பல்கலைக்கழகங்களுக்கு விடிவு பிறக்குமா?ங்களுக்கு விடிவு பிறக்குமா?

பல்கலைக்கழகங்களுக்கு விடிவு பிறக்குமா? மறைமலை இலக்குவனார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் புகழ்மிக்க துணைவேந்தராக ஏ.எல்.முதலியார் விளங்கி வந்த நேரம். அவர் சட்டமன்ற மேலவையிலும் உறுப்பினராக (எம்.எல்.சி.) விளங்கினார். சட்டமன்றத்தில் அப்போதிருந்த கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் கல்லூரிகளில் படிப்படியாகத் தமிழ்ப்பயிற்சி மொழியை அறிமுகப்படுத்தும் அரசின் கொள்கையறிக்கையை வழங்கியிருந்தார். கல்லூரிகளில் பாடமொழியாக விளங்கிவந்த ஆங்கிலத்தை அகற்றினால் கல்வியின் தரம் குறைந்துவிடும் என்னும் தமது கருத்தை ஏ.எல்.முதலியார் பம்பாயில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் தெரிவித்தார். அவர் சென்னை வந்ததும் தம்மைச் சந்திக்குமாறும் கலந்துரையாடவேண்டியுள்ளது எனவும் கல்வியமைச்சர் துணைவேந்தருக்குச் செய்தி அனுப்பினார். ஆனால் ஏ.எல்.முதலியார் “பல்கலைக்கழகத்தில் வேலைப்பளு மிகுதி; ஓய்வு கிட்டும்போது கல்வியமைச்சர் பல்கலைக்கழகம் வந்து துணைவேந்தருடன் கலந்துரையாடிச் செல்லலாம்” எனத் தெரிவித்துவிட்டார். கல்வியமைச்சராகிய தமது வேண்டுகோளைத் துணைவேந்தர் ஏற்கமறுத்துவிட்டாரே என சி.சுப்பிரமணியம் கோபப்படவில்லை. மாறாகத் துணைவேந்தருக்கு வாய்ப்பான நேரம் எது எனத் தெரிந்துகொண்டு பல்கலைக்கழகம் வந்து அவருடன் கலந்துரையாடிச் சென்றார் என்பது வரலாறு. இதுபோன்றே கல்வியமைச்சர்களாக விளங்கிய பேராசிரியர் க.அன்பழகன், சி.அரங்கநாயகம் ஆகியோர் துணைவேந்தர்களுக்கு உரிய மதிப்பு வழங்கி அவ்வப்போது கலந்துரையாடிக் கல்வித்திட்டங்களை வகுத்துள்ளனர். துணைவேந்தர்கள் புகழ்மிக்க கல்வியாளர்களாகவும் சிறப்புவாய்ந்த துறை வல்லுனர்களாகவும் விளங்கியதனால் அவர்களைச் சென்று காண்பதே பெருமை என அமைச்சர்களே அந்தக் காலத்தில் கருதியதில் வியப்பில்லை. இன்றைக்குத் துணைவேந்தர்கள் கைது செய்யப்படுவதும் நீதிமன்றங்களால் பதவிநீக்கம் செய்யப்படுவதும் அன்றாடச் செய்திகளாகிவிட்டன. ஏன் இந்த மாற்றம்?துணைவேந்தர்களைப் பணியமர்த்துவதில் முறைகேடுகள் நிகழ்வதாகப் புகழ்மிக்க கல்வியாளர் மு.ஆனந்தகிருட்டிணன் ஒருமுறை பத்திரிகைகளில் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். கல்விக்கூடங்கள் சிறப்புடன் செயல்பட்டால் சிறைச்சாலைகளை மூடிவிடும் பொற்காலம் மலரும் என எமர்சன் குறிப்பிட்டார். இன்றைக்குக் குற்றவழக்குகளில் கைதாகிறவர்களின் படங்களையும் வயதுகளையும் கவனித்தால் பதினாறு வயது முதல் இருபது வயதுவரையுள்ளோரின் எண்ணிக்கையே பெரும்பான்மையாக உள்ளது. ஏன்?கல்விநிறுவனங்கள் செம்மையாகச் செயல்படாததும் அவ்வாறு செயல்படும் நிறுவனங்களும் வாழ்க்கைக்குரிய சரியான வழியைக் காட்டும் பாடத்திட்டம் இல்லாமல் இருப்பதும் தான் முதன்மையான காரணம் எனலாம். நல்ல கல்வி சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதை மெய்ப்பிக்கும் பல்கலைக்கழகங்களே உலகில் தலைசிறந்துவிளங்குகின்றன. வாழ்க்கையோடு ஒட்டாத ஏட்டுப்படிப்பைக் கடமைக்கு வழங்கிவருவதால் எந்தப் பயனும் யாருக்கும் இல்லை. சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருவதால் மாணவர்களும் கல்வியில் சலிப்புற்று வேறுவழிகளில் திசைதிருப்பப்பட்டுவிடுகிறார்கள். இந்தக் கொடுமை நீங்க வாழ்க்கைக்குப் பயனுள்ள கல்வியும் மாணவர்களுக்குத் தெளிவை ஏற்படுத்தி வழிகாட்டும் ஆசிரியர்களும் தேவை. பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிறப்பான தலைமைப்பண்புடன் செம்மையாக வழிகாட்டுவதே இந்தத் தேவையை நிறைவேற்றும். நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்கிறோம். பல்கலைக்கழகமும் ஒரு பெரிய குடும்பம்தான். ஆசிரியர்கள் அக்குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களாகச் செயல்பட்டு இளைய உறுப்பினர்களாகிய மாணவர்களைப் பரிவோடும் பாசத்தோடும் வழிநடத்தவேண்டும்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒரு குடும்பத்தலைவராகப் பொறுப்புணர்வுடன் அனைவரையும் சிறப்பாக வழிநடத்தவேண்டும். அங்ஙனம், வழிநடத்துவதற்கு உலகளாவிய விரிந்த பார்வை வேண்டும்; வெற்றிமிக்க பல்கலைக்கழகங்கள் எவ்வாறு இயங்கிவருகின்றன என அறிந்திருக்கவேண்டும்.பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களின் ஆர்வங்கள், திறமைகள் பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும். பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாவட்டங்களின் இயற்கையமைப்பு, அங்குப் பெரும்பான்மையாக விளங்கும் தொழில்கள், மக்களின் எதிர்பார்ப்புகள் ஆகியன பற்றி விசாரித்து அறிந்துகொள்ளவேண்டும். படிப்பு மட்டுமில்லாமல் மாணவர்களின் விளையாட்டுத்திறன், பேச்சுத்திறன், பாட்டு, ஓவியம் போன்ற நுண்கலைத்திறன்களை வளர்ப்பதற்குரிய வழிமுறைகளை ஆராயவேண்டும். ஆசிரியர்களோடு இணக்கமான உறவும் இன்றியமையாத் தேவை. ஆசிரியர்களின் சிறப்புத்தகுதிகளையறிந்து அவற்றால் மாணவர்கள் பயன்பெறுதற்குரிய வழிமுறைகளை வகுக்கவேண்டும். நாட்டில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை ஆய்ந்து அவற்றைக் களைவதற்குரிய தீர்வுகளை அரசுக்கும் மக்களுக்கும் தெரிவிக்கவேண்டிய கடமையும் பல்கலைக்கழகங்களுக்கு உண்டு. அமெரிக்காவில் இயற்கைச்சூழலிலும் பொருளாதாரத்திட்டங்களிலும் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களுக்கு உரிய தீர்வுகளை அந்த நாட்டு அரசு பல்கலைக்கழகங்களிடமே கேட்டுப்பெற்றுக்கொள்வதனை ஒரு எடுத்துக்காட்டாகக் கூறலாம். நாம் படிப்பது நம் வாழ்க்கையும் நாட்டுநிலையும் சிறப்பாக அமைவதற்கே என்னும் எண்ணமும் உணர்வும் மாணவர்களுக்கு ஏற்படுத்தும் கல்வியே உண்மையான கல்வி என்பதில் ஐயமில்லை. ஆளுமைத்திறனும் தலைமைப்பண்பும் கல்லூரியிலேயே உருவாக்கப் பெறவேண்டும். படிப்பு என்பது வெறும் ஏட்டுக்கல்வியோடு நின்றுவிடுகிறது. வாழ்க்கை பற்றிய தெளிவைக் கல்வி வழங்காததனால் மாணவர்கள் சிக்கல்களைக் கண்டு அஞ்சுவதும் ஒதுங்கி ஓடிப் போவதும் அதிகமாகியுள்ளது. இந்த ஒதுங்கி ஓடும் மனப்பான்மையால்தான். நினைத்தது கிடைக்காவிட்டால் உடனே தற்கொலை செய்துகொள்வதும் பெருகியது. மாணவர்களோடு ஒட்டியும் ஒட்டாமலும் தாமரையிலைத் தண்ணீராக வாழும் ஆசிரியர்களே இத்தகைய மாணவர் மனப்போக்குக் காரணமாக அமைகிறார்கள். வாழ்வில் அறைகூவல்களை அஞ்சாமல் எதிர்கொள்ளும் துணிவைக் கல்விநிறுவனங்களாலேயே வளர்க்கமுடியும். மாணவர்களின் ஆளுமைவளர்ச்சியில் ஆசிரியர்களுக்குப் பெரும்பங்கு உள்ளது. ‘மக்கள் குடியரசுத் தலைவர்’ அப்துல் கலாம் தமது ஆளுமைவளர்ச்சிக்குக் காரணமாயமைந்த ஆசிரியர்களைப் போற்றியுள்ளதனை எண்ணிப்பாருங்கள். எனவே கல்விச்சிறப்பும் மாணவர்களை வழிகாட்டவேண்டிய பொறுப்புணர்வும் நிறைந்த துணைவேந்தர்கள் இப்போது உடனடித்தேவை. இந்தத் தேவையை நிறைவேற்றும் பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு அமைந்துள்ளது. நல்ல துணைவேந்தர்கள் சிறந்த கல்வித்திட்டத்தை அறிவார்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நிறைவேற்றினால் ஒளிமிக்க மாணிக்கங்களாக மாணவர்கள் உருவாகுவது உறுதி.

கல்விச்சோலை - kalvisolai Articles

Comments