Tuesday 7 April 2020

ஆரோக்கிய வாழ்வை மீட்டெடுப்போம்

எம்.வெங்கையா நாயுடு,

இந்திய துணை ஜனாதிபதி.

இ ந்த ஆண்டின் உலக சுகாதார தினம், இதுவரை ஆயிரக் கணக்கானோரை கொன்றுள்ள கொரோனா கிருமிக்கு எதிராக போர்த்தொடுத்துள்ள நேரத்தில் வந்திருக்கிறது. இந்த நேரத்தில் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். அடிப்படையாக ஒரு மனிதன் தனக்கான சுகாதாரத்தை பராமரிப்பதோடு மட்டும் நிற்காமல், இந்த பூமியின் இயற்கையை அழிக்காததோடு, சுற்றுச்சூழலையும் பாதிக்காமல், ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கையும் நிறைவானதாக இருக்கச் செய்ய வேண்டும்.

உலக அளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காப்பாற்ற செவிலியர் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களின் பங்களிப்பை நினைவுகூரும் நாளாகவும் இந்த தினம் இருக்கிறது. விஞ்ஞானம், மருத்துவ முன்னேற்றங்கள் எவ்வளவு வேகத்தில் வளர்ச்சியை அடைந்திருந்தாலும், ஒரு மிகச்சிறிய நுண்ணுயிரி, தன்னை எவ்வளவோ கொடூரமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கான சரியான மருந்துகளை கண்டுபிடிப்பதற்காக விஞ்ஞானிகளை ஓடச் செய்திருக்கிறது.

அந்த கொடூர கிருமி, இளவரசனையும், இல்லாதவனையும் வித்தியாசப்படுத்தி பார்க்கவில்லை. மத, இன வேறுபாடுகளையும் கவனிக்கவில்லை. தினம்தினம் உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் அந்த கிருமியை பரவாமல் தடுக்க நாடுகள் தங்களின் எல்லைகளை மூடி ஊரடங்கை அறிவித்துள்ளன.

உலகத்தையும், மக்களையும் இணையதளம் இணைத்தாலும், இப்போது மக்கள் தங்களை சமூதாயத்தில் இருந்து தனிமைப்படுத்த வைத்துவிட்டது. இது அனைத்து மக்களுக்கான சோதனை காலம்.

இந்த போரை நாம் வெற்றி கொண்டு வந்து, பொருளாதார மந்த நிலை மற்றும் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து வெளியேற முயற்சிக்கும் அதே நேரத்தில், இதுபோன்ற புதிர்களுக்கு விடை காணவும் சிந்தனை செய்ய வேண்டும்.

இதுபோன்ற பேரழிவு சம்பவங்களை நம்மால் தடுக்க முடியுமா? நாம் நம்மை மேம்படுத்திக் கொள்ளும் முறை எப்படிப்பட்டது? நமது சுற்றுப்புற சூழலின் பலவீனம் எது? நமது தயாரிப்பு, நுகர்வின் நிலையற்ற தன்மை ஆகியவற்றைப் பற்றி கேள்வி எழுப்பும் நேரம் வரும்.

மற்ற உயிரினங்களின் வசிப்பிடங்களை அழிக்கும், மனிதனின் பேராசையே இதுபோன்ற பேரிடர்களுக்கு வழிகோலுகின்றன என்று ஒருபக்கம் விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையை மீட்டெடுப்பதற்காக, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவின் தொலைநோக்கு சிந்தனையைப் பற்றி சிந்திக்க இது சரியான தருணம். அனைத்து உயிரினங்களுக்கும் சமமுக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேத முனிவர்கள் உலகுக்கு எடுத்துரைத்தனர்.

அனைத்து உயிரினங்களையும் முனிவர்கள் போற்றினர். தாவரங்கள், குறிப்பாக அனைத்து நோய்களையும் குணமாக்கும் மூலிகைகள் அதிக அளவில் வளர்க்கப்பட வேண்டும் என்பதை முனிவர் கூறுவதாக ரிக் வேதத்தில் காணப்படுகிறது.

இயற்கையையும், மற்ற உயிரினங்களின் சக வாழ்க்கையின் முக்கியத்துவத்தைப் பற்றிய பழைய இந்தியாவின் சிந்தனையை வேதங்கள் வெளிப்படுத்துகின்றன. இயற்கை வணக்கம் என்பது நமது கலாசாரத்தின் பங்காக உள்ளது.

இயற்கையின் மாண்பை போற்றிய மூதாதயர்களின் உணர்வுகளை தலைகுனிந்து வணங்குவதாக மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார். இந்த உலகத்தில் உள்ள மக்களும், பிற உயிரினங்களும் இன்பமாக வாழ்வதற்கு வசதி செய்யும் வகையில், ஒவ்வொரு இந்தியனும், உலக பிரஜைகளும் இயற்கையை காப்பாற்றுவதற்கு போராட தயாராக வேண்டும்.

நாம் சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் நீரும் சுத்தமானதாக இருக்க வேண்டும். மண் வளத்தையும், மரம், செடி, கொடிகளின் நலனையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும்.

காற்றின் தரத்தில் திடீரென்று ஏற்பட்டுள்ள முன்னேற்றம், இந்த ஊரடங்கின் மூலம் தெரிய வந்துள்ளது. நகர்ப்புறங்களில் காணப்படும் வன விலங்குகளின் நடமாட்டம், எவ்வளவாய் இயற்கையை மனிதகுலம் சிதைத்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

ஒருமைப்பாடு என்பது உலகத்தில் மட்டுமல்ல, அது வான் வெளியிலும், பிரபஞ்சத்திலும் இருக்க வேண்டும் என்பதுதான் உலகுக்கு இந்தியா வைக்கும் வேண்டுகோள். வேதங்கள் அதை கூறுகின்றன.

பல கிருமிகளை அழித்தொழித்ததில் சுதந்திர இந்தியா ஏற்கனவே சாதனை படைத்துள்ளது. இதில் தட்டம்மை, போலியோவும் அடங்கும். தற்போது மனிதனின் சராசரி வாழ்நாள் காலம் 69 ஆண்டுகளாக உள்ளது. கடந்த 1990-2016-ம் ஆண்டுகளில், தொற்று, தாய்வழி, சத்து இன்மை, பிறப்பு ஆகிய காரணங்களால் ஏற்படும் நோய்களை 61 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக குறைத்திருக்கிறோம்.

ஆனாலும் ஆண்டுக்கு ஆண்டு வாழ்க்கை முறைகளில் ஏற்படும் மாற்றங்கள், தொற்றா நோய்களின் பெருக்கத்தை ஏற்படுத்திவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்புள்ள உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களில், இந்தியாவில் நிகழும் சாவுகளில் 61 சதவீதம் சாவு, இருதய கோளாறுகள், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற தொற்றா நோய்களினால் ஏற்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

எனவே வியாதிகளை உருவாக்கும் வாழ்க்கை முறைக்கு எதிராகவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கையாள வேண்டும் என்றும் தேசிய அளவிலான மிகப் பெரிய பிரசாரம் செய்யப்பட வேண்டும். நொறுக்குத் தீனிகளை அனைவருமே விட்டுவிடுவது நலம்.

நல்ல வாழ்க்கை முறைக்கான தகவல்கள், பள்ளிக்கூட பாடத்திட்டங்களில் இடம்பெற வேண்டும். மக்களுக்கு ஆரோக்கியமான வழிகளை போதிப்பதில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் முன்னின்று செயல்பட வேண்டும். நல்ல தகவல்களை மக்களிடம் சேர்க்கும் பங்களிப்பை பத்திரிகைகளும் தர வேண்டும்.

பொது சுகாதாரத்துக்கு தேவையானவற்றை கொரோனா நமக்கு சுட்டிக்காட்டியுள்ளது. இதை ஒரு எச்சரிக்கை அழைப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். நோய் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் நடவடிக்கைகளில் நாம் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த உலகத்தை நாம் மரங்கள், செடிகள், பறவைகள், விலங்குகளுக்கும் பங்களித்து வாழ்வதை சிந்தித்து பார்க்க வேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் ‘ஒரே சுகாதாரம்’ கருத்தின்படி, மக்களும், விலங்குகளும், தாவரங்களும் நல்வாழ்க்கை வாழ முடியும்.

நாம் ஒரே உலகைச் சேர்ந்தவர்கள். ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம். அனைவரும் நலமாக வாழும் நிலையை உருவாக்க நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

No comments:

Popular Posts