Friday 23 December 2016

கருண் நாயர்: முச்சதத்தில் ராயல் முத்திரை!

கருண் நாயர்: முச்சதத்தில் ராயல் முத்திரை! சர்வதேச கிரிக்கெட்டில் கன்னி சதத்ததை எந்த வீரராலும் எப்போதுமே மறக்கவே முடியாது. அதுவும் கன்னி சதமே முச்சதமாக அமைந்தால் அது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் பாக்கியமாகவே பார்க்கப்படும். இந்தியக் கிரிக்கெட்டின் 84 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் அப்படி யாருக்கும் கிடைக்காத பாக்கியம் கருண் நாயருக்குக் கிடைத்திருக்கிறது. தான் விளையாடிய 3-வது இன்னிங்ஸிலேயே அந்தப் பாக்கியம் கருண் நாயருக்குக் கிட்டியது பெரும்பேறுதான். முச்சதம் அடித்து ஊரையே தன் பெயரை உச்சரிக்க வைத்த கருண் நாயரின் சாதனையைப் பற்றியும் அவரைப் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம். சர்வதேச கிரிக்கெட்டில் முச்சதம் அடிப்பது என்பது எப்போதுமே தனிச் சிறப்புதான். இதற்குமுன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 முச்சதங்கள் விளாசப்பட்டிருக்கின்றன. சென்னையில் கருண் நாயர் விளாசியது சர்வதேச 30-வது முச்சதம். சர்வதேச கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய 26-வது வீரர் கருண் நாயர். மிகக் குறைந்த வயதில் (25 வயது) முச்சதம் விளாசியதும் அவர் மட்டுமே. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேரி சோபர்ஸ் (365 அவுட் இல்லை), ஆஸ்திரேலியாவின் பாப் சிம்ப்சன் (311) ஆகியோர் மட்டுமே முதல் சதத்தை முச்சதமாக விளாசியிருக்கிறார்கள். தற்போது மூன்றாவது வீரராகக் கருண் நாயர் (303 அவுட் இல்லை) இந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறார். முதல் சதத்தை முச்சதமாக மாற்றிய வீரர்களில் மூன்று பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தாலும், இதில் கில்லி வீரர் கருண் நாயர்தான். ஏனென்றால், கேரி சோபர்ஸ் தனது 32-வது இன்னிங்ஸிலும், பாப் சிம்ப்சன் தனது 52-வது இன்னிங்ஸிலுமே அறிமுகச் சதத்தோடு முச்சதத்தைக் கடந்தார்கள். ஆனால், கருண் நாயர் தனது 3-வது இன்னிங்ஸிலேயே இந்தச் சாதனையைப் படைத்திருப்பது புத்தம் புதிய சாதனை. முச்சதம் விளாசிய வீரர்களில் மூன்றாவது சதத்தைக் குறைந்த பந்தில் கடந்தது கருண் நாயர்தான். 200 ரன்னைக் கடந்த பிறகு 300 ரன்னைக் கடக்க அவருக்கு 80 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டன. இதுவும் ஒரு வகையில் சாதனைதான். இந்திய வீரர்களில் வீரேந்திர சேவாக்குக்குப் பிறகு முச்சதம் அடித்த ஒரே வீரர் கருண் நாயர்தான். சேவாக் இரண்டு முறை (309, 319) குவித்திருக்கிறார். கருண் நாயர் முச்சதம் விளாசிய இதே சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்தான் வீரேந்திர சேவாக் 2008-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 319 ரன் குவித்தார். இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை 8 முச்சதங்கள் விளாசப்பட்டுள்ளன. இந்த 8 சதங்களில் முதல் 7 முச்சதங்கள் ஆசியாரல்லாதவரால் விளாசப்பட்டவை. இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் விளாசிய முதல் ஆசியர் கருண் நாயர்தான். இந்திய அணி சார்பில் 5-வது ஆட்டக்காரராகக் களமிறங்கி அதிகபட்ச ரன் குவித்ததும் கருண் நாயர் மட்டுமே. இதற்கு முன்பு 2013-ல் சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மகேந்திர சிங் தோனி 226 ரன் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. முதல் தர போட்டியில் இரண்டாவது முறையாக முச்சதம் விளாசியிருக்கிறார் கருண் நாயர். கடந்த ஆண்டு ரஞ்சி இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் தமிழ் நாடும் கர்நாடகமும் மோதின. தமிழ்நாடு முதல் இன்னிங்ஸில் 134 ரன்களில் ஆட்டமிழக்க, கர்நாடக அணி 84/5 என்று தத்தளித்தது. பின்னர் களமிறங்கிய கருண் நாயர், லோகேஷ் ராகுலுடன் இணைந்து பேட்டிங்கில் மிரட்டினார். அந்தப் போட்டியில் ராகுல் 188 ரன்களைக் குவித்தார். கருண் நாயரோ 872 நிமிடங்கள் களத்தில் நின்று 328 ரன் குவித்தார். ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றிலேயே இறுதிப் போட்டியில் முச்சதம் எடுத்த ஒரே வீரர் கருண் நாயர் மட்டும்தான். அதுமட்டுல்ல இரண்டு வீரர்களும் தனித்தனியாகச் சென்னை டெஸ்ட் போட்டியில் (ராகுல் 199, கருண் நாயர் 303) சதங்கள் விளாசியது வரலாற்று நிகழ்வு என்றே சொல்ல வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு கருண் நாயர் தேர்வான பிறகு டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆலோசகரான டிராவிட்டிடம் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காகப் பல டிப்ஸ்களைப் பெற்றிருக்கிறார். 'இந்தியாவின் சுவர்' என்றழைக்கப்பட்ட டிராவிட்டிடம் பெற்ற ஆலோசனையோ என்னவோ, அவர் நீண்ட நேர ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியிருக்கிறது. கருண் நாயரின் பூர்வீகம் கேரளா. பிறந்தது ராஜஸ்தானில். வளர்ந்தது எல்லாமே பெங்களூருவில்தான். அவரது முழு பெயர் கருண் கலாதரன் நாயர். இவர் கர்நாடக அணி சார்பில் ரஞ்சியில் விளையாடி வருகிறார். கர்நாடக வீரராக அறியப்பட்டாலும் கருண் நாயரின் முச்சதம் கேரளவாசிகளை குஷியில் ஆழ்த்தியிருக்கிறது. கேரளக்காரர்கள் இந்தியக் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எதிர்பார்க்கப்பட்ட சாந்தும் கிரிக்கெட் விளையாடத் தடையின் காரணமாக முடங்கியதால், கருண் நாயரைக் கேரளாவின் கிரிக்கெட் அடையாளமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

No comments:

Popular Posts