Saturday 7 July 2018

எப்படி வந்தது எய்ம்ஸ்?

எப்படி வந்தது எய்ம்ஸ்? By ப. இசக்கி | அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தின் (எய்ம்ஸ்) கிளை மதுரையில் தொடங்கப்படும் என்று மத்திய அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானதுதான் தாமதம், அதற்கான பாராட்டைப் பெறுவதில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளிடம் ஏகப் போட்டி. காரணம், மதுரை எய்ம்ஸ்க்கு சுமார் 20 ஆண்டு கால வரலாறு இருக்கிறது. கடந்த 1990-களின் இறுதியில் மதுரையில் எய்ம்ஸ்க்கான கோரிக்கை எழுந்தது. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. கடந்த 2000-இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க.வின் ஆ. ராசா, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பதவியேற்றார். அவருக்குப் பிறகு 2004-இல் காங்கிரஸ் ஆட்சியில் அந்தப் பதவியை பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் பெற்றார். அவர் பதவி காலத்தில்தான் தில்லி எய்ம்ஸ்சின் விரிவாக்க கிளை ஒன்று ஹரியாணா மாநிலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், அப்போதும், தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் வரவில்லை. கடந்த 2006-இல் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது மத்திய அரசுக்கு மீண்டும் ஒரு கருத்துரு அனுப்பப்பட்டது. அதன் பின்பு எய்ம்ஸை இந்த ஊரில் தொடங்க வேண்டும்', அந்த ஊரில் தொடங்க வேண்டும்' என அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் கோரிக்கை வைத்து போராட்டங்களை நடத்தின. மத்திய அரசு கடந்த 2014-15 -ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் நாட்டின் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் கிளையை அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதற்கடுத்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கான எய்ம்ஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எய்ஸ்ம்ஸின் எதிர்கால விரிவாக்கத் திட்ட அறிக்கையில் 5-ஆவது கட்டத்தில் தமிழ்நாடு இடம்பெற்றது. அதன் பின்பு, தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கிளையை அமைக்க, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் தோப்பூர் ஆகிய 5 இடங்கள் கொண்ட பட்டியல் ஒன்றை அதிமுக அரசு தயார் செய்தது. இதில் ஒன்றை தேர்வு செய்ய அந்த இடங்களை மத்திய குழு ஆய்வு செய்தது. எய்ம்ஸை திருச்சிக்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என்று ஆ. ராசாவும், சேலத்துக்குக் கொண்டு சென்றுவிட வேண்டும் என அன்புமணி ராமதாசும் முயற்சி செய்தும் பலனில்லை. எய்ம்ஸை தஞ்சாவூருக்கு கொண்டு செல்வதில் ஆளும் கட்சியில் இருந்த செல்வாக்கு' படைத்தவர்களுக்கு ஆர்வம். புதுக்கோட்டைக்கு கொண்டு செல்ல முயன்றதைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர். ஆனால், மதுரையில் எதிர்மறை அரசியல். இங்கு ஏற்கெனவே, சில பெரிய மருத்துவமனைகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. எய்ம்ஸ் வந்தால் அது எதிர் காலத்தில் தங்கள் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கருதி அதை வேறு ஊருக்கு தள்ளிவிடும் அரசியலை சிலர் செய்ததால் சென்னையும், ஈரோடும் பரிசீலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இப்போது மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் வேறு வழியின்றி வரவேற்கத் தொடங்கி விட்டனர். மத்திய அரசு ரூ.1,500 கோடி திட்ட செலவிலான எய்ம்ஸ் மதுரைக்குதான் என உறுதி செய்த உடன் அ.தி.மு.க. அமைச்சர்கள் தமிழக முதல்வருக்கு போட்டிபோட்டு நன்றி தெரிவித்தனர். தஞ்சாவூரில் எய்ம்ஸை அமைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் மனு அளித்ததை அ.தி.மு.க.வினர் வசதியாக மறந்து விட்டனர். தி.மு.க.வினரும் விடவில்லை. எய்ம்ஸ் மதுரைக்கு வருவதற்கு தாங்கள்தான் காரணம் என அவர்களும் சொல்லிக் கொண்டனர். எய்ம்ஸ் மத்திய அரசு திட்டம். பாஜகவினர் விடுவார்களா என்ன? பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், பொன்னார்'தான் காரணம் என உள்ளூர் பாஜகவினரும் மாறிமாறி புகழ்பாடிக் கொண்டனர். இந்தப் போட்டியில் கம்யூனிஸ்ட்களும் பங்கு பெற்றனர். 1999-லேயே அப்போதைய எம்.பி. மோகன், எய்ம்ஸ்க்காக குரல் எழுப்பினார் என அவர்கள் கூறினர். ஆனால் எல்லாரும் ஒன்றை மறந்து விட்டனர். மத்திய அரசு தாமாக முன்வந்து அக்கறையோடு இந்த அறிவிப்பை வெளியிட்டுவிடவில்லை. தமிழ்நாட்டில் எய்ம்ஸை அமைக்க தேர்வு செய்துள்ள ஊரை விரைவாக அறிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2017 டிசம்பர் 31-க்குள் அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னரும் அறிவிக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. அதன் பிறகும் 3 மாத கால அவகாசம் கேட்கப்பட்டது. அந்த காலக்கெடுவும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜூன் 14-இல் மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு மனு செய்தது மத்திய அரசு. பின்னர் திடீரென ஜூன் 20-இல் தமிழ்நாட்டில் எய்ம்ஸை அமைக்க மதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பின்னணியை எண்ணிப் பார்த்தால் அதில் உள்ள அரசியல் புரியலாம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நோட்டா'விடம் தோற்றது பா.ஜ.க. அதன் பிறகு தமிழ்நாட்டில் பாஜகவினர் என்னதான் சுற்றி சுழன்று பணியாற்றினாலும் கட்சியின் வளர்ச்சி கானல் நீராகவே இருந்து வருகிறது. மேலும், மத்திய, மாநில அரசுகள் கூறும் வளர்ச்சித் திட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தீவிரமான எதிர்ப்பால் அ.தி.மு.க. மட்டுமல்லாது பா.ஜ.க.வும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதில் அ.தி.மு.க.வைவிட பா.ஜ.க. பெரிதும் கவலை அடைந்துள்ளது. காரணம், அடுத்து நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல்தான். வட மாநிலங்களில் வலுவிழந்து வரும் பா.ஜ.க. தென் மாநிலங்களை குறி வைக்கிறது. எனவே, கொந்தளிப்பில் உள்ள தமிழக மக்களை சாந்தப்படுத்தும் ஆயுதமாக எய்ம்ஸ் அறிவிப்பு இருக்கும் என பா.ஜ.க. நம்புவது போலத் தெரிகிறது. அதற்கான பலன் கிடைக்குமா என்பது மக்களவைத் தேர்தலுக்கு பிறகே தெரியும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts