வாட்ஸ் அப் செயலியினைப் பயன்படுத்தாத ஸ்மார்ட் போன் பயனாளர்கள் இருக்க முடியாது. செய்திகளை அனுப்பிப் பெறவும், விடியோ வழியாகவும், தொலைபேசி வழியாகவும் அழைப்புகளை ஏற்படுத்த மிகப் பயனுள்ள செயலியாக இது அறிந்தேற்பு பெற்றுள்ளது. எனவே, பலரும் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது குறித்த பல சந்தேகங்களைத் தாங்கி வரும் வாசகர்கள் கடிதங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இவர்களில் பலர், செய்தி அனுப்புகையில், ஏன் அதன் ஓரமாக டிக் அடையாளங்கள் காட்டப்படுகின்றன. சில நேரங்களில் ஒன்றாகவும், சில நேரங்களில் இரண்டாகவும் இவை அமைந்துள்ளன. வண்ணங்களிலும் வேறுபாடுகள் உள்ளன. இவை நமக்குக் கூறும் செய்தி என்ன? என்று கேட்டு வருகின்றனர். இது குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. நாம் வாட்ஸ் அப் மூலம் தகவல் டெக்ஸ்ட் அல்லது படங்கள் அனுப்புகையில், செய்தியை அடுத்து சிறிய 'செக் மார்க்' அமைக்கப்படுகின்றன. இவை, நாம் அனுப்பிய செய்தியின் அப்போதைய நிலையைத் தெரியப்படுத்துகின்றன. ஒரே ஒரு வெளிறிய டிக் அடையாளம், உங்கள் செய்தி வெற்றிகரமாக, உங்கள் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்டுவிட்டது எனக் காட்டுகிறது. ஆனால், அது இன்னும் அனுப்பப்பட்டவருக்குத் தரப்படவில்லை என்று பொருள். நீங்கள் செய்தியை அனுப்புகையில், சில நொடிகள் அல்லது நிமிடங்களுக்கு இந்த வெளிறிய வண்ணத்தில் ஒரு டிக் அடையாளம் காட்டப்படும். இந்த கால நேரத்தில், அந்த தகவல் உங்கள் மொபைல் போனிலிருந்து அனுப்பப்பட்டு, சரியான வழியில் பயணம் செய்து கொண்டிருக்கும். நீண்ட நேரம் இந்த வகை டிக் அடையாளம் இருந்தால், நீங்கள் யாருக்கு இந்த செய்தியை அனுப்பினீர்களோ, அவரின் மொபைல் போன் 'ஸ்விட்ச் ஆப்' ஆகி இருக்கலாம். அல்லது வேறு காரணங்களுக்காக மொபைல் போன் செயல்படா நிலையில் இருக்கலாம். அந்த மொபைல் போன், இயக்கப்பட்டு, இணையத் தொடர்பில் வந்தவுடன், அது எத்தனை நாட்களாக இருந்தாலும், அந்த செய்தி அவரின் போனுக்கு அனுப்பப்படும். அல்லது அந்த குறிப்பிட்ட நபர், உங்கள் போனிலிருந்து வரும் செய்திகளைத் தடை செய்திருந்தாலும், இந்த வகை டிக் அடையாளம் வெகு நேரம் இருக்கும். இதிலிருந்து அவருக்கு செய்தி சென்று சேரவில்லை என்பதனை அறிந்து கொள்ளலாம். இரண்டு வெளிறிய டிக் டிக் வெளிறிய வண்ணத்தில் இரண்டு டிக் அடையாளங்கள் இருந்தால், உங்கள் செய்தி சென்றடைய வேண்டிய ஸ்மார்ட் போனை அடைந்துவிட்டது. ஆனால், அதனைப் படிக்க வேண்டியவர் இன்னும் படிக்கவில்லை என்று பொருள். (நீங்கள் செய்தி அனுப்பிய நபர், தான் படித்துவிட்டதனை, செய்தி அனுப்பியவர் அறியக்கூடாத வகையில், அதற்கான பதிவை செயல்படக் கூடாத வகையில் முடக்கி வைத்திருந்தாலும், அவர் படித்ததை நாம் அறிய முடியாது. இரண்டு வெளிறிய டிக் அடையாளங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும்.) அவர் அதனைத் திறந்து படித்தால், படித்ததற்கான டிக் அடையாளங்கள் ஏற்படுத்தப்படும். நீங்கள் வாட்ஸ் அப்பில், குழு ஒன்றின் உறுப்பினராக இருந்து, தகவல் ஒன்று அந்தக் குழுவில் அனுப்பப்பட்டால், அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் அத்தகவல் சென்ற பின்னரே, இரண்டு வெளிறிய டிக் அடையாளங்கள் காட்டப்படும். அதுவரை வாட்ஸ் அப் ஒரே ஒரு வெளிறிய டிக் அடையாளத்தினையே காட்டும். இரண்டு நீல நிற டிக் : இரண்டு நீல நிற டிக் அடையாளங்கள், குறிப்பிட்ட அந்த செய்தி படிக்கப்பட்டுவிட்டதனை உறுதிப்படுத்துகிறது. தகவல் பெற்றவர் அதனைப் படித்தாரோ இல்லையோ, அதனைத் திறந்திருந்தாலே, அது படிக்கப்பட்டதாகக் காட்டப்படும். இங்கும், படித்ததை உறுதிப்படுத்தும் செயல்பாட்டினை, தகவல் பெறுபவர் முடக்கி இருக்கக் கூடாது. குழுவில், அனைவரும் குறிப்பிட்ட தகவலைப் பெற்று, திறந்து படித்திருந்தால் தான், இரண்டு நீல நிற டிக் அடையாளம் காட்டப்படும். உங்கள் தகவல், அதனைப் பெற்றவரால் எப்போது பெறப்பட்டது என அறிய வேண்டும் எனில், அதன் மீது தொடர்ந்து அழுத்துங்கள். பின்னர் Info என்பதனைத் தேர்ந்தெடுங்கள். உடன், அந்த செய்தி எப்போது அவரின் போனை அடைந்தது மற்றும் பெற்ற நபர், பெற்றதற்கான ஒப்புகை கொடுப்பதை முடக்கி வைத்துள்ளாரா, உங்கள் செய்திகளுக்குத் தடை ஏற்படுத்தியுள்ளாரா, எப்போது படித்தார் என்ற விபரங்களை அறியலாம். மேலே தரப்பட்டுள்ள தகவல்களைப் பின்பற்றி, வாட்ஸ் அப் செயலி தரும் கூடுதல் வசதிகளைச் சரியாகப் புரிந்து உங்களால் செயல்பட முடியும்.
Monday, 26 December 2016
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment