Monday 2 July 2018

உலகளாவிய பணிகளும், படிப்புகளும்...!

உலகளாவிய பணிகளும், படிப்புகளும்...! செயற்கை உடலுறுப்புகள் உலக அளவில் சில புதுமையான பணிகளுக்கு தேவை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் மறுபக்கம் எந்திரமயமாக்கலால் பல லட்சம் பணிகள் தூக்கி எறியப்பட்டு ஆட்கள் வெளியேற்றப்படுகிறார்கள். புதிய பணிகளில் சில கேள்விப்படுவதற்கே சிரிப்பையும், வியப்பையும் தரலாம். உதாரணமாக குப்பை பொறியாளர் (டிராஸ் என்ஜினீயர்) பணியை குறிப்பிடலாம். மேலோட்டமாகப் பார்த்தால் குப்பை பொறியாளர் என்பது நகைப்புக்குரிய பணியாகத் தோன்றலாம், ஆனால் இது எதிர்காலத்தில் பல லட்சம் பேர் பணிபுரியும் துறையாக வளர்ந்து கொண்டிருப்பதை இங்கே விவரமாக பார்க்கப் போகிறோம். இன்னும் இதுபோன்ற சில வாய்ப்பு மிக்க பணிகளையும், எந்த படிப்புகளைப் படித்தால் அவற்றில் சாதிக்கலாம் என்பதையும் பார்ப்போம்.... டிராஸ் என்ஜினீயர் மனிதர்கள் ஆண்டு தோறும் 1300 கோடி கிலோ எடையுள்ள குப்பையை உருவாக்குகிறார்கள். நிலங்களில் விழும் இந்த குப்பைகளில் மிகுந்திருக்கும் பிளாஸ்டிக் மற்றும் எலக்ட்ரிக் பொருட்களினால் பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. குப்பைகளை மேலாண்மை செய்வதற்காக தனித்துறை அவசியமாகி உள்ளது. இதைப்பற்றி படிக்கும் வகையில் ‘டிராஸ் என்ஜினீயர்’ என்றொரு பணியும், அதற்கான படிப்பும் உருவாகத் தொடங்கியுள்ளது. ‘குப்பை மேலாண்மையை’ புதுமை சிந்தனையுடன் எதிர்கொள்ள டிராஸ் என்ஜினீயர் தேவைப்படுகிறார். பூமியை குப்பைகளில் இருந்து காப்பாற்றும் டிராஸ் என்ஜினீயர்கள் வெறுமனே குப்பை சேகரிப்பவர்கள் அல்ல. குப்பைகளில் இருந்து கியாஸ் போன்ற எரிபொருள் தயாரிப்பது. மக்காத கழிவுகளை அதன் தன்மைக்கேற்ப சுவர் அமைக்கப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவது டிராஸ் என்ஜினீயரின் வேலை. டிராஸ் என்ஜினீயரிங் கற்றறிந்தால், குறைந்த விலையில் கழிவை வாங்கி மறுசுழற்சி மூலம் நல்ல லாபத்துடன் தொழில் செய்ய முடியும். இணையம் வழியாக குப்பையை விலைக்கு வாங்கும், விற்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. குப்பை மேலாண்மைக்கு அரசு மற்றும் சமூக நல அமைப்புகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கவுரவங்களும், விருதுகளும் கூட தேடி வரும். சிவில் என்ஜினீயரிங், கெமிக்கல் என்ஜினீயரிங் படிப்பவர்கள் இந்தத் துறை பணிகளில் வேலை செய்யலாம். இவர்கள் இது பற்றிய மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புகளை படித்து ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தால் வாய்ப்புகள் இன்னும் பிரகாசமாகும். சுயதொழில் தொடங்கி சாதிக்கலாம். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ‘டிராஸ் என்ஜினீயரிங்’ தனிப்படிப்பு உள்ளது. அமெரிக்காவின் எம்ஐ.டி. மற்றும் கலிபோர்னியா ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இந்த பாடப்பிரிவை தொடங்கும் முயற்சிகள் நடக்கின்றன. மாற்று எரிபொருள் நிபுணர்கள் பெட்ரோல், டீசல் போன்ற படிம எரிபொருட்களை நம்பியே நாம் எதிர்கால தேவையை சமாளிக்க முடியாது. குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே இந்த வளங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவற்றினால் உண்டாகும் புகை சுற்றுச்சூழலுக்கு தீமை தருவது, மாற்று எரிபொருள் சிந்தனைக்கு வழிவகுத்திருக்கிறது. அதனால்தான் நாம் சூரியசக்தி மற்றும் நீர்மின்சக்தி, காற்று எரிபொருள், தண்ணீர் எரிபொருள் என்பவை பற்றி பேச ஆரம்பித்திருக்கிறோம். எதிர்காலத்தில் மாற்று எரிபொருள் துறை இன்னும் அதிக தேவை மிக்க துறையாக பரிணமித்துவிடும். எனவே இந்தத் துறை சார்ந்த படிப்புகளை படிப்பது சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். கெமிக்கல் என்ஜினீயரிங், வேதியியல், ரினியுயபிள் எனர்ஜி என்ஜினீயரிங், என்விரான்மென்டல் ஸ்டடிஸ், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், இயற்பியல் பட்டப்படிப்புகளை படிப்பவர்கள் இது சார்ந்த பணிகளுக்குச் செல்லலாம். நேரடியாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பற்றி பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளையும், ஆராய்ச்சியையும் தொடர்பவர்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது. அமெரிக்காவின் ஒரிகான் தொழில்நுட்ப மையம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை படிப்பில் உலக அளவில் முன்னணி கல்வி மையமாக திகழ்கிறது. டெக்ஸாஸ் பல்கலைக்கழகம், எம்.ஐ.டி. உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களிலும் இந்த படிப்புக்கு நல்ல மதிப்பு உள்ளது. உடல்உறுப்பு உற்பத்தியாளர்கள் மரபணு மாற்றம் மற்றும் நானோ தொழில்நுட்பங்களால் செயற்கையாக உடல் உறுப்புகளை வளர்க்கும் முறை வேகமாக அதிகரித்து வருகிறது. எலி, பன்றி போன்ற உயிரினங்களின் உடலில் இயற்கையாக சில உடல்பாகங்களை வளர்ப்பது, அவற்றின் பாகங்களை எடுத்து மனிதர்களுக்கு பொருந்தச் செய்வது, செயற்கையாக ஸ்டெம்செல்கள் மூலம் ஆய்வகத்தில் உடல் உறுப்புகளை வளர்ப்பது, முப்பரிமாண அச்சடிப்பு எந்திரங்கள் உள்ளிட்ட ரோபோக்களின் உதவியாலும் உடல் பாகங்கள் தயாரிப்பு பற்றிய சோதனைகள் பல்வேறு நாடுகளிலும் வேகம்பிடித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு 12 நிமிடத்திற்கும் உறுப்பு வேண்டுவோர் பட்டியலில் புதிதாக ஒருவர் சேர்ந்து வருகிறார். ஒவ்வொரு நாளும் 21 பேர் உறுப்பு பற்றாக்குறையால் இறப்பை எய்துகிறார்கள். உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் சிறுநீரகம், கருவிழி, இதயம், கல்லீரல் என பல்வேறு உடல் உறுப்பு தேவைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கான உறுப்புகளை வடிவமைக்கும் துறை மிக மிக அவசியமானதாக வளர்ந்து வருகிறது. உயிரியல், மரபியல், உயிர்மருத்துவ பொறியியல் படிப்பவர்கள் இந்த துறையில் சாதிக்கலாம். மேற்படிப்பும், ஆராய்ச்சிப்படிப்பும் உங்களுக்கான தனித்துவங்களை உருவாக்கித்தரும் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்தின் ஹார்வேர்டு, அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகம். ஜான் காப்கின் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இந்த படிப்புகள் சிறப்பானதாக வழங்கப்படுகிறது. இன்டர்நெட் திங்ஸ் பாதுகாப்பாளர் மிக்சி ரிப்பேர், செல்போன் ரிப்பேர் செய்வதுபோல, விரைவில் உலகம் முழுவதும் இணைய பொருள் பராமரிப்பாளர், பழுதுபார்ப்பவர்களின் தேவை மிகுந்துவிடும் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்போது நாம், சமூக வலைத்தளங்களில் நண்பர்களுடன் உரையாடுவது, ஆன்லைன் பர்ச்சேஸ் செய்வது உள்ளிட்ட இணைய தேடல்களால் நாம் இணையத்தின் அங்கத்தினராக இருக்கிறோம். எதிர்காலத்தில் ‘பொருட்களின் இணையம்’ (இன்டர்நெட் ஆப் திங்ஸ்) எனும் நுட்பத்தின் அடிப்படையில் நமது பொருட்களும் இணையத்துடன் இணையப்போகின்றன. சிறிய எலக்ட்ரானிக் பட்டையின் உதவியுடன் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு எண் வழங்கப்பட்டு இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் அந்தப் பொருள் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்கலாம். உதாரணமாக ஞாபக மறதி உள்ளவர்கள் தங்கள் சாவிக் கொத்தில் ஒரு எலக்ட்ரானிக் பட்டையை ஒட்டி, இணையதளத்துடன் இணைத்துவிட்டால் சாவி எந்த இடத்தில் கிடக்கிறது என்பதை ஸ்மார்ட்போனில் பார்த்துவிடலாம். இதுபோல ஒவ்வொரு பொருளையும் பொருட்கள் இணையத்தில் இணைக்கும் வசதி வேகமாக வளர்ந்து வருகிறது. இவற்றில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள், குறைபாடுகளை சரி செய்யும் பணியும் பக்கவாட்டில் முக்கியத்துவம் பெற்றதாக வளர்ந்து வருகிறது. உதாரணமாக தானியங்கி முறையில் செயல்படக்கூடிய ஒரு பிரிஜ், திறக்க மறுத்தால் அதை பொருள் இணைய பராமரிப்பாளர்தான் சரிசெய்து திறந்து தர வேண்டும். இன்னும் பத்து, இருபது ஆண்டுகளில் செல்போன் சர்வீஸ் கடைகள்போல ‘ஸ்மார்ட்திங்ஸ் ரிப்பேர் ஸ்டோர்கள்’ மிகுந்துவிடும் என்றால் ஆச்சரியமில்லை. அடிப்படை அறிவியல் ஆர்வம் கொண்டவர்கள் கணினி அறிவியல், கணினி பொறியியல், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு இது சார்ந்த துறைகளில் பணிக்குச் செல்லலாம். இது பற்றிய சிறப்பு படிப்புகள் விரைவில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts