Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

சமூக ஊடகக் காலத்தில் தமிழர் கொண்டாட்டங்களின் பரிணாமம்: பிம்பங்களைத் தேடும் துயரம்


தமிழர் பண்பாட்டில் திருவிழாக்களும் இல்லச் சடங்குகளும் வெறும் களியாட்டங்கள் அல்ல. அவை சமூக உறவுகளைப் பிணைக்கும் கண்ணுக்குத் தெரியாத இழை; சமூகத்தின் கூட்டு மனசாட்சியை உரசிப் பார்க்கும் கூட்டுச் செயல்பாடுகள். ஆனால், இன்றைய சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தில், இந்தக் கொண்டாட்டங்களின் உண்மையான ஆன்மா நசுக்கப்பட்டு, அவை வெறும் காட்சிகளாகவும், போலியான பாவனைகளாகவும் மாறிவிட்டன. இது நம் காலத்தின் ஒரு பெரும் பண்பாட்டுத் துயரம்.


உறவுகளின் நெருக்கத்தைக் குறைக்கும் தொழில்நுட்பம்

முன்பெல்லாம் திருமண வீடுகளில் மனிதர்களின் அன்யோன்யம் வாசலிலேயே தொடங்கிவிடும். ஆனால் இன்று, திருமண மண்டபங்களில் நாம் காண்பது உறவுகளின் நெருக்கத்தைவிட, நிழற்படக் கருவிகளின் ஒளிக்கற்றைகளைத் தேடி அலையும் மனிதர்களைத்தான். நிச்சயதார்த்தம் முதல் வளைகாப்பு வரை அனைத்தும் ஒரு நாடக மேடைபோல மாற்றப்பட்டுவிட்டன. மணமக்களின் அக உணர்வுகளைவிட, நிழற்படக் கலைஞரின் கோணங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. தாலி கட்டும் புனிதமான தருணத்தில்கூட, உறவுகளின் வாஞ்சையான பார்வையைவிட, அறிதிறன்பேசிகளின் செயற்கை வெளிச்சமே ஆதிக்கம் செலுத்துகிறது. இது உறவுகளின் சங்கமம் என்பதைவிட, 'பிம்பங்களின் சந்தை' என்றே சொல்லத் தோன்றுகிறது.

வாழ்வதற்காக அல்ல; பதிவிடுவதற்காக மட்டுமே!

இன்றைய கொண்டாட்டங்கள் வாழ்வதற்காக அல்ல; பதிவிடுவதற்காக மட்டுமே என்று மாறிவிட்டன. மங்கல நிகழ்வுகளுக்குச் செல்பவர்கள், அங்குள்ளவர்களிடம் நலம் விசாரிப்பதைக் காட்டிலும், அலங்காரங்களையும் உணவுகளையும் படம் பிடித்து சமூக ஊடகங்களில் நிலைத்தகவலாகப் பதிவிடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். பிறந்த நாள் கொண்டாட்டங்களில் மெழுகுவர்த்தி அணைக்கப்படும்போது பாடப்படும் வாழ்த்துப் பாடல் உண்மையான மகிழ்ச்சியில் ஊற்றெடுப்பதில்லை. அது, காணொலியில் சரியாகப் பதியப்பட வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் போலி ஒத்திகையாகவே உள்ளது. கேமரா அணைந்த அடுத்த விநாடியே, அறையில் மெளனம் குடியேறுகிறது. மக்கள் தங்கள் பதிவுக்குக் கிடைத்த விருப்பக் குறியீடுகளை எண்ணத் தொடங்கிவிடுகின்றனர். இது கொண்டாட்டத்தின் நேரடி அனுபவத்தை முழுமையாகச் சிதைக்கிறது.

மாறிப்போன பந்தி விசாரிப்புக் கலாசாரம்

தமிழர் பண்பாட்டின் ஆகச்சிறந்த அடையாளங்களில் ஒன்று பந்தி விசாரிப்பு. அங்கு பரிமாறுபவரின் அன்பும், உண்பவரின் திருப்தியும் உரையாடல்களாக மாறும். ஆனால் இன்று, இலை போடப்பட்டவுடன் கைகள் முதலில் அறிதிறன்பேசியைத்தான் தேடுகின்றன. உணவின் சுவையை நாவால் அறியும் முன்பே, அகிலம் அறியச் செய்கிறார்கள். முன்பு உணவின் தரமும் ருசியும் பேசப்பட்டது; இன்று அதை எடுத்த கோணம் பேசப்படுகிறது. அருகருகே அமர்ந்திருப்பவர்களிடம் புன்னகையைப் பரிமாறிக் கொள்ளக்கூட நேரமில்லாமல், கண்ணுக்குத் தெரியாத இணைய நண்பர்களுக்குப் பதில் சொல்வதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர்.

கூட்டுக் கலாசாரம் தனிமைக் கலாசாரமாகச் சுருங்குதல்

கிராமத்துத் திருவிழாக்களின் ஜாதி, மத பேதமின்றி மக்கள் ஒன்றுகூடிய 'மந்தை கலாசாரம்', இன்று 'வாட்ஸ்ஆப் குழு கலாசாரமாகச்' சுருங்கிவிட்டது. ஊர்த் திருவிழாக்களில்கூட, வேலை செய்பவர்களைவிடத் 'தற்படம்' எடுப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம். பாரம்பரியக் கலைகள் அவற்றின் கலைத் தன்மைக்காக ரசிக்கப்படாமல், இணையப் பக்கங்களை அலங்கரிக்கும் பின்னணி இசையாக மாற்றப்படுவது பண்பாட்டுச் சிதைவின் உச்சம். துக்க வீட்டில்கூட கைப்பேசியில் படம் பிடிப்பவர்களைக் காண முடிகிறது. உணர்வுகளின் வெளிப்பாடாக இருந்த கண்ணீரும், புன்னகையும் இன்று வெறும் குறியீடுகளாகிவிட்டன.

உளவியல் ஆபத்தும் வருங்காலமும்

உறவினர்களுடன் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த காலம் மறைந்து, இப்போது 'படங்களை மட்டும் அனுப்புங்கள், அப்புறம் பேசலாம்' என்று சொல்லும் இயந்திரத்தனமான மனிதர்களாக நாம் மாறிவிட்டோம். இதன் ஆபத்தான உளவியல் என்னவென்றால், 'தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம்' என்பதைவிட, 'தான் மகிழ்ச்சியாக இருப்பதாக மற்றவர்களுக்குக் காட்டிக்கொள்வதில்' மனிதர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மற்றவர்களின் அங்கீகாரத்துக்காக வாழத் தொடங்குவது சமூகத்தின் ஆன்ம பலத்தைக் குறைக்கும். நிஜமான அன்யோன்யம் குறைந்து, மேலோட்டமான தொடர்புகள் அதிகரிப்பது மக்களைத் தனிமைக்குள் தள்ளுகிறது.

மீண்டும் மனிதர்களைத் தேடுவோம்

தொழில்நுட்பம் நம் வாழ்வை எளிதாக்க வேண்டுமே தவிர, உணர்வுகளை ஆக்கிரமிக்கக் கூடாது. நிழற்படங்கள் எடுப்பதைக் குறைத்துவிட்டு, மனிதர்களை நேரில் பார்ப்போம். திரைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பதை விடுத்து, நிஜ உலக உரையாடல்களில் ஈடுபடுவோம். குழந்தைகளுக்கு உறவுகளின் உன்னதத்தை வாழ்த்தும் விதமாக நம் நேரத்தைச் செலவிடுவோம். வெறும் பதிவுகளுக்காகக் கொண்டாடப்படும் நிகழ்வுகள் வரலாற்றில் நிற்காது; அன்பான நினைவுகளில் மட்டுமே வாழும் தருணங்கள் என்றும் அழியாது. ஆரவாரமான விளக்குகளும், நிழற்படக் கருவிகளும் அணைந்த பிறகு மிஞ்சப் போவது நாம் பகிர்ந்துகொண்ட அந்த அன்பின் உரையாடல்கள் மட்டும்தான். எனவே, பிம்பங்களைத் தேடுவதை நிறுத்திவிட்டு, மீண்டும் மனிதர்களைத் தேடத் தொடங்குவோம். அப்போதுதான் நம் பண்பாடு சிதையாமல் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement