Saturday 7 July 2018

சர்க்கரையில் ஏது சைவமும் அசைவமும் ?

சர்க்கரையில் ஏது சைவமும் அசைவமும் ? By நெல்லை சு. முத்து | அறிவிப்புகளால் ஏழையைப் பணக்காரன் ஆக்கலாம். வறுமைக்கோட்டின் அளவைக் கீழ் இறக்கி, நாடாளுமன்றக் கூட்டம் போட்டு சட்டமாக நிறைவேற்றி விட்டால் போதுமே. அனைவரும் இந்நாட்டு மன்னர்கள் ஆகிவிடுவோம் அல்லவா? பொருளாதாரத்திற்கு மட்டும் அல்ல, உடல் சுகாதாரத்துக்கும் இது பொருந்தும். நீரிழிவுக்குப் பேர் போன இந்தியாவில் சர்க்கரை நோய் வரம்புகளைத் தளர்த்தினால் பலரும் ஆரோக்கியர்கள் ஆகிவிடலாம். முன்பெல்லாம் காலை உணவுக்கு முன், ரத்தத்தில் சர்க்கரை அளவு டெசிலிட்டருக்கு 140 மில்லி கிராம் என்று இருந்தால்தான் நீரிழிவு நோயாளி' என்கிற கௌரவப் பட்டம் கைகூடும். ஆனால் 1997-ஆம் ஆண்டின் அமெரிக்க சர்க்கரை நோய் சங்கத்தின் புதிய அறிவிப்பின்படி, 126 மில்லி கிராம் இருந்தாலே அந்தப் பட்டம் நிச்சயம். உலக அளவில் ஆண்டுதோறும் 17.5 டன் கரும்பு உற்பத்தி ஆகிறது. நாம் ஒவ்வொருவரும் மாதம் சராசரி இரண்டு கிலோ சர்க்கரை உண்கிறோம். சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளில் பிரேசிலுக்கு அடுத்த இடம் இந்தியாவிற்கே. சீனி' என்ற கலைச்சொல்லை வழங்கிய சீனாவும், ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்த நான்காம் இடத்தில் உள்ளது. தாய்லாந்து, அமெரிக்கா, மெக்ஸிகோ, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ரஷியா ஆகிய நாடுகள் பத்திரமாக பின்வரிசையில் ஒளிந்து கொண்டு விட்டன. மேற்கொண்டு நாமே நாடு நாடாகச் சென்று, இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுகிறோம். அமெரிக்க நீரிழிவு மருந்துகளும் இங்கே அமோக விற்பனை ஆக வழி வகுத்து வருகிறோம். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, ரத்தத்தில் தித்திப்பு கூடுதலால் 34 லட்சம் பேர் மரணம். அதிலும், அடிமட்ட மற்றும் நடுத்தர மக்கள்தாம் இந்த நோய்க்கு அதிகம் பலி ஆகிறார்கள். 2030 -ஆம் ஆண்டுக்குள் அது இரட்டிப்பாக ஆகக்கூடும் என்கிறது அந்தத் துவர்ப்பு அறிக்கை. 2010-ஆம் ஆண்டின் 29 கோடி என்ற கணக்கோடு ஒப்பிட்டால் 2030 -ஆம் ஆண்டு 44 கோடி சாமானியர்களுக்கு சர்க்கரை நோயாளி' என்ற விலைமதிப்பு மிக்க சான்றிதழ் வழங்கப்பட்டு விடும். இந்தியாவைப் பொருத்தமட்டில் 5 கோடி பேர் என்ற நிலை உயர்ந்து 8.7 கோடி பேர் வாய்க் கொழுப்பினால்' (தீனியினால் மட்டும் அன்றி, பேச்சினாலும்) அந்தத் தகுதிக்குத் தங்களை உயர்த்திக்கொள்பவர்களாம். இந்தியாவில் தொன்மையான ராம ராஜ்யத்தில் இருந்தே சர்க்கரைக்கு மதிப்பு அதிகம். ராமபிரான் பரம்பரையே இஷ்வாகு தானே! (இஷ்' என்றால் கரும்பு, வாகு' என்றால் வாக்கு.) இனிப்பு வாக்குப் பரம்பரையில் 62-ஆம் மன்னர் இவர். புத்தரும் இடம்பெறுகிறார். இந்தியாவில் இன்றைக்கு நாற்பது பேரில் ஒருவர் சர்க்கரை நோயாளி. (மன நோயாளிகள் 18 பேருக்கு ஒருவர்தாம் என்று சந்தோஷப்படாதீர்கள்.) எப்படியோ, சர்க்கரை நோயின் உலகத் தலைநகர் இந்தியா என்கிற புகழைப் பெற்று விட்டோம். நம் உலக ஜனத்தொகையில் 41 கோடி பேர் சர்க்கரை நோயாளிகள். இந்தியாவில் மட்டும் 6.4 கோடி பேர். நல்ல உணவுப் பழக்கம் மட்டும் அல்ல, நடைப் பயிற்சியையும் கைவிட்டுவிட்டோம். வீட்டு வரவேற்பறையில் மணிக்கணக்கில் உட்கார்ந்து நொறுக்குத் தீனிகளை உண்கிறோம். திரை விளம்பரங்களைப் பார்த்து நாக்கைச் சுழற்றிச் சுழற்றித் தின்னும் இனிப்புப் பண்டங்கள். சர்க்கரை சைவமா? அசைவமா?' என்கிற விவாதங்கள் வேறு. இனிப்புச் சுவைக்கு லாக்டோஸ்' நன்று. பாலூட்டிகளின் உடல் திசுக்களில் இழிந்து பிரிந்து வந்த அசைவச் சர்க்கரை அது. சொல்லப்போனால், 38% ஃப்ரக்டோஸ் அடங்கிய தேன் உடலுக்கு நல்லது. ஆனால் அது அசைவம். தேன் அடைகள் தேனீக்களோடு சேர்த்துப் பிழிந்து எடுக்கப்படுகிறது. உண்மையில் முன்னாள் சர்க்கரை அசைவம். இன்னாள் சர்க்கரை சைவம்தான். வேதியியல் சைவம். அனைவருக்கும் உகந்தது. உள்ளபடியே, கருப்பஞ்சாற்றில் லேசான அமிலத் தன்மை இருக்கும். அதனைக் குறைக்கவில்லை என்றால், சர்க்கரை புளித்து, நொதித்து ஆல்கஹால் (சாராயம்) ஆகிவிடும். அதனால் கருப்பஞ்சாற்றின் புளிப்புத் தன்மையை மாற்றுவதற்காக அதில் கொஞ்சம் தாளித்த சுண்ணாம்புக் கல் (கால்சியம் ஆக்சைடு) கலப்பது உண்டு. சுண்ணாம்பு கலந்த கருப்பஞ்சாற்றின் சகதி நிறத்தை மாற்ற வேண்டுமே. கந்தக அமில வாயு (சல்ஃபர்-டை-ஆக்சைடு) செலுத்தினால் ஆயிற்று. கால்சியம் சல்ஃபைட்டு, சல்ஃபேட்டு ஆகிய உப்புகள் உண்டாகும். பிறகென்ன? அழுக்கு நிறக் கருப்பஞ்சாறு, இளநீர் போல் தெளிவாகும். வெள்ளைச் சர்க்கரைப் படிகங்கள் பெறப்படும். முன்னாளில் இத்தனை வேதிக் கலப்புகளுக்குப் பதிலாக சர்க்கரைச் சாற்றினில் மாட்டு எலும்புத்தூள் கலந்து சர்க்கரை தயாரித்தார்கள். அது அசைவம் அல்லவா? இன்றைய சைவச் சர்க்கரை கந்தக அமிலத்தினால்தான் இனிப்பது இல்லையோ என்று கேட்பதில் அர்த்தம் இருக்கிறது. உலக நாடுகள் கந்தகச் சர்க்கரைக்குத் தடை விதித்து விட்டதால், இந்தியச் சர்க்கரையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யவும் முடியாது. நாம் தயாரித்த நஞ்சை நாமே அருந்தி வாழவேண்டும் என்பது நம் தலைவிதி. இந்தச் சர்க்கரையின் நிறம் வெளுக்க கந்தக அமில வாயுவிற்குப் பதில் கரியமில வாயு கலக்கிறார்கள். இந்தியர்கள் அதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். காரணம், அந்தச் சர்க்கரை சற்று சாண நிறத்தில் இருக்கிறதாமே. எதிலும் வெண்மைதான் தூய்மை என்று நினைத்து ஏமாறுகிறோம். கான்பூர் தேசியச் சர்க்கரைப் பயிலகம் மற்றும் தக்காணச் சர்க்கரைத் தொழில்நுட்பவாதியர் கழகம் போன்ற அறிவியல் அமைப்புகள் சில ஆய்வுகள் மேற்கொண்டனர். கந்தக சர்க்கரையின் கபில நிறத்தைப் போக்க சிறிதளவு பாஸ்பாரிக் அமிலம் கலக்கின்றனர். பழையபடி ஓரளவுக்கு வெள்ளைச் சர்க்கரை இனித்தது. மகாராஷ்டிரத்தில் சோலாப்பூர் தொழிற்சாலை ஒன்றில் இது பரிசோதனை ரீதியில் தயாரிக்கப்பட்டது. அது மட்டுமா? ஆல்கஹாலான சாராயம் தயாரிக்கும்போது இந்த கந்தகம் அதில் சிறிதளவு கலந்து இருக்குமாம். இத்தனை எதற்கு? மொத்தத்தில் தினமும் சாப்பாட்டில் இனிப்பைக் குறையுங்கள் என்று சொன்னால் கேட்டால்தானே? குளூகோஸ் தெரியும், ஆனால் மாம்பழத்தில்தான் உச்ச அளவாக, ஒரு பழத்தில் 30 கிராம் ஃப்ரக்டோஸ் உள்ளது. ஒரு வாழைப்பழத்தில் 27 கிராம். ஒரு கோப்பை திராட்சை ரசத்தில் 25 கிராம். தர்ப்பூசணி சராசரித் துண்டில் 18 கிராம். வட்டாகச் சீவிய அன்னாசிப் பழத்தில் 15 கிராம். ஒரு ஆப்பிளில் 10 கிராம். அரைக்கோப்பைப் பேரீச்சம்பழ திரவத்தில் 55 கிராம் ஃப்ரக்டோஸ் உள்ளது. என்றாலும், ஃப்ரக்டோஸ் செறிந்த மக்காச் சோள இன்சுவைக் குழம்பு இன்றைக்கு 'மேசைச் சர்க்கரை' என்ற பெயரில் மேனாடுகளில் பரிமாறப்படுகிறது. அதில் பாதரசம் கலந்து இருப்பது ஓர் ஆபத்தான செய்தி. நீண்ட கால உபாதைகள் ஒரு பக்கம். குறுகிய காலத்தில் நெஞ்சுவலி, வாந்தி, கண் எரிச்சல், தலைவலி, பார்வைக் கோளாறு என்று சர்வ நோய் காரணி இது. பொதுவாக, லவங்கப் பட்டை நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாம். இதில் எதிர் - ஆக்சிகரணிப் பொருள் உள்ளதாம். அதனால் சீழ்முறி குணமும், ரணம் ஆற்றும் தன்மையும், சிறிய அளவில் மயக்கம் ஊட்டியாகவும் இது உதவும். ஆயின் இதில் அடங்கிய யுஜினோல்' என்ற வேதிப்பொருள் நோய் முறி திறன் உடையது. பல் மருத்துவர்கள் இதனைக் கையாளுவது உண்டு. அதிலும் லவங்கப் பட்டைக்கு பஞ்சசீல குணம் உண்டாம். நீரிழிவு, உடல் எடை கூடுதல் கொழுப்பு, சருமத்தில் பொடுகு , முரட்டு உரோமம் போன்ற ஐந்துவகைக் குறைகளுக்கும் கைகண்ட நிவாரணம் இது. சில சுண்டெலிகளுக்கு லவங்கத் தூளினை தினமும் ஒரு குறித்த அளவு ஊட்டிவளர்த்தனர். ஒரு மாதம் கழித்து, அந்த லவங்க எலிகளை, சாதாரண உணவு உண்ட சுண்டெலிகளுடன் திறந்த வெளியில் மேய விட்டனர். என்ன ஆச்சரியம்! லவங்கப்பட்டை உண்ட சுண்டெலிகளில் தங்களின் வளைக்குள் சரியாக, பத்திரமாகப் புகுந்தன. சாதாரண எலிகளோ தொகுதி தவறிய வாக்காளர்கள் மாதிரி இடம் மாறி மாறித் தவித்தன. இதுதான் இன்றைய லவங்கப் பட்டையின் மகத்துவம். இலங்கையில் விளையும் மூலிகை லவங்கம். இந்தியாவிலும் சீனாவிலும்கூட இதன் விளைச்சலுக்குக் குறைவில்லை. இலங்கையில் சின்னாமம் சிலானிக்கம்' என்றும், சீனாவில் சீனமாமும் காஸியா' என்றும், ஆங்கிலத்தில் சின்னமம்' என்றும் வழங்கப்படுகிறது. ஆனாலும், பட்டை (தமிழ்), லவங்கப்பட்டை (கன்னடம்), கருவாப்பட்டை (மலையாளம்), தல் சின்ன செக்கா (தெலுங்கு), தர்ச்சின்னி (வங்கம்), தல் சின்னி (இந்தி) என்றெல்லாம் அழைக்கப்படும் மருத்துவக் குணம் கொண்ட மூலிகை இது. உடல் எடையைக் குறைக்கவும், தோல் மினுமினுப்பு அடையவும், தலைமுடி வளரவும் உதவுகிறது. இதில் அடங்கிய கௌமாரின்' என்ற வேதிப்பொருளுக்கு ரத்த ஓட்டத்தினை சீராக்கும் குணம் உள்ளது. அதற்காக அளவுக்கு அதிகமாக இதனை உட்கொண்டால் கல்லீரலும், சிறுநீரகமும் பாதிக்கப்படும், எச்சரிக்கை! நம்பிக்கை என்று வந்தபிறகு, எதையும் உண்ணலாம்போல. இந்து சந்நியாசிகளுக்குக் கிறித்தவர்கள் நிறுவிய நோபல் பரிசு கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார் குளிர் அறைக்குள் டாலர் திரட்டும் ஓர் அறக்கட்டளைப் பேச்சாளர். முன்னாள் பிரதமர் ஒருவரிடம் ஒரு நேர்காணலில், அவர் சிறுநீர் அருந்துவது குறித்துக் கேட்கப்பட்டபோது, அந்த முன்னாள் பிரதமர், மருந்து என்ற பெயரில் நீங்கள் பிறர் மூத்திரத்தைத்தானே குடிக்கிறீர்கள்' என்றாராமே.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts