Tuesday 13 February 2018

இந்தியாவின் முதல் பெண் கவர்னர்

இந்தியாவின் முதல் பெண் கவர்னர் | இன்று (பிப்ரவரி 13) சரோஜினி நாயுடு பிறந்த நாள். புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்ட சரோஜினி நாயுடு, இந்தியாவின் முதல் பெண் கவர்னர், இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் போன்ற சிறப்புகளுக்கும் சொந்தக்காரர். இந்தியர்களின் கவிக்குயில், பாரதீய கோகிலா என்றும் புகழப்படுபவர். ஐதராபாத்தில் பிறந்த இவர், சென்னை பல்கலைக்கழக மெட்ரிக் தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சிபெற்று தேசிய அளவில் சாதனை படைத்தார். சிறுவயதிலேயே கவிதைகள் புனையும் திறனை வளர்த்துக் கொண்ட சரோஜினிக்கு அதுவே, லண்டனில் உள்ள கிங் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலையில் கல்லூரிக் கல்வி பயின்றார். கணிதமேதை அல்லது கவிஞராக வேண்டும் என விரும்பிய சரோஜினியை அவரது எழுத்தாற்றல் பாதை மாற்றியது. அவரது கவிதைகள் இந்திய சிறப்புகள், இந்திய மக்களின் வாழ்வியல் முறைகள், பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை பிரதிபலிப்பதாகவே அமைந்தன. அவரது 'தி கோல்டன் திரேஷோல்டு', 'தி பார்ட் ஆப் டைம்', 'தி ப்ரோசன் விங்' ஆகிய படைப்புகள் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் வெகுபிரபலம். காதல் கலப்பு திருமணத்துக்கு அந்தக்காலத்திலேயே அடித்தளமிட்டவர் அவர். தனது 19-வது வயதில் தனது சாதியை சேராத கோவிந்தராஜுலு என்பவரை காதலித்து கரம்பிடித்தார். இது அவரது முதல் புரட்சி. இல்லற வாழ்க்கையில் தன்னை நுழைத்துக் கொண்டாலும் அவரது எண்ணம் முழுக்க, முழுக்க இந்திய தேசம், அதன் வளர்ச்சி மீதே இருந்தது. அதன் விளைவே, வங்கதேச பிரிவினையின்போது (1905) அவரை இந்திய தேசிய இயக்கத்தில் சேரவைத்தது. அதன்மூலம் காந்தி, நேரு, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட தலைவர்களுடன் தொடர்பையும் ஏற்படுத்திக் கொண்டு முழுமையாகவே தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்தார். 1925-ம் ஆண்டு நடந்த சட்டமறுப்பு இயக்க போராட்டம், 1942-ம் ஆண்டில் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தில் பங்கேற்று சிறைவாசம் செய்தார். சுதந்திர இந்தியாவில் முதல் பெண் கவர்னராக (தற்போதைய உத்தரபிரதேசம்) நியமிக்கப்பட்ட பெருமையையும் பெற்றவர் இவர். பெண்கள் நலன், முன்னேற்றம், உரிமைகள் போன்றவற்றிற்காக நாட்டின் பல்வேறு நகரங்கள், மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனால் இவரது பிறந்தநாள் தேசிய மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. -முக்கூடற்பாசன்

No comments:

Popular Posts