Tuesday 3 July 2018

உலகத்துக்கு தமிழர் தந்த நன்கொடை யோகா

உலகத்துக்கு தமிழர் தந்த நன்கொடை யோகா பேராசிரியர் இரா.மதிவாணன் யோகா என்பது மனதை ஒருமுகப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் தவநிலையாகும். இதனை அக்காலத்தில் ஒகம் என்றனர். மனதை ஒருமுகப்படுத்தும் யோக நிலைக்கு அடுத்து, உயிரை ஒருமுகப்படுத்தும் தியான நிலையை பழந்தமிழர் உருவாக்கினர். திருவள்ளுவர் யோகாவை தவம் அல்லது நோற்றல் என்றும், தியானத்தை மெய்யுணர்தல் என்றும் குறிப்பிட்டார். ஏதேனும் ஒன்றை அடைவதற்காகப் பட்டினி இருந்து வேண்டிக் கொள்வதை நோன்பு என்கிறோம். குமரிக்கண்டத்திலிருந்து வடக்கு நோக்கிப் பரவிய சிந்துவெளி நாகரிகம் தமிழருடையது. சிந்துவெளி முத்திரைகளில் யோக நிலைக் காட்சிகளும், தியான நிலைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. சிந்துவெளி நாகரிகம் கி.மு. 7000 அளவில் அரும்பியது என்றும் கி.மு. 3000 அளவில் முதிர்ந்த நாகரிகமாயிற்று என்றும் கூறுகின்றனர். இதனால் தமிழரின் யோகா என்பது 5000 ஆண்டுகால பழமை உடையது என்பது உறுதிப்படுகிறது. இன்றைய கன்னியாகுமரிக்குத் தெற்கே கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் மாவிந்த மலை என்னும் மகேந்திர மலையில் கல்லால மரத்தின் கீழ் தியான நிலையில் தெற்கு நோக்கி அமர்ந்திருந்த சிவபெருமான் தமிழ் ஆகமங்களை அருளினார். இதனை மன்னுமாமலை மகேந்திரமதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும் என்று திருவாசகத்தில் மாணிக்க வாசகர் கூறியிருக்கின்றார். யோகாவும், தியானமும் வடமொழியில் அறிமுகமாயிற்று. ஆரியர் இந்தியாவுக்கு வந்த போது அவர்களிடம் எழுத்தறிவும் இலக்கியமும் இருந்ததில்லை. வடநாட்டில் அக் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் பாணர்களின் பாட்டுச்சந்தங்களே வேதம் ஓதும் சந்தங்களாயின. சிந்துவெளி முத்திரையில் மாபாணன் என்னும் சொல் இடம்பெற்றுள்ளது. இதனால் யோகாவும் தியானமும் தமிழரின் தனிச்சொத்து என்பதை எவரும் மறுக்க இயலாது. நான் என்று சொல்லும்போது அது அழியும் உடலைக் குறிக்காமல், அழியாத உயிரைக் குறிக்கிறது. தியான நிலையில் கடவுளோடு கலக்கும் ஒளிவடிவாக இணைந்து விடுகிறது என்பதே நெற்றிச் சுழியில் நினைவை நிலைப்படுத்தும் யோகிகளின் கொள்கை. மனிதனின் விலங்கு உணர்வுகளை அடக்கி அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த உள்ளுணர்வை மேலோங்கச் செய்வதால் இதனைப் பழந்தமிழர் தம் வாழ்வோடு இணைத்துக் கொண்டனர். கணவனும் மனைவியும் இனிய இல்லறம் நடத்தி, குழந்தைகளைப் பெற்று நல்லறம் காத்து, மூத்த வயதில் தவம் என்னும் துறவு நிலை மேற்கொள்ள வேண்டும் என்று தொல்காப்பியர் கூறியிருக்கிறார். மனைவி மக்களை வீட்டில் தனியே விட்டுவிட்டு, தான் மட்டும் காட்டுக்குச் சென்று, துறவு மேற்கொள்வது தகாது என்று தமிழர் கருதினர். இதனை, தலைவனும் தலைவியும் தம்பதி நீங்கி தொலைவில் சுற்றமொடு துறவறம் காப்ப என்று தொல்காப்பியர் கூறியிருக்கிறார். திருவள்ளுவர் இல்லறத்துக்கு அடுத்து துறவறத்தை வற்புறுத்தியிருக்கிறார். இத்தகைய இல்லறத் துறவிகள் அந்தணர் எனப்பட்டனர். இவர்கள் பூணூல் அணிவதில்லை. ஒலைச் சுவடி, தண்ணீர்க்குடுவை யோக நிலையில் கையை ஊன்றிக் கொள்ளும் முத்தலைக்கோல், தவம் செய்யும்போது உட்காரும் மணை, ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்வர். இதனை நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும்காலை அந்தணர்க்குரிய என்று தொல்காப்பியர் கூறியிருக்கிறார். மேற்கண்ட வரலாற்று உண்மைகளால் யோகாக்கலை தமிழ்நாட்டில்தான் உருவாகியது என்பதும் இது உலகத்துக்குத் தமிழர் உவந்தளித்த ஒப்பற்ற நன்கொடை என்பதும் உலக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத் தக்க பெருமையுடையனவாகின்றன. தமிழர் தம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகளைத் தம்முடையவை என்று நிலைநாட்டத் தயங்க வேண்டியதில்லை. யாகம் செய்தால் ஆரியர், யோகா செய்தால் தமிழர். இது உலகறிந்த உண்மை.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts