Friday 4 May 2018

ஆயிரம் ஆண்டுகளின் மகத்தான மனிதர்

ஆயிரம் ஆண்டுகளின் மகத்தான மனிதர் ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.ஐ.(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நாளை (மே5-ந் தேதி) காரல்மார்க்ஸ் பிறந்தநாள். காரல் மார்க்ஸ் 1818-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி ஜெர்மனியில் ஒரு வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்தவர். அவர் பள்ளி, கல்லூரியில் படிக்கும் போதே பொது வாழ்வில் ஈடுபடவேண்டும் என்று முடிவெடுத்தார். படிப்பு முடிந்த பிறகு அதுவரையில் பொருளாதாரம், அரசியல், தத்துவம் நிலைமைகளை பரிசீலித்து கம்யூனிஸ்டு இயக்கத்தை உருவாக்கினார். அத்தகைய கம்யூனிஸ்டு இயக்கங்கள் தான் இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் இயங்கி வருகிறது. சீனா, வியட்நாம், கியூபா, வடகொரியா போன்ற நாடுகளிலும் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியிலும் இருக்கிறது. காரல் மார்க்ஸ் இறந்தபோது (1883) அவரது இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பிரடெரிக் எங்கல்ஸ் உள்ளிட்ட 12 பேர் மட்டுமே. ஆனால் தற்போது உலகம் முழுவதும் கோடானுகோடி பேர் காரல்மார்க்சை கொண்டாடுகிறார்கள். கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தலைசிறந்த சிந்தனையாளர் யார் என்று பி.பி.சி. நிறுவனம், 1999-ம் ஆண்டு கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் அதிக எண்ணிக்கையில் காரல் மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்டார் என்பது மார்க்ஸ் இன்றும் வெகுவாகப் போற்றப்படுகிறார் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு அல்லவா? அதனால்தான் மார்க்ஸ் பிறந்தநாளின் இரு நூற்றாண்டின் நிறைவு விழா இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பள்ளி இறுதி ஆண்டு படிக்கின்ற போது, “ஒரு பணியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞன் முன்னுள்ள கடமை” என்ற தலைப்பில் மாணவர் மார்க்ஸ் எழுதிய கட்டுரை அவர் வாழ்க்கை எத்திசையில் செல்லும் என்பதை காட்டுகிறது. பொது நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலம் தங்களைச் சிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களைத் தான் வரலாறு மிக மகத்தானவர்கள் என்று அழைக்கிறது. மிக அதிகமான அளவு மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் மனிதன் தான் மகிழ்ச்சியான மனிதன் என்று வரலாறு போற்றி புகழ்கிறது. இதை எழுதியபோது மார்சுக்கு வயது 17. தான் எழுதிய படியே வாழ்ந்து காட்டி ஆயிரம் ஆண்டுகளின் மகத்தான மனிதராக இப்போது போற்றப்படுகிறார். தன்னுடைய கல்லூரி நாட்களில் பாடப்புத்தகங்கள் அல்லாமல் தத்துவம், பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவை தொடர்பான ஆழ்ந்த ஆய்வை தொடங்கினார். பின்னாளில் நீண்ட நெடிய ஆய்வுக்குப்பின், இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்ற தத்துவத்தையும் உபரிமதிப்பு என்ற பொருளாதாரக்கோட்பாட்டையும், அறிவியல் வகைப்பட்ட சோஷலிச சித்தாந்தத்தையும் ஏங்கெல்சுடன் இணைந்து உருவாக்கினார். கல்லூரி படிப்பை முடித்த மார்க்ஸ் தனது இளம் வயதில் எழுதிய கட்டுரைக்கு ஒப்ப வருமானத்தை ஈட்ட வேலைக்குச் செல்லாமல் பொது வாழ்க்கையில் குதித்தார். ரைனீஸ் ஜிட்டாங் எனும் பத்திரிகைக்கு ஆசிரியரானார். மார்க்சுக்கும், அவருக்கு முந்தைய தத்துவ ஞானிகளுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு இதுதான். “இதுவரை வந்த தத்துவவாதிகள் அனைவரும் உலகை பல வழிகளில் விளக்கி விட்டார்கள். இப்போது செய்ய வேண்டியது உலகை மாற்றுவதுதான்!” என்று கூறியதோடு அதற்கான கருத்தியல் போராட்டத்தையும், களப் போராட்டத்தையும் மார்க்ஸ் தொடங்கிவிட்டார். 1843-ம் ஆண்டு காரல் மார்க்சுக்கும், ஜென்னிக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. அப்போது மார்க்சுக்கு 25 வயது. ஜென்னிக்கு 29 வயது. 1844-ம் ஆண்டு பாரீஸ் நகரத்தில் மார்க்சும், ஏங்கெல்சும் சந்தித்தனர். இதற்கு பிறகு மார்க்சினுடைய மறைவு வரையில் இணை பிரியாத இரட்டையர்களாக வாழ்ந்தார்கள். பாரீசில் சோஷலிச கருத்துள்ளவர்களை மார்க்ஸ் சந்தித்து உரையாடினார். பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதினார். ஜெர்மன் அரசை மார்க்ஸ் கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதிய காரணத்தினால் மார்க்சை அந்த நாட்டை விட்டு வெளியேற்றும்படி ஜெர்மன் அரசு பிரெஞ்சு அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தது. பிரெஞ்சு அரசும் அவரை வெளியேறும்படி உத்தரவிட்டது. மார்க்ஸ் 1845-ம் ஆண்டு பெல்ஜியம் போய் சேர்ந்தார். பெல்ஜியத்தில் 1846-ம் ஆண்டு மார்க்சும், ஏங்கெல்சும் மற்ற சில தோழர்களுடன் இணைந்து பிரஸ்செல்ஸ் கம்யூனிஸ்டு தொடர்புக்குழு என்ற அமைப்பை உருவாக்கினார்கள். ஏற்கனவே சில நாடுகளில் இயங்கி வந்த நீதிக்கட்சி என்ற பெயரிலான குழுக்களும் கம்யூனிஸ்டு தொடர்புக்குழுவும் ஒன்றாக இணைந்து ‘கம்யூனிஸ்டு கட்சி என்ற அமைப்பாகச் செயல்படத் தொடங்கின. இந்தக்கட்சியின் கொள்கைகள், நோக்கங்களை விளக்கி ஓர் அறிக்கை தயாரிக்குமாறு மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரைக் கட்சி கேட்டுக்கொண்டது. இதன்படி மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து தயாரித்த, உலக வரலாற்றின் போக்கையே மாற்றிய “கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை” 1848-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையில்தான் (ஏடறிந்த) வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறே எனவும் “முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் தவிர்க்க இயலாதது” எனவும், “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” எனவும் அறைகூவல் விடுத்தார்கள். இவ்வறிக்கை வெளியான பிறகு பல மேலை நாடுகளில் தொழிலாளர்கள் போராட்டம் வெடித்தது. இப்பின்னணியில் பெல்ஜியம் மார்க்சை வெளியேற்றியது. பிரான்ஸ் சென்றார். பிரான்சும் வெளியேற்றியது. அதன்பின் லண்டன் சென்று தனது இறுதிக்காலம் வரை லண்டனில் இருந்து கொண்டு தனது பணியைத் தொடர்ந்தார். லண்டனில் இருந்தபோதுதான் முதலாளித்துவத்தை பல கோணங்களில் ஆய்வு செய்து அக்குவேறு ஆணி வேறாக அம்பலப்படுத்தி ‘மூலதனம்’ என்ற நூலை எழுதினார். அக்காலத்தில் மார்க்ஸ் குடும்பம் வறுமையில் வாடியது. வருமானம் இன்றி வாடகை கொடுக்க இயலாததால் அடுத்தடுத்து இடங்களை மாற்ற வேண்டியிருந்தது. அவருடைய ஏழு குழந்தைகளில் நான்கு குழந்தைகள் இளம்பருவத்துக்கு முன்னதாகவே இறந்துவிட்டன.ஒருமுறை ஏங்கெல்சுக்கு மார்க்ஸ் எழுதினார். ‘மனைவி,குழந்தைகளுக்கு உடல் நலம் இல்லை. டாக்டரை அழைக்க பணம் இல்லை.கடந்த 10 நாட்களாக உருளைக்கிழங்கும், ரொட்டியும் மட்டும் தான் உணவு.தற்போது அதை வாங்கக்கூட என்னிடம் பணம் இல்லை.’ இவ்வாறு சொந்த வாழ்க்கையில் வறுமையுடனும், வாழ்க்கையில் அரசுகளுடனும் முதலாளித்துவ சித்தாந்தங்களுடனும் போராடிப்போராடித்தான் தொழிலாளி வர்க்கத்துக்கான தனது மகத்தான கண்டுபிடிப்புகளை-மார்க்சியத்தை மார்க்ஸ் உருவாக்கினார். 1883, மார்ச் 14 அன்று மார்க்ஸ் மறைந்தார். முதலாளித்துவத்துக்கு ஒரே மாற்று சோஷலிசம்தான். அதைத்தான் மார்க்சினுடைய வாழ்வும், பணியும், ஏங்கெல்சுடன் இணைந்து அவர் உருவாக்கிய படைப்புகளும் உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றன.

No comments:

Popular Posts