மருத்துவ அற்புதம் 'இன்சுலின்' | டாக்டர் நா.மோகன்தாஸ் | இன்று (ஜனவரி 11) சர்க்கரை நோயாளிக்கு முதன் முதலில் இன்சுலின் பயன்படுத்தப்பட்ட தினம். சத்தம் இல்லாமல் உடலுக்குள் யுத்தம் நடத்துகின்ற சர்க்கரை நோய் வயதானவர்களுக்கு தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளும், இளைஞர்களும் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த அவல நிலைக்கு, உணவு முறை மாற்றங்கள், உடல் உழைப்பு குறைந்துவிட்ட வாழ்க்கை முறை, அதிக எடை, ஊட்டச்சத்து குறைபாடுகள், மன உளைச்சல் போன்றவை முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன. இன்று சர்க்கரை நோய்க்கு பல்வேறு இன்சுலின்களும், மருந்து மாத்திரைகளும் வந்துவிட்டன. இன்சுலின் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் உலகில் இந்நேரம் சர்க்கரை நோயினால் மனித குலமே அழிந்து போயிருக்கும். இந்தியாவில் ஏறக்குறைய 3 கோடி பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதில் மூன்றில் ஒருவருக்கு இன்சுலின் ஊசி அவசியம். கணையத்திலிருந்து இன்சுலின் சுரக்காதவர்களுக்கு இன்சுலின் சிறந்த மருந்து. மாரடைப்பு, அறுவை சிகிச்சைக்கு, ஆறாத புண்ணுக்கு, காச நோய், பிரசவ கால சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோயினால் நினைவு இழந்தவர்களுக்கு இன்சுலின் சாலச்சிறந்தது. மருத்துவ உலகில் அற்புத மருந்தான இன்சுலின் 20-ம் நூற்றாண்டின் அதிசய கண்டுபிடிப்பாகும். சர்க்கரை நோய்க்கான மருந்தை தயாரிக்கும் பணியில் நீண்ட காலமாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. 1869-ம் ஆண்டு டாக்டர் லாங்கர்ஹான்ஸ் நாயின் கணையத்தை சோதித்துப் பார்த்து அதில் உள்ள திசுக்கள்தான் இன்சுலினை உற்பத்தி செய்கிறது என்பதை கண்டுபிடித்து, அதை 1901-ம் ஆண்டு வெளி உலகிற்கு அறிவித்தார். 1921-ம் ஆண்டு சர்க்கரை நோய் குறித்த ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக, கனடாவைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஸ்ரீ பாண்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகியோர் ஒரு புதிய மருந்தை கண்டுபிடித்தனர். 1922-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி சர்க்கரை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு டொரண்டோ பொது மருத்துவமனையில் இருந்த லியோனார்ட் தாம்சன் என்ற 14 வயது சிறுவனுக்கு தாங்கள் கண்டுபிடித்திருந்த புதிய மருந்தை முதன் முதலில் கொடுத்தனர். அப்போது தாம்சனுக்கு அலர்ஜி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டன. உடனே அவர்கள் மருந்து கொடுப்பதை நிறுத்திவிட்டு மேலும் 12 நாட்கள் ஆராய்ச்சி செய்து ஜனவரி 23-ந்தேதி 2-வது தடவையாக அந்த சிறுவனுக்கு மருந்தை ஊசி மூலம் செலுத்தினர். ஆச்சரியமாக சிறுவன் தாம்சனுக்கு ரத்தச் சர்க்கரை 'மளமள'வென்று குறைந்தது. உலகமே வியக்கும் வண்ணம் அந்தச் சிறுவன் மீண்டான். அந்த அதிசய மருந்துதான், இன்சுலின். இந்தச் செய்தி காட்டுத்தீ போல உலகம் முழுவதும் பரவியது. 20-ம் நூற்றாண்டின் அற்புத கண்டுபிடிப்பிற்காக பாண்டிங், அவரது பேராசிரியர் மாக்லியோட் ஆகியோருக்கு 1923-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்தப் பரிசு பணத்தை பாண்டிங், சார்லஸ் பெஸ்டுடன் பகிர்ந்து கொண்டார். நாயின் கணையத்திலிருந்து தயாரித்த இன்சுலினை மனிதர்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தியபோது அதில் பல பக்க விளைவுகள் இருந்தன. பின்பு மாடு மற்றும் பன்றியின் கணையத்திலிருந்து இன்சுலினைத் தயாரித்தார்கள். பக்க விளைவின் விகிதாச்சாரம் குறைந்தது. மரபுசார் தொழில் நுட்பம் மற்றும் டி.என்.ஏ. மறு சேர்க்கை தொழில் நுட்பம் மூலம் மனிதரிடம் சுரக்கின்ற இன்சுலினை போலவே செயற்கை முறையில் இன்சுலினை தயாரித்தார்கள். ஈ கோலை என்னும் பாக்டீரியாவின் டி.என்.ஏ.வில் மனிதனுடைய மரபணுவை இணைத்து வளர்த்தார்கள். இதில் மனித இன்சுலினைப் போலவே பாக்டீரியாக்கள் சுரந்தன. இவற்றை எடுத்து அதன் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்களைச் செய்து பல்வேறு இன்சுலினை தயாரித்து வருகிறார்கள். உணவு சாப்பிட்ட உடன் ரத்தத்தில் ஏறும் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் இன்சுலின் குறைந்த காலம் செயல்படும் இன்சுலின் ஆகும். அதிக சர்க்கரையினால் நினைவு இழந்த நிலையில் உள்ளவர்களுக்கும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அறுவை சிகிச்சை செய்யப்படும் நோயாளிகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. இது 6 மணி நேரம் செயல்படும். மிக விரைவாக செயலாற்றும் இன்சுலின் உடனே சர்க்கரையை குறைக்கும். இதில் தாழ்நிலை சர்க்கரை மயக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை. நடுத்தர காலம் செயல்படும் இன்சுலின் சர்க்கரை மாத்திரையுடன் சர்க்கரையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. நீண்ட நேரம் செயல்படும் இன்சுலின் வேலை செய்ய ஆரம்பித்து 24 மணி நேரம் இன்சுலினை தருகிறது. குறைந்த கால இன்சுலினும், நீண்ட நேரம் செயல்படும் இன்சுலினும் இரண்டையும் கலந்து முக்கலப்பு இன்சுலின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்சுலினை தினம் ஒருமுறை அல்லது இரண்டு முறை போட்டால் போதும். தற்போது தானாகவே போட்டுக்கொள்ளக்கூடிய பேனா வடிவில் இன்சுலின் சிரிஞ்சுகள் வந்துவிட்டன. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகளை பாதுகாப்பாக அழித்துவிடவேண்டும். வெப்பத்தால் இன்சுலின் திறன் குறைந்துவிடும். ஆதலால், இன்சுலினை குளிர்சாதனப் பெட்டியின் கதவில் வைக்கவும். தவறிகூட பிரீசரில் வைக்கக்கூடாது. தினமும் ஊசி போடும் இடத்தை மாற்ற வேண்டும். இன்சுலின் ஊசியைப் பிட்டத்தில் போடுவது அவ்வளவு நல்லதல்ல. அப்படி போட்டால் அங்கு இன்சுலின் கிரகிக்கப்படும் வேகம் குறைந்து அதன் செயல்திறன் சரியாக இருக்காது. உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் என்பதை உணர்ந்து, உணவு முறையைச் சரிவர கடைப்பிடித்து தேவையான உடற்பயிற்சி செய்து நோய்களுக்கு முறையான சிகிச்சை பெறுவதன் மூலம் வாழ்வில் அதிகப் பயனைப் பெறலாம்.
Tuesday, 23 January 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment