Sunday 25 March 2018

புதியதோர் இணையம் செய்வோம்

புதியதோர் இணையம் செய்வோம் | எழுத்தாளர் கபிலன் வைரமுத்து | "இந்த பூமில எங்க எப்ப போர் நடக்கனும்னு முடிவு பண்றதும் நாங்கதான். அதுல எந்த பலனும் இல்லனா அந்த போர முடிச்சு வைக்கிறதும் நாங்கதான். நீங்க சாப்பிடற சாப்பாடு, போட்டுக்கற துணி, பாக்கற நியூஸ் எல்லாத்தையும் நாங்கதான் முடிவு பண்றோம்" இது சர்வதேச அதிகாரச் சமூகங்களைப் பற்றி விவேகம் படத்தில் நடிகர் விவேக் ஓபராய் பேசுகின்ற ஒரு வசனம். படம் பார்த்த சிலர் எனக்கு தொலைபேசியில் அழைத்து "நீங்க எழுதிய வசனம் கற்பனையா இல்ல உண்மையா?" என்று கேட்டார்கள். "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தைப் படியுங்கள். அனைத்து உண்மைகளும் புரியும்" என்று அனைவருக்கும் ஒரேவிதமான பதிலைச் சொல்லிவந்தேன். இன்று அந்த அதிகார மையங்கள் நம்மை மிக நெருங்கிய நிலையில், விவேக் ஓபராய் பேசிய அந்த வசனம் நாம் ஒவ்வொருவருக்கும் நேரடி அனுபவமாகவே மாறிக்கொண்டிருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் நிறுவன-அதிகார வர்க்கத்தால் நாம் ஆளப்படுகிறோம். இது ஆய்வுக்குட்பட வேண்டிய கருத்தியல் அல்ல. அனைத்துலக கள நிலவரம். "இதுக்கு மேலயும் பொறுமையா இருந்தா விடுதலையே அடைய முடியாத நிரந்தர அடிமைகளாக ஆயிடுவோம்" என்று கவண் படத்தில் நாங்கள் எழுதிய வசனத்தையும் இங்கே மறுபதிவு செய்ய விரும்புகிறேன். எல்லையில்லா அடிமைத்தனத்தை நோக்கி நம் நாகரிகம் நகர்ந்துகொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தைத் தவிர்க்கமுடியவில்லை. நிறுவனங்கள் நம்மை ஆண்டால்தான் என்ன? என்று சிலர் கேட்பதுண்டு. அரசியல் என்பது சாசனத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. அதில் மனிதர்களின் கேள்விக்கான உத்தரவாதம் உண்டு. நிறுவனம் என்பது ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இது கேள்வியற்ற உலகம். சாசனப்படி மனிதர்கள் குடிமக்கள். ஒப்பந்தப்படி மனிதர்கள் நுகர்வோர். குடிமைச் சமூகத்திற்கு நேர் எதிரான மனிதத்தன்மையற்ற ஓர் ஆதிக்கத்தால் நாம் கட்டுண்டிருக்கிறோம். இது பன்முக ஆதிக்கமாக இருப்பதுதான் இதன் பலம். இதனை ஒருமுகமாக எதிர்கொள்ளாததுதான் நம் பலவீனம். நம் தரவுகளை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் என்பது ஆதிக்க பன்முகத்தில் ஒரு துணைமுகம். பேசுவதற்கு எத்தனையோ களங்கள் இருந்தாலும் சமூக வலைத்தளங்கள் குறித்து நாம் உடனடியாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் முடிவுற்ற தருவாயில் ஒரு கடிதம் வழியாக நான் பகிர்ந்த செய்திகளை மறுபடியும் பகிர்கிறேன். "சமூக விழிப்புணர்ச்சிக்கு சமூக வலைத்தளங்கள் மையமாக இருந்திருக்கின்றன. சமூக வலைத்தளம் என்று சொல்லப்பட்டாலும், ஓர் ஊடகமாகப் பதிவானால் அதற்குரிய கட்டுப்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என எண்ணி பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களாகத்தான் இயங்குகின்றன. அவற்றின் இந்த சாமர்த்தியத்தை உலக சமூகங்கள் தங்களின் தன்னெழுச்சிக்காக பயன்படுத்துவதில் மகிழ்ச்சி. ஆனால் இந்த நிறுவனங்கள் எதுவும் அறத்தின் அடிப்படையிலோ அல்லது நல்லிணக்க நோக்கத்தோடு அமைக்கப்படவில்லை. வணிகமும் ஆதிக்கமும் இவர்களின் இரு கண்கள். இதே நிறுவனங்கள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்படலாம். அது நடப்பதற்குள் நாம் தன்னிச்சையாக இயங்குவதற்கு நாமே ஒரு தளத்தை உருவாக்குதல் அவசியம். சீனாவின் வெபியோ என்ற தளம் மிகச் சிறந்த உதாரணம். மாற்றத்திற்கு தலைமை தாங்க நினைப்பவர்கள் தொழில்நுட்பத்திற்கு தலைமை தாங்க வேண்டும். உலகமெல்லாம் மென்பொருள் வல்லமைக்கு பெயர் பெற்ற தமிழ் இளைஞர்கள் ஒரு குழு அமைத்து நமக்கான ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன். தான் சார்ந்த சமூகத்தின் பண்புகளைப் பாதுகாக்க நினைப்பதும் அதன் பெருமைகளைப் பாடுவதும் மனித இயல்பு. அதை ஒடுக்க நினைப்பதுதான் இறையாண்மைக்கு எதிரான செயல். வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் தமிழர்களின் அடையாளம் புத்துணர்ச்சி பெறுவதன் மூலம் இந்தியம் என்ற தத்துவமும் மேம்படுகிறது. தமிழர்களைப் புரிந்துகொள்ளாத சில அரசியல் சக்திகள் இந்தியாவைப் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம். ஆக்கபூர்வமாக இணைவோம். நம் சிந்தனையில் எரிகின்ற நெருப்பை வீணாக்காமல் விளக்காக்குவோம்" இதுதான் நான் கடந்த ஆண்டு எழுதிய கடிதம். இந்த கடிதத்திற்கு கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா அர்த்தம் சேர்த்திருக்கிறது. முகநூலில் பொதுமக்களின் பதிவுகளைத் திருடி அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக இந்த நிறுவனம் பயன்படுத்தியிருக்கிறது. எண்ணெய் வளத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட உலக பொருளாதாரம் இன்று தரவு வளத்தை (டேட்டா எக்கானாமி) மையமாகக் கொண்டு செயல்படுகிறது. சமூகவலைத்தளங்கள் தரவு பொருளாதாரத்தின் அச்சாரமாக மாறிக்கொண்டிருக்கின்றன. நம் தரவுகளால் நாம் வகைப் பிரிக்கப்படுகிறோம். நாம் பதிவிடும் கருத்துகள், புகைப்படங்கள், விருப்பங்கள், நிகழ்த்தும் தேடல்கள் இவை அனைத்தையும் கொண்டு நம் குணாதிசியம் கட்டமைக்கப்படுகிறது. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உளவியல் கூறு வரையப்படுகிறது. இதையெல்லாம் செய்ய பல கணினி வழிமுறைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இப்படித் தயாரிக்கப்படும் தனிமனிதத் தரவுகள் பல்வேறு சந்தைகளில் விற்கப்படுகின்றன. இந்த தகவல்களுக்கு ஏற்ப வணிக நிறுவனங்களின் விற்பனை சூத்திரமும், அரசியல் கட்சிகளின் திரைக்கதையும், திரைப்படங்களின் கருத்தியலும் மாற்றி அமைக்கப்படுகின்றன. இணைய பெருந்தரவு மறுசீரமைக்கப்படுகிறது. அந்தந்த நிறுவனங்களுக்கோ அல்லது கட்சிகளுக்கோ ஏற்ப உண்மைகள் திரிக்கப்படுகின்றன. இணையத்தை மட்டுமே அங்காடியாகவும் அறிவுக்கான தேடல் களமாகவும் வைத்திருக்கும் ஜனத்தொகை திரிக்கப்பட்ட உண்மைகளை உளமார உள்வாங்கிக்கொள்கிறது. நம்புகிறது. மக்களை நுகர்வு கலாசாரத்திற்குள் கட்டிப்போடவும், சமூகத்தை ஒரு குறிப்பிட்ட கொதிநிலையில் வைக்கவும், நிழல் பொம்மைகளாக செயல்படும் அரசுகளை எதிர்த்து புரட்சிகளைத் தூண்டவும், நிஜ அதிகாரத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாமல் பார்த்துகொள்ளவும் அதிகார நிறுவன வர்க்கம் தன் பரிவாரங்களைப் பயன்படுத்துகிறது. நம் ஒவ்வொரு நொடியும் யாருக்காகவோ கண்காணிக்கப்படுகிறது. யாருக்கோ விற்கப்படுகிறது. பயனாளர்கள் என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறோம். பயன்பாட்டுக்கு ஒத்துழைக்காதபோது இனப்படுகொலைக்கு கூட இந்த வர்க்கம் தயங்காது என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது. "நீ என்பது உடலா உயிரா பெயரா? மூன்றும் இல்லை. நீ என்பது செயல்" என்று என் தந்தை கோச்சடையானில் ஒரு பாடல் எழுதியிருப்பார். இன்றைய கால சூழலில் நீ என்பது தகவல் என்றே எண்ணுகிறேன். தொழில்நுட்ப வளர்ச்சியால் எத்தனையோ ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதைப் பற்றி பேச விளம்பர நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் மாற்றங்களின் தொடர்ச்சியைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும். இளைய தலைமுறையின் வாழ்வியல் புதிய சிந்தனைத் தளத்தில் இருந்து தொடங்க வேண்டும். உலக படையெடுப்பில் இருந்து நம்மை நாம் தற்காத்துகொள்ள நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் பகுத்தறிவு. அதுவே நம் அடையாளம். விழித்திருப்போம்.

No comments:

Popular Posts