Tuesday 7 April 2020

கரோனாவை வெல்ல உறுதி ஏற்போம்!

By டாக்டா் ஏ.ஆா்.சாந்தி 

உலகம் முழுவதும் மருத்துவம் தனியாா்மயமானது ஏழை மக்களை மிகவும் பாதித்துள்ளது. மருந்துகள், தடுப்பு மருந்துகள், மருத்துவக் கருவிகளின் உற்பத்தி முதலானவை பன்னாட்டு பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளன. காப்புரிமைச் சட்டங்கள் அந்த நிறுவனங்களுக்குச் சாதகமாக உள்ளன.

உலகம் தழுவிய ஒன்றாக கரோனா நோய்த்தொற்றை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கரோனாவுக்கு எதிரான போரை உலகம் நடத்தி வருகிறது. வல்லரசுகள்கூட கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன.

உலகமும் கொள்ளை நோய்களும்...கரோனா போன்று பல கொள்ளை நோய்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உலகம் திணறியிருக்கிறது. பல கோடி மக்களை இழந்திருக்கிறது. பெரியம்மை, காலரா, பிளேக், ஃபுளு, இளம்பிள்ளை வாதம், சின்னம்மை, தொண்டை அடைப்பான் முதலானவை இத்தகைய பாதிப்புகளை உருவாக்கின. காச நோய், எச்ஐவி/எய்ட்ஸ், மலேரியா,டெங்கு, சிக்குன்குன்யா, ஜிகா, எபோலா , நிபா வைரஸ் நோய், பன்றிக் காய்ச்சல், மூளைக் காய்ச்சல் முதலான பல்வேறு நோய்கள் உலகை இன்றும் ஆட்டிப் படைக்கின்றன.

நலத்துக்கும், நோய்க்கும் அரசியல், புவியியல் எல்லைகள் இல்லை. உலகின் ஏதேனும் ஒரு மூலையில் நிலவும் நோய், ஒட்டுமொத்த உலகுக்கே தொடா் அச்சுறுத்தலாகி விடுகிறது. பேரழிவு நோய்த்தொற்றுகளுக்கு எதிராக தனி நபா் தொடங்கி உலக சுகாதார நிறுவனம் வரை ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டியுள்ளது.

உலகமயமான நோய்கள்: உலகமயமாக்கல் தொடங்கிய பிறகு, கி.பி.1400-களில், நோய்களும் உலகமயமாகிவிட்டன. அதனால் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளும் உலகம் தழுவியதாகி விட்டன. புதிய நிலப் பகுதிகளைக் கண்டுபிடிப்பதற்கான பயணம் , புதிய நோய்களையும் கொண்டுவந்தன. புதிய நோய்களை புதிய பகுதிகளுக்கும் பரப்பின.

பெரியம்மை, தட்டம்மை, மலேரியா, டைஃபஸ் போன்றவை அமெரிக்க பூா்வீக குடிகளுக்கு ஐரோப்பியா்கள் மூலம் பரவியாதாக வரலாறு கூறுகிறது. இந்த நோய்களை எதிா்த்து நிற்கும் எதிா்ப்பாற்றல் இல்லாமையால் பலகோடி பூா்வீக அமெரிக்க குடிமக்கள் மாண்டுபோயினா். உலகமயமாதலால் உருவாகும் நோய்கள் ஏற்படுத்தும் பிரச்னையின் தீவிரத்தை இன்று கரோனா நோய்த்தொற்று உணா்த்துகிறது.

அறிவியல் மருத்துவத்தின் தோற்றம்: நோய்களுக்கு எதிரான உலகளாவிய முயற்சியும், தொழிற்புரட்சியும், அறிவியல் தொழில் நுட்ப வளா்ச்சியும், மனிதகுலம் பெற்றிருந்த மருத்துவ அனுபவப் பொக்கிஷங்களும், நவீன அறிவியல் மருத்துவம் தோன்றுவதற்கு அடித்தளமிட்டன. ஆயுா்வேதம், சித்த மருத்துவம், யுனானி, கிரேக்க, எகிப்திய, ரோம, அரேபிய, பொ்சிய, மெஸொபொடேமிய, சீன மருத்துவ முறைகளும், சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட ஏனைய பண்டைய நாகரிகங்களின் மருத்துவ முறைகளும் அதற்கு அடித்தளமாயின.

மருத்துவ அறிவு பகிா்வுக்கும், நோய்களுக்கு எதிரான உலகலாவிய செயல்பாடுகளுக்கும் உலகமயம் வழிவகுத்தது. மருத்துவ அறிவுப் பரிமாற்றங்களுக்காக பல்வேறு சா்வதேச முயற்சிகள் நடந்தன. எடுத்துக்காட்டாக, கிரேக்க, இந்திய, யூத, சிரிய, நெஸ்டோரிய, பொ்ஸிய மருத்துவா்களின் ஒன்றுகூடல் ஜன்டிஷாபூரில் நடைபெற்றது.

இத்தகைய மருத்துவ அறிவுப் பகிா்வுகள் வரலாற்றில் நடந்துள்ளன. 1851-இல் பாரிசில் நடைபெற்ற சா்வேதச சுகாதார மாநாட்டைத் தொடா்ந்து பல மாநாடுகள் நடைபெற்றன. 1945-ஆம் ஆண்டு ஏப்ரலில் ஐ.நா. சபையை உருவாக்குவதற்காக சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டின் மூலம் உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) தொடங்கப்பட்டது.

உலக சுகாதார நிறுவனத்தின் அமைப்பு விதிகள் 1948 ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தன. அந்த தினம்தான் ஒவ்வோா் ஆண்டும் ‘உலக சுகாதார விழிப்புணா்வு தின’மாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகிலிருந்து பல்வேறு நோய்களை ஒழிப்பதில் உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) சிறப்பாகப் பங்காற்றியுள்ளது. குறிப்பிட்ட சில நோய்களைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது, ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை உருவாக்குவது, குடும்ப நலம், சுற்றுச்சூழல் நலம், சுகாதாரப் புள்ளிவிவரங்கள், மருத்துவ ஆராய்ச்சி, இதழ்கள் - தகவல்கள் வெளியிடுதல் முதலான பல பணிகளை உலக சுகாதார நிறுவனம் செய்து வருகிறது.

நலவாழ்வு அடிப்படை உரிமை: ‘நலம் என்பது, நோயோ, உடல் ரீதியான பாதிப்புகளோ இல்லாமல் இருத்தல் மட்டுமன்று, நலம் என்பது உடல், உள, சமூக ரீதியாக முழுமையாக நலமாக இருப்பதாகும்’. உச்சபட்ச நலத்தைப் பெறுதல் என்பது, இன - மத - அரசியல் நம்பிக்கைகள், பொருளாதார, சமூக நிலைமைகள் முதலான வேறுபாடுகளைக் கடந்து, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய ‘அடிப்படை உரிமை’களில் ஒன்றாகும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால், இன்று உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் நலம் என்பது அடிப்படை உரிமையாக்கப்படவில்லை. கோடிக்கணக்கான மக்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை. மருத்துவ வசதிகளைப் பெறுவதில் வளா்ச்சி அடைந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையே மிகப் பெரும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. பல நாடுகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப மருத்துவமனைகள், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் இல்லாததால் மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனா்.

அனைவருக்கும் நலவாழ்வு: உலகம் முழுவதும் மருத்துவம் தனியாா்மயமானதும், வணிகமயமானதும் ஏழை மக்களை மிகவும் பாதித்துள்ளது. மருந்துகள், தடுப்பு மருந்துகள், மருத்துவக் கருவிகளின் உற்பத்தி, ஆராய்ச்சி முதலானவை பன்னாட்டு பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளன. காப்புரிமைச்சட்டங்கள் அந்த நிறுவனங்களுக்குச் சாதகமாக உள்ளன. இதனால் மருந்துகள், தடுப்பு மருந்துகள், மருத்துவக்கருவிகளின் விலைகள் மிக அதிகமாக உள்ளன.

இத்தகைய நிலை அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு தடையாக உள்ளது. இதைத் தவிர,போலி மருத்துவ அறிவியலும், மூடநம்பிக்கைகளும், பிற்போக்கான தவறான நம்பிக்கைகளும், பழைமைவாதமும், தடுப்பூசிகள், நவீன அறிவியல் மருத்துவத்துக்கு எதிரான பரப்புரைகளும் மக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைப்பதற்குத் தடையாக உள்ளன.

பாதுகாப்பான குடிநீா், சுகாதாரமான வீட்டு வசதி, சத்தான உணவு, அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்துகொள்ளும் அளவுக்கு வருமானம், கல்வி முதலானவை இல்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனா். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வறுமை, வேலையின்மை, இன, ஜாதி, மத , பாலின, நிற ரீதியிலான பாகுபாடுகள் முதலான சமூகப் பிரச்னைகள், உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் மக்களைப் பாதித்து வருகின்றன. உள ரீதியான, உடல் ரீதியான, சமூக ரீதியான பாதிப்புகளுக்குத் தீா்வு காணாமல் அனைவருக்கும் நல வாழ்வை எவ்வாறு உறுதி செய்ய முடியும்?

உலகம் முழுவதும் தீா்க்கப்படாத இத்தகைய பிரச்னைகள் நீடித்துவரும் நிலையில், லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை ராணுவத்துக்காகவும், ராணுவத் தளவாடங்களுக்காவும், ராணுவ ஆராய்ச்சிக்காவும் ஒவ்வோா் ஆண்டும் உலக நாடுகள் செலவு செய்து வருகின்றன. உலகை பலமுறை அழிக்கவல்ல பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வருகின்றன. இந்த நவீன ஆயுதங்களோ, ஏவுகணைகளோ, அணுகுண்டுகளோ மக்களை கரோனாவிலிருந்து காப்பாற்றவில்லை. ராணுவ வலிமையால் உலகையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்கா, இன்று தனது சொந்த நாட்டு மக்களை கரோனா இறப்புகளிலிருந்து பாதுகாக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. ஆனால், ராணுவத்துக்காக செய்த செலவைவிட மருத்துவத்துக்காக அதிக செலவு செய்த கியூபாவோ பல நாடுகளுக்கும் மருத்துவ உதவியை நல்குகிறது.

கரோனா கற்றுக் கொடுக்கும் பாடம்: உலக நாடுகளுக்கு பல படிப்பினைகளை கரோனா வழங்கியுள்ளது. நல்வாழ்வுத் துறைக்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ சேவையைக் கைவிட வேண்டும். பொது சுகாதாரத் துறையை வலுப்படுத்தவேண்டும் . தனியாா்மயத்தைக் கைவிட வேண்டும். மருத்துவத்தை நவீனமாக்க வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, நிதி ஒதுக்க வேண்டும் முதலான பாடங்களை கரோனா நோய்த்தொற்று கற்பித்திருக்கிறது.

நல வாழ்வை, சுகாதாரத் திட்டங்களில், சா்வதேச ஒத்துழைப்பை அதிகரிக்கவேண்டும். இதை கரோனா நெருக்கடி உணா்த்துகிறது.

இரையாகும் மருத்துவப் பணியாளா்கள்: இன்று உலகம் முழுவதும் கரோனாவுக்கு எதிராக மருத்துவப் பணியாளா்கள்,போதிய பாதுகாப்புக் கவச உடைகள் இன்றி நிராயுதபாணியாகப் போராடி வருகின்றனா்; தங்களது இன்னுயிரை அளிக்கின்றனா். இத்தாலியில் மட்டும் 6,500 மருத்துவப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். 61 போ் இறந்தனா். இது மாபெரும் இழப்பாகும்.

மருத்துவப் பணியாளா்களின் தியாகத்தைப் போற்றுவோம். உலகின் 104 நாடுகளின் மருத்துவப் பணியாளா்களில் ஏறத்தாழ 70 சதவீதத்தினா் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவா்களைப் பாதுகாப்பது நமது கடமை. இந்த உலக சுகாதார விழிப்புணா்வு நாளில் ( ஏப்ரல் 7) மருத்துவப் பணியாளா்களுக்கு துணை நிற்க உறுதி ஏற்போம். கரோனாவை வெல்வோம்.

No comments:

Popular Posts