Wednesday 14 December 2016

சகதியில் டிராக்டர் ஓடுவது எப்படி?

சகதியில் டிராக்டர் ஓடுவது எப்படி? | சகதியில் இரு சக்கர வாகனத்தை ஓட்ட முடியுமா? ஓர் அடி சகதியில்கூட ஓட்ட முடியாது. சகதியில் மாட்டிக் கொள்ளும் இல்லையா? ஆனால், வயல்களில் இரண்டு அடிக்கும் அதிகமான ஆழமுள்ள சகதியில் அவ்வளவு பெரிய டிராக்டர் சர்வ சாதாரணமாகச் சுற்றிச்சுற்றி வருவது எப்படி? டிராக்டர் ஏன் சகதியில் சிக்கிக் கொள்வதில்லை?  பத்துக் காகிதங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை ஒன்றாகச் சேர்த்து வைத்துக்கொண்டு கை விரல்களால் துளையைப் போடுங்கள். துளையைப் போட முடிகிறதா? இல்லை அல்லவா? ஆனால், அதே பத்துக் காகிதங்களை, ஏன் இன்னும் பத்துக் காகிதங்களைக்கூடச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். சிறு ஊசியால் துளையைப் போடுங்கள். துளையைப் போட முடிகிறது அல்லவா? எப்படி?! ஊசியின் முனை கூர்மையாக இருப்பதால் அதைக் கொண்டு எளிமையாக ஓட்டை போட முடிகிறது. ஊசி மாதிரி நம் கை விரல்கள் கூர்மையாக இல்லை என்றுதானே நினைக்கிறீர்கள்? சரிதான், கூர்மையாக இருப்பதால்தான் துளையிட முடிகிறது. கூர்மையாக இருப்பதால் எப்படி துளையிட முடிகிறது? இதற்குக் காரணம் அழுத்தமும், பரப்பளவும்தான். இதற்கு மட்டுமல்ல, ஊசியால் துணிகளைத் தைப்பது, ஊசியால் தைப்பது, டிராக்டர் சகதியில் உழவு செய்வது போன்றவற்றுக்கும் இதுதான் காரணம். முதலில் ஊசி எப்படி, கடினமான துணிகளையும், தாள்களையும் தைக்கிறது என்று பார்ப்போம். ஊசியைக் கொண்டு தாள்களைத் தைக்கும்போது நாம் ஊசி மீது கொடுக்கும் முழு அழுத்தமும், அந்த ஊசியின் கூர் முனை வழியே இறங்குகிறது. நாம் செலுத்தும் முழு விசையும் பரப்பளவும் மிகவும் குறைந்த பகுதி வழியே செல்கிறது. அதிக அழுத்தம் குறைந்த பரப்பின் வழியே செலுத்தப்படுவதால் அது தாக்கும் பொருளைத் துளையிட்டுச் செல்கிறது. சாகுபடி வயல்களில் உழவு செய்யும் டிராக்டர்களின் அழுத்தம், அதன் பெரிய சக்கரங்களின் வழியே பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மிக அதிகமான அழுத்தமாக இருந்தாலும்கூட அது செலுத்தப்படும் பரப்பு அதிகம். அதனால், தரையின் மீது குறைந்த அழுத்தத்தையே அது தருகிறது. செயல், ஆற்றல், அழுத்தம், விசை ஒரு பொருளின் மீது செலுத்தப்படும்போது அது அமிழ்வதோ அல்லது மிதப்பதோ, அது செலுத்தப்படும் பரப்பளவைப் பொறுத்தே அமைகிறது. மூன்று டன் எடையுள்ள டிராக்டர், ஒரு சதுர சென்டி மீட்டர் மீது சுமாராக 250 கிராம் அழுத்தத்தையே தருகிறது. இதன் காரணமாகத்தான் டிராக்டர் மணற்பாங்கான இடங்களில் எளிதாகப் பயணம் செய்கிறது. இதேபோல பனிச்சறுக்கு விளையாட்டுகளின்போது 'சறுக்கு மட்டைகள்'பயன்படுத்துவதைப் பார்த்திருப்பிர்கள். இதிலும்கூட இந்தத் தத்துவமே பயன்படுகிறது. பனி(ச்சறுக்கு) மலைகளில் நாம் தனியாக வெறும் கால்களில் நடந்தால் சதுப்பு நிலங்களில் கால்கள் உள்வாங்குவது போல அமிழ்ந்து மாட்டிக்கொள்வோம். ஆனால், பனிச்சறுக்கு மட்டைகளில் நாம் செலுத்தும் அழுத்தம், மட்டை முழுவதும் பரவலாகப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எனவே நாம் எளிதாகச் சறுக்கிச் செல்ல முடிகிறது. குறைவான பரப்பின் மீது அதிக அழுத்தம் பயன்படுத்துகிற தத்துவத்தின் அடிப்படையில் ஊசிகள், கத்திகள் மரம் அறுக்கப் பயன்படும் அரம், கோடரிகள், அரிவாள் போன்ற கருவிகள் செய்யப்படுகின்றன. அதிகப் பரப்பின் மீது, அதிக அழுத்தத்தைப் பரவலாக்கி மிதக்கச் செய்கிற தத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு வாகனங்களும் ( ராணுவ டாங்கிகள் உள்ளிட்ட) தயார் செய்யப்படுகின்றன. நாம் அன்றாடம் பார்க்கிற லாரிகள், பேருந்துகள், ரயில்கள் போன்றவைகூட இந்தத் தத்துவத்திலேயே இயங்குகின்றன.

No comments:

Popular Posts