தேசிய இளைஞர் தினம் | எப்படிப்பட்ட 100 இளைஞர்கள்? | ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எத்தனையோ தலைவர்கள், அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அப்படி இருக்க ஒரு ஆன்மிகவாதி எப்படி இளைஞர்களின் அடையாளமாக இருக்க முடியும்? அப்படி என்ன அவர் இளைஞர்களுக்குச் சொன்னார்? அவருடைய வழிகாட்டுதல் 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பொருந்துமா என்பதை போன்ற கேள்விகள் எழுகிறதல்லவா! எல்லாரையும்விட இளைஞர்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை கொண்டிருந்தார் விவேகானந்தர். "துடிப்பான இளமை காலத்தில்தான் உங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும். நரை எய்த பின்பு அல்ல" என்றார் அவர். ஆன்மிகத்தைக் கடந்தும் உடல் ஆரோக்கியம், சமூகப் பொறுப்பு, அறிவுத் திறன் மேம்பாடு குறித்துத் தொடர்ந்து அவர் பேசினார். சொல்லப்போனால் விவேகானந்தர் என்னும் மாமனிதர் ஆன்ம யோகி என்பதைக்காட்டிலும் கர்ம யோகி ஆகவே அடையாளம் காணப்படுகிறார். காரணம் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், யோக மார்க்கம், கர்ம மார்க்கம் ஆகியவற்றில் அவர் செயலுக்கே முக்கியத்துவம் அளித்தார். அதுவே ஆன்மிக விடுதலைக்கும் வழிவகுக்கும் என்றார். அறிவுத் திறனை நாடு! கல்வி இன்றியமையாதது என்பதைத் தொடர்ந்து பறைசாற்றினார் விவேகானந்தர். "வெறுமனே தகவல்களை மூளையில் அடுக்கிவைத்து அது செரிக்காமல் அழுகிப்போகவிடுவது கல்வி அல்ல. வாழ்க்கையைக் கட்டமைக்கவும், சிந்தனைகளை உள்வாங்கிச் சீர்தூக்கிப் பார்க்க உதவுவதும்தான் உண்மையான கல்வி" என்றவர், தேசியக் கல்விக் கொள்கையானது, "மதச்சார்பின்மையோடு சமய நல்லிணக்கத்தைப் பேணும் விதமாக வடிவமைக்கப்பட வேண்டும்" என்றார். இந்தியச் சமூகம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட அவர் முன்வைத்த சிந்தனைகளில் கல்விக்குத்தான் முதல் இடம் அளித்தார். "வாழ்க்கையோடு போராடச் சாமானியர்களுக்குக் கற்றுத் தராத, ஒருவருடைய குணத்தை வளப்படுத்தாத, மனித நேயத்தைப் போதிக்காத, சிங்கம் போன்ற துணிவைக் கற்றுத்தராதது கல்வியே அல்ல. தன்னிறைவு அடையக் கற்றுத்தருவது மட்டுமே உண்மையான கல்வி" என்றார். உடல் ஆரோக்கியத்தைத் தேடு! வாழ்க்கையில் எத்தகைய உயரத்தை எட்டினாலும் அர்த்தமுள்ளதாக அதை மாற்ற உடலும் மனமும் வலிமையாக இருக்க வேண்டும் என்றார் விவேகானந்தர். அதற்கு முதல் கட்டமான அச்சம் தவிர்க்கச் சொன்னார். "எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. உன்னால் அற்புதமான செயல்களைச் செய்ய முடியும். ஆனால் நீ பயப்படும் நொடிப்பொழுதிலேயே உன்னை இழக்கிறாய். இவ்வுலகில் அத்தனை துன்பங்களுக்கும் காரணம் அச்சமே. உனக்குள் சக்தி குடிகொண்டிருக்கிறது. அதை உணர்ந்தால் எதுவும் சாத்தியமே. நீ பலம் வாய்ந்தவள் (ன்) என்பதை நம்பு. பலவீனமானவள் (ன்) என்பதை நம்ப மறுத்திடு. எழுந்து நின்று உனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்து. ஆகையால், நிமிர்ந்து நில், விழித்திரு, உன்னுடைய இலக்கை எட்டும்வரை ஓயாதே!" என்று அறைகூவல் விடுத்தார். இங்குத் தெய்வீகத் தன்மை என்கிற ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இது முழுக்க முழுக்க ஆளுமைத் திறனை மேம்படுத்துவதற்கான பொன்மொழியே. நிச்சயமாக இந்த வரிகள் இளைஞர்களுக்கு எக்காலமும் பொருந்தும், உத்வேகம் ஊட்டும். மனவலிமையை மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் முன்னிலைப்படுத்தி அவர் உரையாற்றினார். "கீதையைப் படிப்பதை விடவும் கால்பந்து விளையாடும்போது நீ சொர்க்கத்தை நெருங்குகிறாய்" என்கிற வரி, அவர் எத்தனை யதார்த்தமாக யோசிக்கக்கூடியவர் என்பதைக் காட்டுகிறது. வெறும் ஆன்மிகவாதியாக மட்டுமே அடையாளப்படுத்தப்படும் ஒருவர், அதைவிடவும் நிதர்சன உலகுக்கு முக்கியத்துவம் தருவது ஆச்சரியமளிக்கிறது. 'இரும்பு போன்ற தசைகளும் எஃகு போன்ற நரம்புகளும் வேண்டும்' என அவர் தொடர்ந்து போதித்தார். 'பலம்தான் வாழ்வு, பலவீனம் மரணம்' என்பதைத் தூக்கிப்பிடித்தார். சமூகப் பொறுப்போடு செயல்படு! சமூகப் பணிகளைச் செய்வது என்பது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் தனி மனிதர்களின் வளர்ச்சிக்கும் முக்கியத் தேவையாகக் கருதினார் விவேகானந்தர். "அற்புதமான தாய்நாடு இந்தியா என்கிற சிந்தனையைத் தவிர, அத்தனை கடவுளர்களும் நம் மனதிலிருந்து மறைந்து போகட்டும்.- அடுத்த 50 ஆண்டுகளுக்கு நம்முடைய தொடக்க உரை இதுவே" என்றார். மனதைச் சுத்தப்படுத்திச் சமூக முன்னேற்றத்துக்கு உழைக்க அழைப்புவிடுத்தார். "நாம் முதலில் வணங்க வேண்டிய கடவுளர்கள் சக மனிதர்களே! பொறாமைப்பட்டு ஒருவரோடு ஒருவர் சண்டையிடாமல் சக மனிதர்களை தொழுதிட வேண்டும்" என்றார். அவர் சுட்டிக்காட்டும் சக மனிதர்கள் ஒடுக்கப்பட்ட மக்களும் சாமானியர்களும்தான். சொல்லப்போனால், சமூக சேவைகளை முன்னெடுத்துச் செல்ல வலியுறுத்தித் தொடர்ந்து அவர் மக்களிடம் பேசினார். "எல்லாமே கிடைத்துவிடும். ஆனால் வலிமையான, வீரியமான, நம்பத்தகுந்த துணிச்சலான இளைஞர்கள்தான் இன்றைய தேவை. அப்படிப்பட்ட 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். உலகை மாற்றிக் காட்டுகிறேன்" என எழுச்சி உரை ஆற்றினார். இதில் கவனிக்க வேண்டியது. விவேகானந்தர் ஏதோ 100 இளைஞர்களைக் கேட்கவில்லை. வலிமை மிகுந்த, நம்பத்தகுந்த எனும்போது அங்கு உடல் பலம், சிந்தனை வளம், கொள்கையில் உறுதி உடைய இளைஞர்களையே அவர் தேடினார். அப்போதுதான் புரட்சி சாத்தியம் என்று குரல் எழுப்பினார். இப்படி எது கல்வி என்பதில் தொடங்கி, உடலிலும் உள்ளத்திலும் இளைஞர்களுக்குப் பலம் அவசியம், சமூக நல்லிணக்கம் என்பதுவரை இளைஞர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார் விவேகானந்தர். ஆன்மிகத்தோடு சமய சார்பற்ற பார்வையும் கொண்டிருந்த அவருடைய சிந்தனைகளை ஆன்மிகம் கடந்து புரிந்துகொள்ளத் தொடங்கினால், இந்திய தேசம் இளைஞர்களின் தேசமாக விரைவில் மாறும்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment