Sunday, 17 June 2018

உலக தந்தையர் தினம்.

அப்பாவின் பெருமை...! அப்பப்பா...! ஜெ.தீபலட்சுமி இன்று (ஜூன் 17-ந் தேதி) உலக தந்தையர் தினம். நம் சமூகத்தில் அன்னையர் தினம் அளவுக்குப் பேசப் படாததும் கொண்டாடப் படாமலும் சப்பென்று கடக்கும் இந்த நாளுக்கு ஏன் இந்த நிலை? உள்ளூர அன்பும் மரியாதையும் பரஸ்பரம் இருந்தாலும் அப்பாவுக்கும் குழந்தைகளுக்குமான ஆரோக்கியமான உறவை வளர்ப்பதாக இல்லை நம் குடும்ப அமைப்புகள். எந்த அளவுக்குத் தாய்மையைப் பெண்ணுக்கான உணர்வாக மட்டுமே வைத்துப் போற்றிக் கொண்டாடி வருகிறதோ, அதே அளவு ஆணை விலக்கி வைத்து விட்டது இச்சமூகம். தாய்மை உணர்வு கனியாத, வயது முதிராத இன்னொரு குழந்தையாக ஆணாதிக்கத்தை நிலை நிறுத்தும் கருவியாக மட்டுமே இருக்கிறார்கள் அப்பாக்கள். பெரும்பாலான வீடுகளில் வளர்ந்த மகன்களுக்கு அப்பாக்களுடன் பேச ஏதும் இருப்பதில்லை. மகள்களுக்கோ அப்பாவின் ‘குலப்பெருமை’க்குப் பங்கம் வராமல் நடந்து கொள்வதே வாழ்க்கைக் கடமையாக இருக்கிறது. இதில் மகிழ்ச்சி வாய்ந்த உறவுகள் எப்படிச் சாத்தியம்? “எனக்கு மூணு பசங்க. பசங்க மேல உயிரையே வெச்சிருப்பார். ஆனா எந்தக் கொழந்தையையும் தொட்டுத் தூக்கினதே இல்லை. பசங்களும் எது வேணாலும் என்னைத் தான் கேப்பாங்க; அவர் ரொம்பக் கண்டிப்பு!”என்று பூரித்துக் கொள்ளும் அம்மாக்கள் நம்மிடம் சகஜம். சென்ற தலைமுறை அப்பாக்கள் பெரும்பாலும் இந்த வெறைப்பு வீரப்பாக்கள் தாம். ஆணாதிக்கம் கோலோச்சும் வீடுகளில் அப்பாக்கள் நிலைமை ரொம்பவே பரிதாபம். எட்டு தோட்டாக்களில் என்ற படத்தில் பாஸ்கர் பேசும் வசனம் மனதை உருக்குவதாக இருக்கும். வயதான காலத்தில் வளர்ந்த பிள்ளைகளிடமிருந்து முற்றும் அன்னியப்பட்டு விட்ட அவர் சொல்வார், “எனக்குத் தெரியும், என் குழந்தைங்க நினைக்கிறாங்க. அம்மா உயிரோட இருந்திருந்தா வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுவாங்க, குழந்தைகளைப் பார்த்துப்பாங்க, பேசிக்கிட்டு கலகலப்பா இருப்பாங்க; அப்பா இருக்க அம்மா போயிட்டாங்களேன்னு”என்று. பிள்ளைகள் அவ்வாறு நினைக்காவிட்டாலும், பெரும்பாலான ஆண்களுக்குக் காலப் போக்கில் தோன்றும் வலிமிகுந்த இந்த உணர்வு மெட்றாஸ் படத்தில், வேலை முடிந்து வீட்டுக்கு வரும் மகளுக்கு தோசை சுட்டுக் கொடுப்பார் அப்பா. காதலனை நினைத்து மருகிக் கொண்டிருக்கும் அவளை, “ஏய், தட்டுல தோசையப் பாரு”என்று கரண்டியால் தட்டி விட்டுப் போகும் அப்பா மீது பேரன்பும் மதிப்பும் பெருகியது. இத்தனைக்கும் படத்தின் மையக்கரு அப்பா மகள் பாசமெல்லாம் இல்லை. வீடு என்றால் இப்படித் தான் இருக்கும் என்பதாக அமைந்த அந்தக் காட்சி அவ்வளவு பிடித்துப் போனது. அம்மா என்றால் கிச்சனுக்குள் நிற்பது போன்ற? படத்தையும், அப்பா என்றால் ஈசிசேரில் அமர்ந்து புத்தகம் படிப்பது போன்ற படத்தையும் இன்னும் நம் குழந்தைகளின் பாடப்புத்தகங்களிலிருந்து அகற்ற முடியாமல் இருக்கும் அவலமான சமூகச் சூழலில் இது போல் யதார்த்தங்களுக்கு இயல்பாய் வேறு நிறம் பூசும் நடவடிக்கைகள் நடக்க வேண்டும். நகம் வெட்டுவது, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்வது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்த பிள்ளைகளுக்கும் ஈகோ பார்க்காமல் பணிவிடை செய்யும் இளைய தலைமுறை அப்பாக்கள் பலரையும் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது. அது போன்ற குடும்பச்சூழலில் வளரும் மகள்கள் மட்டுமே தன்னம்பிக்கை மிகுந்தவர்களாகவும் மகன்கள் பெண்கள் குறித்த ஆரோக்கியமான பார்வை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். சனிக்கிழமை அலுவலகத்தில் ஒரு நாள் பயணம் முடிவானது. காலை ஆறு மணிக்குக் கிளம்ப வேண்டும். ஒன்றரை வயதான என் இளைய மகளுக்கு லேசாக உடல் கொதித்தது. “நான் போகலை. மனசு கேக்கலை” என்று தயங்கிய போது, “எனக்கு இன்னிக்கு லீவ் தானே? நான் பார்த்துக்க மாட்டேனா?” என்று கடிந்து கொண்டு அனுப்பி வைத்தார் அவளது அப்பா. பயணம் முடிந்து நான் திரும்பிய போது அப்பாவுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தாள் குழந்தை. சென்ற தலைமுறையில் பெண்ணியமும், பெரியாரியமும், முற்போக்கும் பேசிய ஆண்களின் வீட்டுக்குள் சென்று பார்த்தால் அவர்கள் பேசும் புரட்சிக் கருத்துகள் சிரிப்பாய்ச் சிரிக்கும். சமூகத்தைத் திருத்தக் கிளம்பிய இவர்கள் வீட்டுக்குள் அன்னியப்பட்டுப் போனதும் சரியான அப்பாக்களாக இல்லாமல் போனது தான். பெண்களுக்கு சமூகம் கொடுக்கும் அழுத்தங்களின் மூலம் விளையும் குற்றவுணர்ச்சியைப் போக்குபவர்களாகவும் இருக்கும் அப்பாக்களே ஆண் பெண் சமத்துவத்தைக் குடும்பத்துக்குள் தொடங்கி சமூகத்தில் நிலைக்கச் செய்ய முடியும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts