Tuesday 7 April 2020

கொரோனா உணர்த்தும் பாடம்

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ், காவல்துறை முன்னாள் தலைவர், சென்னை.

க டந்த நூறு ஆண்டுகளில் உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி, நிலைகுலைய வைத்த சம்பவங்களில் முதன்மையானது கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் ஏற்படுத்திவரும் கொடூர விளைவுகள். 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ள இந்த வைரசால் இதுநாள்வரை சுமார் 70 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்த தொற்றுக்கு அதிகமானவர்களைப் பலி கொடுத்த நாடுகள் வரிசையில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ஈரான், இங்கிலாந்து ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.

சீனாவிலுள்ள உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரசால் கடந்த டிசம்பர் மாதத்தில் முதல் உயிரிழப்பைச் சீனா சந்தித்தது. அதைத் தொடர்ந்து, ஒரு சில வாரங்களிலேயே சீனாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த வைரஸ் சீன தேசத்தைக் கடந்து, உலக நாடுகள் முழுவதும் ஓரிரு மாதங்களிலேயே பரவிவிடும் என்பதை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வல்லரசுகள் கணிக்கத் தவறிவிட்டன.

சீன அரசு கொரோனா வைரஸ் பரவியுள்ள உகான் நகரை முழுமையாகத் தனிமைப்படுத்தி, போர்க்கால அடிப்படையில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொண்டதின் விளைவாக, இந்த வைரசால் உகான் நகரைக் கடந்து சீனாவின் மற்ற பகுதிகளில் பரவ முடியவில்லை. இந்த வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பை சீனா விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால், விமானப் பயணிகள் மூலம் இந்த வைரஸ் சீனாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பிற உலக நாடுகளுக்கும் பரவியதைக் காலம் கடந்துதான் உலகநாடுகள் உணரத் தொடங்கின.

கொரோனா வைரஸ் தொற்றுநோயாளி ஒருவர் தன்னுடன் நேரடியாகத் தொடர்பு கொள்பவர்களுக்கு எளிதில் நோயைப் பரப்பிவிடுவார் என்பதையும், இந்த வைரஸ் தொற்றிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்வதுதான், இதன் தாக்கத்தில் இருந்து விடுபட தற்பொழுதுள்ள ஒரே வழி என்பதையும் பல உலக நாடுகள் காலம் கடந்து உணரத் தொடங்கியதின் விளைவுதான் லட்சக்கணக்கானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக் காரணமாக அமைந்துவிட்டது. இந்த தொற்றுக்கான மருந்து இதுநாள்வரை கண்டுபிடிக்கப்படாத காரணத்தால் அறுபதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வைரசுக்கு இதுநாள்வரை பலியாகி உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்பெயின் நாட்டு இளவரசி மரிய தெரசா.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பல உலக நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள், கேளிக்கை கூடங்கள், விடுதிகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சர்வதேச விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டும் உள்நாட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24-ந்தேதி நள்ளிரவிலிருந்து 21 நாட்களுக்கு இந்தியாவிலும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ‘சமூக விலகல்’ பயனுள்ளதாக இருந்தாலும், இந்த அசாதாரணமான சூழல், சமுதாயத்தின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கிவிட்டது.

நிலவைத் தொட்டுவிட்டு வந்த மனித சமுதாயம், கொரோனா வைரஸ் தொற்றிவிடுமோ என்ற பயத்தால், தன் குழந்தையைக் கூட தொட முடியாமல் சமூக இடைவெளி கோட்பாட்டை பின்பற்ற வேண்டிய இக்கட்டான சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. தாய் ஒருவருக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று அவரது மூன்று மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த சம்பவமும் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. மனித சமுதாயத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு வாழ்ந்துவரும் விலங்குகளும், பறவைகளும் உணவின்றி வாடுகின்ற நிலையை கொரோனா வைரஸ் ஏற்படுத்திவிட்டது.

ஜெர்மனி நாட்டில் கொரோனா வைரசால் 1,500-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 65,000-க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அடுத்த சில தினங்களில் கணிசமாக அதிகரிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்த அசம்பாவித சூழ்நிலையால் ஜெர்மனியின் பொருளாதாரம் வெகுவாகச் சீர்குலைந்து வருவதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், மனமுடைந்த ஜெர்மனியிலுள்ள ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் அனைத்திலும் வாழும் 780 கோடி மக்களைக் கடந்த நான்கு மாதங்களாக வாட்டிவதைக்கும் கொரோனா வைரஸ் சில கருத்துகளை மக்களுக்கு உணர்த்துகிறது.

சீனாவில் ஒருவகையான மாமிச உணவிலிருந்துதான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்று கருதப்படுகிறது. பரபரப்பான இன்றைய கணினி யுகத்தில் நாவில் எச்சில் வரவழைக்கும் துரித உணவு வகைகளை அதிகமானவர்கள் நாடிச் செல்கின்றனர். ஆனால் அவ்வகையான உணவு வகைகளால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை எண்ணிப் பார்ப்பதில்லை.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட சர்வேயின்படி கிராமப்புறத்தைச் சார்ந்த 25 சதவீதத்தினரும், நகர்புறத்தைச் சார்ந்த 56 சதவீதத்தினரும் சாப்பிடுவதற்கு முன்னர் சோப்பு போட்டு கைகளைச் சுத்தமாகக் கழுவுகின்றனர். கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டு உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு பெரும்பாலான நகர மற்றும் கிராமப்புற மக்களிடையே இல்லை என்பதை இந்த சர்வேயின் முடிவு வெளிப்படுத்துகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, கைகளைச் சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும் என்ற பழக்கம் கடந்த சில வாரங்களாக அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த பழக்கம் தொடர வேண்டும் என்பதைக் கொரோனா மறைமுகமாக உணர்த்துகிறது.

கொரோனா வைரசுக்கு அதிகமானவர்களைப் பலி கொடுத்த இத்தாலியில் முதியோர் இல்லங்களில்தான் முதலில் இறப்பு அதிக அளவில் நிகழத் தொடங்கின. இந்த வைரசுக்கு எளிதில் பலியாகக் கூடியவர்கள் முதியோர்கள்தான். முதியோர்களின் நலன் பேணப்பட வேண்டும் என்பதை இன்றைய சமுதாயம் கருத்தில் கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் சமுதாயத்தில் புறக்கணிப்படுகின்ற சம்பவங்கள் ஒரு சில இடங்களில் நிகழ்கின்றன. இதே நிலைதான் 1950-களில் தொழுநோயாளிகளுக்கும் இந்தியாவில் ஏற்பட்டது. சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டுவந்த தொழுநோயாளிகளை அரவணைத்து அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சையையும், வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தார் அன்னை தெரசா. கொரோனா தொற்று உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளித்தால், தங்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதை நன்குணர்ந்த மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதும் போற்றுதலுக்கு உரியது.

உலக நாடுகள் பலவற்றில் மருத்துவத்துறையில் அற்புதங்கள் பல நிகழ்த்தி இருந்தாலும், லட்சக்கணக் கான மக்களைச் செயலிழக்கச் செய்து, அவர்களது உயிர்களை ஓரிரு வாரங்களில் பறித்துச் செல்லும் கொரோனா போன்ற வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவ உபகரணங் களும், படுக்கை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகளும் பல உலக நாடுகளில் இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கக் கூடிய செயலாகும். கொரோனா வைரஸ் விரட்டியடிக்கப்பட்டதும் உலக நாடுகள் இதில் கவனம் செலுத்துவார்கள் என நம்புவோம்.

1 comment:

Max Strickland said...

Grateful for you writing this blog

Popular Posts