Tuesday 26 June 2018

கண்ணீரால் கவுரவிக்கப்பட்ட ஆசிரியர்!

கண்ணீரால் கவுரவிக்கப்பட்ட ஆசிரியர்! இரா. நாகராஜன் வகுப்பறையின் தரையில் அமர்ந்து மாணவிகளோடு மத்திய உணவு... அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என எல்லாவற்றிலும், கடந்த சில நாட்களாக ‘பகவான்... பகவான்’ என்ற நான்கு எழுத்து, ஒளி ஒலியாக பவனி வந்துகொண்டிருக்கிறது. யார் இந்த பகவான்? பாடத்தில் பிடிப்பு... ஆசிரியர் மீது பிரியம் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள வெளியகரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களில், ஒருவர்தான் கோவிந்த் பகவான். பள்ளிப்பட்டு அருகே உள்ள பொம்மராஜ்பேட்டை கிராமத்தில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்த இவர், அரசுப் பள்ளியிலும் அரசுக் கல்லூரியிலும் பயின்றவர். வெளியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2014-ம் ஆண்டு ஆங்கில ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அரசுப் பள்ளி மாணவர்களில் பெரும்பாலோருக்கு ஆங்கிலப் பாடம் ஒரு கசப்பு மருந்தாகத்தான் இருந்து வருகிறது. இந்நிலையில், வெளியகரம் அரசுப் பள்ளியில், ஆசிரியர் பகவான் தன்னுடைய கற்பிக்கும் திறனாலும் அரவணைப்பான அணுகுமுறையாலும் ஆங்கிலப் பாடத்தைத் தித்திப்பாக மாற்றித் தந்தார். அதன் விளைவு, கடந்த நான்கு ஆண்டுகளில் வெளியகரம் அரசுப் பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கிலப் பாடத்தில் நூறு சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளனர். இதன் வெளிப்பாடாக, மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்களில் ஒருவரானார், ஆங்கில ஆசிரியர் பகவான். போகாதீங்க சார்... இந்நிலையில், பணி நிரவல் கலந்தாய்வில் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார் பகவான். இதை விரும்பாத வெளியகரம் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி விடுவிப்பு உத்தரவு பெற வெளியகரம் அரசுப் பள்ளிக்கு வந்தார் பகவான். அவர் மீது மாணவ-மாணவிகள் வைத்திருந்த அதீத பாசம் அப்போது கிளர்ந்தெழுந்தது. ‘சார், போகாதீங்க சார், நீங்க எங்களுக்கு வேணும் சார்’ என மாணவ-மாணவிகள் கதறி அழுதனர். பாசப் போராட்டத்தில் சிக்கித் திணறிய பகவான், கண்ணீர் மல்க பள்ளியிலிருந்து விடைபெற்றுச் சென்றார். இந்தப் பாசப் போராட்டக் காட்சிகள் ஊடகங்கள் மூலம் மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டன. அதன் விளைவு, பகவானின் பணியிட மாறுதல் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என்னைச் செதுக்கிய ஆசிரியர் இந்தப் பாசப் போராட்டம் குறித்து, பகவான் என்ன சொல்கிறார்? “எனக்கு ஆரம்பக் கல்வியைக் கற்பித்த ஆசிரியர்களில் ஒருவர் என் 4-ம் வகுப்பு ஆசிரியர் உமாபதி. அவர் மாணவர்களிடம் காட்டிய அன்பும் அவருடைய கற்பித்தல் முறையும் என்னையும் ஒரு ஆசிரியனாக உருமாற்றியது. அதைத் தொடர்ந்து, வெளியகரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அரவிந்த், என் கற்பித்தல் பணிக்கு முன்னுதாரணமாக விளங்கிவருகிறார். நான் மாணவ-மாணவிகளை நண்பராக... அவர்களின் குடும்ப உறுப்பினராக அணுகிவருகிறேன். குறிப்பாக, நன்றாகப் படிக்கும் மாணவனைவிட, சுமாராகப் படிக்கும் மாணவனிடம் உள்ள நல்ல விஷயங்களை, சக மாணவர்களின் கைதட்டல்களால் அங்கீகரித்து வருகிறேன். மாணவர்களிடம் ஒருபோதும் கண்டிப்பு காட்டுவதில்லை. அன்பைத்தான் காட்டி வருகிறேன்” என்கிறார் பகவான். தேவை கற்பனைத் திறன் கற்பித்தல் பணி தோல்வியுறும் போதுதான் கண்டிப்பு தேவைப்படும். மாணவர்களின் கேள்விகளுக்கும் சுயசிந்தனைக்கும் ஈடுகொடுக்க முடியாத ஆசிரியர்கள்தாம் அவர்கள் மீது அதிகாரம் செலுத்தி கட்டுப்படுத்த முயல்கிறார்கள். கற்பித்தல் பணியில் கண்டிப்பு தேவை இல்லை என்ற தெளிவான பார்வையைக் கொண்டிருக்கிறார் இவர். “சுவராசியமான உரையாடல்கள், கதைகள், கவிதை, ஜோக் போன்றவற்றை மாணவர்களிடம் பகிர்ந்து, வகுப்பறையை மாற்றிவருகிறேன். மாணவர்கள் சார்ந்தும் என்னைச் சார்ந்தும் வெளி உலக நிகழ்வுகள் சார்ந்தும் தொடர்ந்து உரையாடுவது என்னுடைய வழக்கம். குழந்தைகளின் ஆளுமை மேம்பாட்டுக்கு உதவும், அவர்களுடைய பாடத்தோடு தொடர்புடைய குறும்படங்கள், வீடியோ காட்சிகளை வாரம் ஒரு முறை திரையிட்டு, அது குறித்து விவாதம் நடத்திவருகிறேன். இப்படி, மாணவர்களின் ஐம்புலன்களையும் சென்றடையும் வகையில் என் கற்பித்தல் பணி தொடர்கிறது என் கற்பித்தல் பணிக்கு மாணவ-மாணவிகள் கண்ணீரால் அங்கீகாரம் அளித்துள்ளனர். மாணவர்கள் எனக்கு அளித்த இந்த அங்கீகாரம், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கானது” என்கிறார். டி.சி. வாங்குவோம்! ஆசிரியர் பகவான் குறித்து, வெளியகரம் அரசுப் பள்ளி மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்? “பகவான் சார் எங்களுக்கு ஆசிரியராக மட்டுமல்ல, நண்பராக இருந்து வருகிறார். அவர் பாடம் நடத்தினால், கடினமான பாடம்கூட ஈஸியாக இருக்கும். பகவான் சார் பாடம் நடத்தினால், போர் அடிக்காது. காரணம் அவர், பாடத்தைக் கதையாகச் சொல்வார்; பாடலாகப் பாடுவார்... இப்படி அவர் சூப்பராகப் பாடம் நடத்துவார். பகவான் சார் எங்கள் பள்ளியில் இருந்தால்தான் 10-ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் நாங்கள் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும். அவர் வெளியகரம் பள்ளியைவிட்டுச் சென்றால், நாங்களும் டி.சி. வாங்கிக்கிட்டு, அவர் செல்லும் பள்ளிக்குச் செல்வோம்” இப்படி பகவான் மீது அன்பை பொழிகிறார்கள் மாணவர்கள். தனியார் பள்ளிகளில்தான் சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் பெரும்பாலோரின் பார்வையை அரசுப் பள்ளிகள் பக்கம் திருப்பியிருக்கிறார் ஆசிரியர் பகவான்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts