Friday 9 February 2018

கல்வி கற்றுத் தந்த பாடம்?

கல்வி கற்றுத் தந்த பாடம்? 'தலைவாரி பூச்சூடி உன்னை பாடச்சாலைக்கு போய் வா என்று சொன்னாள் உன் அன்னை' என்று கல்வியின் சிறப்பை புகழ்ந்து பாடியுள்ளார் புரட்சிக்கவிஞர் பாரதி தாசன். பள்ளிக்கூடங்கள் என்பது ஒரு கோவிலுக்குச் சமமானதாகும். ஒவ்வொருவரின் அறிவையும், விசாலமாக்குவதற்கும், ஒழுக்கத்தைப் போதிப்பதற்கும் பள்ளிக்கூடம்தான் வழியைக்காட்டுகிறது. அங்கே கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் இறைவனுக்குச் சமமானவர்கள். அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று பெற்ற தாய்-தந்தையருக்கு அடுத்த இடத்தில், தெய்வத்திற்கு நிகரான இடத்தில் காலம் காலமாக ஆசிரியர்களை வைத்து போற்றுகிறோம், புகழுகிறோம், வணங்குகிறோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலைமை மாறிவருவது, நல்லவர்களின் நெஞ்சங்களை பதற வைக்கிறது. சாக்பீஸ் பிடிக்கவேண்டிய ஆசிரியர்கள் கையிலும், பேனா-பென்சில் பிடிக்கவேண்டிய மாணவர்கள் கையிலும் கத்தி இருப்பது நிச்சயமாக கவலையளிக்கக்கூடிய ஒன்றாகும். ஞானம் இருக்க வேண்டிய நெஞ்சங்களில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு ஆசிரியையை மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தின் காயவடுக்கள் இன்னும் ஆறாதநிலையில், அடுத்தடுத்து இதுபோல சம்பவங்கள் நடக்கிறது. கடந்த 5-ந்தேதி வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரை பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் கத்தியால் குத்தி, அந்த ஆசிரியர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் தலைமை ஆசிரியர் வேறு ஒன்றும் செய்யவில்லை. சரியாக படிக்கவில்லை என்று திட்டினார், பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டாம் என்று கூறி அவமானப்படுத்தினார், பெற்றோரை அழைத்து வரச்சொன்னார் என்றுதான் கத்தியால் குத்திய மாணவன்கூட வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். மாணவன் செயல் அறியாவயது செயல் என்று நினைத்தாலும், கரூர் மணவாடியில் அடுத்தநாள் இதேப்போல பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் கத்தியால் குத்தியிருக்கிறார். மாணவன் செய்த தவறு, கிரிக்கெட் வீரரான அந்த மாணவன் பள்ளிக்கூட அணியில் விளையாடுவதுபோல, தனியார் 'கிளப்'பிலும் விளையாடி இருக்கிறான். இது ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே மோதலாக உருவாகி, பிறகு தகராறாக உருவெடுத்து தான் பெற்ற பிள்ளைக்கும் இணையாக கருதவேண்டிய மாணவனை ஆசிரியரே கத்தியால் குத்தியிருக்கிறார். ஆக, சமுதாயத்தில் இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது. மாணவனை திருத்த வேண்டியதுபோல, ஆசிரியர்களையும் திருத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது. மாணவர்கள் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டியநிலை இருப்பதுபோல, ஆசிரியர் பயிற்சியிலும் மாற்றம் கொண்டுவரவேண்டிய நிலை இப்போது தலையெடுத்துள்ளது. வெகு காலமாகவே பள்ளிக்கூடங்களில் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. மாணவர்களின் மனநிலை மாற்றப்படவேண்டும் என்றால், பள்ளிக்கூடங்களில் மட்டுமல்ல, வீடுகளிலேயே பெற்றோர்கள் முதலில் தொடங்கவேண்டும். முன்பெல்லாம் கூட்டுக்குடும்பம் இருந்தது. உறவினர்கள் அடிக்கடி சந்தித்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் 3, 4 குழந்தைகள் இருந்தார்கள். எல்லா குழந்தைகளும், ஒவ்வொரு நேரங்களில் சண்டையிடுவதும், பிறகு சமாதானமாக போவதும் இருந்தது. வழக்கமாக பெற்றோர்களும் பிள்ளைகளிடம் கண்டிப்பாக இருந்தார்கள். இதனால் சிறு குழந்தையில் இருந்தே மாணவர்களின் மனப்போக்கு எல்லாவற்றையும் சந்திக்க ஒரு மனஉறுதியை பெற்றிருந்தது. இப்போது நிலைமை அப்படியல்ல, பெரும்பாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகள் இருப்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிக்காமல், மிக செல்லமாக வளர்க்கிறார்கள். ஒரு சிறு கண்டிப்பையும் தங்களுக்கு இழைக்கப்படும் அவமானமாக இன்றைய இளைஞர் சமுதாயம் கருதுகிறது. தோல்விகளை தாங்கும் மனப்பக்குவம் இல்லை. வாழ்க்கையே இடிந்துபோய்விட்டது என்று இருக்கிறார்கள். இதன் விளைவுதான் தற்கொலையாகவும், கத்தியை கையில் எடுக்கும் மனப்போக்காகவும் உருவெடுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் இன்றைய திரைப்படங்களிலும், டெலிவிஷன் சீரியல்களிலும் வன்முறை வளர்க்கும் காட்சி காட்டப்படுவதால் ஆழ்மனதில் இத்தகைய வன்முறை உணர்வுகள் தலையெடுத்துவிடுகின்றன. பெற்றோரும், ஆசிரியர்களை கண்டிக்கவிடுவதில்லை. கண்டிக்கும் ஆசிரியர்களிடம் மாணவர்களும், அவர்கள் பெற்றோர்களும் மல்லுக்கட்டும் நிகழ்வுகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. மேலும் கல்வித்திட்டமும்சரி, பாடத்திட்டமும்சரி, ஆசிரியர்களின் கற்பித்தல்முறையும்சரி, பாடப்புத்தகங்களும்சரி மாணவர்களை மார்க் எடுக்கும் எந்திரமாகத்தான் மாற்றுகிறதே தவிர, அங்கு ஒழுக்கம் கற்பிக்கப்படுவதில்லை. ஆசிரியர்களிடமும் மார்க் எடுப்பதற்கான கற்பிக்கும் முறைதான் இருக்கிறது. மாணவர்களும் மார்க் எடுப்பதற்கான கற்றலைத்தான் தேடுகிறார்கள். ஆக, படித்து முடிக்கும்போது அவன் நல்லவனாக இருந்தாலும்சரி, கெட்டவனாக இருந்தாலும்சரி, மார்க் எடுத்தால்போதும் என்றுதான் பெற்றோரும், சமுதாயமும் நினைக்கிறதே தவிர, அவன் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே வரும்போது, ஒழுக்கம் உள்ளவனாக, நல்லவனாக இருக்கிறானா? என்பதில் யாரும் அக்கறை கொள்வதில்லை. கல்வி பற்றிய சரியான புரிதல் ஆசிரியர்களிடத்திலும், இல்லை, மாணவர்களிடத்திலும் இல்லை, சமுதாயத்திலும் இல்லை. முதலில் கல்வி பற்றிய சரியான புரிதல் ஆசிரியர்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் உருவாக்கப்பட வேண்டும். பள்ளிக்கூடங்களில் முன்பு 'நீதி போதனை' வகுப்புகள் இருந்தது. மத வேறுபாடு இன்றி ஒழுக்க பாடங்கள் கற்று கொடுக்கப்பட்டு வந்தன. ஆசிரியர்களும், முன்மாதிரியாக திகழ்ந்தனர். ஆசிரியர்களுடைய ஒழுக்கம், ஆசிரியர் களுடைய நடைமுறைகள் மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு துணை போக வேண்டும். ஆசு என்றால் குற்றம். ரியர் என்றால் நீக்குதல் என்று பொருள்.சமுதாய குற்றம் குறைகளை நீக்குபவர்கள் தான் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்கள் குற்றம் செய்தால் யாரிடம் முறையிடுவது? 'மங்கை தீட்டுப்பட்டால் கங்கையில் குளிக்கலாம்.கங்கையே தீட்டுப்பட்டால் எங்கே குளிப்பது?என்று ஒரு பழமொழி உண்டு. அந்த பழமொழிக்கேற்ப மாணவர்கள் தப்பு செய்தால் ஆசிரியர்களிடம் சொல்லலாம்.ஆசிரியர்கள் தப்பு செய்தால் யாரிடம் முறையிடுவது? என்ற நிலை உருவாகி இருப்பது வேதனை தரும் விஷயம்.வழி காட்டுகின்ற விழிகள் புண்ணாகி போயின. சமுதாயமே பார்வை இழந்து விட்டது அதனால் இன்று மானுடம் தள்ளாடுகிறது. நாடு காடாகி விட்டது. என்று நல்லோர் நெஞ்சங்கள் துடிக்கின்றன. இதற்கு என்னதீர்வு என்று அலசுவதே இன்று நமக்கு பணி. ஆசிரியர் கையில் கத்தியை எடுக்கும்நிலை உருவாகி இருப்பது நிச்சயமாக நல்லதல்ல. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக அவர்கள் பின்பற்றக்கூடியவர்களாக அறிவாற்றலில் மட்டுமல்ல, ஒழுக்க சீலர்களாகவும் திகழ வேண்டும். ஆசிரியர் கண்டிப்பது, "உன் நல்லதுக்குத்தான், எதிர்காலம் ஒளிமயமாக வேண்டும் என்பதற்குத்தான்" என்று அறிவுறுத்த வேண்டும். உடனடியாக தமிழக அரசு கல்வித்துறையும், கல்வியாளர்களும், சமூக சிந்தனை உள்ளவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஒன்றாககூடி, இதுபோன்ற நிலைமைகளை தடுக்க வேண்டும் என்றால், எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்களின் கையிலும், ஆசிரியர்களின் கையிலும் இனி கத்தி இருக்கக்கூடாது. எதிர்கால சமுதாயம் நல்லொழுக்க சமுதாயமாக இருக்க வேண்டும் என்றால் இதுபோன்ற நிலை இனி ஒருபோதும் நடக்கக் கூடாது. - கடம்பூர் இடையர்காட்டார்

No comments:

Popular Posts