மாறிவரும் சமூகமும் விவாகரத்துச் சவால்களும்
சமீபத்தில் புணே நகரில் நடந்த ஒரு விவாகரத்து வழக்கு, இன்றைய சமூக மாற்றத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது. இரண்டு ஆண்டுகள் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட மருத்துவர்-பொறியாளர் தம்பதி, 24 மணி நேரத்திலேயே பிரிய முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடினர். கணவர் கப்பலில் பணிபுரிவதால் ஏற்படும் நிச்சயமற்ற சூழலை இருவரும் காதலிக்கும் காலத்தில் கவனிக்கத் தவறியதே, திருமணமான முதல் நாளிலேயே பெரிய அதிருப்திக்குக் காரணமாக அமைந்தது.
நீதித்துறையின் பார்வை: உறவைப் பாதுகாப்பதில் சட்டம்
திருமணம் என்பது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், அது சமுதாய ஒழுங்கமைப்பின் அடிப்படை அங்கமாக மாறுவதால், விவாகரத்து என்பது வெறும் ஒப்பந்தமாக அல்லாமல், நீதிமன்றத்தின் ஒப்புதல் அவசியமான ஒரு பொது விவகாரமாகவே சட்டம் பார்க்கிறது. உறவைப் பாதுகாப்பதே நீதிமன்றங்களின் முதல் கடமை என்பதால், தற்காலிகக் கோபத்தால் புனிதமான பந்தம் சிதைந்துவிடாமல் இருக்க சட்டம் உறுதியாக உள்ளது. அதேசமயம், மீட்க முடியாத நிலையை எட்டிய உறவை வலுக்கட்டாயமாக நீட்டிப்பது கொடுமை என உச்ச நீதிமன்றம் கருதுகிறது. உறவுகள் முறியும் போது தனிநபர்களின் மன ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதித்துறை கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
இந்தியாவில் விவாகரத்தின் நிலை
இந்தியாவில் ஒரு நாளைக்குச் சராசரியாக 100 புதிய விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன. தற்போது நீதிமன்றங்களில் சுமார் 11,95,738 குடும்ப வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும், விவாகரத்து என்பது வாழ்வின் முடிவல்ல; அது புதிய அத்தியாயத்தின் தொடக்கம். அமெரிக்க எழுத்தாளர் எலிசபெத் கில்பர்ட், விவாகரத்துக்குப் பிறகு பயணம் மற்றும் கலாசார அறிமுகங்கள் மூலம் மனக்காயங்களுக்குத் தீர்வு கண்டது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
சர்வதேசப் போக்குகள் மற்றும் மாற்றங்கள்
சர்வதேச அளவில், வளர்ந்த நாடுகளில் ஒட்டுமொத்தப் பிரிவுகள் குறைந்திருந்தாலும், ஐம்பது வயதைக் கடந்தவர்களிடையே ஏற்படும் "நரைத்த கால விவாகரத்து" எனும் போக்கு கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது, நீண்ட காலத் திருமணங்கள் கூட தனிமனிதத் தேவைகள் மற்றும் மாற்றங்களைச் சந்தித்துள்ளதைக் காட்டுகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கர்ம் சந்த், கர்தாரி சந்த் தம்பதியினர் சுமார் 90 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த மணவாழ்க்கையின் ரகசியமாக அளவான உணவு, நேர்மறையான சிந்தனை மட்டுமே எனக் குறிப்பிட்டது நம்பிக்கையூட்டினாலும், இன்றைய சூழல் வேறு.
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் பொருளாதார மேம்பாடு மற்றும் பெண்களின் கல்வி வளர்ச்சியால், பாரம்பரியக் குடும்பக் கட்டமைப்புகள் மறுபரிசீலனைக்கு உள்ளாகின்றன. பொருளாதாரச் சுதந்திரம் பெற்ற பெண்கள், சமத்துவமற்ற உறவுகளில் இருந்து விவாகரத்து பெற்று வெளியேறுவதை உரிமையாகக் கருதுகின்றனர். இது, பெண்களின் மீது காலங்காலமாகச் சுமத்தப்பட்டிருந்த 'சகிப்புத்தன்மை' எனும் பிம்பம் உடைவதையும் உணர்த்துகிறது. வளைகுடா நாடுகளிலும்கூட, நவீனமயமாக்கலால் திருமணமான குறுகிய காலத்திலேயே விவாகரத்து செய்யும் விகிதம் அதிகரித்து வருவது, தனிமனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வு பரவுவதைக் காட்டுகிறது.
உறவுகளில் விரிசல்: காரணங்களும் தீர்வுகளும்
குடும்ப அமைப்பில் ஏற்படும் விரிசல்கள் தனிநபர் சார்ந்தவை மட்டுமல்ல; அவை ஒரு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பையும் தட்டியெழுப்புகின்றன. திருமணத்துக்கு முந்தைய ஆலோசனைகள் இன்று ஆடம்பரமாக இல்லாமல் அவசியமான தேவையாக மாற வேண்டும். உறவுகளுக்குள் நுழையும் முன் எதிர்பார்ப்புகள், பொருளாதாரத் திட்டமிடல், பணிச் சூழல் சவால்கள் ஆகியவற்றை வெளிப்படையாக விவாதிப்பது அவசியம்.
உறவுகளில் விரிசல் ஏற்பட முக்கியக் காரணம், தம்பதிகளிடையே குறைந்துவரும் நேரடி உரையாடல்களே. மின்னணு சாதனங்களின் பயன்பாட்டால் நேரில் பேசும் நேரம் 45% குறைந்துவிட்டது. தினமும் 30 நிமிடமாவது கைப்பேசியை ஒதுக்கி வைத்துவிட்டு மனம் விட்டுப் பேசுவது ஆரோக்கியமான உறவுக்கு வழிவகுக்கும். இன்றைய மின்னுலகக் காலத்தில், அருகருகே இருந்தாலும் ஆளுக்கொரு கைப்பேசியில் மூழ்கிக் கிடப்பதால், துணையின் உணர்வுகளைவிட முன்பின் தெரியாதவர்களின் விருப்பக் குறிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திரையிலிருந்து இதயத்துக்கு மாற வேண்டும்.
திருமண வாழ்வின் வெற்றி என்பது சண்டைகளே இல்லாத சூழலில் இல்லை; மாறாக, சண்டைகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் மீண்டும் எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. பிடிவாதம் ஒருவரை வெல்லப் பயன்படலாம்; ஆனால், ஓர் உறவை வெல்ல விட்டுக்கொடுத்தல் மட்டுமே உதவும்.

0 Comments