Wednesday 11 July 2018

நீட் தேர்வு தீர்ப்பு: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா? கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வை எதிர்த்தும், அந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரியும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், கல்வியாளர்கள் போராடினர். ஆனாலும் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் வகையில் தேர்வு மையங்கள் பிற மாநிலங்களில் ஒதுக்கப்பட்டன. இத்தகைய சவால்களை எல்லாம் கடந்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வினாத்தாளை பார்த்ததும் பேரதிர்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால் பல்வேறு கேள்விகள் தமிழில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்தன. இதனால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் சரியான விடையை தேர்வு செய்து எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏழை மாணவர்கள் பலரின் மருத்துவ படிப்பு கனவு கலைந்து போகும் நிலையும் வந்தது. இதற்கிடையே, வினாத்தாளில் இருந்த குளறுபடி தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட தவறால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் கேட்டு அவர் அந்த வழக்கை தொடர்ந்திருந்தார். இன்று (அதாவது நேற்று) அந்த வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கி இருக்கிறது. அந்த தீர்ப்பில், ‘மொத்தம் 49 வினாக்களில் மொழியாக்கம் தவறாக இருந்தது. ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக தர வேண்டும்’ என உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த உத்தரவு தமிழ் வழியில் பயின்று நீட் தேர்வை எதிர்கொண்ட ஏழை, எளிய மாணவர்களுக்கு நியாயம் வழங்கி இருக்கிறது. ஆனால், இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது சி.பி.எஸ்.இ. வாரியமே முன்வந்து, ‘நாங்கள் ரேங்க் பட்டியலை வெளியிட மாட்டோம்’ என்று தெரிவித்து இருந்தபோது, அவசர கதியில் தமிழக அரசு ரேங்க் பட்டியலை தயார் செய்து வெளியிட்டு இருக்கிறது. இதை தமிழக அரசு செய்திருக்க வேண்டியதில்லை. ஏனென்றால் தற்போது கோர்ட்டு உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வீதம் வழங்கப்பட வேண்டி உள்ளது. இதனால் அவர்களின் மதிப்பெண்கள் அதிகரிக்கும். ஏற்கனவே தயாரித்த ரேங்க் பட்டியலை கைவிட்டு, புதிதாக ரேங்க் பட்டியல் தயாரிக்க வேண்டும். ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ரேங்க் பட்டியலில் இருந்த மாணவர்கள் வாய்ப்பை இழக்கலாம். அதற்கு பதிலாக கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்கள் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறலாம். இதனால் ஏற்கனவே ரேங்க் பட்டியலில் இடம்பெற்று வாய்ப்பை இழக்கும் மாணவர்களுக்கு தேவையில்லாத மனஉளைச்சல் ஏற்படும். இதற்கு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதன் முடிவு தெரிவதற்கு முன்பே ரேங்க் பட்டியலை தமிழக அரசு தயாரித்ததுதான் காரணம். இதில் அரசு பொறுமை காத்திருக்க வேண்டும். அதே வேளையில், தமிழ் வழியில் பயின்ற மாணவர்களில் பெரும் பகுதி ஏழை குடும்பங்களை சார்ந்த மாணவர்கள், பின் தங்கிய கிராமப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் ஆவர். இப்படிப்பட்ட மாணவர்கள் கடுமையான உழைப்பை சிந்தி தகுதித்தேர்வை எதிர்கொண்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசோ, சி.பி.எஸ்.இ.யோ மேல் முறையீட்டுக்கு செல்லாமல், தங்களின் தவறை உணர்ந்து தவறுக்கான பரிகாரமாக அந்த மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் அறிவியல் படிப்பு மீதும், மருத்துவ படிப்பு மீதும் மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு, தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை போல தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்களை அளித்து, அதற்குரிய வகையில் ரேங்க் பட்டியலை தயாரித்து மாணவர் சேர்க்கையை நடத்துவது மட்டும் தான் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்கு நியாயம் வழங்கும் நடவடிக்கையாகும். சமூக நீதியின்பால் அக்கறையுள்ள அரசு உடனடியாக உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். ஏற்கனவே அகில இந்திய அளவில் ஒரு போட்டி தேர்வு என்பது சாத்தியமற்றது. இந்தியா என்பது பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை கொண்ட நாடு. பல்வேறு பிரதேசங்களை கொண்ட நாடு. இங்கு பல மொழிகள் பேசப்படுகின்றன. பலவிதமான கலாசாரங்கள் பின்பற்றப்படுகின்றன. எனவே இத்தகைய நாட்டுக்கு ஒரே மாதிரியான தகுதி தேர்வு என்பது நியாயமற்றது. உண்மையிலேயே மருத்துவத்தில் ஆர்வமும், அடிப்படை அறிவும் கொண்ட மாணவர்களை இத்தகைய தகுதி தேர்வுகள் போட்டி களத்தில் பங்கேற்காமல் விலகி நிற்க செய்யும். சமூக மற்றும் கல்வி பின்தங்கலில் இருந்து வரும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இத்தகைய போட்டித் தேர்வுக்கு உண்டான நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதற்கு வாய்ப்பில்லை. மொத்தத்தில் நீட் தேர்வு சமூக அக்கறைகொண்ட மனித உயிர்களை காக்கும் பணியில் ஈடுபடக் கூடிய மருத்துவர்கள் உருவாகாமல் செய்துவிடும். நீட் போன்ற தகுதித் தேர்வுகளுக்கு மாற்று என்றால், பள்ளிக் கல்வியை வலுப்படுத்தி, மேல்நிலை பள்ளிக் கல்வியில் கற்றல் கற்பித்தல் பணி சிறப்பாக நடைபெறும் சூழலை வகுப்பறையில் உருவாக்க வேண்டும். தகுந்த ஆசிரியர்களை நியமிப்பதும், சிறந்த பாடத்திட்டத்தை கொண்டு வருவதும், தரமான கற்பித்தல் முறையை உருவாக்குவதால் மட்டுமே தரமான மாணவர்களை உருவாக்க முடியும். அத்தகைய முயற்சியில் தான் அரசு ஈடுபட வேண்டும். தகுதி மற்றும் போட்டித் தேர்வுகள் கல்வியை வணிக பொருளாக மாற்றுகின்றன. வகுப்பறைக்கு முக்கியத்துவம் தராமல் பயிற்சி கூடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் பாட வாரியான வல்லுனர்கள் எதிர்காலத்தில் உருவாகாமல் போகக்கூடிய சிக்கல் உருவாகும். இது இந்தியாவினுடைய சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு உதவாது. பல்துறை விஞ்ஞானிகளை உருவாக்கித் தந்த பெருமை இந்தியாவுக்கு உண்டு. அத்தகைய சூழலை நீட் போன்ற தகுதி தேர்வுகள் சிதைத்துவிடும். மாணவர்களை ஒரு ஒற்றை தேர்வை நோக்கி நகர்த்துவதாக அமைந்துவிட்டால், பல் துறை வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும். எனவே தமிழகத்தின் வலுவான பொது சுகாதாரத்துறையை காப்பாற்றிடவும், ஏழை-எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைத்திடவும் மேல்நிலைப் பள்ளி கல்வி இறுதியில் நடைபெறும் பொதுத்தேர்வின் அடிப்படையில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து மருத்துவ படிப்புக்கு இடம் ஒதுக்க வேண்டும். இதுதான் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலுக்கான நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts