Saturday 30 June 2018

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

நடப்பதெல்லாம் நன்மைக்கே! எல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும் என்று நம்புங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்களை சுற்றியிருப்பவர்களையும் நிம்மதியாக வைத்திருக்கும். நாம் எப்போதும் நினைவில் பதித்துக்கொள்ள வேண்டிய வாசகம்- ‘இதுவும் கடந்துபோகும்’. மகிழ்ச்சியோ துக்கமோ நம்மை நெருங்கும்போது அதற்கு உடனுக்குடன் எதிர்வினையாற்றுவதைவிட அதை உள்வாங்கி, கடக்க முயற்சிக்க வேண்டும். நாம் ஒரு பொருளையோ, விஷயத்தையோ இழக்கும்போது, அதைவிடச் சிறப்பான ஒன்றை நாம் பெறப் போகிறோம் என உணர வேண்டும். பொதுவாக வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. அதாவது, நம்மால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளமுடியாதவற்றை மாற்றிக் காட்டுவது. இவை இரண்டில் எதைத் தேர்ந் தெடுக்கிறோம் என்பது, நமது சூழல், நம் உள்ளுணர்வு, அது நம்மில் ஏற்படுத்தும் தாக்கம் அனைத்தையும் பொறுத்து அமைகிறது. இன்றைய தலைமுறை பிள்ளைகள் மிகுந்த அறிவுடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கிரகித்துக் கொள்ளுதல், பல துறைகளிலும் திறமைசாலியாக இருத்தல் என அவர்கள் ஜொலிப்பதில் பெருமையே. ஆனால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலே தவறான வழியில் பாதம் பதிக்க முயலும்போது கண்டித்தால் விரைவில் விரக்தி அடை கிறார்கள், வெறுப்பை உமிழ்கிறார்கள். கல்லூரிக்குள் காலடி வைக்கும்போதே, ஓட்டு போட்டு நாட்டின் தலைமையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மாணவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அப்படியென்றால், அவர்கள் மனமும் மூளையும் ஒரு விஷயத்தை உள்வாங்கி முடிவெடுக்கும் திறன் பெற்றுவிட்டது என்றுதானே அர்த்தம்? அப்படியிருக்க, எல்லாவற்றுக்கும் ஆத்திரப் படுவது, நச்சரிப்பது, கேட்பது கிடைக்காவிட்டால் மோசமான முடிவெடுப்பேன் என்று அச்சுறுத்துவது இவையெல்லாம் சரிதானா? உங்களுக்காக பத்து மாதங்கள் மட்டுமல்ல, தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் தாய், தான் காணாத உலகத்தையும் நீங்கள் காண வேண்டும் என்று தோளில் தூக்கிவைத்து அலைந்தவர் தந்தை. அத்தகைய பெற்றோர் எடுக்கும் முடிவு கண்டிப்பாக உங்கள் நன்மைக்காக மட்டும்தானே இருக்கும்? நம்மைப் பற்றி பெற்றோர் புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்தால், அதற்காக முயற்சிக்க வேண்டியது பிள்ளையின் பொறுப்பு. ஒன்று நடக்காவிட்டால் அதுகுறித்து வருந்திக் கிடப்பதைவிட, அதனால் வேறு நன்மையும் விளைந்திருக்கலாம் என்று உணர வேண்டும். டைட்டானிக் கப்பல் 1912 ஏப்ரல் 10-ம் தேதி தன் பயணத்தை இங்கிலாந்து சவுத் ஹாம்ப்டன் துறை முகத்தில் தொடங்க இருந்தது. ஒருவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அதில் பயணிக்க எண்ணினார். அதற்காக தன் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தைக் கட்டி 4 டிக்கெட்டுகள் வாங்கினார். அந்நிலையில் திடீரென்று அவருடைய மகனை நாய் கடித்துவிட்டது. மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு மருத்துவர், அவனுக்கு நோய்த் தொற்று ஏற் படக்கூடாது, எனவே கப்பலில் பயணிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். இது இவர்களுக்கு பேரிடியாய் அமைந்தது. அப்போது அவர் மனைவி, நீங்கள் இன்னொரு மகனுடன் டைட்டானிக் கப்பலில் சென்று வாருங்கள், நான் பிள்ளையைப் பார்த்துக்கொள்கிறேன் என்றார். ஆனால் கணவரோ மிகுந்த வருத்தத்துக்கு மத்தியில் மறுத்துவிட்டார். பிறகு நடந்ததை நாம் அறிவோம். டைட்டானிக் கப்பல் மூழ்கியதை அறிந்து உலகமே துக்கப்பட்டபோது, நாம் தப்பிவிட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டது மேற்கண்ட குடும்பம். ஆக, இன்றைய சந்தோஷம் அல்லது துக்கத்திலேயே நாம் மூழ்கிவிடக் கூடாது. எதுவும் எப்படியும் மாறலாம். தோல்வியை மனதுக்கும் வெற்றியை மூளைக்கும் கொண்டு செல்லாத வரை வாழ்க்கை சீராக இருக்கும். நம் ஆழ்மனதின் எண்ணப்பதிவுகளே கனவுகளில் வெளிப்படுகின்றன என்கிறார்கள். அதை எப்படி கட்டுப்படுத்த முயலக்கூடாதோ, அதேபோல நம் வாழ்க்கைச் சூழலில் எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்த முயலக் கூடாது. அவற்றைக் கையாளும் விதத்தையே கற்றுக்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த, நடக்கப் போவதாக நாம் நினைக்கிற மோசமான விஷயங்களையே எண்ணிக்கொண்டிருந்தால் நம்மால் நிகழ்கால இனிமைகளை ரசிக்க முடியாது. வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் எல்லாம் நிறைந்ததே. நம் வாழ்வில் கெட்டதைச் சந்திக்காத வரை நம்மால் நல்லதின் அருமையை உணர முடியாது. நம் சமூகம், குடும்பம், உறவு ஆகியவை ஒரு மரம் போன்றவை. மரத்தின் வேர் நமக்குத் தெரிவதில்லை. எவ்வளவு தூரம் வேர் உறுதியாக உள்ளதோ அந்த அளவுதான் மரத்தின் பலம். அதுபோல நம் பெற்றோர்கள், உறவுகள், இறை நம்பிக்கை போன்ற ஆதாரங்கள்தான் நம்மை எந்த சூழ்நிலையிலும் வாழ பழக்கப்படுத்துகின்றன. வேரை நாம் பார்க்க முடியாது. ஆனால் அதன் பணியை, அதனால் நமக்கு கிடைக்கும் பலனை உணரமுடியும். நம் அழகு, அந்தஸ்து, பணம், செல்வாக்கு போன்ற கிளைகள் விரிந்து உலகை அனுபவிக்கத் தூண்டுகின்றன. ஆனால் அதற்காக மனம் போன போக்கில் போய்விட முடியாது. நம் உடலும் மனமும் எந்த அளவு நம் கட்டுப்பாட்டில் உள்ளதோ அந்த அளவே மன, உடல் ஆரோக்கியம் இருக்கும். நம்முடைய நல்ல எண்ணங்களின் மூலமே வாழ்க்கையை விசாலமாக்க முடியும். ஒரு மரத்திலிருந்து கிடைக்கும் பலன்களான பழம், விதை, காய், நிழல் என அனைத்தையும் அனுபவிக்க வேண்டுமென்றால் அதற்கு நம் பங்களிப்பு அவசியம். அதேபோல வாழ்வில் வெற்றிக்கனி களைப் பறிப்பதற்கு நாமும் மூலதனங்களை இட வேண்டும். உழைப்பு, அர்ப்பணிப்பு, பொறுமை போன்றவைதான் அந்த மூலதனங்கள். இவை அனைத்துக்கும் அடிப்படை, நம் எண்ண அமைப்பை சரியாகக் கட்டமைப்பது. பிறரின் வார்த்தைகளால், செயல்களால் நாம் எளிதில் மனஅமைதியையும் மகிழ்ச்சியையும் இழக்கிறோம் என்றால் நம் எண்ணக் கட்டமைப்பு சரியாக இல்லை என்று அர்த்தம். வாழ்க்கை என்பது ஐஸ்கிரீம் மாதிரி. அது உருகும்முன் அனுபவிக்க வேண்டும் என்பது இன்று பல இளைஞர்களின் எண்ணமாக உள்ளது. ஆனால், வாழ்க்கை என்பது ஒரு மெழுகுவர்த்தி மாதிரி. அது உருகும்முன் பிறருக்கு ஒளி கொடுக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். எதையும் தன்னலமற்றுச் செய்யும்போது அங்கு வெற்றிக்கு வாய்ப்பு அதிகம். இதயக் கதவுகளைத் திறந்துவையுங்கள், அதன் வழியே அன்பெனும் தென்றல் நுழைந்து உறவாட விடுங்கள், மனிதநேயம் உங்களை வழி நடத்த அனுமதியுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரியாக அமையும். எல்லாம் நன்மையாகும்! | Download

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts