வண்ணத் திரைப்படக் கலையின் தந்தை ஈஸ்ட்மேன்
ஜார்ஜ் ஈஸ்ட்மேன்
என்.ரமேஷ், பிரிவு தலைவர் (ஓய்வு), படம் பதனிடுதல், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரி, தரமணி
உலகெங்கும் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்யும் திரைப்படக் கலைக்கு தாயும் தந்தையுமாக தாமஸ் ஆல்வா எடிசனும், ஈஸ்ட்மேனும் விளங்கினர். ஆனால் எடிசனை மக்கள் அறிந்துகொண்ட அளவுக்கு ஈஸ்ட்மேனை தெரிந்துகொண்டார்கள் என்று சொல்ல முடியாது.
அவரது முழுப்பெயர் ஜார்ஜ் ஈஸ்ட்மேன். அவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 1854-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் ஜார்ஜ் வாஷிங்டன் ஈஸ்ட்மேன். தாயார் மரியா கில்போர்ன். பெற்றோருக்கு இவர் மூன்றாவது குழந்தை ஆவார். மற்ற இருவரும் சகோதரிகள்.
ஈஸ்ட்மேனுக்கு 15 வயதானபோது ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். அதனைத் தொடர்ந்து வங்கிப் பணியில் சேர்ந்தார். தமது 24-ம் வயதில் படமெடுப்பதற்கு புகைப்பட கருவியை வாங்கினார்.
ஆனால் படமெடுப்பதற்கு பதிலாக அதிக எடையுள்ள புகைப்படக் கருவிகள் மற்றும் அக்காலக் கட்டத்தில் இருந்த வெட் பிளேட் எமல்ஷனை (பிலிம் பிளேட் ஈரப்பதம்) மாற்றுவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். வெற்றியும் கண்டார். ட்ரை பிளேட் எமல்ஷனை (உலர்ந்த பிளேட்) கண்டுபிடித்தார்.
1880-ல் வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு போட்டோ கிராபிக் கம்பெனி தொடங்கினார். பின் 1885-ல் வில்லியம் ஹால் வாக்கருடன் இணைந்து சிறிய ரோல் கேமராவை கண்டுபிடித்தார். அதனைத் தொடர்ந்து ‘கோடாக்’ என்னும் நிறுவனத்தை தனி நபராக உருவாக்கினார். யார் ஒருவரின் கூட்டு இல்லாமல் செயல்படுவதே கோடாக் நிறுவனத்தின் கொள்கை ஆகும். அதனைத் தொடர்ந்து 1888-ல் கோடாக் கேமரா வினியோகம் செய்யப்பட்டது.
பின் படச்சுருள் உருவாக்க முயன்று வெற்றி கண்டார். தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த திரைப்படக் கேமராவில் ஜார்ஜ் ஈஸ்ட்மேன் கண்டுபிடித்த படச்சுருள் பயன்படுத்தப்பட்டது. ஆரம்ப காலக்கட்டத்தில் எளிதாக தீப்பிடிக்கக்கூடிய நைட்ரேட் படச்சுருள் பயன்படுத்தப்பட்டது. பின்பு நைட்ரேட் படச்சுருளுக்கு மாற்றாக எளிதில் தீப்பிடிக்காத அசிடேட் படச்சுருள் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. உலகமெங்கும் கோடாக் நிறுவனத்தின் படச்சுருள் வினியோகம் செய்யப்பட்டது.
எடிசன், ஈஸ்ட்மேன் கண்டுபிடித்த திரைப்பட கேமராவில் முதலில் கருப்பு, வெள்ளை படச்சுருள் பயன்படுத்தப்பட்டன. முதலில் பேசாத படம் வெளிவந்தது. பின்னர் பேசும்படம் வெளிவந்து மிகுந்த வரவேற்பை பெற்றது.
அதன்பிறகு ஈஸ்ட்மேன் சினிமாவை வண்ணமாக்கினார். ஆம், கோடாக் நிறுவனம் வண்ணப்படச் சுருளை முதன் முதலாக தயாரித்து வெற்றி கண்டது. இது உலகெங்கும் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஈஸ்ட்மேன் கண்டுபிடித்த வண்ணத்துக்கு அவரது பெயராலேயே ‘ஈஸ்ட்மேன் கலர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. அதன் பிறகு உலகெங்கும் கலர் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின.
தமிழ்ப் படங்களில் எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படம் முதலில் கேவட் கலரில் வெளிவந்தது. அதுவரை கருப்பு, வெள்ளை படங்களையே பார்த்து வந்த தமிழக மக்கள் கலரில் வெளியான படத்தை ஆச்சரியமுடன் பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பெரிய படக் கம்பெனிகள் வண்ணப் படங்களையே தயாரித்து வெளியிட்டன.
1992-ம் ஆண்டு எண்முறை (டிஜிட்டல்) தொழில்நுட்பம் திரைப்படத்தின் சிலியான் என்னும் ஒரு பைல் பார்மேட்டை கண்டுபிடித்து, அது இன்றளவும் திரைப்படத்துறையில் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிறுவனம் பலமுறை தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு ஆஸ்கார் விருது, எம்மி விருது மற்றும் பல அகாடமி விருதுகளை வென்று இருக்கிறது.
ஈஸ்ட்மேன் கடைசி வரை திருமணம் செய்துகொள்ளாமல் பலவித ஆராய்ச்சியில் ஈடுபட்டு பல புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்தார். அவர் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லுரி கட்டுவதற்கும், மேம்படுத்துவதற்கும் பல உதவிகளை செய்து வந்தார்.
ஈஸ்ட்மேன் 77-வது வயதில் கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டார். கோடிக்கணக்கில் பணம் இருந்தும் தனிமை துயரம் அவரை மிகவும் வாட்டியது.
காப்பீட்டு அதிகாரிகளை வரவழைத்து தன் சொத்துகளை உயிலாக எழுதி வைத்தார். நெருங்கிய நண்பர்களை வரவழைத்து பேசினார். 1932-ம் ஆண்டு துப்பாக்கியால் தன் மார்பில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் அவர் கடைசியாக எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டது.
அதில், ‘எனது நண்பர்களுக்கு... என்னுடைய வேலை முடிந்துவிட்டது. நான் ஏன் காத்து இருக்க வேண்டும்’ என்று எழுதி கையெழுத்துப் போட்டு இருந்தார்.
பின்னர் நியூயார்கில் அவர் வாழ்ந்த இடத்தில் ஈஸ்ட்மேன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆரம்ப காலம் முதல் இதுவரை திரைப்படத்துறையை கருப்பு, வெள்ளை காலம், வண்ணக் காலம், எண்முறை தொழில்நுட்ப காலம் என்று மூன்று காலகட்டமாக பிரிக்கலாம். இம்மூன்று காலக் கட்டத்திலும் கோடாக் நிறுவனத்தின் பங்கு அளப்பரியது.
நாளை (ஜூலை 12-ந்தேதி) ஜார்ஜ் ஈஸ்ட்மேனின் பிறந்த தினமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment