முனைவர் க.மோகன்காந்தி, உதவி பேராசிரியர், தனியார் கல்லூரி, திருப்பத்தூர்.
ஓரினத்தின் வரலாற்றுத்தளம் என்பது அந்த இனத்தில் ஆழ்ந்து கிடக்கும் அடி வேராகும். பல பண்பாட்டு மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தாலும், தம்முடைய பழமையான கட்டமைப்பை ஒரு சில இன மக்கள் மாற்றிக்கொள்வதில்லை. தமிழரின் வரலாறு தமிழகம் நெடுகிலும் பரந்து கிடக்கிறது. இதன் ஒரு தொடர்ச்சியாக ஜவ்வாது மலையில் காண கிடைக்கும் வரலாற்றுக் கூறுகள் ஆழ்ந்து நோக்கத்தக்கன.
வடக்கே அமிர்தி (வேலூர்), தெற்கே சிங்காரப்பேட்டை, கிழக்கே தும்பக்காடு (போளூர்), மேற்கே ஆலங்காயம் ஆகிய ஊர்களை எல்லைகளாக கொண்டு 250 சதுர கிலோ மீட்டரில் பரந்து கிடக்கும் ஒரு இயற்கை வளம் கொண்ட மலையே ஜவ்வாது மலை. இங்கு வாழும் மக்கள் வேட்டைதொழிலையும், வேளாண் தொழிலையும் தம் இரு கண்களாக கொண்டவர்கள்.
ஜவ்வாது மலை நிலத்திலுள்ள ஒவ்வொரு ஊரும், ஒவ்வொரு காட்டுப்பகுதியும் தமிழரின் பண்டைய வரலாற்றை எடுத்துரைத்துக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மலை ஊர்களிலும் பஞ்ச பாண்டவர் வீடு, வாளியர் கூடாரம், வேடியப்பன், பிள்ளையாரப்பன், நாச்சியம்மன், திக்கியம்மன், காளியம்மன், வேடன்கல், சின்னான்கல் என்னும் பெயர்களில் வரலாற்றுத் தடயங்கள் இருப்பதை கள ஆய்வுகளின் வழி அறிய முடிகிறது. வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்கால மனிதர்களின் புதைவிடங்கள் பல இம்மலையில் உள்ளன. இப்புதைவிடங்களை கற்திட்டை, கல்வட்டம், கற்குவியல், கற்பதுக்கை போன்ற பல பெயர்களில் அறிய முடியும். போளூருக்கு மேலுள்ள ஜவ்வாதுமலைப் பகுதியில் கீழ்ச்சேப்பிளி என்னும் ஊரில் 100-க்கும் மேற்பட்ட கற்திட்டைகள் கட்டுமானம் தளராமல் உள்ளன. 150-க்கும் மேற்பட்ட சிதை நிலைக் கற்திட்டைகளும் உள்ளன.
இவை ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழந்தமிழரின் புதைவிடங்கள் ஆகும். இது போன்ற கற்திட்டைகள் வீரப்பனூரில் உள்ள கள்ளிப்பாறையிலும், திருப்பத்தூரை அடுத்துள்ள கல்லாவூர், கோம்பை ஆகிய ஊர்களிலும் இன்றும் காணலாம். இத்தகைய பழமையான நினைவுச் சின்னங்களை இம்மக்கள் சிதைக்காமல் பாதுகாத்து வருவது சிறப்புக்குரிய ஒன்றாகும். இக்கற்திட்டைகளை மலை மக்கள் வாளியர் கூடாரம், வாளியர் வீடு, குள்ளர் வீடு, பஞ்சபாண்டவர் குகை போன்ற பெயர்களில் அழைத்து வருகின்றனர்.
ஜவ்வாது மலையில் உள்ள ஊர்களில் பரவலாக பிள்ளையார் வழிபாடு உள்ளது. பிள்ளையார் என்பது இங்கு பெரும்பாலும் கற்கோடரிகளாகவே உள்ளன. இவைப் புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள் ஆகும். இவை 4 ஆயிரம்ஆண்டுகள் பழமையான பண்பாட்டை உடையன. கோடரியைப் போன்ற வடிவத்தில், கல்லை வடிவமைத்துப் பழைய மனிதர்கள் (பழந்தமிழர்) வேட்டையாடிய வேட்டைக் கருவிகள் இவை. இக்கருவிகள் சிறிதும் பெரிதுமாக ஏராளமான வடிவங்களில் மலைக் கிராமங்களில் பரவலாக உள்ளன.
தங்கள் இல்லங்களிலும், நீரோடைகளிலும், நிலங்களிலும் கிடைக்கும் கல்லாயுதங்களை சேகரித்து ஊர் மன்றத்தில் உள்ள கோவில்களின் ஓரிடத்தில் இக்கற்களை நட்டு வைத்துப் பிள்ளையார் என்னும் கடவுளாக இம்மலை மக்கள் வணங்குகின்றனர். சமுனாமரத்தூர் அருகேயுள்ள பழங்கோட்டை, புதூரில் உள்ள சித்தூர், வழுதலம்பட்டு, கீழுர், புலியூர், கம்புக்குடி, மலைத் திருப்பத்தூர், நெல்லிவாசல் உள்ளிட்ட ஏராளமான ஊர்களில் இக்கல்லாயுதங்கள் காணப்படுகின்றன. பெரிய கற்பாறையில் இருந்து கற்கோடரிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பாறைகளைக் கற்கோடரி கூடாரங்கள் எனலாம். இதுபோன்ற தொழிற் கூடாரங்கள் ஜவ்வாது மலையிலுள்ள கீழானூர் (கிளானூர்), ஜவ்வாதுமலையின் ஒரு கூறான தென்மலைப் பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.
கற்காலத்தைத் தொடர்ந்து சங்ககாலம் தொட்டு நாயக்கர் காலம் வரையிலான நடுகற்களும், கல்வெட்டுகளும் தொடர்ச்சியாக கிடைப்பது இம்மலை மக்கள் வரலாற்று பாதுகாப்பில் செய்துள்ள பெரிய பணியை உணரமுடிகிறது. ஜவ்வாதுமலையில் பல இடங்களில் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இவற்றில் “நவிரமலை” என்னும் பெயர் பொறிப்பு உடைய இரண்டு கல்வெட்டுகளும், ஒரு நடுகல் கல்வெட்டும் சிறப்புக்குரியன. சங்க இலக்கிய நூல்களைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று நம் முன்னோர் வகைப்படுத்தியுள்ளனர். இதில் பத்துப்பாட்டில் பத்தாவதாக போற்றப்படும் நூல் மலைபடுகடாம். இந்நூல் 583 அடிகளைக் கொண்டது. ஏறத்தாழ 250 அடிகளுக்கும் மேலாக மலை வளத்தைப் பற்றி விரிவாக பேசுகிறது.
மலைபடுகடாமின் பாட்டுடைத் தலைவன் செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் ஆவான். இவன் செங்கண்மாவைத் (செங்கம்) தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்துள்ளான். இவன் மலை நவிரமலை, இவன் ஆறு சேயாறு. இன்றைக்கு சேயாறு செய்யாறு என மருவியுள்ளது. நவிரமலை என்பது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கத்திற்கும், போளூருக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும் ஜவ்வாதுமலையின் ஒரு கூறான “பருவதமலை” என்ற கருத்து ஆய்வாளர்கள் மத்தியில் பரவலாக இருந்தன. ஆனால் ஜவ்வாதுமலையே தான் “நவிரமலை” என்பதை சான்று கூறும் விதத்தில் 2 கல்வெட்டுகளும் 1 நடுகல் கல்வெட்டும் ஜவ்வாது மலையில் கிடைத்துள்ளன. இச்சான்றுகள் அனைத்தும் செங்கத்திற்கு மேற்காகவும், திருப்பத்தூருக்கு கிழக்காகவும் இருக்கும் மலைத்தொடர் ஊர்களான புதூர் நாடு, சேம்பரை, கீழுர் ஆகிய பகுதிகளிலேயே கிடைக்கின்றன. இதன் மூலம் மலைபடுகடாம் உரைக்கும்,
“பேரிசை நவிரமேஎ உறையும்
காரியுண்டிக் கடவுளது இயற்கையும்”
என்ற நவிரமலை என்னும் இலக்கிய சொல்லுக்கு கல்வெட்டுச் சான்றுகள் இம்மூன்று ஊர்களில் கிடைத்திருப்பது சங்ககால வாழ்வியலை உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது. இக்கல்வெட்டுகளில் இரண்டு கல்வெட்டுகள் சோழர் (ராஜாதிராஜன், குலோத்துங்க சோழன்) காலத்தவை. ஒரு கல்வெட்டு நாயக்கர் காலத்தது. நவிரமலை என்னும் சங்க காலச் சொல் சோழர் மற்றும் நாயக்கர் காலம் வரை தொடர்ந்து வந்துள்ளது.
பல்லவர் காலம் என்பது கி.பி 6-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 8-ம் நூற்றாண்டு வரையிலான கால கட்டம் என்று கணக்கிடும் போது, ஜவ்வாதுமலை மக்களின் அன்றைய கல்விப் போக்கும், கலைப் போக்கும், அரசியல் போக்கும் வெளிப்படுகின்றன. ஏறத்தாழ 1,400 ஆண்டுகளுக்கு முன்பே இம்மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்கு இக்கல்வெட்டுக்களே சான்று.
சங்கநூலான மலைபடுகடாம் 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இம்மலையில் வேளாண் தொழில் சிறப்புற்றிருந்ததை வெளிப்படுத்துகிறது. இதனை உறுதி செய்யும் விதத்தில் கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து சித்திரமேழிக் கல்வெட்டு மேல்பட்டு என்னும் மலைக் கிராமத்தில் கிடைத்துள்ளது. வணிகம் செய்யும் சித்திரமேழி பெரிய நாட்டார் வணிகக்குழுவைப் பற்றிய செய்தி, இம்மலை மக்களின் உழவுத்தொழில் வரலாற்றை வெளிப்படுத்துகிறது. நாவகரும சோமந்திதன் என்பவர் சித்திரமேழிக் கொல்லன் என்பவருக்கு தரும காணிக்கையாகக் கொடை அளித்துள்ளதை இக்கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.
சிம்மவிஷ்ணு என்னும் பல்லவ மன்னன், குலோத்துங்கன், ராஜாதிராஜன் ஆகிய சோழ மன்னர்கள், பெயர் கிடைக்காத சம்புவராயர், நாயக்க மன்னர்களின் காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் இம்மலையில் கிடைத்திருப்பதால் பல்லவர் காலம் தொட்டே இம்மக்கள் எழுத்து அறிவில் சிறந்திருந்ததை அறியலாம். இம்மலையிலுள்ள பழங்கற்கால தடயங்களை அகழாய்வு நடத்தினால் கீழடி, கொடுமணல், ஆதிச்சநல்லூர், பொருந்தல், அழகன் குளம் போன்ற ஊர்களுக்கு இணையான பழைய தமிழ் பண்பாட்டை அறிய முடியும். மேலும் இவ்வரலாற்று தடயங்களைப் போற்றி பாதுகாக்கும் ஜவ்வாது மலை வாழ்ப்பழங்குடிகள் போற்றுதலுக்கு உரியவர்கள் ஆவார்கள்.

No comments:
Post a Comment