Saturday, 7 July 2018

"ஆன்லைன்' அடிமைகள்!

"ஆன்லைன்' அடிமைகள்! By பா. ராஜா | தற்போது தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள அதிவேக வளர்ச்சி, உலக அளவிலான பல்வேறு செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வங்கித்துறை போன்ற அத்தியாவசியமான சேவைகளை மேற்கொள்ளும் துறைகளில் மின்னணு தொழில்நுட்பம் பரந்து விரிந்துள்ளது. இப்போதெல்லாம் வங்கிக்குச் சென்று, நீண்ட நேரம் காத்திருந்து பணம் செலுத்தவோ, பெறவோ அவசியம் இல்லை. வெளியூர் செல்பவர்கள் பேருந்து நிலையத்திற்கோ, ரயில் நிலையத்திற்கோ முன்னதாகவே சென்று வரிசையில் நின்று பயணச்சீட்டு எடுக்க வேண்டியதில்லை. இத்தகைய சேவைகளை எல்லாம், நம்மிடமிருக்கும் செல்லிடப்பேசியில் உள்ள இணையம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இப்படி நமக்கு நல்லது செய்கிறது என நம்பி, அதிலேயே நாள் முழுவதும் மூழ்கி கிடக்கும் பலர், இன்று அதற்கு அடிமையாகி உள்ளனர். குறிப்பாக, இளைய சமுதாயத்தினர் இணைய அடிமைகளாகியுள்ளனர். போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பதுபோல, ஏராளமானோர் ஆன்லைன் அடிமைகளாகி உள்ளனர். "இண்டர்நெட் அடிக்ஷன் டிஸôர்டர்' (ஐ.ஏ.டி.) என்ற புது விதமான நோய் இன்று பலரையும் பீடித்துள்ளது. இந்த நோயை குணப்படுத்துவது மிகவும் கடினம் என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆன்லைன் விளையாட்டுகள் பலரை அடிமையாக்கியுள்ளன. முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் போன்றவற்றில் இளம்பெண்கள் பலர் கட்டுண்டு கிடக்கின்றனர். குறிப்பாக, முகநூலில் பெண்கள் அதிக நேரம் மூழ்கிக் கிடப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஆன்லைன் அடிமைகள் பல பிரிவினராக உள்ளனர். "சைபர் செக்ஸ் அண்ட் போர்னோகிராபி', "சைபர் ரிலேஷன்ஷிப்ஸ்', "ஷாப்பிங் அண்ட் கேமிங்' என பல பிரிவுகளாக உள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயன்பாட்டில் சந்தோஷம் கிடைக்கிறது. "இணையச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்போர் அடிக்கடி பொறுமை இழக்கின்றனர். அவர்களின் நினைவாற்றலும் குறைகிறது. மேலும் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துவதில் தேக்க நிலை காணப்படுகிறது' என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜெர்மன் நாட்டு அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, 2011-இல் சுமார் 5 லட்சம் ஜெர்மானியர்கள் ஆன்லைன் செயல்பாடுகளுக்கு அடிமையாகி இருந்தனர். அவர்களில் சுமார் 5 சதவிகிதத்தினர் இளம்பெண்கள். "பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும், பிரச்னைகளை எதிர்கொள்ள இயலாத சூழ்நிலையிலும் இவர்கள் இணையத்தைத் தேடி ஓடுகின்றனர். நாளடைவில், அவற்றிலேயே மூழ்கி விடுகின்றனர்' என்று ஜெர்மன் நாட்டு பல்கலைக்கழகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றின்படி, உலகின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 6 சதவிகிதம் பேர் இணைய அடிமைகளாக உள்ளனர். 2018-ஆம் ஆண்டு கணக்குப்படி, உலகின் மொத்த மக்கள்தொகை சுமார் 760 கோடி. இவர்களில் சுமார் 53 சதவிகிதம் பேர், அதாவது சுமார் 390 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் சுமார் 360 கோடி பேர் செல்லிடப்பேசி மூலம் இணைய சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "இணைய அடிமைகள்' குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சீனா, இதை "கிளினிகல் டிஸôர்டர்' எனத் தெரிவித்துள்ளது. இணையப் பயன்பாட்டில் அதிகம் ஈடுபட்டிருப்போரை, அதிலிருந்து வேறு செயல்பாடுகளில் ஈடுபடுத்த 250 ஆலோசனை மையங்களை சீன அரசு ஏற்படுத்தியுள்ளது. மூளை நரம்புகளில் ஏற்படும் சில மாற்றங்களே இதற்கு காரணம் எனவும், இது மனநலம் மற்றும் நரம்பு தொடர்புடைய பிரச்னை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் 12 முதல் 18 வயதுக்குள்பட்ட 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணையச் செயல்பாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பள்ளி நேரங்களில் வாரத்துக்கு குறைந்தது ஆறு மணி நேரம் இணையத்திலேயே செலவிடுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் இணைய சேவை பயன்பாடு ஒரு சமூகப் பிரச்னையாகவே மாறியுள்ளது. அதனால், அங்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தியாவைப் பொருத்தவரை, சுமார் 12 சதவிகிதம் பேர் இணைய அடிமைகளாக உள்ளனர் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. "போர்னோகிராபி' சார்ந்த செயல்பாடுகளில் இந்திய பயன்பாட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இச்செயல்பாடுகளில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாம். மற்றொரு அதிர்ச்சிக்குரிய தகவல், பிரிட்டனில் ஆறு வயதுக்குள்பட்ட குழந்தைகள் நான்கு பேரில் ஒருவரிடம் அறிதிறன் பேசி (ஸ்மார்ட்போன்) உள்ளதாம். இணையப் பயன்பாட்டுக்கு இவையே அதிகம் பயன்படுகின்றனவாம். இணைய அடிமைகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், இதனை உடனே கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். "புளூவேல்' போன்ற உயிரை மாய்த்துக் கொள்ளும் விளையாட்டுகள் வெளியே தெரியவந்ததால், அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. செல்லிடப்பேசியின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், அதைப் பயன்படுத்துவோரைக் கண்காணிக்க வேண்டியது அவசியம். சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்பட வேண்டும். சிலரின் செயல்பாடுகள் வரம்பு மீறியதாக இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சைபர் கிரைம் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். மேலும், தனியார் இணைய சேவை மையங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்க வேண்டும். இதன் மூலம் இணையப் பயன்பாட்டைக் குறைக்கலாம்; குற்றச் செயல்களைத் தடுக்கலாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts