Tuesday, 31 July 2018

சமய நல்லிணக்கத்தைப் போற்றிய சதாவதானி

சமய நல்லிணக்கத்தைப் போற்றிய சதாவதானி செய்குத்தம்பி பாவலர் தமிழ்ப் பெரும்புலவர், சுதந்திரப் போராட்ட தியாகி, சமய நல்லிணக்கத்தைப் போற்றியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சதாவதானி செய்குத்தம்பி பாவலர். ஒரே நேரத்தில் எட்டு பேர் கேட்கும் கேள்விகளுக்கு விடை கூறும் ஆற்றல் படைத்தவர்கள் ‘அஷ்டவதானி’ என்று அழைக்கப்படுகிறார்கள். பத்து கேள்விகளுக்கு விடை அளிப்பவர்கள் ‘தசாவதானி’ என்றும், நூறு கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்கள் ‘சதாவதானி’ என்றும் போற்றப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் சதாவதானியாக விளங்கியவர் செய்குத்தம்பி பாவலர். இவர் 1874-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந்தேதி நாகர்கோவிலை அடுத்த இடலாக்குடி என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் பக்கீர்மீரான் சாகிப்- அமீனா. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது சங்கரநாராயணர் என்ற தமிழ்ப் புலவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை முறையாக கற்றார். அப்போதே கருத்தாழமிக்க கவிதைகளை இயற்றியதால் இவரை ‘பாவலர்’ என்று மக்கள் அழைத்தனர். சீறாப்புராணத்துக்கு உரை எழுதி வெளியிட்டார். கோட்டாறில் பிள்ளைத்தமிழ், அழகப்பாக்கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், நபிகள் நாயகமான்மிய மஞ்சரி, இன்னிசைப் பாமாலை, நீதி வெண்பா உள்பட பல கவிதை நூல்களையும் வசன நடை காவியங்களையும் எழுதினார். அவதானக் கலை என்பது பல்வேறு நினைவாற்றல் அல்லது கவனகம் என்பதாகும். அற்புதமான நினைவாற்றல் கொண்ட செய்குத்தம்பி பாவலர் அதில் பயிற்சி பெற்றார். ஒரே நேரத்தில் 100 பேர் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறனைப் பெற்றார். 1907-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந்தேதி சென்னை விக்டோரியா மண்டபத்தில் செய்குத்தம்பி பாவலரின் சதாவதான நிகழ்ச்சி நடந்தது. மகாவித்துவான் ராமசாமி நாயுடு, திரு.வி.கல்யாண சுந்தரனார் முதலான தமிழறிஞர்கள் முன்னிலையில் ஒரு கவிதையைப் பாடிக்கொண்டே 100 கேள்விகளுக்கு பதில் அளித்தார். நிகழ்ச்சியின்போது, அவரது முதுகில் போடப்பட்ட தானியங்கள் எவை என்பதை கூறினார். பலவகை நீர் வகைகள் தெளிக்கப்பட்டன. அவை எந்த நீர் வகை என்பதை தெரிவித்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள மாதம், தேதி, கிழமை ஆகியவற்றையும் சரியாக சொன்னார். பலர் கேட்கும் கேள்விகளுக்கு தனது மதிகூர்மையால் தெளிவான பதிலை அவர் அளித்தார். ‘சதாவதானி’ என்ற பட்டத்தை பெற்றார். மேலும் உரை எழுதுதல், பாட்டெழுதுதல், பதிப்பித்தல் மட்டுமின்றி திருக்குறள், கம்பராமாயணம், சீறாப்புராணம் பற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார். இதனால் சென்னையில் நடந்த ஒரு விழாவில் அவருக்கு ‘பாவலர்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது. அன்று முதல் செய்குத்தம்பி பாவலர் என்றே அழைக்கப்பெற்றார். அப்போது அவருக்கு வயது 27. அந்தக் காலத்தில், ராமலிங்க வள்ளலாரின் திருஅருட்பாவுக்கு சிலர் கண்டன குரல் எழுப்பினர். ‘அருட்பாவா? மருட்பாவா?’ என்ற விவாதம் தொடர்ந்தது. பாவலர், விவாதத்தில் பங்கேற்று தம் வாதத் திறமையால் அருட்பா அணிக்கு வெற்றி தேடி தந்தார். இதனை பாராட்டி காஞ்சீபுரத்தில் பாராட்டு கூட்டம் நடைபெற்றது. இதில் அவருக்கு ‘தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. ஒருமுறை பாவலர் சதாவதானம் நிகழ்த்திக் கொண்டிருந்தபோது புலவர் ஒருவர் அவரை சிக்க வைக்கும் எண்ணத்துடன் ஒரு விந்தையான வெண்பா ஈற்றடியைக் கொடுத்தார். ‘துருக்கனுக்கு ராமன் துணை’ என்பதுதான் ஈற்றடி. அவர் இந்த ஈற்றடிக்கு எப்படி பாடல் எழுதப் போகிறார்? என்று சபையினர் திகைத்து காத்திருந்தனர். பாவலரோ, புலவரின் விஷமத்தை புரிந்துக்கொண்டு பாடலின் இறுதி அடிக்கு முந்தைய அடியில் ‘ராமபிரானது தம்பிகளான பரத, லட்சுமண, சத்’ என்று வருமாறு அமைத்தார். இதன் மூலம் அந்த ஈற்றடி ‘சத்துருக்கனுக்கு ராமன் துணை’ என்று எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய பொருளைப் பெற்றது. அவையோர் மட்டுமல்ல குறும்பு செய்ய நினைத்தவர் வெட்கி தலைகுனிந்தார். இதேபோல, தமிழறிஞர் ஒருவர் அவரை சிலேடையாக சர்வமதத்துக்கும் கடவுள் வணக்கம் பாடும்படி கூறினார். உடனே பாவலர், “சிரமாறுடையான் செழுமா வடியைத் திரமா நினைவார் சிரமே பணிவார் பரமா தரவா பருகாருருகார் வரமா தவமே மலிவார் பொலிவார்” என்னும் பாடலைப்பாடினார். அதில், சிரம் ஆறுடையான்- சிரத்தில் கங்கையாற்றை உடைய சிவபெருமான், சிரமாறு உடையான்- இயல்புக்கு மாறுபட்ட சிரத்தை உடைய கணபதி, சிரம் ஆறுடையான்- ஆறு தலைகளை உடைய முருகன், சிரம் ‘ஆறு’ உடையான்- திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாறு ஓட பள்ளிகொண்ட திருமால், சிரம் ஆறு உடையான்- தலையாய நல்வழிகளை உலகிற்குக் காட்டும் அல்லாஹ் என ஐம்பொருளை சிலேடையால் விளக்கினார். செய்குத்தம்பி பாவலர் தமிழ்பற்று மட்டுமல்ல; நாட்டுபற்றும் மிக்கவர். ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டார். 1920-ம் ஆண்டு நாஞ்சில் நாட்டில் காங்கிரஸ் இயக்கம் தொடங்கியபோது அவர் கதராடைக்கு மாறினார். அந்நாளில் நடந்த பெரும்பாலான சுதந்திர போராட்ட கூட்டங்கள் பாவலர் தலைமையில்தான் நடந்தன. இப்படி தமிழுக்கும், நாட்டுக்கும் அருந்தொண்டாற்றிய சதாவதானி செய்குத்தம்பி பாவலர், சமூக நல்லிணக்கத்துக்காக அரும்பாடுப்பட்டார். அவர் 1950-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி காலமானார். பலரும் கலந்துகொண்ட அந்த இரங்கல் கூட்டத்துக்கு கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை தலைமை தாங்கினார். அப்போது அவர் “ஒருமவ தானம் ஒருநூறும் செய்திந்தப் பாரில் புகழ்படைத்த பண்டிதனை, சீரிய செந்தமிழ்ச் செல்வனைச் செய்குத்தம்பி பாவலனை எந்நாள் காண்போம் இனி” என்று வருந்திப் பாடினார். சதாவதானியாக திகழ்ந்த பாவலரின் அரிய தொண்டினை போற்றும் வகையில் அவர் பிறந்து வாழ்ந்த தெரு ‘பாவலர் தெரு’ என்றே அழைக்கப்படுகிறது. இடலாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ‘சதாவதானி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி’ என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. தமிழக அரசு செய்குத்தம்பி பாவலர் நினைவைப் போற்றும் வகையில், அவருக்கு நாகர்கோவில் கோட்டார் பகுதியில் இடலாக் குடியில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இந்திய அரசும் அவரது தமிழ் சேவையை பாராட்டி சிறப்புத் தபால் தலை வெளியிட்டு பாவலருக்கு பெருமை சேர்த்தது. இன்று (ஜூலை 31-ந்தேதி) சதாவதானி செய்குத்தம்பி பாவலரின் பிறந்தநாள் ஆகும். -நாஞ்சில் அண்ணா

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தாய்ப்பாலின் மாண்பு

தாய்ப்பாலின் மாண்பு மருத்துவர் தாரா நடராசன், முன்னாள் முதல்வர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி நாளை (ஆகஸ்டு 1-ந் தேதி) உலக தாய்ப்பால் தினம். குழந்தைக்குத் தாய்ப்பாலை ஊட்ட வேண்டிய ஊக்கத்தையும் சூழ்நிலையையும் பெற்ற தாய்க்கு நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய மனநலம், சத்துணவு, தண்ணீர், போதிய நம்பிக்கை யாவையும் தாய்க்குக் குறையாமல் அமைய ஊக்குவிக்க வேண்டும். குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாய்ப்பாலை ஊட்டத் தொடங்கலாம். குழந்தை பசிக்காக அழும்போதெல்லாம் பால் கொடுப்பதே சிறந்த முறையாகும். குழந்தை இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை பால் அருந்தும். ஒவ்வொரு முறையும் முதலில் சில மணித்துளிகளே குடிக்கும். பிறகு 15 முதல் 20 மணித்துளிகள் தொடர்ந்து பால் அருந்தும். பசிக்காகக் குழந்தை அழுதால் குழந்தைக்குப் பால் கொடுப்பதில் தவறில்லை. சில குழந்தைகள் இரவு நேரங்களிலும் பாலுக்காக அழும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இப்பழக்கம் தானே நின்று விடும். இயல்பாகவே குழந்தைகள் தாமாகவே தமக்கென்ற ஒரு நெறிமுறைக்கு வந்துவிடும். இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பால் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும். இரண்டு, மூன்று மாதத்திற்கு மேல் இரவில் பால் அருந்துவதையும் நிறுத்தி நிம்மதியாக உறங்கும். ஒவ்வொரு பக்கமாகக் குழந்தைக்கு முழுமையாகப் பால் ஊட்ட வேண்டும். குழந்தை ஒழுங்காகப் பாலை உறிஞ்சுமானால் பால் சுரப்பது எளிதாகும். ஒவ்வொரு முறையும் முழுமையாக உறிஞ்சிப் பாலுண்ணும் திறனை இயல்பாகவே குழந்தைக்குக் கற்பிக்கலாம். குழந்தைக்குப் போதுமான வசதியான உடை அணிவது அவசியம். குழந்தையை வெது வெதுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். போதுமான சத்துணவும், அடிக்கடி பாலூட்டும் பழக்கமும் பால் சுரப்பதைப் பெருக்குகின்றன. பால் உற்பத்தியை மருந்துகள் மூலம் அதிகமாக்க முயல்வது தேவையற்றது. பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுவதால் மனத்தெளிவையும் பெறுவர். சில குழந்தைகள் பால்குடிக்க ஆரம்பித்தவுடனே தூங்கி விடும். அக்குழந்தைகளை எழுப்பி வயிறு நிறையப் பாலூட்ட வேண்டும். குழந்தை பாலை குடிக்கும்வரை அளவுக்கதிகமான பால் சுரப்பினால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். அப்போது சில வினாடிகள் இடைவெளிவிட்டுக் குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும். குழந்தை பாலைக் குடிக்கும்பொழுது காற்றையும் உறிஞ்சிவிடும். அதனால் குழந்தையை முதுகில் தட்டி ஏப்பமிட வைக்க வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால் குழந்தை குடித்த பாலை உடனே வாந்தி எடுத்துவிடும். இந்த வாந்தி எடுத்த பொருள் சுவாசப் பைக்குள் போகவும் நேரிடும். குழந்தை ஏப்பம் விட்டபிறகு குழந்தையை அதன் வலது பக்கத்திலோ குப்புறவோ படுக்க வைக்கவேண்டும். இவ்வாறு படுக்க வைப்பதால் உணவு குடல் வழியே செல்ல வசதியாகவுமிருக்கும். குறைமாதக் குழந்தைகளாலும் பிளவுபட்ட உதடுகளுடைய குழந்தைகளாலும் தொடக்கத்தில் பாலை உறிஞ்சிக் குடிக்க இயலாது. அப்பொழுது தாய் தன் பாலைக் கையால் கறந்து கொடுக்கவேண்டும். அலுவலகத்திற்குச் செல்லும் மகளிர் கையால் கறந்த பாலைப் புட்டிகளில் சேகரித்துக் குளிர்பதனப் பெட்டியில் வைத்துத் தேவைப்படும்போது குழந்தைக்குப் புகட்டச் செய்யலாம். எப்போதும் தாய்ப்பால் தான் ஊட்ட வேண்டுமென்று அனைவரும் இப்போது வலியுறுத்தி வருவதால் எவ்வாறேனும் முயற்சி செய்து தாய்ப்பாலைச் சுரக்க வைப்பதுதான் ஒரு தாயின் இன்றியமையாத கடமையாகும். ஒரு குவளை பால் பழச்சாறோ வேறு சுவை நீர்களையோ தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் ஒரு தாய் அருந்தவேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் இடைவெளி அதிகமாக இருந்தால் குழந்தைக்கு அவ்வப்போது பாலூட்டு முறையைக் கடை பிடிக்க வேண்டும். முதலிலிருந்தே இரு பக்க மார்பகங்களில் இருந்தும் பாலூட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பால் உருவாக்கத்துக்குக் குழந்தை, தாய் ஆகிய இருவருடைய ஒத்துழைப்பும் தேவை. குழந்தை மட்டும் உறிஞ்சிக் கொண்டிருந்தால் சிறிதளவு பாலிற்கு மேல் அதற்குக் கிடைக்காது. அதே போல, ஒரு தாய் தன்னால் தேவையான பாலை உற்பத்தி செய்ய முடியாது என்று நினைத்தாலோ, அஞ்சினாலோ பால் சுரப்பது குறைந்துவிடும். ஆகையால் அத்தாய் எந்த வகையான மனச்சோர்வுமில்லாமல் நெஞ்சுரத்தோடு திகழவேண்டும். குழந்தை நல மருத்துவர், மருத்துவக்கல்லூரிகள், தாய்சேய் நல மருத்துவமனைகள் ஆகியவற்றில் தாய்பால் தவிரப் பிற செயற்கைப் பாலால் நேரும் கேடுகளை வலியுறுத்த வேண்டும். பள்ளிக்கூட அளவிலேயே தாய்ப்பாலின் பெருமையைப் பரப்ப வேண்டும். வளமான நாடுகளில் தாய்மார்கள் தாய்ப்பாலின் சிறப்பை உணர்ந்து குப்பிப் பாலைத் தவிர்ப்பது போலவே வறுமையில் அகப்பட்டுத் தவிக்கும் நாடுகளைச் சேர்ந்த தாய்மார்களுக்கு இக்கருத்தை ஊட்டவேண்டும். கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப் போல எளியவர்கள் வறுமையாளர்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைத்துத் தாய்மார்களுக்கும் இயல்பாய்ச் சுரக்கும் தாய்ப்பாலைப் போற்றும் எண்ணம் உருவாக வேண்டும். அலுவலக வாழ்க்கை வாழும் தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அளிப்பதில் இடையூறுகள் நேரலாம். அலுவலக அன்னையர் தாய்ப்பால் அளிப்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும். நீண்ட பேறுகால விடுப்பை கருவுற்ற தாய்மார்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும். இத்தாய்மார்களுக்கு கணவன்மார்களின் ஒத்துழைப்பும் தேவையாகும். அவர்களும் குழந்தை வளர்ப்பில் ஆர்வம் கொண்டு மனைவி மனநிறைவுடன் செயல்பட உதவ வேண்டும். அதே போல, மகளிர் நிம்மதியாக எந்த வகை மன இறுக்கமும் இன்றி தாய்ப்பால் அளிக்கும் சூழ்நிலையை இல்லத்திலும் பணியாற்றும் இடங்களிலும் ஆண்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தாய்ப்பால் புகட்டும் இயல்பைப் போற்றும் நெறி வளர்ந்திருப்பதையும் நாம் ஊட்டிய தாய்ப்பால் மானத்தையும் வீரத்தையும் ஒருசேர ஊட்டும் உரமுடையதென்பதை ஒரு தாய் புறநானூற்றில் சூளுரைக்கும் காட்சியையும் நினைத்து மகிழலாம். உலகளாவிய நிலையில் தாய்மையைப் போற்றும் நெறியில் தமிழகம் பலருக்கு வழிகாட்டியாக விளங்கியது; தொடர்ந்தும் விளங்க வேண்டும் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. நம் நாட்டில் குழந்தை பிறந்தபோது, 80 முதல் 90 சதவீதம் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள், ஆறாவது மாதத்தில் 30 முதல் 40 சதவீதம் கூட தாய்ப்பால் குடிப்பதில்லை என்று புள்ளி விவரம் கூறுகிறது. இதனால் இன்னும் நம் நாட்டில் குழந்தைகளின் வளர்ச்சியும் நோயின்மையும் அறிவுடைமையும் போதிய முன்னேற்றம் அடையாமலிருப்பதை அறிந்து திகைப்படைகிறோம். அனைத்து மக்களுக்கும் இச்செய்தியை ஆழமாக அறிவுறுத்தித் தாய்ப்பாலையே ஓராண்டு வரையிலாவது குழந்தைகள் அருந்தினால் எதிர்காலத் தமிழ்நாடு இளையச் செல்வங்கள் ஆற்றலோடும் அறிவுத்திறனோடும் நாட்டின் நன்மணிகளாக மிளிர்வார்கள். இந்த நற்போக்கு நன்கு வளர்க!

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 23 July 2018

மத்திய அரசின் மசோதா: கல்வி வளர்ச்சிக்கான ஊக்கமா?

பொதுவாக ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது கல்வியை அடிப்படையாக கொண்டே அமைகிறது. ஒரு நல்ல அரசின் கடமையும், தரமான கல்வியை அளிப்பது தான். குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதை விட நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்பது தான் பெற்றோரின் கனவாக இருக்கிறது. கல்வியா? செல்வமா? வீரமா? என்று பல நெடுங்காலம் விவாதம் நடைபெற்று வந்தாலும் எல்லாவற்றிலும் மிஞ்சி நிற்பது கல்வி மட்டும் தான். ஏனென்றால் கல்வி இருந்தால் செல்வம் தானாக வந்துவிடும். கல்வி இருந்தால் வீரம் வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு மாற்றாக சாதுரியம் கிடைத்துவிடும். அதனால் தான் கல்வி மற்ற இரண்டை விடவும் சிறந்ததாக இருக்கிறது. இந்த உன்னதமான கல்வி அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் அனைவரும் தேர்ச்சி என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி 1-ம் வகுப்பு முதல் 8-வகுப்பு வரை மாணவர்கள், எந்த வித நிறுத்தமும் இன்றி, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர். இந்த திட்டத்தால் மாணவர்களின் இடைநிற்றல் பெருமளவு குறைந்தது. ஆனால் சமீப காலமாக இந்த திட்டத்தால், கல்வித்தரம் குறைந்துள்ளதாக, மத்திய அரசின் ஆய்வு குழு தெரிவித்து வந்தது. ‘ஆல் பாஸ்’ செய்யும் திட்டத்தை ரத்து செய்யவும் கடந்த 2016-ம் ஆண்டு முதலே திட்டமிடப்பட்டது. இதற்காக அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் தேர்ச்சி திட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு மட்டும் அனைவரும் தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்தது. இதற்கான சட்ட மசோதா கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கலாகி, ஒருமனதாக நிறைவேறியது. இந்த சட்ட மசோதாவில் அனைவரும் தேர்ச்சி திட்டத்தை தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனாலோ என்னவோ இந்த திட்டத்தை மாநில அரசுகள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கவில்லை. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 5 மற்றும் 8-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் கல்வியை இடையில் நிறுத்தும் நிலை ஏற்படலாம். அதிலும் குறிப்பாக 5-ம் வகுப்பில் ‘பெயில்’ ஆக்குவது என்பது மாணவர்களின் மனநிலையை கட்டாயமாக பாதிக்கும். சக நண்பர்களின் கேலியால், மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதற்கும் காரணமாக அமையும். அதாவது முன்பை போல இடைநிற்றல் அதிகரிக்கும். பெற்றோருக்கும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்திவிடும். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் போன்ற மாநிலங்கள் அனைவரும் தேர்ச்சி என்ற முறையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றன. எனவே இந்த மாநிலங்கள் வழக்கம்போல் உள்ள நிலையை பின்பற்றும் என்று தெரிகிறது. அதேநேரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் முழு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இந்த திட்டத்தின் மூலம் தரமான மாணவர்களை உருவாக்க முடியும் என அந்த மாநிலங்கள் நம்புகின்றன. இதில் நம் தமிழக அரசு எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. சமீபகாலமாக கல்வி என்பது அரசியலாகி வருகிறது. மாநில பாடத்திட்டங்களுக்கு வேட்டு வைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வின் பாதிப்பை தமிழகம் முழுமையாக உணர்ந்தே இருக்கிறது. எந்தவொரு விஷயத்தையும் செய்வதற்கு முன் மாணவர்களை தயார்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இழப்புகளை சந்தித்தே ஆக வேண்டிய நிலை வரும். 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் அனைவரும் தேர்ச்சி என்ற முறை ரத்து செய்யப்படுவதால் எந்தவகையில் கல்வி வளர்ச்சிக்கு புதிய மசோதா கை கொடுக்கும் என்பது ஆராயப்பட வேண்டியது. அதே வேளையில், 5 மற்றும் 8-ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு 2 மாதங்கள் கழித்து மீண்டும் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் சட்ட மசோதாவை தாக்கல் செய்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியிருக்கிறார். இது தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்றது. இதற்கு பதில் மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கும் முறையை கொண்டு வரலாம். பாடங்களை எளிமைப்படுத்தி, முழு தேர்ச்சி என்ற நிலையை அடைவதற்கு வழிவகை செய்யலாம். இதையெல்லாம் விட்டு விட்டு புதிய சட்ட மசோதாவால் மட்டும் கல்வி வளர்ச்சியை எட்ட முடியுமா? என்பது சந்தேகத்திற்குரியது தான். கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டியது அவசியம்தான். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதற்காக அரசு நல்ல திட்டங்களை கொண்டுவர வேண்டியதும் காலத்தின் தேவைதான். ஆனால், இதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பள்ளி மாணவர்களை இடையிலேயே கல்வியை நிறுத்துவதற்கு தூண்டக்கூடாது. கல்வியின் தரம் உயர தரமான திட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும். பள்ளி படிப்பை முடித்த பின்னும் பிரச்சினை, பள்ளி படிப்பை தொடங்கும் முன்பும் பிரச்சினை என்றால் மாணவர்களால் என்ன தான் செய்வார்கள்? பெற்றோரை பொறுத்தவரையில் இந்த சட்டம் தேவையில்லாத ஒன்று என்றே கருதுகிறார்கள். இது தலைகீழான மாற்றத்தை கொண்டு வந்துவிடும் என்று கல்வியாளர்களும் அச்சப்படுகிறார்கள். அதாவது இடைநிற்றல் அதிகரித்து, கல்வி கற்போரின் சதவீதம் குறையத் தொடங்கும் ஆபத்து இருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். மத்திய அரசின் மசோதா, கல்வி வளர்ச்சிக்கான ஊக்கமாக இருந்தால் வரவேற்கலாம். அது தளர்ச்சிக்கான தேக்கமாக இருப்பதாகவே தோன்றுகிறது. எனவே, தமிழகத்தில் தற்போது உள்ளபடியே 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற முறையே தொடர வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது. -தனிஷ்

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதிய இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் வேண்டும்

புதிய இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் வேண்டும். வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி. ஜூலை 23-ந் தேதி என்றால், புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களான பாலகங்காதர திலகர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோரின் பிறந்த நாள் என்பது தான் நினைவுக்கு வரும். இந்த இருவரின் பிறந்த நாளிலும் நாம் சிரம் தாழ்த்தி அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டியது நமது கடமையாகும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று முன்னிலை பெற்றுள்ள கதாநாயகர்கள் பட்டியலில் இவர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த மாபெரும் தேச பக்தர்களிடம் இருந்து உத்வேகத்தை பெற்றுக்கொள்வதோடு இந்தியர்கள் நின்றுவிடக்கூடாது. இளைஞர்கள் அனைவரிடமும் தேசியத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த பற்றையும் விதைக்க வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக பாலகங்காதர திலகர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோரை இளைஞர்கள் தங்களின் முன்மாதிரிகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். தனது பேச்சு, எழுத்து, செயல்பாடு ஆகியவற்றின் மூலம் தேசிய உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தியவர் பாலகங்காதர திலகர். ஒற்றுமையின்மையும், தேசிய பெருமையை உணராமல் போனதும்தான் ஆங்கிலேயரின் அதிகாரங்கள் நம்மை வசப்படுத்தியதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன என்பதை திலகர் உறுதியாக நம்பினார். இந்திய சுதந்திரத்துக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து மிகச்சிறந்த தியாகத்தைச் செய்தவராக சந்திரசேகர் ஆசாத் அடையாளம் காணப்படுகிறார். நமது சுதந்திர வரலாற்றை திரும்பிப் பார்த்தோம் என்றால், சுதந்திரத்தை அடைவதற்காக பழம்பெரும் தியாகிகள் ஒவ்வொருவரும் வித்தியாசமான கருத்தைக் கொண்டிருந்தனர் என்பதை காணலாம். வேறுபாடான கருத்துகள் இருந்தாலும் பொதுவாக அவர்களுக்குள் காணப்பட்ட ஒன்று, தேசத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அர்ப்பணிப்பு என்பதுதான். இதுதான் சுதந்திர இந்தியா உதிப்பதற்கு காரணமாக இருந்தது. லட்சக்கணக்கான சுயநலமற்ற இந்தியர்கள், சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றனர். சந்திரசேகர் ஆசாத் போன்ற தைரியம் மிகுந்த தலைவர்களும், தேசியவாதியான பாலகங்காதர திலகரும் அவர்களை வழிநடத்திச் சென்றனர். அசைக்க முடியாத தைரியத்துக்கு எடுத்துக்காட்டாக ஆசாத் விளங்குகிறார். ‘டீன் ஏஜ்’ பருவத்தில் சுதந்திரப் போராட்டத்தில் குதித்தவர் அவர். கைதாகி பெனாரஸ் கோர்ட்டில் நிறுத்தப்பட்டபோது, ‘எனது பெயர் ஆசாத் (விடுதலை), தந்தை பெயர் சுதந்திரா, முகவரி சிறை’ என்று மாஜிஸ்திரேட்டிடம் தைரியமாக கூறியவர் ஆசாத். இதற்குத் தண்டனையாக அவருக்கு 15 கசையடிகள் கிடைத்தன. தாய்நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கமாக இருந்தது. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த அவர், வேறு எதற்கும் முக்கியத்துவம் தரவில்லை. புரட்சிக்காரராக மாறி, ஆசாத் மிக ஒழுக்கமான வாழ்க்கைக்கு உட்பட்டார். தனது வாழ்நாளின் இறுதி வரை அவரது கொள்கையைவிட்டு அவர் விலகவில்லை. ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்’ என்று முழங்கியவர் பாலகங்காதர திலகர். அவர் ஒரு தத்துவ மேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். வரதட்சணை கொடுமையையும், பெண்ணுக்கு 16 வயதுக்கு முன்பு திருமணம் செய்வதையும் கடுமையாக எதிர்த்தார். மதுவிலக்கை ஆதரித்தார். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளைக் கடந்த பிறகும், வறுமை, கல்வி அறிவின்மை, குடிநீர்-மின்சார தட்டுப்பாடு, வீடற்ற நிலை, சுகாதாரமின்மை, பாலினப்பாகுபாடு, நகர-ஊரக வேற்றுமை ஆகியவை இன்னும் பிரச்சினையாக நீடிப்பது மிகவும் வலிதரக்கூடிய உண்மையாகும். இவை மிகச்சீக்கிரமாக ஒழிக்கப்படாவிட்டால் இந்தியாவின் வளர்ச்சியை அவை தடுக்கும். இந்தியாவின் வளர்ச்சிக்கு இவை தடையாக இருப்பதை அனுமதிக்கக்கூடாது. பல ஆண்டுகளுக்கு முன்பாக ரவீந்திரநாத் தாகூர் எச்சரித்ததுபோல, சாதி, மத அடிப்படைவாதம், இனம் என்ற சுவர்கள் மூலம் மக்கள் பிரிந்திருப்பதை காணமுடிகிறது. ஊழலும், பயங்கரவாதமும் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரான மிகப்பெரிய எதிரிகளாக உள்ளன. கடந்த 70 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய அளவில் வளரவில்லை என்ற கூற்றுக்கு இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. சமூக, மத, இன ரீதியிலான கருத்து வேறுபாடுகளால் இந்தியாவின் வளர்ச்சி பின்னால் இழுக்கப்பட அனுமதிக்க முடியாது. ஆனால் இந்தியாவின் எதிரிகள் அதைத்தான் விரும்புகிறார்கள். இதுபோன்ற போக்குக்கு எதிராக அனைத்து இந்தியர்களும் சாதி, மதத்தை மறந்து ஒன்றுகூட வேண்டும். இந்தியாவைப் பற்றிய விஷயத்தில் நாம் யாரும் அக்கறையற்ற பார்வையாளராக இருந்துவிடக்கூடாது. புதிய இந்தியாவை உருவாக்கும் பணியில் இளைஞர்கள் முன்னிலை வகிக்கவேண்டும். உலகப் பொருளாதார வரிசையில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. வளர்ச்சி அடைந்த தேசமாக இந்தியா உருவாவதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் உச்சியில் இந்தியா இருக்கும். வறுமை ஒழிப்பு, கல்வி அறிவு, ஊரக-நகர பாகுபாடின்மை, வேளாண்மைக்கு முன்னுரிமை, சுகாதாரம், தொழில், பாதிக்கப்பட்டோருக்கு வாழ்வு ஆகியவற்றில் நாம் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் நமது இலக்கை அடையலாம். அரசியல் முதல் கல்வி வரை பல்வேறு தளங்களில் ஊழலற்ற நிர்வாகம் அமைவதற்காக சீர்திருத்தங்களை நாம் தொடங்க வேண்டியது அவசியமாக உள்ளது. உலக அரங்கில் ஒரு அறிவு மையமாக இந்தியா உருவாக்கப்பட வேண்டும். இதற்காக பாலகங்காதர திலகர், சந்திரசேகர் ஆசாத் ஆகியோரைப் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையைப் படித்து ஊக்கம் பெறவேண்டும். இந்தியாவை நூற்றாண்டுகளாக பின்தங்கச் செய்த அடிமைத்தனத்தில் இருந்து மீள்வதற்கு தங்களின் ரத்தம், வியர்வைச் சிந்திய அவர்களை மறந்துவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது. சமத்துவத்தையும், சுதந்திர காற்றையும் நாம் சுவாசிப்பதற்கு தங்களின் வாழ்க்கையை தியாகம் செய்தவர்கள் அவர்கள். இந்தியாவைப் பற்றிய அவர்களின் நோக்கம் நிறைவேற நாம் பாடுபடவேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 20 July 2018

‘ஆன்லைன்’ தேர்வு: அடுத்த நிலைக்கு உயர்கிறது டி.என்.பி.எஸ்.சி.

‘ஆன்லைன்’ தேர்வு: அடுத்த நிலைக்கு உயர்கிறது டி.என்.பி.எஸ்.சி.  பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி ஜூலை 4-ஆம் தேதி, ‘ஆன்லைன்’ தேர்வுகளை நடத்துவதற்கான ஒப்பந்தங் களை வரவேற்று, 48 பக்க அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது தேர்வாணையம். (விளம்பர எண் 500/2018) இதன்மூலம், கணினி வழித் தேர்வு முறைக்கு மாறுகிற திட்டம், உறுதி ஆகிறது. “ஆணையம் நடத்துகிற பல்வேறு நிலை, பணியாளர் தேர்வுக்கான, ‘கொள்குறி வகை கணினி வழித் தேர்வு’ (Objective Type Computer Based Examination) நடத்திக் கொடுக்க, அனுபவமிக்க நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்கள் (‘டெண்டர்கள்’) வரவேற்கப்படுவதாய், இந்த விளம்பரம் கூறுகிறது. ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (www. tnpsc.gov.in) முழு விவரங்களும் தரப்பட்டு இருக்கின்றன. உண்மையில், இந்த அறிவிக்கை (விளம்பரம்) மிக நன்றாக வரையப்பட்டு இருக்கிறது. ‘‘நேர்மையான, பாதுகாப்பான, வெளிப் படையான, தற்போதினும் மேன்மையான ‘தேர்வு வழங்கு நுட்பம்’ (Test Delivery Mechanism) மூலம், ‘தேர்வுக் காலம்’ குறைக்கப்பட்டு, தேர்வு முடிவுகளை இயன்றவரை குறுகிய கால அவகாசத்தில் வெளியிடுதல்’’ என்று, ‘ஆன்லைன்’ தேர்வுக்கான நோக்கம், பத்தி 4(1)இல், தெளிவாக்கப்பட்டுள்ளது. ஓரிடத்தில் உள்ள கணக்கற்ற கணினிகளை ஒரே கட்டுப்பாட்டுச் சாதனம் (server) மூலம் இணைக்கிற, Local Area Network (LAN) ‘உள்ளூர் பகுதி கணினிச்சேவை’ மூலம், இத்தேர்வு நடைபெறும். (பத்தி 2.II) தேர்வு தொடங்குவதற்கு முன்பாக, 10 நிமிடங்களுக்கு, தேர்வு குறித்த பயிற்சி (orientation) வழங்கப்படும். மனிதக் குறுக்கீடு ஏதும் இன்றி, தேர்வருக்கு ஒதுக்கப்படுகிற கணினியில், ‘ரேண்டம்’ வினாக்கள் தோன்றும். அடுத்த வினாவுக்குத் தேர்வர் ‘கிளிக்’ செய்தால், ஒரு நொடிக்குள்ளாக, அடுத்த கேள்வி, திரையில் வந்துவிடும். ஒரு தேர்வர், ஒவ்வொரு வினாவுக்கும் தரப்பட்டுள்ள நான்கு தெரிவுகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ‘கிளிக்’ செய்வார். தேர்வரின் எல்லா ‘க்ளிக்’குகளும், நேரக் கணக்குக்காக, பதிவு செய்யப்படும். தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்துக்குள் எல்லா விடைகளும் மத்திய ‘செர்வருக்கு’ மாற்றம் செய்யப்பட்டுவிடும். பாதுகாப்பு கருதி இந்த விடைகள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அங்கே சேமித்து வைக்கப்படும். உள்ளூர் மையத்தில் எந்தத் தேர்வரின் எந்தப் பதிவும் இருந்ததற்கான அடையாளம் கூட இருக்காது. தேர்வு முடிந்த 24 மணி நேரத்தில் தேர்வு தொடர்பான அத்தனை நடைமுறைகளையும் முடித்துவிட்டு, அதற்கான சான்றிதழும் ஆணையத்துக்கு, ஒப்பந்த நிறுவனம் அனுப்பிவிட வேண்டும். தேர்வு முடித்த கையோடு, ‘கருத்துப் படிவம்’ (feedback form) ஒன்றும் தேர்வர்களுக்கு வழங்கப்படும். இதுவும் அப்போதே அவ்வாறே பதிவு செய்யப்படும். இதற்குப் பிறகு, தேர்வர்களுக்கு கேள்வி கேட்கிற உரிமையை நல்கும் ‘challenge window’, ஏழு நாட்களுக்குத் திறந்தே இருக்கும். தேர்வு தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை இங்கே பதிவு செய்யலாம். ஓர் ஆண்டுக்கு 20 தேர்வுகளில் சுமார் 50 லட்சம் தேர்வர்களை மதிப்பிட வேண்டி இருக்கும் என்று, பத்தி 4(III)(a)வில் குறிப்பிடுகிறது ஆணையத்தின் அறிவிக்கை. உண்மையிலேயே மிகப்பெரிய எண்ணிக்கைதான். ஆகவேதான், ஆன் லைன் தேர்வு முறை அவசியம் ஆகிறது. முதல் ஆண்டில், 2 முதல் 3 லட்சம் பேர் எழுதுகிற தேர்வுகளுக்கு, ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்படும். படிப்படியாக எல்லா தேர்வுகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதுவும் அறிவிக்கை யிலேயே சொல்லப்பட்டு இருக்கிறது. தேர்வுக்கு முன்பு, தேர்வின்போது, தேர்வுக்குப் பின்பு - என மூன்று நிலைகளும், ஒப்பந்தத்தில் அடங்கும். தேர்வர்களுக்கு அனுப்புகிற குழுத் தகவல் (bulk email), வருகைப் பதிவேடு, அடையாளங்களை சரி பார்த்தல் ஆகிய பணிகள்; தேர்வு மையத்தில் தேர்வர்களுக்குப் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு, கணினிச் சேவை பாதுகாப்பு தொடர்பான கடமைகள்; மதிப்பீடு செய்தல், மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை தயாரித்தல் ஆகிய தேர்வுக்குப் பிந்தைய செயல்பாடுகள் ஆகியன, ஒப்பந்ததாரரின் பணிகள் ஆகும். தடை இல்லாத இணையத் தொடர்பு வசதி, மின்சப்ளை பாதிக்கப்பட்டால் உடனடி ‘ஜெனரேடர்’ இணைப்பு, 5 மணி நேரத்துக்குக் குறையாத ‘பேக் அப்’ பாதுகாப்பு, குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒப்பந்ததார நிறுவனம் கவனித்துக் கொள்ள வேண்டும். இவ்வகைத் தேர்வுகள் நடத்துவதற்கான, ‘நிலையான செயல்முறை மரபு’ (standard operating procedure) கண்டிப்பாகப் பின் பற்றப்பட வேண்டும். வினாத்தாள், விடை களை ‘பாதுகாப்பாக’ மாற்றம் செய்கிற நடைமுறை உள்ளிட்ட அனைத்து செயல் பாடுகளும் ‘மூன்றாவது நபர்’ மூலம், பாதுகாப்புத் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். தொழில்நுட்பக் குறைபாடு ஏதும் எழாத வகையிலும், ‘ரகசியம்’ காப்பாற்றப் படுவதற்கான வழிமுறைகளிலும் மிகுந்த சிரத்தை எடுக்கப்பட்டு இருப்பதாகவே தோன்றுகிறது. பொதுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் நடத்துவதில், தமிழகம் எப்போதுமே சிறந்து விளங்குகிறது. சமீபத்தில் கூட, பல லட்சம் பேர் எழுதிய ‘குரூப் 4’ தேர்வின் போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அபாரமான நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியது. பிறகு ஏன் ஒப்பந்த முறையில் தனியாரை நாட வேண்டும்...? ‘ஆன்லைன்’ தேர்வு முறையின் சாதகங்கள், இளைஞர்களுக்குப் பயன்படும் என்றோ, ஒரு மேற்பார்வையாளராக மட்டும் இருந்தால், இன்னமும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்றோ ஆணையம் கருதி இருக்கலாம். தவறில்லை. ஒப்பந்த அடிப்படையில் ‘ஆன்லைன்’ தேர்வுக்கு மாறுகிற முயற்சிக்கு, கடும் எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. ஆட்சேபங்களுக்குத் தகுந்த விளக்கங்களை அளித்து, தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு, தேர்வாணையத்துக்கு மிக நிச்சயமாக இருக்கிறது. செய்யும் என்று எதிர்பார்க்கலாம். ஒரு வினா மட்டும் விஞ்சி நிற்கிறது. இங்கே முறைகேட்டுக்கு சாத்தியமே இல்லையா...? முறைகேடு செய்வது என்று முடிவு எடுத்துவிட்டால், எந்தத் தேர்வு முறையுமே முழுக்கவும் பாதுகாப்பானது இல்லை. அது மட்டுமன்றி, ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிற நேர்மையின்மையும் நிர்வாகச் சீர்கேடும், ஒரே நாளில் மாறிவிடுமா என்ன..? நவீனத் தொழில் நுட்பத்துக்கு மாறுவதும், விரைந்த செயல்பாட்டுக்கு வழி கோலுவதும், இளைஞர்களின் எதிர்காலத்துடன் நேரடி யாகத் தொடர்புடைய துறைக்கு மிகவும் அவசியம். பல லட்சக்கணக்கான இளை ஞர்கள், போட்டித் தேர்வுகள் எழுதி முடித்து, அதன் முடிவுகளுக்காக மாதக் கணக்கில் காத்துக் கிடக்கிற அவலம், இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது. ஆரோக்கியமான மாற்றத்தை வரவேற்பதே அறிவுடைமை. ‘ஆன்லைன்’ தேர்வு முறை மூலம், தேர்வாணையத்தின் மீது இளைஞர்களின் நம்பிக்கை மேலும் வலுவடையவே செய்யும். பார்ப்போம். நமது நம்பிக்கை பொய்க்காது என்று நம்புவோம். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 17 July 2018

மனித நேயத்தின் மாண்பினைக் காப்போம்

மனித நேயத்தின் மாண்பினைக் காப்போம் எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா ‘அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்கிறார் அவ்வையார். கிடைத்தற்கு அரிய இம்மானிடப் பிறவியை வாழத் தெரியாமல் கண்ணாடிப் பாத்திரமாய் போட்டு உடைக்க வேண்டுமா? மனிதன் என்பவன் மனித நேயமிக்கவனாக இருந்தான். இன்று அந்த மனித நேயம் எங்கே இருக்கிறது? அரிதாகத் தென்படும் அந்த உணர்வு எட்டாக் கனியாகிவிட்டது. ‘பேயாய் உழலும் சிறு மனமே’ என்கிறார் பாரதியார். சின்னஞ் சிறு இதயம், அதில்தான் எத்தனை வஞ்சகம், போட்டி, பொறாமை, கெட்ட எண்ணங்கள்...! மொத்தத்தில் பேய்கள் குடியிருக்கும் இல்லமாகி விட்டது மனித இதயம். ஆசைப் பேய், ஆணவப் பேய், திமிர், கோபம், பொறாமை என்று பல பேய்கள் குடியிருக்கிறது. மேலும், மேலும் அவைகளுக்கே இடமளிக்கிறோம். எத்தனை விபத்துகள் நடந்தும், அதை கண்டு கொள்ளாமல் போனவர்கள்தான் அதிகம். சரியான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முயற்சித்திருந்தால், அந்த உயிர்கள் பிழைத்திருக்கும். ஆனால் விசாரணை, போலீஸ் என்று சங்கடங்கள், யாரோ பார்க்கட்டும், நமக்கு என்ன என்ற உணர்வு. நமக்கும் இதுபோல் ஒருநாள் வரலாம் என்று நினைத்துப் பார்ப்பதில்லை. சொத்துக்காக தொப்புள்கொடி பந்தத்துடனேயே சண்டை, முகத்தில் விழிக்க மாட்டேன் என்ற அகங்காரம், அண்ணன், தங்கை என்று அன்பும், பாசமுமாய் வளர்ந்த உறவுகள் முட்டிக் கொண்டு நிற்கும் மனநிலை. பக்கத்து வீட்டுடன் பகை, ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் அன்பாய், அனுசரித்து உட்கார்ந்து பேச முடிவதில்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. முக்கியமாக பெற்றவர்களைப் பாரமாக நினைக்கும் மனப்பான்மை இப்போது அதிகரித்திருக்கிறது. அப்பாவின் பணத்தை தாராளமாகப் மகன் செலவு செய்கிறான். ஆனால் பையன் சம்பளத்தை உரிமையுடன் தகப்பன் எடுக்க முடிவதில்லை. 4 குழந்தைகள் இருந்தால் பெற்றோர்களை பங்கீடு செய்கிறார்கள். முறை வைத்து பெற்றோரை பராமரிக்கும் பரிதாபங்களையும் பார்க்க முடிகிறது. ஆனால் 4 பேரை வளர்க்க தாய், தந்தை கணக்குப் பார்க்கவில்லை. பாரமாக நினைக்கவில்லை. படிக்க வைக்க, வைத்தியம் பார்க்கச் சங்கடப்படவில்லை. இதை விட கருணையே இல்லாமல் தாயை நடுத்தெருவில் விட்டுப்போவது, அழைத்து வந்து ரெயில் நிலையம், பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்று விடுவது என்று இரக்கமற்ற செயல்கள்தான் அதிகரித்திருக்கின்றன. நம்மை இந்த நிலைக்கு உயர்த்தியவர்கள் என்ற நன்றி உணர்வு இல்லாதவர்களாக மனித சமுதாயம் மாறிக் கொண்டிருக்கிறது. காசுக்காக செயல்படும் மருத்துவமனைகள், கல்வியை வியாபாரமாக்கும் நிறுவனங்கள், பெருகிப் போன ஊழல்கள், போதை, குடியால் சீரழியும் குடும்பங்கள் என்று எல்லாவற்றுக்கும் அடியில் பார்த்தால் மெல்லியதாய் அறுந்து கொண்டிருக்கும் மனித நேய இழையே காரணமாக இருக்கும். குடும்பத்தின் மீது பற்றும், பாசமும் கொண்டவர்கள் குடியில் தன்னையும் அழித்துக் குடும்பத்தையும் அழிக்க மாட்டார்கள். ஊழல் ஒழிந்தால் தகுதி உள்ளவர்களுக்கு தகுந்தது கிடைக்கும். கல்வியை ஒரு சேவை மனப்பான்மையுடன் அளித்தால் கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும். வசதி படைத்தவர்கள் மட்டுமே சிறந்த மருத்துவ சிகிச்சை பெற முடியும் என்ற நிலையை கார்பரேட் மருத்துவமனைகள் மாற்ற வேண்டும். பயங்கரவாதம் என்ற பெயரில் மனித உயிர்களைக் கொல்வது, ஒன்றுமறியாத குழந்தைகள் மீது பாலியல் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவது என்று ஒரு அரக்கத்தனமான சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இவ்வளவும் செய்து விட்டு வாழ்நாள் முழுதும் மன உறுத்தல் இல்லாமல் வாழ்ந்து விட முடியுமா? ஒவ்வொரு நிமிடமும் மனசாட்சி நம்மை குத்திக் கொண்டே இருக்குமே. சட்டம் தண்டனை கொடுக்கலாம். ஆனால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் சிறையில் உறுத்தலுடன் வாழத்தான் வேண்டுமா? எந்த நேரமும் சம்பாதிக்கும் எந்திரமாக இருக்க முடியாது. வயதாகி, உடல் தளர்ந்து சுற்றி யாரும் இல்லாத நிலையில் மனம் அன்புக்கும், பிரியத்துக்கும் ஏங்கும். சுற்றங்கள் சூழ அமைதியாய் விடை பெறத் துடிக்கும். கடந்த கால தன் செயல்களை நினைக்கும் போது ஒரு வேதனையும், கேவலமான உணர்வும் வராத அளவுக்கு நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை அழகானது. ரசித்து வாழ வேண்டிய விஷயம். மரணத்தின் பிடியில் இருக்கும்போது நம் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்போது, நமக்கே கவுரவம், பெருமை தரக் கூடியதாக இருக்க வேண்டும். மரணம் கம்பீரமாய் அமைய வேண்டும். இன்று நாம் பிறருக்குச் செய்வதுதான் நாளை நமக்குத் திரும்பக் கிடைக்கும். தாய்க்கு முதியோர் இல்லம் என்றால் நமக்கு நடுத் தெரு தான் தங்குமிடமாகும். இதுதான் வாழ்க்கை நியதி. இதைப் புரிந்து கொண்டால் மனிதன் சரியான பாதையில் நடைபோடுவான். செலவில்லாத நிரந்தர சந்தோஷம், பிறரை நேசிப்பது மகிழ்ச்சியான வாழ்வுக்கு வித்திடும். செல்லும் வழி எங்கும் மனித நேயம் என்ற விதையை மட்டுமே தூவிச் செல்லலாம். அது அழகான மரங்களாக வளர்ந்து நம் சந்ததிகளுக்கு நிழல் தரும். ஒரு ஜென் கதை மனதை காலிக் கோப்பையாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறது. அவ்வப்போது அதை அன்பால் மட்டுமே நிரப்பலாம். அதை உடனே பிறருக்கு அளித்து விட்டு மீண்டும் காலியாக வைத்துக் கொள்ளலாம். மனிதத்தின் புனிதம் அறிவோம். அன்பு மட்டுமே கொடுக்கக் கொடுக்க வளரும். நம்மை மன நிறைவுடன் வாழ வைக்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொன்விழா பொலிவுடன் தமிழ்நாடு

பொன்விழா பொலிவுடன் தமிழ்நாடு அவ்வை அருள், இயக்குனர், தமிழக அரசின் மொழிபெயர்ப்பு துறை இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படவில்லை. ஆங்கிலத்தில் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்றும், தமிழில் சென்னை ராஜ்ஜியம் என்றும் அழைக்கப்பட்டது. சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரைத் தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்காக விருதுநகரில் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் 1957-ல் உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாததால், உண்ணாவிரதம் தொடங்கிய 76-வது நாளில் அவர் மரணம் அடைந்தார். இதன் பிறகு தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை மேலும் தீவிரம் அடைந்தது. பல்வேறு கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானங்கள் நிறைவேற்றின. சிலம்பு செல்வர் மா.பொ.சிவஞானம் தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்கு முன்னின்று போராடினார். அப்போது முதல்-அமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜரிடம் கோரிக்கையை வலியுறுத்தினர். இதன் பிறகு தமிழில் தமிழ்நாடு என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் குறிப்பிட அரசாங்கம் தீர்மானித்தது. இது பற்றிய அறிவிப்பை சட்டசபையில் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் அறிவித்தார். எனினும் ஆங்கிலத்திலும் ‘தமிழ்நாடு’ என்றே அழைக்கப்பட வேண்டும். அதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று பல கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் மாநிலங்களவையில் மூத்த கம்யூனிஸ்டு தலைவர் பூபேஷ்குப்தா தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா, குப்தாவின் மசோதாவை ஆதரித்துப் பேசினார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், ‘500 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் ஒன்றுபட்ட தமிழ்நாடு என்ற ஒன்று இருந்தது இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று தான் இருந்தது. வரலாற்று ரீதியாக இல்லாதபோது, எதற்காக புதிய பெயரை உருவாக்க நினைக்கிறீர்கள்’ என்று கேட்டார். அதற்கு அண்ணா பதில் அளிக்கையில், ‘பரிபாடல், பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்காலத்து பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழ் வாழும் பகுதியினை தமிழ்நாடு, தண்டமிழ் வெளி தமிழ்நாடு, இமிழ் கடல் வேலி தமிழகம் என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது’ என்றார். மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதால் என்ன பலனை அடைந்துவிடப் போகிறீர்கள் என்று கேட்டவர்களுக்கு, ‘மக்களவையை லோக் சபா என்றும், மாநிலங்களவையை ராஜ்ஜிய சபா என்றும் குடியரசு தலைவரை ராஷ்டிரபதி என்றும் பெயர் மாற்றம் செய்து அடைகின்ற பலனையே நாங்களும் பெறுவோம்’ என்று பதிலடி கொடுத்தார். 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அண்ணா முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றதும், மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை அடியோடு மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்காக அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டசபையில் 18-7-1967 அன்று அண்ணா கொண்டு வந்தார். பேரவைக்கு சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்து பேசினர். விவாதத்துக்கு பதில் அளித்து அண்ணா பேசினார். அவர் பேசும்போது, ‘இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் வாழ்வில் எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய இந்த தீர்மானம் காலம் தாழ்த்தி வந்தாலும், இங்குள்ள அனைவரின் பேராதரவுடன் வருகிறது. சங்கரலிங்கனாருக்கு நினைவு சின்னம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவதாகும்’ என்று குறிப்பிட்டார். பிறகு, மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் அறிவித்ததும், மண்டபமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். பின் அண்ணா எழுந்து தமிழ்நாடு என்று பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்று சிறப்பு மிக்க இந்த நன்நாளில் தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம் என்று கூறி, தமிழ்நாடு என்று மூன்று முறை குரல் எழுப்பினார். எல்லா உறுப்பினர்களும், அவரைத் தொடர்ந்து வாழ்க என்று மூன்று முறை குரல் எழுப்பினர். சபை முழுவதும் உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணா உடல் நலமின்றி அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு சென்னை திரும்பினார். பினனர் சென்னையில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். தொடர்ந்து 14-1-1969 அன்று சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. தாய் தான் குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்வாள் என்பது வரலாறு. அவ்வரலாற்றை மாற்றி மகன் தன் தாய்க்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பெருமை பேரறிஞர் அண்ணாவை சேரும். வரலாற்று சிறப்பு மிக்க நமது மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரோடு 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை முன்னிட்டு தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக வரலாற்றில் இடம்பெற்ற பொன் நாளாகும். இந்த பொன்விழாவைப் பொலிவாக கொண்டாடும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக மாவட்ட, மாநில அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேரறிஞர் அண்ணா, பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் படைப்புகளையொட்டி கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. மேலும் கலை பண்பாட்டுத்துறை வாயிலாக மாவட்ட, மாநில அளவில் நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக வழங்கப்படும் தங்க பதக்கத்தில் ஒரு பக்கம் தமிழ்நாடு அரசு முத்திரையும், மறுபக்கம் பேரறிஞர் அண்ணாவின் உருவப்படமும் பொறிக்கப்படலாம். நாளை (ஜூலை 18-ந்தேதி) மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேறிய நாள்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 16 July 2018

வளரும் தானியங்கி துறையும், வளர்க்க வேண்டிய திறமைகளும்...

15 ஆண்டுகளுக்கு முன்புவரை ஐபோன்களைப் பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. இன்று ஹாரி பார்ட்டர் நாவல்களைத் தேடி நூலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. விரல் நுனியில் பிரபலமான நூல்களை படிக்க முடியும். வாகனங்களைத் தேடி சாலைகளுக்குச் செல்லாமல், வீட்டிற்கு வாகனங்களை வரவழைத்து பயணம் செய்ய முடியும். எல்லாவற்றுக்கும் காரணம் தொழில்நுட்ப வளர்ச்சிதான்.

நமது வாழ்க்கை நம்மை அறியாமலேயே தொழில்நுட்பங்களில் மூழ்கி வருகிறது என்றால் மிகையில்லை. செல்போன், கணினி, எல்.இ.டி. டிவி., ஹோம் தியேட்டர், வாஷிங்மெஷின், ஏ.சி. என எத்தனையோ தொழில்நுட்ப சாதனங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்துவிட்டன.

இந்த தொழில்நுட்பங்களின் அடுத்தகட்ட வளர்ச்சி, தானியங்கி முறையாகும். தானாக இயங்கும் கார்கள், கதவுகள், கருவிகள் என அனைத்தும் தன்னியக்க சாதனங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. “ஆட்டோமேசன்” எனப்படும் இந்த தானியங்கித் துறை இன்னும் பத்தாண்டுகளில் இமாலய வளர்ச்சி காண இருக்கிறது.

பறக்கும் கார்கள், பறக்கும் பைக், தானியங்கி கார்கள் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. பொருட்களின் இணையத்தால் வீட்டில் உள்ள சாதனங்கள் எல்லாம் தொலை இயக்கி மூலமும், தன்னியக்க முறையிலும் செயல்பட உள்ளன. இந்தத் துறையில் மட்டும் இன்னும் பத்தாண்டுகளில் 50 லட்சம் முதல் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருவிகள் அனைத்தும் தானியங்கி முறையில் இயங்கினாலும், அதன் தயாரிப்புகள், பராமரிப்புகள், பழுதுநீக்கம், விற்பனை, விளம்பரப்படுத்துதல், வினியோகம் என ஏராளமான பிரிவுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மனிதர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.

வளர்ந்துவரும் இந்தத் துறையில் வேலைவாய்ப்புகளைப் பெற சில முக்கிய திறன்கள் அவசியமாகும்...

புத்திக்கூர்மைத்திறன், புதுமையாக சிந்தித்தல், குழுவாக செயல்படுதல், விமர்சித்தல், விமர்சனங்களை எதிர்கொள்ளுதல் , பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுதல் போன்ற திறமைகள் அனைத்துப் பணிகளுக்கும் ஏற்றதுதான்.

இவை தவிர ஸ்டெம் (STEM) மற்றும் ஸ்மாக் (SMAC) எனும் இருவகை திறமைகள் எதிர்கால வேலை உலகத்திற்கு ஏற்றதாக நிபுணர்கள் கணித்துக் கூறி உள்ளனர். ஸ்டெம் செல்கள் எப்படி உடலுக்கான அடிப்படை செல்களோ அப்படியே வேலைவாய்ப்பு உலகத்திற்கு அடிப்படையான சில திறமைகளை ‘ஸ்டெம்’ குறிக்கிறது. சயின்ஸ் (Science), டெக்னாலஜி (Technology), என்ஜினீயரிங் (Engineering) மற்றும் மேத்ஸ் (Maths) இவற்றின் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துகளின் சுருக்கம்தான் STEM திறமைகள் என அழைக்கப்படுகிறது.

இன்று படிப்பறிவு குறைந்தவர்கள் கூட ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டார்கள். படிக்காதவர்கள்கூட செல்போன்களை இயக்க பழகிக் கொண்டார்கள். வேலைவாய்ப்பு பெற, கட்டணங்கள் செலுத்த, பணம் அனுப்ப என பல்வேறு வசதிகளுக்கு தொழில்நுட்ப அறிவு அவசியமாகிவிட்டது. எனவே எதிர்காலத்தில் இந்த திறமைகள் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும்.

இதற்காக அறிவியல் அறிவு, தொழில்நுட்ப அறிவு, பொறியியல் நுட்பம் மற்றும் கணித அறிவுத் திறன்களை வளர்க்க வேண்டியது அவசியமாகும். இந்த அடிப்படை திறமைகளையே ‘ஸ்டெம்’ திறமைகள் என வேலைவாய்ப்புத் துறை வல்லுனர்கள் கணித்து கூறி உள்ளனர்.

ஸ்டெம் திறமைகள்போலவே ‘ஸ்மாக்’ திறமையும் எதிர்காலத்திற்கு அவசியமாகும். சமூகம் (Social), மொபைல் (Mobile), அனலைட்டிக்ஸ் (Analytics), கிளவுட் (Cloud) ஆகியவற்றின் ஆங்கில சொற்களின் முதல் எழுத்துகளின் சேர்க்கைதான் SMAC எனப்படுகிறது.

சமூகத்திற்கு என்ன தேவைப்படுகிறது, அதை அனைவரும் பயன்படுத்தும் மொபைல்போன் வழியே கொண்டு சேர்ப்பது எப்படி, அதற்கான ஆராய்ச்சிகள், தீர்வுகள், இந்த வசதிகளையெல்லாம் எங்கிருந்தபடியும் பயன்படுத்த கிளவுட் தொழில்நுட்பத்தில் சேமிப்பது, பயன்படுத்துவது போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்வதே ‘ஸ்மாக்’ திறமைகள் என வரையறுக்கிறார்கள் நிபுணர்கள்.

நீங்கள் எதிர்காலத்தில் சிறந்த பதவியை அலங்கரிக்க வேண்டுமானால் இந்த அறிவுத்திறன்களை மெருகேற்றிக் கொள்வது அவசியமாகும்.
கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வேலை வாய்ப்பு உலகின் மையம் வணிகவியல்...

வேலைவாய்ப்பு உலகின் இரு சக்கரங்கள் என்றால் அது வணிகமும், தொழில்நுட்பமும்தான். சொல்லப்போனால் தொழில்நுட்பமும் வணிகத்தை மையமாக கொண்டே சுழலும் எனலாம். வணிகம் என்பது எல்லாத் துறையும் தழுவிய ஒன்றாகும். சிறுதொழில் தொடங்கி, பெரு நிறுவனங்கள், வங்கிகள் என எல்லாத்துறையும் வணிகம் சார்ந்ததுதான். விண்வெளியில் கூட குடியிருப்புகளை உருவாக்கும் போட்டிகள் வணிக ரீதியில் தொடங்கிவிட்டது கண்கூடு. எனவே வணிகம், பொருளாதாரம் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுப்பவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு. இங்கு சில வணிகவியல் சார்ந்த படிப்புகளையும், வேலைவாய்ப்புகள் மிகுந்த துறைகளையும் அறிவோம்... பிளஸ்-2 படிப்பில் சராசரி மதிப்பெண் பெற்றவர்கள், வணிகவியல் படிப்புகளை தேர்வு செய்து படித்து, தொழில்துறை உலகில் உச்சம் தொடலாம். பிளஸ்-2-விற்கு பின்பு பி.காம் அல்லது சி.ஏ. படிக்க தீர்மானிக்கலாம். பி.காம் படித்த பின்பு பல்வேறு தொழில்நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். உயர்பதவிகளுக்கு செல்ல விரும்பினால் பட்ட மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புகள் படிப்பது வாய்ப்புகளை பிரகாசமாக்கும். பட்ட மேற்படிப்புகளில் எம்.காம்., பிசினஸ் எக்னாமிக்ஸ், பினான்ஸ் கண்ட்ரோல், எம்.ஏ.எக்னாமிக்ஸ், எம்.ஏ. ஆபரேசனல் அண்ட் ரிசர்ச் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் படிப்புகளை படிக்கலாம். வணிகவியல் பாடங்களை படிப்பவர்கள் கணக்கு அதிகாரியாக (அக்கவுண்டன்ட்), கணக்கு நிர்வாகியாக (அக்கவுண்டன்ட் எக்சிகியூட்டிவ்), கணக்கு தணிக்கையாளராக (சாட்டர்டு அக்கவுண்டன்ட்), கம்பெனி செயலாளராக பதவி பெறலாம். மேலும் காஸ்ட் அக்கவுண்டன்ட், நிதி ஆய்வாளர் (பினான்ஸ் அனலிஸ்ட்), நிதி திட்டமிடுபவராக (பினான்ஸ் பிளானர்), நிதி மேலாளராக (பினான்ஸ் மேனேஜர்), பினான்ஸ் கண்ட்ரோல், பினான்ஸ் கன்சல்டன்ட், இன்வெஸ்ட்மென்ட் அனலிஸ்ட், ஸ்டாக் புரோக்கர், போர்போலியோ மேனேஜர், டாக்ஸ் ஆடிட்டர், டாக்ஸ் கன்சல்டன்ட், ஆடிட்டர், புள்ளியிலாளர், எக்னாமிஸ்ட் போன்ற ஏராளமான பணிகளுக்கு செல்ல முடியும். மேலாளர் பணியிலேயே பல்வேறு பிரிவுகளில் வாய்ப்பு கிடைக்கும். நிதி மேலாளர், கருவூல மேலாளர், கண்ட்ரோலர், கிரெடிட் மேலாளர் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஜூனியர் அக்கவுண்டன்ட், அக்கவுண்ட் அசிஸ்டன்ட், புக் கீப்பர் போன்ற கீழ்நிலை பணிகளும் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள், பண்ணைகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், வெளிநாட்டு நிறுவனங்கள், தகவல் மையங்கள், மென்பொருள் துறை என பல்வேறு துறைகளிலும் பணிகள் உள்ளன. தொழில்தொடங்கும் வாய்ப்புகளும் உள்ளன. ஒரு பணியில் இருந்து கொண்டே நிதி சார்ந்த கிளைப் பணிகளை கவனிக்க முடியும். பலருக்கு நிதி ஆலோசகராகவும், நிதித் திட்டங்கள் வகுத்துக் கொடுப்பவராகவும் இருந்து கூடுதல் வருவாய் ஈட்டலாம். கீழ்நிலை அலுவலர் பணிக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற முடியும். பின்னர் அனுபவத்திற்கேற்ப ஊதியம் கேட்டுப் பெறலாம். அதிகாரியாகிவிட்டால் தகுதி, அனுபவத்திற்கேற்ப சில லட்சங்கள் வரை சம்பளம் பெறலாம். பொருளாதாரம் மற்றும் வணிகவியல் படிப்புகளை ஏராளமான கல்வி நிறுவனங்கள் கற்றுத்தருகின்றன. சிறந்த கல்வி நிறுவனத்தில் படித்து வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளலாம்!

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மடியும் முன்பு மாநில மரத்தை மீட்போம்

மடியும் முன்பு மாநில மரத்தை மீட்போம் வி.களத்தூர் எம்.பாரூக் பனை மரம் நம் தமிழகத்தின் அடையாளம். தமிழர்களின் அடையாளம். மராட்டிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் மகாபல் என்பவர் தனது ஆராய்ச்சியின் மூலம் ‘பனைமரங்கள் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்க வேண்டும்’ என்று உலகத்திற்கு அறிவித்திருக்கின்றார். தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமை கொண்டது பனைமரம். தமிழ்மொழியின் எழுத்துக்கள் முதன் முதலில் பதியப்பட்டது பனை ஓலையில்தான். பல சங்க இலக்கியங்கள் கிடைக்கப்பெற்றது அந்த ஓலைச் சுவடிகளில்தான். அந்த காலகட்டங்களில் செய்தி பரிமாற்றங்கள் பனை ஓலையின் மூலம் தான் நடைபெற்று இருக்கின்றன. கடுமையான புயலைக்கூட தாங்கி நிற்கக்கூடிய வீடுகளை நம் முன்னோர்கள் பனை ஓலைகளில்தான் அமைத்திருந்தனர். அவ்வளவு சிறப்புமிக்கது பனை மரம். பல வகையான பயன்களை தருவதால் பனையை கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் என்று தொன்மங்கள் குறிப்பிடும் ‘கற்பகத்தரு’வுடன் ஒப்பிடுகின்றனர். பனை மரங்களில் 34 வகைகள் இருப்பது பலருக்கும் தெரியாத ஆச்சரியமான தகவல். பனைமரம் பல்வேறு பயன்களை மனிதர்களுக்கு வழங்குகிறது. இதில் பதநீர் முதன்மையானது. இதே போல பனம்பழம், நுங்கு, பனங்கிழங்கு, கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, தூரிகைகள், பனையோலைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், மரப் பொருட்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஒரு பனைமரத்தின் மூலம் ஒரு ஆண்டுக்கு மட்டும் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை பெற முடியும். மேலும் 24 கிலோ பனைவெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றை அந்த ஒரு பனைமரத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். பனை மரம் மிக நீளமான உறுதியான சல்லிவேர் தொகுப்பை பெற்று இருப்பதால் மண் அரிப்பை தடுக்கும் ஆற்றலை அது பெற்றிருக்கிறது. இயற்கையின் அரணாக விளங்குவதால்தான் அதனை நம் முன்னோர்கள் வயல் வரப்புகளிலும், குளம், கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும், கடலை ஒட்டி இருக்கும் பகுதிகளிலும் நட்டு வளர்த்தனர். நிலங்களின் எல்லைகளை குறிக்க வயல்வெளிகளில், தோட்டங்களில் அதனை பயன்படுத்தி இருப்பதை இப்போதும் நாம் பார்க்கலாம். ‘10.2 கோடி பனைமரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடி பனைமரங்கள் உள்ளன’ என்று கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் கணக்கெடுத்து அறிவித்திருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு 30 கோடி பனைமரங்கள் இருந்தன என்பதை அறிகின்றபோது எவ்வளவு பெரிய பாதிப்பை பனைமரங்கள் சந்தித்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ளலாம். இது நமக்கு எத்தனை இழப்பு என்றும் அறிந்துகொள்ள முடியும். தமிழகத்தில் 5 கோடி பனைமரங்கள் இருக்கிறது என்ற நிலையும் இன்றைக்கு மாறி இருக்கலாம். ஏனென்றால், பனை மர அழிப்பு மிக மும்முரமாக, தீவிரமாக நடந்து வருகிறது. இது வேதனையின் உச்சம். முன்பெல்லாம் பனையோலை பட்டை தண்ணீர் அருந்துவதற்கு, சாப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இறைச்சி, கருவாடு போன்ற உணவு பொருட்களை பொட்டலம் போட்டு கொடுக்க பனையோலைகள் உபயோகிக்கப்பட்டன. இந்த நிலை தற்போது நீடித்தால் பெரும்பாலான விஷயங்களுக்கு நாம் பிளாஸ்டிக், பாலித்தீன் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து இருப்போம். இப்படி பனையின் மூலம் கிடைக்கப்பெறும் பொருட்களை மக்கள் பயன்படுத்திய வரையில் பனைமரம் செழிப்பாக இருந்தது. தற்போது பனையின் பயன்களை மறந்துபோனதும், அரசின் தடை ஆணைகளும் பனைத்தொழிலை நிலைகுலைய வைத்திருக்கிறது. தமிழகத்தில் கள் இறக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. டாஸ்மாக் மூலம் மதுபானம் பெருக்கெடுத்து ஓடும் தமிழகத்தில் இயற்கையான உடலிற்கு வலிமை தரும் கள் குடிப்பதற்கு தடை என்பது வினோதமாக இருக்கிறது. அளவோடு கள் பருகுவது உடலுக்கு நலமே. கள் இறக்குவதற்கு அனுமதி இருந்தவரை, அதனால் வருமானம் கிடைத்தது. இதனால் பனை மரங்களை காப்பாற்றி வந்தனர் விவசாயிகள். தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால், செங்கல் சூளைக்கு எரிபொருளுக்காக பனைமரம் வெட்டப்படும் துயரமான நிலை ஏற்பட்டிருக்கிறது. விவசாயம், கைத்தறி ஆகியவற்றிக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பினை கொண்ட தொழிலாக பனைத்தொழில் விளங்கியது. தற்போது போதிய வருமானம் இல்லாததால் பனை ஏறும் தொழில் தொய்வடைந்து இருக்கிறது. பனைத் தொழிலாளர்களில் 80 சதவீதம் பேர் மாற்றுத் தொழிலுக்கு மாறிவிட்டனர். இருக்கும் கொஞ்சநஞ்ச பேரும் போதிய வருமானம் இன்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கச் செய்தால் பனைமரமும், பனைத்தொழிலும் சிறந்தோங்க வழி கிடைக்கும். ‘இது தான் மாநில மரம்’ என்று நம் பிள்ளைகளுக்கு புத்தகத்தில் மட்டுமே பனை மரத்தின் படத்தை காட்டும் நிலையை நாம் ஏற்படுத்தி விடக் கூடாது. இதற்கு பனைமரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களை நமது அன்றாட பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யவேண்டும். இருக்கும் பனைகளை காப்பதோடு, பனைகளை பெருக்கவும் முன்வர வேண்டும். அதுவே முற்றிலும் மடியும் முன்பு நம் தமிழ் மரமான பனை மரத்தை காக்க துணை நிற்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நம் தமிழக வாணிபச் சிறப்பு வாழும் நாள் எந்நாளோ?

நம் தமிழக வாணிபச் சிறப்பு வாழும் நாள் எந்நாளோ? எழுத்தாளர் தங்க.கலியமூர்த்தி நம் தமிழகம் பண்டை நாளில் உலக நாடுகளோடு வாணிபம், அரசியல் ஆகிய துறைகளில் தனியே தொடர்புகொண்டு இருந்தது. இதர மொழிகள் வழங்கும் நம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கே உலகில் அதிக மதிப்பு இருந்தது. அன்று, உலக நாடுகளின் மதிப்புக்குரிய இந்திய துறைமுகம் நம் காவிரிப்பூம்பட்டின துறைமுகம் ஒன்றே ஆகும். பண்டைய காலத்திலேயே தமிழ்நாட்டு வணிகர்கள் கிழக்கு நோக்கி கடல் கடந்து சென்று மத்திய அமெரிக்காவை அடைந்து அங்கு தங்கள் நாகரிகத்தை பரப்பினர் என ‘இந்து அமெரிக்கா’ என்ற நூலில் அறிஞர் சமன்லால் கூறுகிறார். தமிழ் வணிகர்கள் உலக நாடுகளுக்கு தங்கள் கண்டத்தை ஈந்து பொருள் தேடியதோடு, தமிழ் பண்பாட்டையும் தந்து தமிழகத்துக்கு புகழ் தேடினர். குறிப்பாக, மத்திய தரைக்கடல் நாடுகளுடன் தமிழகத்தின் ஒரு பகுதியான பாண்டிய நாடு வாணிபம் செய்து வந்ததாக பிளினி என்ற மிகச்சிறந்த ஆய்வாளர் கூறுகிறார். முற்காலத்தில் நாகரிக பொருட்கள் அனைத்துக்கும் உலக நாடுகள் தமிழகத்தை எதிர்பார்த்து இருந்தன. ஏலம், சந்தனம், கிராம்பு போன்ற வாசனை பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின. எகிப்து நாட்டு வணிகர்கள் நம் தமிழகம் வந்து வாசனை பொருட்களை வாங்கிக்கொண்டு ஒட்டகங்கள் மூலம் கொண்டு சென்றதாக யூதரின் சமய நூல் கூறுகிறது. அரேபிய நாட்டார், பாண்டிய நாட்டாருடன் குதிரை வாணிபம் செய்து வந்ததாக அறிகிறோம். கி.பி. முதல் நூற்றாண்டில் கிரேக்க வணிகர்களுக்கு பயன்படும்படி எழுதப்பட்ட நூல்களில் தமிழகத்தில் கப்பல் வாணிப சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. காவிரிப்பூம்பட்டின துறைமுகத்தின் மூலமே நம் நாட்டில் இருந்து உணவு பொருட்கள், வாசனை பொருட்கள், முத்து, பவளம் போன்ற மணி வகைகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின. காவிரிப்பூம்பட்டின துறைமுகம் பற்றி பட்டினப்பாலை குறிப்பிடும்போது, “நீரில் வந்த நிமிர் பரித்துறைவியும் ஈழத்துறையும் கழகத்தாக்கமும் அரியவும், பெரியவும் நெடிய ஈண்டி” என்கிறது. அதாவது, கடல் வழியே வந்த குதிரைகளும், ஈழ (இலங்கை) நாட்டில் இருந்து வந்த உணவுப் பொருட்களும், காழக (பர்மா) நாட்டில் இருந்து வந்த உணவுப் பொருட்களும், பிற அரிய, பெரிய உணவு பொருட்கள் யாவும் நிறைய குவிந்து இருந்தன என பட்டினப்பாலை பகிர்கின்றது. இவ்வாறு புகார் துறைமுகம் மூலம் நம் தமிழகம் பெற்றிருந்த உலக வாணிப சிறப்பை ஒரு தனி நூலாகவே எழுதலாம். பிற நாடுகளிடம் இருந்து நம் தமிழர்கள் பெற்ற பொருட்களை அறிந்தால் அக்கால தமிழரின் நாகரிக சிறப்பு விளங்கும். யவனர் பெரிய கப்பல்களில் தங்கம் கொண்டு வந்து நம் தமிழருக்கு தந்து அதற்கு ஈடாக தமிழகத்தில் இருந்து மிளகை வாங்கி செல்வார்களாம். அலரிக் என்பவர் ரோம் நாட்டின் மீது படையெடுத்து வந்தபோது, அவருக்கு மிளகு கொடுத்து சமாதானம் செய்தனராம், ரோம் நாட்டினர். அந்நாளில் தமிழ்நாட்டிற்கும், உலக நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற வாணிபத்தில் மிளகுக்கு இருந்த மதிப்பு வேறு பொருட்களுக்கு இல்லை என்றால் அது மிகையாகாது. கி.மு. 600 வரை பாண்டியர் தலைநகராய் இருந்த கொற்கை சிறந்த துறைமுக மற்றும் வணிக நகரமாய் திகழ்ந்தது. கொற்கையில் கிடைத்த வரலாற்று எச்சங்களை வைத்து பார்க்கும்போது, கொற்கை கி.மு. 1000-ம் தொட்டே துறைமுகமாக செயல்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதே போல, பாண்டி நாட்டின் காயற்பட்டின துறைமுகம் பற்றி மார்க்கோபோலா என்ற புகழ்பெற்ற யாத்திரிகர் பின்வருமாறு எழுதியிருக்கிறார். காயற்பட்டினத்தில் சுறுசுறுப்பான வாணிபம் நடந்தது. மேற்கில் இருந்து வரும் கப்பல்கள் காயற்பட்டினத்தில் தங்காமல் போவதில்லை. சீனா மற்றும் மேலைநாடுகளின் பொருட்கள் எல்லாம் இங்கு வந்து குவியும். இங்கு சுதேசிகளின் பொருட்கள் ஏராளமாக ஏற்றுமதியாகி பொன் குவியும். ஒரு காலத்தில் அரசியல், வாணிபம், நாகரிகம், கலை ஆகிய துறைகளில் உலகில் சிறப்பு பெற்ற நாடு ரோமாபுரி. அந்த ரோமாபுரியோடு எல்லா துறைகளிலும் போட்டியிட்ட நாடு உண்டு என்றால் அது தமிழ்நாடு அன்றி வேறு எது? தமிழ்நாட்டின் வளர்ச்சியைக்கண்டு ரோமாபுரியும் பொறாமை கொண்டதாம். இந்தியா, வாணிபத்தால் ரோமாபுரியை தோற்கடிக்கிறது. இந்தியாவுக்குள் பொன்னாறு பாய்கிறது என்று கி.பி.130-ல் வாழ்ந்த தாளமி என்பவர் அங்கலாய்த்துக்கொண்டார். அவர் கூறும் இந்தியா தமிழ்நாடே. தமிழர் ரோம் சாம்ராஜியத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டதற்கு அடையாளமாக தமிழகத்தில் ரோம நாணயங்கள் அடிக்கடி அகப்படுகின்றன. கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் இருந்து ரோமர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே வாணிபத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அது மட்டும் அல்ல, சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழர் வாணிபத்துறையில் நன்கு பயிற்சி பெற்று இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சோழர்கள், ஜப்பானோடு வாணிபம் செய்து வந்தனர். ராஜராஜ சோழன் காலத்தில் கப்பல் வாணிபம் தமிழகத்தில் முன்னெப்போதும் இருந்ததை விட முதன்மை பெற்று இருந்தது. சோழர்களது கப்பல்கள் நாகப்பட்டினத்தில் இருந்து சாவக தீவிற்கு நாள்தோறும் போய்க்கொண்டு இருந்தன. தமிழகத்தில் கப்பல் தொழில் மிக உயர்ந்த நிலையில் இருந்ததால்தான் தமிழர்கள் வாணிபத்தில் முதன்மை பெற்றிருந்தனர். கப்பல் துறையின் நுட்பங்களை விளக்கும் தனி நூல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதை தமிழகத்துடன் வாணிபம் செய்து கொண்ட அரேபியர்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்திருந்த ரோம் சாம்ராஜ்யத்தில் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் ஆணி அடித்து பலகைகளை ஒன்று சேர்த்து கப்பல் கட்டிய காலத்திலேயே தமிழ்நாட்டினர் பலகைகளை ஒன்றோடு ஒன்று பொருத்தப்பட்டிருப்பது தெரியாதவாறு நெருக்கி அழகாக கட்டியிருந்தனர். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்து தேச மன்னர் சாலமன் தமிழ்நாட்டில் இருந்து குரங்கு, மயில் முதலியவைகளை பெற்று சென்றதாக தெரிகிறது. சுருங்கக்கூறின், உணவு உள்பட எல்லா வாழ்க்கை பொருட்களுக்கும் இப்போது தமிழகம் வெளிநாடுகளில் எதிர்பார்க்கிறது அல்லவா? இதற்கும் நேர்மாறாக அன்றைக்கு உலக நாடுகள் எல்லாம் தமது தேவைகள் அனைத்துக்கும் நம் தமிழகத்தை எதிர்பார்த்திருந்தன. இந்தியா என்ற பெயரில் பண்டைய கால வாணிபம், அரசியல் பற்றி பல உலக அறிஞர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் தமிழகத்திற்கே உரியது ஆகும். நமது அருமை தமிழகத்தின் பெரும் சிறப்பை என்னவென்று சொல்வது! நம் தமிழகத்தின் வாணிபச் சிறப்பு வாழும் நாள் எந்நாளோ?

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 15 July 2018

கண்டக்டர் சேவை பயணிகளின் தேவை

அரசு பஸ்களில் முக்கிய நகரங்களில் தற்போது கண்டக்டர் இல்லாத அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. டிக்கெட் கொடுத்து பணம் வாங்குவது மட்டும் கண்டக்டர் பணி என்று நினைப்பது தவறு. பயணிகள், அவர்கள் கொண்டு வரும் உடைமைகளை கண்காணிப்பது, போக்குவரத்து நெரிசலின் போது டிரைவருக்கு உறுதுணையாக இருப்பது, பெண் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்கிறார்களா? முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை வசதி செய்து கொடுப்பது? இப்படி பல்வேறு பணிகளையும் கண்டக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 21 ஆயிரத்து 744 பஸ்கள் ஓடுகின்றன. இந்த பஸ்கள் தினமும் 87 லட்சத்து 22 ஆயிரம் கிலோ மீட்டரை கடக்கின்றன. இதில் தினமும் ஒரு கோடியே 80 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் இந்த பஸ்கள் சென்று வருகின்றன. தற்போது அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.134 கோடியே 53 லட்சம் செலவில் 515 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளது. தற்போது புதிதாக வாங்கப்பட்டு உள்ள அரசு பஸ்சில் ‘பிரித்அனலைசர்‘ என்ற கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இது மது குடித்து விட்டு டிரைவர் பஸ்சை இயக்கினால் பஸ் நகராது. இது வரவேற்கத்தக்கது தான். இதன் மூலம் போதை இல்லாத டிரைவர் மூலம் நல்ல பயணத்தை பயணிகள் அனுபவிக்கலாம். தனியார் பஸ் சேவைக்கு இணையாக அரசு விரைவு பஸ்களும் நவீன வசதிகளுடன் படுக்கை, குளிர்சாதனம், இன்னும் ரெயில்களில் இருப்பது போல கழிவறை வசதிகளுடனும் இயக்கப்பட இருப்பது வரவேற்கத்தக்கது. இதில் படுக்கை , கழிவறை வசதி இல்லாத புதிய சொகுசு பஸ்கள் தற்போது தமிழகத்தில் முக்கிய நகரங்களில் கண்டக்டர் இல்லாத சேவையை தொடங்கி உள்ளன. ஒன் டூ ஒன், பாயிண்ட் டூ பாயிண்ட், பைபாஸ் ரைடர், சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய பெயர்களில் இந்த கண்டக்டர் இல்லாத பஸ் சேவை செயல்படுகிறது. தற்போது கண்டக்டர் இல்லாமல் இடைநில்லா பஸ்கள் இயங்குகின்றன. நீண்ட தொலைவு, ஒரு பேச்சு துணைக்கு கூட ஆட்கள் இல்லாமல், ஒரு எந்திரத்தை போன்று பஸ்சை இயக்க வேண்டிய காலகட்டத்தில் டிரைவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். பஸ்சுக்குள் பயணிகள் எப்படி இருக்கிறார்கள். பயணிகள் போர்வையில் திருடர்கள் நடமாடுகிறார்களா? பெண் பயணிகளிடம் சில்மிஷத்தில் யாராவது ஈடுபடுகிறார்களா? என்பதை டிரைவர் கண்காணிக்க முடியாது. ஆனால் அரசு பஸ் கண்டக்டர் அவ்வப்போது பஸ்சில் ரோந்து வருவார். பெண் பயணிகளிடம் யாராவது சில்மிஷத்தில் ஈடுபடுகிறார்களா? பாதுகாப்பாக பயணம் செய்கிறார்களா? பயணிகளின் உடைமைகள் பாதுகாக்கப்படுகிறதா? என்பதை அவ்வப்போது கண்காணிப்பார். நீண்ட தொலைவு பயணத்தின் போது பயணிகள் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றாலும் அவருக்கு சிகிச்சை அளிக்க கண்டக்டர், டிரைவர் உதவியுடன் முன்வருவார். இனி இது போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால் பயணிகளின் நிலைமை சொல்லி மாளாது. பின்இருக்கையில் அமர்ந்து இருக்கும் ஒரு பயணிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் அவர் உடனே பஸ்சின் முன்பு இருக்கும் டிரைவரை சந்தித்து தனது உடல்நிலை சரியில்லை என்று கூற முடியுமா? ‘சிக்கனம்‘ என்ற பெயரில் அரசே இது போன்ற செயலில் ஈடுபடுவது முறையாகுமா? வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது தான் ஒரு அரசின் கடமை. ஆனால் இங்கே... கண்டக்டர் இல்லாத சேவை என்று ஒரு பஸ்சுக்கு ஒரு பணியிடம் என்று தனியார் நிறுவனங்களை போன்று ஆட்குறைப்பு செய்வது நல்லதா? கண்கள் இரண்டு ஆனாலும் பார்வை ஒன்று தான். அரசு பஸ் சீராக இயங்க வேண்டும் என்றால் டிரைவரும், கண்டக்டரின் பங்களிப்பும் அவசியம் தேவை. தற்போது கண்டக்டர் இல்லாமல் டிரைவரை மட்டும் கொண்டு இயங்குகின்ற பஸ்கள் அனைத்தும் பஸ்நிலையத்தில் தங்களுக்கான நேரம் வந்ததும் குறைவான பயணிகள் இருந்தாலும் அங்கிருந்து புறப்பட்டு சென்று விடுகின்றன. அந்த நகரின் முக்கிய பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நின்றாலும் அவர்களை ஏற்றுவதில்லை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அது மட்டுமின்றி செல்லக்கூடிய ஊர்களில் பயணிகள் தாங்கள் பஸ் நிலையத்துக்கு முன்பாக இறங்க வேண்டிய நிலையில் இருந்தால் கண்டக்டர் பணியில் இருக்கும் போது அவரிடம் சொன்னால் நாம் இறங்க ஏற்பாடு செய்வார். ஆனால் இப்போது பின் இருக்கையில் இருப்பவர்கள் முன்னால் சென்று டிரைவரிடம் கூறி தான் குறிப்பிட்ட இடத்தில் இறங்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அது மட்டுமின்றி நடுவழியில் பஸ் ஏதாவது பழுது ஏற்பட்டால் டிரைவர் மட்டும் அதை சரி செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும். கண்டக்டர் இல்லாமல் டிரைவர் மட்டும் பஸ்சை இயக்குவது கடிவாளம் போட்ட குதிரை ஓடுவது போன்று தான். இது ஆரோக்கியமானது அல்ல. ஆனால் மற்ற அரசு பஸ்சுகளை போல் இதிலும் கண்டக்டர்களை பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போல் அரசும் ஆட்குறைப்பு என்ற பெயரில் கண்டக்டர் பணியிடங்களை ரத்து செய்ய முயற்சிப்பது நல்லது அல்ல. அரசு பஸ்களில் கண்டக்டர் பணி வழங்குவதன் மூலம் தமிழகத்தில் ஒரு ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கும் அவர்கள் வாழ்வின் மகிழ்ச்சிக்கும் அரசு உறுதுணையாக இருக்கிறது என்ற நம்பிக்கையை விதைக்க முன் வர வேண்டும். -குருவன்கோட்டை ஸ்ரீமன்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வெளித்தேர்வு நியமனம் நன்மையா? தீமையா?

வெளித்தேர்வு நியமனம் நன்மையா? தீமையா? சோ.கணேச சுப்பிரமணியன், கல்வியாளர் மத்திய அரசு இணைச்செயலாளர் அந்தஸ்துப் பதவிகளுக்குப் வெளித்தேர்வு நியமனமாக அதிகாரிகளைக் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது. தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ‘வெளித்தேர்வு நியமனம்’ என்றால் என்ன? இந்திய அரசுப் பணிகளுக்குப் பொருந்துமா? நன்மையானதா?பொதுவாக அரசுப் பணியாளர்கள் நேரடித் தேர்வு அல்லது பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு ஆகிய இரண்டு முறைகளில் தேர்ந்தெடுக்கப்படுவர். இது தவிர ஏதாவது ஒரு துறையில் சில பணிகளுக்கு அரசுப் பணியில் அனுபவமும், பணிசார்ந்த அறிவும் தேவையாக இருக்கும். அதுபோன்ற பணியிடங்களுக்கு நேரடியாகத் தேர்வு செய்யாமல் மற்றொரு அரசுத்துறையிலிருந்து அதிகாரிகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தேர்ந்தெடுப்பர். அமெரிக்கா போன்ற நாடுகளில் அரசுத்துறைகள் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களில் அனுபவம் உள்ளோரையும் அரசுப் பணிக்குத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் உண்டு. இதுபோன்ற நியமனங்கள் ‘வெளித்தேர்வு நியமனங்கள்’ எனப்படும். இவற்றுள் முதலில் கூறிய குறிப்பிட்டகாலவரையறை அடிப்படையிலான நியமனங்கள் இந்தியாவில் எப்போதுமே உண்டு. இரண்டாவதாகச் கூறப்பட்ட நியமனமுறை பொதுவாக இல்லை, விதிவிலக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. உதாரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளித்தேர்வு நியமனமுறையில்தான் அரசுப் பணியில் அமர்த்தப்பட்டார். இந்த முறையைப் பணியாளர் தேர்வில் பயன்படுத்த வேண்டுமெனப் பல குழுக்கள் பரிந்துரைத்துள்ளன முதலாம் நிர்வாகச் சீர்திருத்தக் குழு, ஐந்தாவது மற்றும் ஆறாவது மத்திய ஊதியக்குழு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பணியாளர் நியமனத்தில் பணிசார் நியமனம், பணிவாழ்க்கைசார் நியமனம் என இருமுறைகள் உண்டு. இந்தியாவில் பணிவாழ்க்கைசார் நியமனமுறையே பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் குறிப்பிட்ட வயதில், ஏதாவது ஒரு நிர்வாகப் படிநிலையில் அரசுப்பணிக்குத் தேர்வாகும் ஒருவர் பணிஓய்வுக் காலம் வரை பணிபுரிவார். தேர்வானது முதல் பணிஓய்வு வரை தகுதி, பணிமூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பதவி உயர்வும் பெறுவார். எனவே அரசுப்பணி அவருடைய பணிவாழ்க்கையாகிவிடுகிறது. இது அவருடைய வாழ்க்கையில் ஒரு நிலைத்தன்மையைத் தந்து பணிப்பாதுகாப்பையும் உறுதி செய்வதால் அவருடைய கவனம் பணியைத் திறம்பட நிறைவேற்றுவதில் இருக்கும். நிலைத்தன்மையும், பணிப்பாதுகாப்பும் நிர்வாகச் செயல்பாட்டுக்கு இன்றியமையாதவையாகும். வெளித்தேர்வு நியமனங்கள் இந்த முறைக்கு எதிரானது. பின் எதற்காக இந்த முறை பரிந்துரைக்கப்பட்டது? அரசும் செயல்படுத்துகிறது? இந்த முறையிலும் பல நன்மைகள் உண்டு. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் ஏற்கனவே பயிற்சி பெற்றவராகவும் அரசுப் பணிசார்ந்த அறிவு நிறைந்தவராகவும் இருத்தலால் நேரடியாகப் பணியமர்த்தலாம். பயிற்சிக்கான செலவும் காலமும் மிச்சமாகும். வேறொரு துறை அறிவையும் அனுபவத்தையும் கொண்டுவருவதால் பணியிலும், துறைச் செயல்பாட்டிலும் புதுமை புகுத்தப்படும். தனியார்வணிக நிறுவனங்களிலிருந்து அரசுத்துறைக்கு வருவோரால் இது மேலும் சாத்தியப்படும். அவர்களுடைய அனுபவம் அரசுத்துறைச் சீர்திருத்தத்திற்குப் பெரும் துணையாக இருக்கும். அரசுத்துறையின் மந்தநிலைச் செயல்பாட்டை உலுக்கி விரைந்து செயல்படச் செய்யும். உதாரணமாக ரகுராம் ராஜன், வர்கீஸ் குரியன் போன்றோர் ஆற்றிய பணிகளைச் சொல்லலாம். ஆனால் இந்த முறையில் பல சிக்கல்களும் சவால்களும் உண்டு. விண்ணப்பதாரருக்கான தகுதித்தேர்வுமுறையையும், செயல்படுத்தும் அமைப்பு எது என்பதையும் நிர்ணயிப்பது முதல் சிக்கல். மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வுமுறையில் அனுபவ அடிப்படையிலும் தேர்வுமுறை ஆராய்ச்சி அடிப்படையிலும் நிபுணத்துவம் பெற்ற அமைப்பு. வெளித்தேர்வு நியமனமுறை அந்த நிபுணத்துவத்தைப் பயன்படுத்தாதது மட்டுமல்லாது அதனைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஏற்கனவே பணியில் உள்ளவர்களுடைய ஊக்கத்தையும் குலைக்கும் தன்மையுடையது. அரசுப்பணியைத் தன் பணிவாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்தவருக்குப் பதவிஉயர்வு மிக முக்கியமானது. வெளித்தேர்வு நியமனங்கள் அதனைத் தடுத்து பணியாளர் ஊக்கத்தைக் குலைக்கும். மேலும் வெளித்தேர்வு நியமனதாரர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவதால் அவருடைய ஊதியம் அவருடைய சந்தை ஊதியமதிப்பை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இது அரசுப் பணியில் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்துவதோடு அரசுப்பணியாளர்களுடைய மனநிலையையும் பாதிக்கும். அரசு தன்னை நம்பவில்லை என்ற எண்ணம் ஓங்கி பணித்திறம் குறைய நேரிடும். இது அரசுப்பணியாளரின் பணிக் காலம் முழுவதும் நிலைத்துவிடும் ஆபத்தும் உண்டு. உயர்பதவியில் இருப்போர் அரசின் பல்வேறு ரகசிய ஆவணங்களைக் கையாள நேரிடும். குறிப்பிட்ட காலத்துக்கு அந்தப் பதவி வகிக்கும் வெளித்தேர்வு நியமனதாரர் ஆவணங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவாரா? அரசுப்பதவியைவிட்டுச் சென்றபின் அரசாங்க ரகசியங்களைப் பாதுகாப்பாரா? என்பவை முக்கியமான கேள்விகள். குறுகியகால அரசுப்பணியில் ஏற்படும் தொடர்புகள் அரசுப்பணியைவிட்டுத் தனியார் பணிகளுக்குச் சென்றால் சிறப்புச் சலுகை, லஞ்சஊழலுக்கான வாய்ப்பு என அரசுத்துறை செயல்பாடுகளை பாதிக்கும் வாய்ப்பும் உண்டு. மேலும் குறுகிய காலம் பணியில் அவர் எடுக்கும் முடிவுகள் தவறாகிப்போனாலோ, அரசுக்கும் மக்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தினாலோ அவரைப் பொறுப்பேற்கச் செய்யமுடியாது. சரி இப்போது மட்டும் ஊழல் இல்லையா? அரசு அதிகாரிகளைக் தண்டிக்க முடிகிறதா? என்று வாதிடுவோரும் உண்டு. தற்போதைய முறையில் அரசுப்பணியாளர் அரசுசார்ந்தவராகிறார். பணிக்காலத்திலும் ஓய்வுபெற்றாலும் அரசுக்கு அவர்மீது பிடிப்பு உண்டு. ஆனால் வெளித்தேர்வு நியமனதாரர் குறிப்பிட்ட காலமே அரசுப்பணியில் இருப்பார். அக்காலகட்டத்துக்குப்பின் அவரை பணிப்பொறுப்புக்கு ஆளாக்குவது கடினம். எனவே இந்தியாவில் இந்த முறைமைத் தற்போது செயல்படுத்துவது பலனைவிடப் பிரச்சினைகளையே தரும். சிந்தித்துச் செயல்படுத்துதல் நன்று. Location: Chennai Edition: Tiruvallur Date : 15/07/2018 Page : 04 Stories : 3 வெளித்தேர்வு நியமனம் நன்மையா? தீமையா? கண்டக்டர் சேவை பயணிகளின் தேவை எதிரொலி Back

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 14 July 2018

சர்க்கரையின்றி காமத்துப்பால் இனிக்க…

சர்க்கரையின்றி காமத்துப்பால் இனிக்க… மருத்துவர் கு. சிவராமன் இனிப்பு நோயரின் அதிகக் கசப்பான தருணம், 50-களில் தங்களுக்கு ஏற்படும் உடலுறவுப் பிரச்சினைதான். ஆண் பெண் இருவருக்கும், கட்டுப்பாடற்ற சர்க்கரையால், உடலுறவில் ஆர்வமின்மை முதல், அதில் மகிழ்வாக ஈடுபட இயலாத நிலைவரை பல சிக்கல்கள் அப்போது ஏற்படும். இதனால் உருவாகும் உளவியல் சிக்கல்கள், உறவுச் சிக்கல்கள், குடும்பப் பிரச்சினைகள்… ஏராளம்! காமத்தை இயல்பாக வெளிப்படையாகப் பேச இயலாத ஒரு சமூகத்தில், இந்தப் பிரச்சினையின் தீவிரம் இன்று சத்தமில்லாமல் அதிகரித்துவருகிறது. கூடவே இந்தக் கூச்சம் கொடுக்கும் மவுனத்தில், இதற்காகவென்றே கூச்சலிட்டு விற்கப்படும் சந்தர்ப்பவாத போலி மருந்துகளும் மருத்துவச் சந்தையில் நிறைய உள்ளன. பெண்ணுக்கான பிரச்சினை பெண்ணுக்கு இயல்பாகவே மாதவிடாய் முடியும் நேரத்தில் ஏற்படும் மன அழுத்தமும் அப்போது ஏற்படும் குடும்பச் சுமைகளும் ஒருபுறம் இருக்க, அதே நேரம் சர்க்கரையும் சேர்ந்துகொண்டால், அதைச் சரிவரக் கவனிக்காதபோது, அந்தப் பெண்ணுக்கு உடலுறவில் ஆர்வமின்மை உருவாகும். ஒருபக்கம் ஈஸ்ட்ரோஜன் குறைவு. இன்னொரு பக்கம் சர்க்கரைக் கட்டுப்பாடு இல்லாமல் போவதால், பாலியல் ஹார்மோனும் குறைவுபட, பெண் மனத்தில் எதிலும் ஈடுபாடில்லாத வெறுமை நிறைந்திருக்கும். அன்போடு அரவணைக்க வரும் கணவனிடமிருந்து விலகுவதும், இனிய முக மொழி மறந்து, கடுஞ்சொல் கசியும் முகத்தோடும் அவள் நடமாட, அங்கே உறவுச்சிக்கல் உதிக்கும். ஆணுக்கான பிரச்சினை இதுவே ஆண்களில், அதுவரை ‘கண்ணே மணியே’ எனக் காதல் மொழி உதிர்த்த காலம் போய், பரபரப்பு முகம் காட்டத் தொடங்குவது நடக்கும். இட்லியைப் பரிமாறும்போது ‘என்ன ஆச்சு இவருக்கு?’ என ஆதங்கமாய் காரணம் தேடும்போது, அன்புடன் பரிமாறும் அவளின் காதலை ஒதுக்கித் திருப்பும் உதாசீனத்துக்கு ரத்தத்தில் இனிப்பு கூடியதே காரணம். ‘அப்படியெல்லாம் இல்லை. அன்பும் ஆர்வமும் இருக்கிறது. ஆனால், மகிழ்வைக் கூட்டும் இறுதிக்கு எடுத்துச் செல்ல ரத்தம் மட்டும் ‘அங்கே’ பொங்க மறுக்கிறது’ என்பதுதான் பலரின் பிரச்சினை. குறிப்பாய் இன்சுலின் தேவைப்படாத, மருந்துகளால் சர்க்கரையைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் என்.ஐ.டி.டி.எம். (NIDDM – Non Insulin Dependent Diabetes Mellitus) நோயாளிகளுக்கு, இந்தச் சூழல் அதிகம் வருவதுண்டு. நவீன மருத்துவம் இதை, ‘எரக்டைல் டிஸ்ஃபங்‌ஷன்’ (Erectile dysfunction), அதாவது ஆணுறுப்பு விரைப்புத்தன்மைக் குறைபாடு என்கிறது. விளைவு? அழகான, அற்புதமான கணங்கள் அத்தனையும் இருவருக்குள்ளும் அரைகுறையாய் முடிய, இருவர் இடையேயும் ஏமாற்றம் ஏராளமாய்ப் பற்றிக்கொள்கிறது. இந்நிகழ்வு அடிக்கடி நிகழும்போது, இனிப்பு நோயருக்கு இயல்பாய் தாழ்வு மனப்பான்மை தொற்றிக்கொள்வதும், ‘மோகத்தைக் கொன்றுவிடு. அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு’ எனத் தொடர்பில்லாமல் பாடத் தொடங்குவதும்கூட, அந்த விரக்தியில் வாடிக்கையாகிவிடுகிறது. போலிகள் ஜாக்கிரதை சர்க்கரைக் கட்டுப்பாடுதான் வரும் முன் காக்கும் ஒரே வழி. என்னதான் மருந்துகள் உதவியால், இந்தச் சிக்கலைக் களைய முடியும் என்றாலும், கவிதையாய் எழுத வேண்டிய காமத்தை, டியூஷன் வைத்துக் கணக்குப் பாடம் படிக்க வேண்டியது மாதிரியான கட்டாயம் ஏற்படும் என்பது வலியுடன் கூடிய உண்மை! மூலிகைகள் முதல் வயாகராக்கள்வரை இன்று ஏராளமான மருந்துகள் வந்தாகிவிட்டது. ஆனால், கடையடைக்கும்போது கடைப் பையனிடம் போய், நள்ளிரவு டாக்டர் ஹஸ்கி குரலில் சொன்ன ‘அந்தக் குதிரைப் படம் போட்ட மருந்து’ எனக் கேட்டு வாங்குவது இன்னும் அதிகம் நடக்கும் ஒன்று. பல மருந்துக் கடைகளின் லாபக் கணக்கைத் தீர்மானிப்பதே இந்த வணிகம்தானாம். குறை ரத்த அழுத்தம் இருந்தாலோ, இதய தசைத் தளர்வு இருந்தாலோ, சரியான பரிந்துரைச்சீட்டு இல்லாமல் வாங்கப்படும் இந்த வேதி மருந்துகள் விபரீத விளைவைத் தரலாம். ஏதேனும் ஒரு துறை சார்ந்து பயின்று, அறத்துடன் பணியாற்றும் மருத்துவரை அணுகி, உரிய மருந்துகளைப் பெறுவது மட்டுமே சரியான வழி. சுய பரிந்துரை வேண்டாம் பூனைக்காலி விதை இச்சிக்கலில் சித்த மருத்துவம் காட்டும் மிக எளிய மருத்துவப் பயறு. ‘வெல்வெட் பீன்ஸ்’ (Velvet beans) என ஆப்பிரிக்கர்கள் அடிக்கடி உணவில் ருசிக்கும் இந்தப் பயறை, சித்த மருத்துவம் இனிப்பு நோயில் வரும் விரைப்புத்தன்மைக் குறைபாட்டுக்குப் பயன்படுத்துகிறது. சாலாமிசிரி வேர், நெருஞ்சி முள், நீர்முள்ளி விதை, குறுந்தொட்டி வேர், களிப்பாக்கு, மராட்டி மொக்கு, சீமை அமுக்கரா கிழங்கு வேர் என இதற்குப் பயன்படும் மூலிகைகள் ஏராளம். எதை, யாருக்கு, எந்த அளவில், எப்படிச் சீராக்கிக் கொடுக்க வேண்டும் என்பதை சித்த மருத்துவர் அறிவர். அங்கு செல்லாமல், ஆன்லைனிலோ இருட்டில் உலாவும் கடையிலோ வாங்கி ஏமாறாமல், குடும்ப மருத்துவர் உதவியுடன் முறைப்படி பெறலாம். ஆரோக்கியமான தாம்பத்திய உறவு, நல வாழ்வின் அடித்தளம். அதைச் சிதைவுறாமல் வைத்திருப்பதற்கு இனிப்பைக் கட்டுப்பாட்டில் வைப்பது மிக முக்கியம். மருந்துகளைவிட நடைப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகாசனங்கள், முறையான உணவுக் கட்டுப்பாடு போன்றவை இந்தச் சிக்கலில் பயனளிப்பதைப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. முதுமையிலும் இனிமையாய்க் காதல் செய்ய, இனிப்பு நோயை வெல்வது மிக மிக அவசியம். (தொடரும்) கட்டுரையாளர், சித்த மருத்துவர் தொடர்புக்கு: herbsiddha@gmail.com

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பைட்டு பைட்டாகக் குறையும் ஞாபகம்!

பைட்டு பைட்டாகக் குறையும் ஞாபகம்! டாக்டர் ஆ. காட்சன் ஸ்மார்ட்போன்களால் ஏற்படும் ஞாபக மறதிக்கு ‘டிஜிட்டல் டிமென்ஷியா’ என்று பெயரிட்டுள்ளார் ஜெர்மானிய மனநல மருத்துவர் மான்பிரட் ஸ்பிட்சர் ஸ்மார்ட்போன்களைச் சார்ந்திருக்கும் குழந்தைகளின் மூளையின் முன்பகுதி வளர்ச்சி பாதிக்கப்படும் வாசிப்பு, மனனம் செய்தல் போன்ற மூளை சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும் சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர்கள் சிலரிடம், அவர்களது செல்போன் எண்ணைத் தவிர எத்தனை பேரின் எண்களை எதையும் பார்க்காமல் மனப்பாடமாகக் கூறமுடியும் என்று கேட்டேன். ஆச்சரியம் என்னவென்றால், நான்கில் மூன்று பகுதியினரால் சராசரியாக ஐந்து செல்போன் எண்களுக்கு மேல் சொல்ல முடியவில்லை, அவர்களது பெற்றோர்களின் எண்கள் உட்பட! டிஜிட்டல் காலத்துக்கு முன்பு நாம் சிலரைப் பற்றி ‘விரல் நுனியில் தகவல்களை வைத்திருப்பார்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் இப்போது விரல் நுனியைக்கொண்டு தொடுதிரையைத் தொடாமல் பலரால் பல தகவல்களை நினைவுகூர முடிவதில்லை. வாங்க வேண்டிய மளிகைப் பொருட்கள், நெருக்கமானவர்களின் பிறந்த நாட்கள், இரண்டும் இரண்டும் நான்கு என்பது போன்ற சிறிய கணக்குகள், நம் வாழ்க்கையின் இனிய தருணங்கள் போன்ற பலவற்றை ‘வாட்ஸ் ஆப்’, மொபைல் கேமரா, செல்போன் கால்குலேட்டர் போன்ற டிஜிட்டல் சாதனங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் இன்று பெரும்பாலானவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது. குறையும் நினைவாற்றல் இப்படி நம் மூளை கொண்டிருந்த ஞாபகசக்தி, கவனம் கொள்ளல், உணர்வுபூர்வமான நினைவுகள் போன்ற பெரும்பாலான வேலைகளுக்கு இன்று நாம் ஸ்மார்ட்போன்களையே சார்ந்திருக்கிறோம். இதைத்தான் ஜெர்மானிய மனநல மருத்துவரான மான்பிரட் ஸ்பிட்சர், ‘வயதானவர்களுக்கு மூளைநரம்பு தேய்மானத்தால் ஏற்படும் டிமென்ஷியா (Dementia) என்ற ஞாபக மறதி நோய்க்கு ஒப்பாக, அதிக அளவில் ஸ்மார்ட்போன்கள், இணையதளங்களைப் பயன்படுத்தும் இளம் வயதினர் கவனக்குறைவு, எளிதில் உணர்ச்சிவசப்படுதல், ஞாபகசக்திக் குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது’ என தனது ஆய்வுக்கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கு அவர் ‘டிஜிட்டல் டிமென்ஷியா’ (Digital Dementia) என்று பெயரிட்டிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் குறிப்பிட்டிருக்கும் ஆபத்து ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. இணையதளம், ஸ்மார்ட்போன்களைச் சார்ந்துள்ளதால், விவரங்களை மனப்பாடம் செய்வதைவிட, கூகுள் போன்றவற்றில் தேடித் தெரிந்துகொள்ளவே நாம் விரும்புகிறோம். எது எளிதானதோ அதையே நம் மனமும் விரும்புவதில், ஆச்சரியம் இல்லை. இதனால் மூளை நரம்புகளின் தேடிப் பார்க்க உதவும் திறன் மேம்படும். ஆனால் நினைவாற்றலில் வைத்துக்கொள்ளும் திறன் குறைய வாய்ப்புள்ளது. வகுப்பில் சொல்லிக்கொடுக்கப்படும் ஒரு பாடத்தை ஒரு மாணவனால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால், அவனுக்கு ஞாபக மறதி என்று சொல்லிவிட முடியாது. அவன் கவனம் இல்லாமல் இருந்தால் அந்தப் பாடம் நினைவாற்றலை அடையக்கூட முடியாது. அன்றாட வேலைகள், கல்வித் தேவைகளுக்காக ஸ்மார்ட்போன்களை அதிகம் சார்ந்திருப்பதால் கவனக்குறைவு ஏற்பட்டு, கருத்துகளை ஞாபகத்தில் பதியவைக்கும் திறன் பாதிக்கப்படும். யாரேனும் ஒருவர் ஒரு தகவலைக் கேட்டால், ‘இருங்கள் தேடிப் பார்த்துச் சொல்கிறேன்’ என்று நம் கைகள் தானாகவே கூகுளைப் புரட்டிப் பார்ப்பது நமது நினைவாற்றலில் இருந்து பதிவுகளை மீட்டெடுக்கும் திறனைப் பாதிக்கிறது. இளையோருக்கான பிரச்சினை இதில் அதிக ஆபத்தைச் சந்திப்பது குழந்தைகள்தான். கவனம், தகவல்களைப் பதிவேற்றம் செய்தல், மீட்டெடுத்தல் போன்றவற்றில் மூளைக்கு வேலை கொடுப்பதைப் பொறுத்தே குழந்தைகளின் மூளையின் உயர் அறிவாற்றல் (Cognition) வளர்ச்சி சீராக இருக்கும். அதிலும் சமூகப் பழக்கவழக்கங்கள், துரிதமாகச் செயல்பட உதவும் நினைவாற்றல் ஆகியவை வளரக் காரணமான ‘ஃபிராண்டல்’ பகுதி என்ற மூளையின் முன்பகுதியின் வளர்ச்சி மிக முக்கியமானது. ஸ்மார்ட்போன்களைச் சார்ந்திருப்பது குழந்தைகளின் இந்த வளர்ச்சியைப் பாதிக்கும். இந்தப் பருவத்தில் அடையவேண்டிய அறிவாற்றல் வளர்ச்சியை, காலம் கடந்தபின் எவ்வளவு முயற்சித்தாலும் மீட்டெடுப்பது கடினம். ஸ்மார்ட்போனைச் சார்ந்து வளர்வதால் ஏற்படும் ‘டிஜிட்டல் டிமென்ஷியா’ என்பது முழுக்க முழுக்க இளவயதினரின் பிரச்சினையாகவே மாறும் சூழல் வெகு தூரத்தில் இல்லை. வருங்காலத் தலைமுறையினர் எல்லா விஷயங்களையும் தெரிந்தவர்கள்போல் தோன்றினாலும், மின்னணுக் கருவிகள் இல்லாவிட்டால் எதுவும் தெரியாதவர்களாகவே தோன்றும் நிலை உருவாகும். தென் கொரியா, சீனா போன்ற நாடுகள் ஸ்மார்ட்போன்கள், இணையதளப் பயன்பாட்டால் வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் தாக்கங்களை ஆராய்ந்தது மட்டுமல்லாமல், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தடுப்பு நடவடிக்கைகளை பள்ளிப் பருவத்திலிருந்தே எடுக்க ஆரம்பித்து விட்டன. ஆனால், இந்தியா இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. பாரம்பரியம் பாதுகாக்கும்! மேற்கத்திய உணவுப் பழக்கங்களால் ஏற்பட்ட உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள எப்படி பாரம்பரிய உணவு வகைகளுக்கு மாறி வருகிறோமோ, அதுபோல மின்னணுக் கருவிகளைச் சார்ந்து வாழ்வதால் மூளையில் ஏற்படும் மாற்றங்களில் இருந்து நம்மையும் நம் தலைமுறையினரையும் காப்பாற்றிக்கொள்வதற்குப் பாராம்பரியமாக நாம் கைகொண்ட வாசிப்பு, மனனம் செய்தல், நினைவுபடுத்திக்கொள்ளுதல் போன்ற மூளை சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிப்பது அவசியம். ஸ்மார்ட்போன், இணையதளத்தை முற்றிலும் சார்ந்திருப்பதை மாற்றிக்கொள்ளாதபட்சத்தில், ‘ஒருநாள் ஸ்மார்ட்போன் இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழ முடியாது’ என்ற அளவுக்கு ‘ஸ்மார்ட்போன் அற்ற மாற்றுத் திறனாளி’களாக நாம் மாறிவிடக்கூடும். மொபைல் ‘மெமரி’யைப் பற்றி மட்டுமல்ல… நமது ‘மெமரி’ பற்றியும் கொஞ்சம் கவலைப்படுவோம்! கட்டுரையாளர், மனநலமருத்துவர் தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வீட்டு கடன் பெற்றவர்களுக்கு வரிச் சலுகைகள்

வீட்டு கடன் பெற்றவர்களுக்கு வரிச் சலுகைகள் சொந்தமாக வீடு கட்டிய அல்லது அடுக்குமாடி வீடு வாங்கிய நடுத்தர மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, வீட்டுக்கடன் பெற்ற மாதாந்திர சம்பளதாரர்கள் வீட்டு கடன் திட்டத்தில் திரும்ப செலுத்துக்கூடிய வட்டிக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் ஆலோசனைகளை இங்கே காணலாம். வீட்டு வாடகை அலவன்ஸ் (எச்.ஆர்.ஏ) பெற விரும்புபவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கான வாடகை ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கவேண்டும். வங்கி கடன் பெற்று கட்டிய வீட்டிலேயே குடியிருப்பவர்களுக்கு எச்.ஆர்.ஏ மூலம் சலுகைகள் பெற இயலாது. ஆனால், அவர்கள் கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை திரும்ப செலுத்துவதன் மூலம் வரிச்சலுகைகள் பெறலாம். வேறு ஊரில் குடியிருப்பவர்கள் வங்கி கடன் பெற்று சொந்த ஊரில் வீடு வாங்கியவர்கள் அல்லது கட்டியவர்கள், வேறொரு ஊரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில் சலுகைகள் உண்டு. அவருக்கு வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கான வரிச்சலுகையுடன், வீட்டு வாடகைக்கான வரிச்சலுகையும் கிடைக்கும். குடியிருக்கும் ஊரில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு வங்கி கடன் பெற்று வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில், எச்.ஆர்.ஏ மற்றும் வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றில் வரிச்சலுகை பெறலாம். வங்கி கடன் பெற்று கட்டப்படும் வீட்டின் கட்டுமான பணிகள் முடிவடையாத நிலையில் பணிகள் முடியும் வரையில் கடனுக்கான அசலுக்கு வரிச்சலுகை பெற இயலும். வீட்டின் கட்டுமானம் முடிவடைந்து, பல்வேறு காரணங்களால் அதில் குடியேற முடியாத சூழ்நிலையில் குடியிருக்கும் வாடகை வீட்டுக்கு மேற்கண்ட இரண்டு வகை வரிச்சலுகைகளும் கிடைக்கும். குறிப்பாக, கடன் பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வீட்டுக்கே வட்டிக்கான வரிச் சலுகை கிடைக்கும். 2016-17 ஆண்டில் வீட்டு கடன் வழங்கப்பட்ட சமயத்தில் கடன் பெற்றவருக்கு சொந்தமாக வேறு வீடு இல்லாத நிலையில், கடன் தொகையாக ரூ.35 லட்சம் என்ற அளவுக்குள் பெற்று, கட்டிய வீட்டின் சந்தை மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு உட்பட்டு இருக்கும் நிலையில் அந்த கடனுக்கு பிரிவு 80 EE-J¡-ð® ரூ.50,000 வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. இரண்டாவது வீட்டுக்கான கடன் பெற்றவர்களுக்கு வரிச்சலுகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மட்டும் சலுகை பெற முடியும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மனிதநேயம் மலர மன மாற்றம் தேவை

மனிதநேயம் மலர மன மாற்றம் தேவை ச.சேட்டு மதார்சா, பட்டதாரி ஆசிரியர் இன்றைய யுகம் அறிவியல் யுகம். உட்கார்ந்த இடத்தில் உலகையே உள்ளங்கையில் வைத்துப் பார்க்கலாம். காலம் சுருங்கிவிட்டது. காலம் சுருங்கச் சுருங்க மனித மனங்களும் இன்று சுருங்கிக் கொண்டு இருக்கின்றன. பிழை பொறுத்தல், விட்டுக் கொடுத்தல், பிறர் துயரில் பங்கெடுத்தல், நேர்மை போற்றல், பொது நலம் பேணுதல், இல்லற மாண்பு, குடும்ப நலம் பேணுதல், நற்பழக்க வழக்கம், மூத்தோரை மதித்தல், ஆலோசனை கேட்டல் போன்ற பண்புகள் மனிதர்களிடம் இருந்து இன்று எங்கே போயின? எல்லோரிடமும் இருந்த இப்பண்புகள் கானல் நீர் போல மறைந்து வருவது வேதனைக்குரியதாகும். மனித நேயத்தை நம்மிடம் தேடாமல், யாரோ ஒருவரின் மனிதநேயச் செயலைத் தொலைக் காட்சியில் கண்டு மெய்சிலிர்த்துக் கொண்டு இருக்கின்றோம். இது தான் இன்றைய நிலை. குழந்தை பிறக்கும் போது வெற்று மனமாய் பிறக்கின்றது. இதற்கு நல்லதும் தெரியாது. கெட்டதும் தெரியாது. புறச்சூழல் தான் குழந்தை மனதுக்கு கற்பிக்கின்றது. தாய், தந்தை, உறவினர்கள், ஆசிரியர்கள், தோழர்கள் போன்றோரால்தான் நற்பண்புகளும், தீய பண்புகளும் குழந்தைகளின் மனதில் விதைக்கப்படுகின்றன. கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் கற்பிக்கப்பட்ட ஒழுக்கக் கட்டுப்பாடுகள் தனிக்குடும்பமாகப் பிரிந்ததால் தளர்ந்தன. கட்டுப்பாடுகள் தளர்ந்ததால் குழந்தைகள் மனங்கள் மாற்றங்களின்பாற் செல்லலாயிற்று. நீதி நூல்கள் படிப்பதும், நீதிக் கதைகள் சொல்வதும், பழமொழிகள் மூலம் ஒழுக்க நெறி பகர்தலும், இறைபக்தியில் திளைத்தலும் அருகிவிட்டது. அலைபேசி, இணையம், திரைப்படங்கள் ஆகியவற்றின் பயன்பாடு பெருகிவிட்டது. குழந்தைகள் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தட்டுமே! என்று ஆரம்பத்தில் விளையாட்டுக்காகக் கொடுக்கப்பட்ட அலைபேசி தான் பெரும்வினையாய்ப் போய் குழந்தை மனத்தைக் கெடுக்கின்றது. திரைப்படங்கள் சில கல்விக் கூடங்களைக் காமெடிக் கூடங்களாகவும், காதல் கூடங்களாகவும், ஒழுக்கக்கேடான செய்திகளையும் காட்டி, குழந்தைகளின் மனங்களில் தீயமாற்றத்தினை ஏற்படுத்திவிட்டன. மனஅமிழ்தத்தில் நஞ்சு கலந்துவிட்டது. ஒழுக்கம் உயர்வு தரும் என்பது போய், ஒழுக்கமின்மையே உயர்வு தரும் என்று எண்ணக் கூடிய அளவில் மனங்கள் மாறிவிட்டன. கல்வி கற்க வேண்டிய வயதில், புகைப்பதும், மது அருந்துவதும், போதைக்கு அடிமையாவதும், ஆபாசப் படங்களைப் பார்ப்பதும், கூடாப் பழக்க வழக்கங்களில் ஈடுபடுவதும் இன்று பல்கிப்பெருகிவிட்டது. இது வேதனைக்குரியது. இதற்கு காரணம் யார்? குடும்பச் சூழல், நண்பர்கள் குழாம், சில திரைப்படங்கள் ஆகியவை தான். சமூகக் கட்டுப்பாடுகள் தளர்ந்ததே, மனங்கள் கட்டவிழ்ந்துவிடக் காரணம். தீயப் பண்புகள் மனங்களில் பெருகியதால், சமூகக் குற்றங்கள் பெருகிய வண்ணமே உள்ளன. வீண்வம்புக்குச் செல்வதும், சண்டையிடுவதும், தன்னைக் கதாநாயகனாக கற்பனை செய்வதும் இன்றைய சில இளைய மனங்களில் குடிபுகுந்தவையாகும். பொறுமை என்பது இல்லாமல் சிறிய வாய்த்தகராறு, கைகலப்பாக மாறி, கொலையில் முடிந்துபோவதை காணமுடிகிறது. இவற்றுக்கு காரணம் மனம் குப்பைக் கூளமாக மாறிப்போனதுதான். இளம்வயதில் இருந்தே நீதிக் கதைகளையும், நீதி போதனைகளையும், பக்தி நெறியையும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இது பெற்றோரிடம் இருந்து தான் தொடங்க வேண்டும். பணம் சம்பாதித்து குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே பெற்றோர்கள் மேற்குறித்தவற்றைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்காமல் தங்கள் வேலையிலேயே பெரிதும் ஈடுபடுகிறார்கள். பள்ளியில் நீதிபோதனைகளைக் கற்றுக்கொள்ளட்டும் என்று பெற்றோர் எண்ணுவது தவறு. பெற்றோரே முதல் ஆசிரியர் என்பதை அவ்வப்போது உணரவேண்டும். இறை வழிபாட்டுத் தலங்களுக்குக் குழந்தைகளை அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும். வாரம் ஒருமுறை உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அலைபேசியில் விளையாட அனுமதிக்காமல், வேறு ஏதேனும் ஒரு விளையாட்டில் நாட்டத்தினை ஏற்படுத்த வேண்டும். தினமும் தியானத்தினை நாமும் மேற்கொண்டு நம் குழந்தைகளையும் மேற்கொள்ளச் செய்ய வேண்டும். தீய நட்பு, கூடா நட்பை தவிர்க்க ஆலோசனை கூறுதல், தேவைப்படும் இடங்களில் கண்டித்தலும் இடம் பெறல் வேண்டும். இவை தான் மனம் தடம் புரளாமல் செய்ய வழிவகுக்கும். கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்ற போது அங்கே குற்றமும் ஒழுக்கமின்மையும் பெருகும் என்பதில் ஐயமில்லை. கண்டிப்பான பெற்றோர்கள், கண்டிப்பான ஆசிரியர்கள் இருந்த அந்தக் காலத்தில் குற்றங்கள் பெருகவில்லை, ஒழுக்கக் கேடுகளும் பெருகவில்லை. இன்றைக்கு கண்டிக்கும் மனமும், நேரமும் பெற்றோருக்கு இல்லை. கல்வி நிலையங்களும் கண்டிப்புகளைத் தளர்த்திக் கொண்டதன் விளைவு ஒழுக்கமின்மை பெருகக் காரணமாயிற்று என்று தான் சொல்ல வேண்டும். அன்பும் கண்டிப்பும் நிறைந்த ஆசிரியர்கள் தான் பெரும் தலைவர்களை உருவாக்கி இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். கண்டித்தல் என்பது துன்புறுத்தல் அன்று. தவறுகளைத்திருத்த மனதிற்கு வாய்ப்பளித்தல் ஆகும். கண்டித்தல் பெற்றோரிடம் இருந்து தான் குழந்தைகளின் மனதைப் பக்குவப்படுத்த முடியும். நம் மகன் நம் நாட்டின் தலைவன் என்ற எண்ணம் பெற்றோரிடம் உருவாக வேண்டும். இன்றைய அடிப்படைத் தேவை மனமாற்றமே! என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். பழையன புகுதலும், புதியன கழிதலும் என்ற நிலைக்கு நம் மனம் மாறி வந்தால் எதிர்கால மனங்கள் நன்மனங்கள் ஆகும்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

காலத்தின் கடைசிக் கருணை காமராஜர்

காலத்தின் கடைசிக் கருணை காமராஜர் தமிழருவிமணியன், தலைவர், காந்திய மக்கள் இயக்கம் உயரிய அறம் சார்ந்த காந்திய அரசியலில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட கடைசி அரசியல்வாதி காமராஜர். அதனால் தான், “காலத்தின் கடைசிக் கருணை காமராஜர்” என்றார் கண்ணதாசன். காமராஜர் வாழ்ந்த விதத்தை, இப்பொழுது நினைத்தால் நம்ப முடியாத ஓர் அதிசயக் கனவு போல் கண் சிமிட்டுகிறது. காந்தியத்தைக் காதலித்து, காந்தியத்தையே கைப்பிடித்து, காந்தியத்திற்காகவே வாழ்ந்து, காந்தி பிறந்த நாளில் கண்மூடிய ‘அத்வைதி’ காமராஜர். காமராஜரை நம் மக்கள் ஏன் வணக்கத்திற்குரிய தலைவராக வழிபடுகிறார்கள்? அவருடைய வரலாறு படைத்த ஒன்பதாண்டு ஆட்சிச் சாதனைகளுக்காகவா? ஊழலின் நிழல்படாத உயரிய நிர்வாகத்தை அவர் உருவாக்கித் தந்ததற்காகவா? அறியாமை இருட்டில் அழுந்திக் கிடந்த பாமரர்களின் இதயத்தில் கல்வி வெளிச்சத்தைப் பாய்ச்சியதற்காகவா? ஆறுகள் ஓடும் இடங்களில் எல்லாம் அணைகளை எழுப்பி விவசாயத்தை வளர்த்ததற்காகவா? தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை இந்திய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தலைநிமிரச் செய்ததற்காகவா? இவையெல்லாம் அவருடைய தனிப்பெரும் ஆட்சி சாதனைகள்தான். ஆனால் எளிமையும், உண்மையும், நேர்மையும் நிறைந்த அவருடைய தன்னலமற்ற வாழ்க்கைதான் என்றும் வணக்கத்திற்குரியது. காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக 1954-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் பொறுப்பேற்ற பின்பும் சென்னை திருமலைப்பிள்ளை வீதியில் இருந்த வாடகை வீட்டிலேயே தொடர்ந்து வசித்தார். அவருடைய அன்னையார், “நீ இருக்கும் வீட்டில் ஒரு மூலையில் உனக்கு எந்தச் சிரமமும் தராமல் உன் முகத்தைப் பார்த்தபடி எஞ்சிய காலத்தைக் கழித்து விடுகிறேன்” என்று கண்ணீர் ததும்பச் சொன்ன போதும் அவருடைய கோரிக்கையை மறுதலித்துவிட்டவர் காமராஜர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இரா.கிருஷ்ணசாமி நாயுடுவிடம், “தந்தையில்லாப் பிள்ளையாய் என் தாயார் எவ்வளவு சிரமப்பட்டு என்னை வளர்த்தார்கள் என்பதை நானறிவேன். பாசத்தில் அவரை நான் பக்கத்தில் வைத்துக் கொண்டால் அவரைப் பார்க்க அடிக்கடி பத்து பேர் வருவார்கள். அத்தையைப் பார்க்க வந்தேன், ஆத்தாவைப் பார்க்க வந்தேன் என்பார்கள். ஏதாவது ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள, முதல்-அமைச்சர் வீட்டிலிருந்து பேசுகிறேன் என்று அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வார்கள். அதனால்தான், அம்மா ஊரிலேயே இருக்கட்டும் என்கிறேன். அவர்கள் தேவைக்குத்தான் மாதம் ரூ.130 அனுப்பி வைக்கிறேனே” என்று சொன்னவர் காமராஜர். முற்றும் துறந்த ஆதி சங்கரரும், பட்டினத்தாரும் கூடத் துறக்க விரும்பாத உறவு, தாயின் உறவு. அந்தத் தாயின் உறவையும் பொது வாழ்க்கைத் தூய்மைக்காகத் தள்ளி வைத்த அதிசயமான தலைவர் காமராஜர். காமராஜர் தன் அமைச்சரவையில் ஏழு பேரை மட்டும் சேர்த்துக் கொண்டார். தலித்துகளின் தலைவர் இரட்டைமலை சீனிவாசனின் பேரன் பரமேஸ்வரன் என்பவர் அந்த ஏழு அமைச்சர்களில் ஒருவர். சமூக நீதியைச் செயற்படுத்துவதற்காக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காமராஜர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அமைச்சரிடம் அறநிலைத்துறையை அளித்தார். “ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரரை அமைச்சராக்கிவிட்டால் எந்த நாலாஞ் சாதியை உள்ளே விடமாட்டோம்னு சொன்னார்களோ, அதே நாலாஞ் சாதிக்காரருக்குப் பரிவட்டம் கட்டிப் பூரண கும்ப மரியாதையுடன் அவர்கள் பணிவோடு கோவிலுக்குள் அழைத்துப் போவார்கள் என்றுதான் பரமேஸ்வரனை நான் இந்து அறநிலைத்துறைக்கு அமைச்சராக்கினேன்” என்று காமராஜர் வாய்வேதம் பேசாமல் சமூக நீதிக்குச் செயல் வடிவம் தந்த தலைவர். ஒரு நாள் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் காமராஜரைச் சந்தித்த போது, ‘உங்கள் ஆட்சிச் சாதனைகளை என்றும் மக்கள் நினைவில் நிறுத்துவதற்காக ஒரு நியூஸ் ரீல் எடுத்தால் நல்லது’ என்றார். ‘நாம் ரோடு போட்டோம். அதன் மேல்தான் மக்கள் நடக்கிறார்கள். பள்ளிக்கூடம் கட்டினோம். அதில்தான் அவர்களுடைய பிள்ளைகள் படிக்கிறார்கள். அணைகளைக் கட்டினோம். அந்தத் தண்ணீரில்தான் விவசாயம் செய்கிறார்கள். இதில் வேறு, விளம்பரப் படம் எதற்கு வீண் செலவு?” என்று கவிஞரின் கருத்தை மறுத்தார் கர்மவீரர். “மூன்று லட்சம் ரூபாய் இருந்தால் போதுமய்யா! தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க உதவுகிறார் போல் நல்ல செய்திப் படம் எடுத்து விடலாம்” என்று கவிஞர் சொன்னதும், “அடப்பாவி படமெடுக்கும் மூன்று லட்சத்தில் இன்னும் பத்து ஊர்களில் நான் பள்ளிக்கூடம் கட்டுவேன். பிள்ளைகள் படிக்க வழி சொல்லாமல் ‘நியூஸ் ரீல்’ எடுக்கச் சொல்கிறாயா? முதலில் இங்கிருந்து நடையைக் கட்டு” என்று கொதித்தார் அந்தக் கறுப்புக் காந்தி. அப்படி ஒரு தலைவரை இப்பொழுது பார்க்க முடியுமா? விருதுநகரில் சுலோச்சன நாடார் தெருவில் உள்ள சாதாரண வீட்டில் தான் காமராஜரின் தாயும் தங்கையும் வாழ்ந்து வந்தனர். அந்த வீட்டில் குடிநீர்க் குழாய் இல்லை. அடுத்த தெருவில் இருந்த ‘முனிசிபாலிடி’ குழாயில் வரிசையில் நின்று தான் காமராஜரின் தங்கை நாகம்மை தண்ணீர் பிடிப்பது வழக்கம். உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மஜீத் இந்த நிலையை அறிந்து காமராஜர் வீட்டில் குழாய் இணைப்புக்கு வழிசெய்துவிட்டுக் கோட்டைக்குத் திரும்பினார். இதைக் கேள்வியுற்ற காமராஜர் அமைச்சர் மஜீத்தை அழைத்து, “என் வீட்டுக் குழாய் இணைப்புக்கு முறைப்படி நான் முனிசிபாலிடியிடம் விண்ணப்பம் கொடுத்தேனா? அதற்கு 18 ரூபாய் கட்டணம் கட்டினேனா? எப்படி வந்தது குழாய் இணைப்பு? உங்களை நான் நாட்டைப் பார்க்கச் சொன்னேனா, என் வீட்டைப் பார்க்கச் சொன்னேனா? 24 மணி நேரத்திற்குள் அந்தக் குழாய் இணைப்பு துண்டிக்கப்படவேண்டும். பதவியைப் பயன்படுத்தி அவரவர் வீட்டு வேலையைப் பார்த்தால் நாடு உருப்பட்ட மாதிரிதான்” என்று கடும் கோபத்துடன் கண்டித்தார். உடனே குழாய் இணைப்பு அறுபட்டது. மீண்டும் முதல்வரின் தங்கை குடத்துடன் அடுத்த தெருவில் தண்ணீருக்காக வரிசையில் நின்றார். பெருந்தலைவரின் வாழ்க்கை முறை இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய் போய்விட்டது. நாட்டு விடுதலைப் போரில் ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் சிறைவாசம்; பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர்; ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர்; நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர்; ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வர்; ஐந்து ஆண்டுகள் அகில இந்திய காங்கிரசின் தலைவர்; இரண்டு முறை இந்தியப் பிரதமர்களை உருவாக்கிய ஒரே தமிழர். இத்தனை பெருமைகளுக்குப் பின்பும் தனிவாழ்வில் அந்த பெருந்தலைவனுக்கு மிஞ்சியது 60 ரூபாய்; பத்து கதர் வேட்டி சட்டை. காமராஜர் கண் மூடினார். அவர் வாழ்ந்த வீட்டை அதன் உரிமையாளர் எடுத்துக்கொண்டார். அவர் பயன்படுத்திய காரை கட்சி எடுத்துக்கொண்டது. அவரது உடலை நெருப்பு எடுத்துக்கொண்டது. அவரது பெயரை வரலாறு எடுத்துக் கொண்டது. என்றும் இந்த மண்ணில் நம் பெருந்தலைவர் வாழ்ந்த காலம்தான் தமிழர் வாழ்வில் ஒரு பொற்காலம். நாளை (ஜூலை 15-ந் தேதி) காமராஜர் பிறந்த தினம்.

கல்விச்சோலை - kalvisolai Articles
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts