Friday 29 June 2018

ஐபோன்: வரமா? சாபமா?

ஐபோன்: வரமா? சாபமா? சேவியர் வரலாற்றில் பல விஷயங்கள் நம்மை வியக்க வைக்கும். சில விஷயங்கள் தான் வரலாற்றையே வியக்க வைக்கும். அப்படி தொழில்நுட்ப வரலாற்றை வியக்க வைத்த ஒரு விஷயம் தான் ஐபோன்! மொபைல் புரட்சியை மிக எளிதாக ஐபோனுக்கு முன், ஐபோனுக்குப் பின் என இரண்டாகப் பிரித்து விடலாம். இன்றைய ஸ்மார்ட் போன்களில் காணப்படும் அம்சங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் ஐபோனின் பாதிப்பு என்பதை மறுக்க முடியாது. ‘இதோ ஐபோன்’ என ஸ்டீவ் ஜாப்ஸ் 2007-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி அறிவித்தபோது, அந்த போன் இப்படி ஒரு டிஜிட்டல் சுனாமியை உருவாக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. 3.5 இன்ச் திரையுடன், ‘இது தொடக்கம் தான்’ எனும் பஞ்ச் டயலாக்குடன் அது அறிமுகமானது. இன்றைக்கு சுமார் 130 கோடிக்கு மேல் ஐபோன்களை விற்று உலகிலேயே மொபைல் நிறுவன சக்கரவர்த்தியாய் அமர்ந்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இன்றைய தேதியில், நிறுவனத்தின் வருமானத்தில் பாதிக்கு மேல் ஐபோன் விற்பனையினால் தான் கிடைக்கிறது. 2007-ம் ஆண்டு ஜனவரி 9-ந்தேதி ஆப்பிள் ஐபோன் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது குறித்த தகவல்கள் மக்களை தூங்க விடாமல் செய்தன. ஜூன் 29-ந்தேதி ஐபோன் கடைகளுக்கு வந்தபோது மக்கள் சினிமா டிக்கெட்டுக்கு காத்திருப்பது போல காத்திருந்து வாங்கினார்கள். அந்த வார இறுதியில் மட்டும் விற்ற ஐபோன்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து எழுபதாயிரம்! சில மாதங்களிலேயே அது பத்து லட்சமாக எகிறியது. அடுத்த ஆண்டு 3ஜி சேவை அறிமுகமானது, ஐபோனின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு அது சட்டென கொண்டு சென்றது. காரணம் ‘ஆப் ஸ்டோர்’ அப்போது தான் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகெங்கும் உள்ள பல லட்சம் கணினி ‘ஆப் டெவலப்பர்’களுக்கு புத்துணர்ச்சி கொடுத்த நிகழ்வு அது. அது தான் மொபைலாக இருந்த ஐபோனை ஒரு குட்டி கணினியாக மாற்றியது. அதன் பின் ஆண்டுதோறும் ஐபோன் ஒரு புதிய வடிவத்தை வெளியிடுவதும், மக்கள் கால்கடுக்கக் காத்திருந்து வாங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ஆரம்பம் முதலே கேமராவில் பார்வையை செலுத்தி வருகின்ற ‘ஐபோன் வெர்ஷன் 4’ வந்த போது செல்பி கேமராவையும், எச்.டி. வீடியோ ரெக்கார்டிங்கையும் அறிமுகப்படுத்தியது. உலகெங்கும் செல்பி ஜுரம் பற்றிக்கொள்ள பிள்ளையார் சுழி போட்ட நிகழ்வு அது. கேமராவின் தரத்தைப் பொறுத்தவரை ஐபோன் தான் இப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. ஐடியூன்ஸ், சிரிய, பெரிய திரை, 3டி டச் என புதுமைகளை புகுத்துவதிலும் ஐபோன் தான் முதலிடத்தில் தொடர்கிறது. ஐபோன் வெளியாகிய முதல் ஐந்தாறு வருடங்களுக்கு ஆப்பிள் ஐபோனுக்கு போட்டியே இல்லை. அதன் பின்பு தான் சந்தையில் குறைந்த விலையில் ஐபோனுக்குப் போட்டியாய் போன்கள் களமிறங்கின. இருந்தாலும் இன்றும் ஐபோனின் வசீகரத்தைக் குறைக்க முடியவில்லை. கடந்த ஆண்டு பத்தாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய அந்த நிறுவனம் மூன்று ஐபோன்களை வெளியிட்டது. ‘ஐபோன் 8’, ‘8 எஸ்’ மற்றும் ‘ஐபோன் 10’. அதில் ‘ஐபோன் 10’ முற்றிலும் புதிய வடிவத்தில், புதிய அம்சங்களுடன் அறிமுகமானது. ஐபோன் வரலாற்றின் அடுத்த மிகப்பெரிய மாறுதல் இது என கருதப்படுகிறது. இதன் விலை ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் என்ற போதிலும், இதுவரை சுமார் மூன்று கோடி ‘ஐபோன் 10’ வகை போன்கள் விற்பனையாகியிருக்கின்றன. விலை அதிகமானாலும் பரவாயில்லை என உலகம் போட்டி போட்டுக்கொண்டு ஐபோனை வாங்க முக்கியமான இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று பாதுகாப்பு, இன்னொன்று தரம். அந்த இரண்டு விஷயங்களிலும் எப்போதும் சமரசம் செய்து கொள்ளாத நிலை தான் ஆப்பிளின் அசுர பலத்தின் காரணம். ஒரு புறம் இப்படி இருந்தாலும், மக்கள் ஐபோனுக்கு அடிமையாகி விடுகிறார்கள் எனும் எதிர்ப்பும் ஒரு புறம் எழுகிறது. அதை சரிசெய்ய ஆப்பிள் நிறுவனமே சில நாட்களுக்கு முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இனிமேல் நாம் எவ்வளவு நேரம் ஐபோனைப் பயன்படுத்துகிறோம், எந்த ‘ஆப்’ எவ்வளவு நேரத்தை எடுத்திருக்கிறது போன்ற தகவல்களையெல்லாம் திரையிலேயே அது காட்டப் போகிறது. நம்முடைய போன் பயன்பாட்டை, நாம் குறைக்க வேண்டுமென, போனே நம்மிடம் கூறுவது புதுமை தான் இல்லையா? வசீகரிக்கும் அனைத்து தொழில்நுட்பங்களுக்குப்பின்னும் நிழலாய் சில தீமைகள் ஒளிந்திருக்கும். ஐபோனும் அதற்கு விதிவிலக்கல்ல. குழந்தைகள்அதிக நேரம் ஐபோனைப் பயன்படுத்துவதால்அவர்களுக்கு மன அழுத்தம், கவனச் சிதைவு, படிப்பில் மந்தநிலை, சுறுசுறுப்பின்மை போன்றவை நேர்கின்றன என ஆப்பிள் நிறுவன முதலீட்டாளர்களே கவலை தெரிவித்திருந்தனர். தொடு திரையோடு அதிக நேரம் செலவிடும்குழந்தைகள் பென்சில் பிடித்து எழுதவே தடுமாறுவார்கள் என சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி அச்சுறுத்தியது. ஆன்லைன் விளையாட்டுக்குஅடிமையாகி தினமும் ஏராளமான குழந்தைகள்மருத்துவ மனைகளை நோக்கி படையெடுக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவோருக்கு தற்கொலைஎண்ணங்களும் அதிகம் எழுவதாக அமெரிக்க பேராசிரியர் ஜீன் ட்வெங் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது. குழந்தைகளை மட்டுமல்லாமல் ஸ்மார்ட் போனைஅதிகமாய் பயன்படுத்தும் பெரியவர்களையும் அதுபாதிக்கிறது. தூங்கும் போது மொபைலை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு படுத்தால் கேன்சர், ஆண்மையிழப்பு போன்றவை ஏற்படும் என கலிபோர்னியா நலவாழ்வுத் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது கவனிக்கத் தக்கது. ஸ்மார்ட்போன்களைத் தவிர்க்க முடியாத இந்தகாலகட்டத்தில் என்ன செய்யலாம் பயன்பாட்டு நேரத்தைக் குறையுங்கள். ஒருகுறிப்பிட்ட நேரம் மட்டும் பாருங்கள்.இரவில் படுக்கையறையில் போனை கொண்டுசெல்லாதீர்கள். தொலைவில் இருக்கும் அறையில்போனை வையுங்கள்.மாலை முதல் காலை வரை டேட்டாவை அணைத்து வையுங்கள். முடிந்தால் பெரும் பாலான நேரங்களில்அணைத்தே வையுங்கள். குழந்தைகளின் செயல் மாற்றத்தை கண்காணியுங்கள்.அடிக்கடி போனை எடுத்து சோதிப்பதை நிறுத்துங்கள். சமூக வலைத்தளங்கள் தேவையற்ற சேட்செயலிகளை விலக்குங்கள்.பயன்படுத்தாத அத்தனை ஆப்ஸ் களையும் அழியுங்கள். நேரம் பாக்க, அலாரம் செட் பண்ண என எல்லாத்துக்கும் மொபைலை பயன்படுத்தாதீர்கள். டிஜிட்டல் சாரா பொழுது போக்கில் கவனம் செலுத்துங்கள். நேரடியாகப் பேசி மக்களுடன் உறவை வளர்த்துக்கொள்ளுங்கள்.இன்று (ஜூன் 29-ந்தேதி ஐ போன் வெளியான தினம்)

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts