரசுகள், யுனெஸ்கோ அமைப்பு ஆகியவை அளிக்கவேண்டும்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மாநாடுகள் 1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவில்லை. கடந்த 23 ஆண்டுகளாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் இயங்கவில்லை. மாநாடுகளும் கூட்டப்படவில்லை. இது ஏன்? இதற்கு பின்னணி என்ன? யார் காரணம்? என்ற கேள்விகளுக்குரிய பதிலை நாம் ஆராய்வோமானால் திடுக்கிடும் உண்மைகள் தெரியவரும். 18-09-2009 அன்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி, தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தும் திட்டத்தை திடீரென அறிவித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு உலகத் தமிழறிஞர்களால் நடத்தப்படும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்திற்குத் தலைவரும், பிற நிர்வாகிகளும், ஆட்சிக்குழுவும் உள்ளனர். அவர்களைக் கலந்து கொள்ளாமல் தன்னிச்சையாக அன்றைய முதல்வர் அறிவித்தது முறைகேடாகும்.
ஆனால், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராக இருந்த சப்பானிய தமிழ் அறிஞரான நெபுரு கரோசீமா இதற்கு உடன்படவில்லை. மாநாடு நடத்துவதற்கு முன் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அவகாசம் வேண்டும். அப்போதுதான் உலகளாவிய தமிழறிஞர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை உருவாக்க முடியும். எனவே, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் இதற்கு உடன்படாது. வேண்டுமானால் 2011-ஆம் ஆண்டில் இந்த மாநாட்டை நடத்தலாம்' என அவர் தெரிவித்தார்.
எனவே, வேறு வழியில்லாமல் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு' நடத்தப்படும் என மு. கருணாநிதி அறிவித்து ரூ.300 கோடி செலவில் அம்மாநாட்டினை நடத்தினார். அம்மாநாட்டில் பேசும்போது, அவர் தொல்காப்பியர் உலகச் செம்மொழிச் சங்கம் என்ற பெயரில் உலகளாவிய அமைப்பு ஒன்று நிறுவப்படும்' என அறிவித்தார். இதன் மூலம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் பிளவுபட்டது. சப்பானிய தமிழறிஞரின் மறைவுக்குப் பிறகு செயலற்றுப் போனது. தொல்காப்பியர் உலகச் செம்மொழிச் சங்கமும் செயல்படவில்லை.
உலகத் தமிழறிஞர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை உருவாக்கி வளர்த்தார்கள். தமிழ் இலக்கியம் பற்றியோ, மொழி பற்றியோ ஆராயும் உரிமை தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே உண்டு என்ற நிலை மாறி, தமிழ் ஆராய்ச்சி விரிவடைந்துள்ளது. வேற்று மொழியை தம் தாய்மொழியாகக் கொண்ட உலகத் தமிழறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் விளைவாக, பல துறைகளிலும் தமிழ் ஆராய்ச்சி விரிந்து வளர்ந்துள்ளது. தமிழ் இலக்கியத்தின் சிறப்பு, பண்பாட்டு வளர்ச்சி, தொன்மை ஆகியவைக் குறித்து பல உண்மைகள் வெளிவந்துள்ளன. இம்முன்னேற்றம் தொடர வேண்டும். இடைக்காலத்தில் ஏற்பட்டுவிட்ட தேக்க நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். புதிய அமைப்புகளை தோற்றுவிக்க முற்படாமல் மேற்கண்ட மூன்று அமைப்புகளும் செம்மையாகச் செயல்பட, தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தோற்றுவிக்கப்பட்டு 11 ஆண்டுகள் கழித்து, 1975-ஆம் ஆண்டு நாகபுரியில் நடைபெற்ற உலக இந்தி மாநாட்டில் உலக இந்தி மையம்' தோற்றுவிக்கப்பட்டது. பிறகு இந்திய - மோரீஷஸ் அரசுகள் செய்து கொண்ட உடன்பாட்டிற்கிணங்க, 17-09-2001-இல் உலக இந்தித் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டது. மோரீஷஸ் அரசு இதற்கு நிலம் கொடுத்தது. இந்திய அரசு கட்டடம் கட்டவும், அலுவலகம் செயல்படவும் தேவையான உதவிகளைச் செய்தது. 2008-ஆம் ஆண்டு முதல் இது செயல்படத் தொடங்கியது.
அதுபோன்றே, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்திற்கு ஒரு தலைமை அலுவலகம் தோற்றுவிக்கப்பட வேண்டும். தற்போது, இந்த அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் எந்த நாட்டைச் சேர்ந்தவரோ, அந்த நாட்டில் அவருடைய அலுவலகமே அமைப்பின் அலுவலகமாக இருந்து வருகிறது. இதன் வளர்ச்சி குன்றியதற்கு இது முக்கிய காரணமாகும். தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இம்மன்றத்தின் தலைமை அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். ஐ.நா. பேரவையின் தலைவராகவும், செயலாளர்-நாயகமாகவும் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அதன் தலைமை அலுவலகம் நிரந்தரமாக நியூயார்க் நகரிலும், கிளைத் தலைமை அலுவலகம் ஜெனீவாவிலும் அமைக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோ' அமைப்பிற்கு பாரீஸ் நகரில் நிரந்தரமான தலைமை அலுவலகம் உள்ளது. அதைபோல உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைமை அலுவலகம் நிரந்தரமாக நிறுவப்படவேண்டும். தலைவர்கள் மாறினாலும் தலைமை அலுவலகத்தின் மூலமாக அதன் பணிகள் தொடர்ந்து நடைபெறும். மேலே கண்ட மூன்று அமைப்புகளுக்கு தேவையான நிதி ஆதாரம் இல்லாமல் அவை சீராகச் செயல்பட முடியவில்லை. இந்திய அரசின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட செம்மொழி ஆய்வு நிறுவனமும் தள்ளாடுகிறது. இந்த நிலையில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்தத் திட்டத்தை தமிழக முதல்வர் மறுஆய்வு செய்ய வேண்டும். உலகத் தமிழறிஞர்களால் உருவாக்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்று, மறைந்த முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அமைத்தார்கள். அவற்றைச் சீர்திருத்தத் தேவையான நிதி ஆதாரங்களை தமிழக அரசு திரட்டித்தர வேண்டும். யுனெஸ்கோ' போன்ற அமைப்புகளின் உதவியையும் பெற்றுத்தர வேண்டும்.
Wednesday, 11 July 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment