குழந்தைத் திருமணம்: சமூகப் பிரச்னையும் நிலையான வளர்ச்சி இலக்குகளும்
ஐக்கிய நாடுகள் சபையில் 2015-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals - SDGs) மூலம், 2030-ஆம் ஆண்டுக்குள் உலகில் நிலையான வளர்ச்சியை அடைவது இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. உலக உயிர்கள் செழித்து, அமைதியாக வாழ உருவாக்கப்பட்ட இந்த 17 இலக்குகளில், ஐந்தாவது இலக்கான பாலின சமத்துவம் மிகவும் முக்கியமானது. 2030-ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா இந்த இலக்கின் மூலம் உறுதியளித்துள்ளது.
இந்தியாவில் குழந்தைத் திருமணத்தின் நிலை
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், மாநிலங்களுக்கிடையே சமூக, அரசியல், பொருளாதாரக் காரணிகளால் மக்களின் முன்னேற்றம் சீரற்றுக் காணப்படுகிறது. எனினும், கடந்த பத்தாண்டுகளில் குழந்தைத் திருமணத்தைக் குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யுனிசெஃப்) 2023-ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, உலக அளவில் 64 கோடி பெண்கள் குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்துகொண்டனர். இதில் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. ஐ.நா.வின் இலக்கை அடைய இந்தியா இன்னும் இருபது மடங்கு வேகமாகச் செயல்பட வேண்டியுள்ளது.
குழந்தைத் திருமணங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்படாவிட்டால், வறுமை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, பாலின சமத்துவம், பொருளாதார வளர்ச்சி, காலநிலை நடவடிக்கை, அமைதி மற்றும் நீதி போன்ற ஒன்பது நிலையான வளர்ச்சி இலக்குகள் பாதிக்கப்படும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
குழந்தைத் திருமணத்திற்கான காரணிகள் மற்றும் பாதிப்புகள்
இந்தியாவில் குழந்தைத் திருமணங்களுக்கு முதன்மைக் காரணங்களாக வறுமை, கல்வியின்மை, பெற்றோரின் பொறுப்பற்ற செயல்பாடு மற்றும் விழிப்புணர்வு இன்மை ஆகியவை சொல்லப்படுகின்றன. இது பெண்களுக்கு எதிரான வன்முறைக்கும் ஒரு காரணமாக அமைகிறது.
மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பிகார், திரிபுரா போன்ற மாநிலங்களில் அதிகமாக இருந்தாலும், நாடு முழுவதும் அவ்வப்போது குழந்தைத் திருமண நிகழ்வுகள் நடக்கின்றன. தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின்படி, குழந்தைத் திருமணங்களின் சதவீதம் 2005-2006-இல் 47.4% ஆக இருந்தது, 2019-2021-இல் 23.3% ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.
சட்ட வரையறையும் தண்டனையும்
சட்டத்தின்படி, பெண் 18 வயதுக்குட்பட்டவராகவும், ஆண் 21 வயதுக்குட்பட்டவராகவும் இருந்து திருமணம் நடந்தால் அது 'குழந்தைத் திருமணம்' ஆகும். பாரதிய நியாய சன்ஹிதா, 2023-இன்படி, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012-இன் கீழ் (போக்ஸோ 2012) இது தண்டனைக்குரிய குற்றம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
குழந்தைத் திருமண தடைச் சட்டம், 2006-இன்படி, திருமணத்தை நடத்தியவர்கள், நிச்சயித்தவர்கள், பங்கேற்றவர்கள் அனைவரும் குற்றவாளிகளாகக் கருதப்படுவர். இவர்களுக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். குழந்தைத் திருமணம் ரத்து செய்யப்பட்டு சட்டப்படி செல்லாது என அறிவிக்கப்படும்.
குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (என்சிபிசிஆர்) வெளியிட்ட அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் விசாரிக்கப்பட்ட 3,563 குழந்தைத் திருமண வழக்குகளில் வெறும் 181 வழக்குகளுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. இந்த விகிதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டால், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு 19 ஆண்டுகள் ஆகலாம்.
பாதிப்புகள் மற்றும் தீர்வுக்கு எடுக்கப்படும் முயற்சிகள்
13 முதல் 19 வயதிற்குட்பட்ட பெண்கள் மகப்பேறு அடைவது பதின்ம மகப்பேறு என அழைக்கப்படுகிறது. இந்த இளம் வயதில் ஏற்படும் மகப்பேறு தாய்-சேய் உடல் நலனைப் பாதிக்கிறது. சிறுமிகளின் கல்வி பறிக்கப்பட்டு, அவர்கள் இளமையிலேயே குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.
மத்திய, மாநில அரசுகள் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. மத்திய அரசு 'பால் விவா முக்த் பாரத் அபியான்' மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை குழந்தைத் திருமணம் இல்லாத நாடாக மாற்ற முயற்சிக்கிறது. 'பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' பிரசாரமும் முன்னெடுக்கப்படுகிறது.
சத்தீஸ்கரிலுள்ள பலோட் மாவட்டம் 2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் "குழந்தை திருமணம்" இல்லாத மாவட்டமாக மாறியது. தமிழ்நாட்டில் சமூக நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 'முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்', 'புதுமைப் பெண் திட்டம்' போன்ற நலத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் நிலைமை
சமீபத்திய தகவல்களின்படி, தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்களும், 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்குப் பிரசவமும் அதிக அளவில் நடப்பதாகத் தெரியவந்துள்ளது. 2023-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு ஜூலை வரை, குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைவிட 56 சதவீதம் அதிகரித்துள்ளது. 2025-ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியான 'தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி' இதழில், 10 முதல் 19 வயதிலான பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் அதிக அபாயங்களைச் சந்திப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் வேலூரில் மட்டும் 59 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. அத்துடன் 18 வயதுக்குட்பட்ட 415 சிறுமிகளுக்கு பிரசவம் நடந்துள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைத் திருமணம் என்பது சமுதாயத்தில் ஆழமாகப் புரையோடிப் போன ஒரு நோயாகும். சமூக மக்களிடையே ஏற்படும் விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமே இந்த சமூகப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.


0 Comments