Wednesday, 11 July 2018

ஒரே தேசம்; ஒரே தேர்தல்: ஒரு சிந்தனை!

ஒரே தேசம்; ஒரே தேர்தல்: ஒரு சிந்தனை! By ச. சுப்புரெத்தினம் | அண்மைக் காலமாக ஒரே தேசம்; ஒரே தேர்தல்' என்ற குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில, யூனியன் பிரதேசச் சட்டமன்றங்களுக்கும் ஒரே தருணத்தில் தேர்தல் நடத்தலாம் என்பது குறித்து மத்திய அரசு சிந்தித்து வருகிறது. இதற்கான முயற்சிகளில் இந்தியத் தேர்தல் ஆணையமும், மத்திய சட்ட ஆணையமும் தற்பொழுது இறங்கியுள்ளன. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றது. ஏழு தேசியக் கட்சிகளுக்கும், 59 மாநிலக் கட்சிகளுக்கும் சட்ட ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. இக்கூட்டத்தில் தி.மு.க, ஆம் ஆத்மி, சமாஜவாதி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டு தத்தம் கருத்துகளைத் தெரிவித்தன. ஒரே தருணத்தில் நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் தேர்தலை நடத்தி முடித்தால், தற்பொழுது செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாயில் பாதியளவு குறையும் என்பதும், சீரான ஜனநாயக நிர்வாகம் நடைபெறும் என்பதும் மத்திய அரசின் கருத்தாக உள்ளது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே இக்கருத்து முன்வைக்கப்பட்டது. 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஏறத்தாழ 2,800 கோடி ரூபாய் செலவானது. மாநிலச் சட்டமன்றங்களுக்குத் தனித்தனியே தேர்தல் நடத்தப்படும் பொழுது ஒவ்வொரு மாநிலத்திற்கும் (யூனியன் பிரதேசங்கள் நீங்கலாக) சராசரியாக 900 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்படுகிறது. ஆக, சட்டமன்றத் தேர்தல்களின் செலவினங்கள் மொத்தம் 18 ஆயிரம் கோடி ரூபாய் என்றாக வாய்ப்புள்ளது. ஆனால், இவற்றை ஒருங்கிணைத்து ஒரே தருணத்தில் தேர்தல் நடத்தினால் ஏறத்தாழ 12 ஆயிரம் கோடி ரூபாயில் முடித்துவிடலாம் என்பது கணிப்பாக உள்ளது. வரும் 2019-ஆம் ஆண்டே இத்தகைய தேர்தலை நடைமுறைப்படுத்தலாம் என்கிறது பா.ஜ.க. ஆனால், காங்கிரúஸா, இதுகுறித்துத் தனது தோழமைக் கட்சிகளுடன் கலந்த பேசி ஆராய்ந்து முடிவெடுக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறது. திரிணமூல் காங்கிரஸ் இத்தேர்தல் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதுவை மாநில முதலமைச்சர் நாராயணசாமி இப்புதிய நடைமுறை சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளார். அ.இ.அ.தி.மு.க. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், 2021-க்கு பிறகு இதனை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டாது எனத் தெரிகிறது. ஒரே நேரத்தில் இத்தகைய தேர்தலை நடத்துவது அரசமைப்புச் சட்டத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதிக்கும் என தி.மு.க. கருதுகிறது. புதிய நடைமுறை சாத்தியப்பட வேண்டுமானால், அதற்கு முன்னதாக அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களைத் திருத்தம் செய்ய வேண்டும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசு உடன்படும் என எதிர்பார்க்கலாம். எனினும், எதிர்க்கட்சிகளுடன் இது குறித்த ஒத்த கருத்து ஏற்பட்ட பின்னரே, இது சாத்தியமாகும். 2019-இல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனுடன் இணைந்தே சட்டமன்றத் தேர்தல்களைச் சந்திக்க, அண்மையில் தேர்தல் முடிந்து ஆட்சி செய்துகொண்டிருக்கும் குஜராத், மேற்கு வங்கம், திரிபுரா, நாகாலாந்து, கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் உடன்படமாட்டா. 2000-ஆவது ஆண்டில் 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யப்போகும் மாநிலங்கள் வேண்டுமானால் இதற்கு உடன்படலாம். ஆனால், எந்த ஒரு மாநில அரசும் தனக்கு அளிக்கப்பட்ட 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும் என்பதற்கு, இத்தேர்தல் முறையால், எவ்வித உறுதிப்பாடும் இல்லை. காகித வடிவிலான வாக்குச்சீட்டு நடைமுறையைக் கைவிட்டு, மின்னணு வாக்குப் பதிவு எந்திர நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு இத்தகைய தேர்தலை நடத்தி முடிப்பதென்பதொன்றும் இயலாத செயல் அல்ல. ஆனால், அதற்கெனச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்து நிறைவேற்ற, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து முன்வருமா என்பது ஐயமே. ஒருங்கிணைந்த இத்தேர்தலுக்கு தேவைப்படும் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை 2019 மார்ச் மாதத்திற்குள் தயாரித்து இருப்பில் வைத்துக் கொண்டுவிட முடியுமா என்பதும், ஒட்டுமொத்த இந்தியாவே தேர்தல் களத்தில் இருக்கும் அத்தருணத்தில் சட்டம்-ஒழுங்கினைப் பாதுகாக்க முடியுமா என்பதும் இப்பொழுது எழும் வினாக்கள். காவல்துறை, துணை இராணுவப்படை, தொழிற்பாதுகாப்புப்படை, இராணுவம் என இவற்றின் முழு வலிமையையும் பயன்படுத்தித் தேர்தலை அமைதியாக நடத்திவிடலாம் என்றாலும், அவற்றிற்குத் தேவைப்படும் அதிகாரங்களை உரிய சட்டத்திருத்தங்கள மூலம் தர மத்திய அரசால் உடனடியாக இயலுமா என்பது கேள்விக்குறியே. அரசியல் கட்சியினர், வாக்காளர், வேட்பாளர், தேர்தல் அதிகாரிகள் என்ற நான்கு தரப்பினரின் உரிமைகள் மற்றும் கடமைகள் என்பவற்றின் குறைபாடுகளால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். இக்குறைபாடுகளை உரிய சட்டத்திருந்தங்களின் மூலம் நிவர்த்தி செய்ய வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக அங்குள்ள இராணுவத்தினர் இரப்பர்' தோட்டாக்களைக்கூடப் பயன்படுத்தக்கூடாது என்று கூறிவரும் எதிர்க்கட்சியினர், தேர்தல் தருணங்களில் ஏற்படும் வன்முறையைத் தடுப்பதற்கான கூடுதல் அதிகாரங்களை உள்ளூர் காவல்துறையினருக்கும், ராணுவத்தினருக்கும் கொடுக்கச் சம்மதிப்பார்களா என்பதும் கேள்விக்குறியே. சோழர்கள் ஆட்சிக்காலத்தில் குடவோலை' முறையில் தேர்தல் நடந்துள்ளது. அதன் பிறகு, காலப்போக்கில் மஞ்சள், சிவப்பு, பச்சை என்று பல்வேறு வண்ணப் பெட்டிகளை வேட்பாளர்களுக்கு ஒதுக்கி, அவ்வண்ணப் பெட்டிகளுக்குள் வாக்குச் செலுத்தும் முறை வழக்கத்திற்குத் வந்தது. பிறகு வண்ணங்கள் என்பன மாறிச் சின்னங்களாயின. தற்பொழுது மின்னணு எந்திர வாக்குப்பதிவுக்கு வந்துள்ளோம். பிரதமர், முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பிரித்தறிந்து அவர்களுக்கு வாக்களிக்கத் தற்காலத்திலுள்ள சமுதாயத்தில் எல்லோராலும் எளிதில் இயலுமா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்களிலேயே வாக்குப்பதிவில் பல தடுமாற்றங்கள் நிகழ்ந்ததை நமது வரலாறு காட்டும். 2019-இல் இப்புதிய தேர்தல் நடைமுறை சாத்தியமாக வேண்டுமானல், பின்வரும் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற வேண்டும். 1. தேர்தல் ஆணைய உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல். 2. வாக்காளர், வேட்பாளர்களின் உரிமைகளில் உரிய திருத்தம் கொண்டு வருதல். 3. தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பை நீட்டித்தல். 4. காவல்படையினருக்கான அதிகாரங்களை விரிவுபடுத்துதல். 5. ஒரே தருணத் தேர்தலில், ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிடல் என்பதில், நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதி என்பது குறித்த சட்டத்திருத்தம் கொண்டுவருதல். 6. கட்சித் தாவல் தடைச்சட்டம், அரசியல் கட்சிகளின் தேர்தலுக்கு முந்தையய மற்றும் தேர்தலுக்குப் பிந்திய கூட்டணி என்பன குறித்த திருத்தங்கள் கொண்டு வருதல். 7. தேர்தல் அறிவிக்கை, நலத்திடங்கள் அறிவித்தல், பிரசாரங்கள் குறித்த நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க வழிகாணுதல். 8. வாக்கு எண்ணிக்கை, மறுதேர்தல், மறு வாக்கு எண்ணிக்கை என்பனவற்றிற்கான சட்டத் திருத்தங்கள் கொண்டு வருதல். தேர்தல் சீர்திருத்தங்கள் பல படிநிலைகளில் விரைந்து கொண்டுவரப்பட்டால், இப்புதிய தேர்தல் நடைமுறை 2024-இல் சாத்தியம் ஆகலாம். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே தருணத்தில் நடத்தவேண்டும் என்பதற்கு முழு முதற்காரணம் தேர்தல் செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்பதுதான் என்றால், அதற்கு மற்றொரு வழியுள்ளது. அதற்கு மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் முயல வேண்டும். அதாவது, நாடாளுமன்றத் தேர்தலையோ, சட்டமன்றத் தேர்தலையோ பல கட்டங்களாக வெவ்வேறு தேதிகளில் நடத்தாமல் ஒரே தேதியில் நடத்தி முடிக்கவேண்டும். அதுவும் வாக்குப்பதிவு நடந்த அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையைத் தொடங்கி அன்றிரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவேண்டும். இப்படிச் செய்தால் தேர்தலுக்கு ஆகும் செலவில் பாதியளவினைக் குறைத்திட முடியும் என்பது உறுதி. தற்பொழுது நடைமுறையிலுள்ள வாக்குச் சாவடி அலுவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்தால், தற்பொழுதுள்ள காலை 7 முதல் மாலை 5 மணி வரை என்ற வாக்குப்பதிவு நேரத்தை, காலை 7 முதல் பிற்பகல் 3 வரை என்று மாற்றி அமைக்க முடியும். பிற்பகல் 3 மணியிலிருந்து மாலை 5 மணிக்குள் அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே, அங்குப் பதிவான வாக்குகளை எண்ணி முடித்துப் பட்டியலிட்டுவிடலாம். பின்னர், எல்லா வாக்குச்சாவடிகளிலிருந்தும் பெறப்படும் அப்பட்டியல்களை ஒருங்கிணைத்து அந்தந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிக்கான அதிகாரபூர்வ இடத்தில் வைத்துத் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம். வாக்குப்பதிவு விவரம் தெளிவான பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை நாள்கணக்கில் ஓரிடத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டியதில்லை. இதனால், வாக்கு எண்ணும் மையங்களுக்காக ஆகும் செலவில் பெரும் பகுதி குறைந்துவிடும். வாக்குப்பதிவு எந்திரங்களை பத்திரப்படுத்துமிடம், வாக்கு எண்ணும் மையங்கள், வாக்குச்சாவடிகள் என இதற்காகச் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்குத் தொடர் விடுமுறை விடுவது தவிர்க்கப்படும். தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் நாள் வரையிலான காவல்துறையினரின் பணிகள் பாதிக்கப்படா. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, வாக்குப்பதிவு நேரத்தைக் குறைத்து, அந்தந்த வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளை அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே எண்ணி, பின் பெரிய மையங்களில் ஒருங்கிணைத்து, அன்றிரவே தேர்தல் முடிவுகளை வெளியிட்டுவிடலாம். இது டிஜிட்டல் இந்தியாவால்' சாத்தியமாகும். இதனால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மிச்சமாகும். வாக்குப்பதிவு அன்றே தேர்தல் முடிவுகளை வெளியிடும் முறையை இலங்கை, மெக்ஸிகோ, துருக்கி போன்ற பல நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. ஒரே தேசம்; ஒரே தேர்தல்' என்பது குறித்து சிந்திக்கும் முன் ஒரே நாளில் தேர்தல்; அதே நாளில் முடிவு' என்பது குறித்து சிந்திப்போம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts