Saturday, 22 February 2020

மனித நேயம் மலரட்டும்

நா.பெருமாள், முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர்.

உ லகம் அழியாமல் உயிரோடும், உயிர்ப்போடும் இருக்க வேண்டுமானால், அறிவாற்றல், ஆளுமை, அதிகாரம் கொண்ட மனிதர்களைவிட அன்பு, கருணை, இரக்கம் கொண்ட மனிதர்களே தேவை. ஒரு மனிதன் அறிவாளியாக இருக்கலாம். ஆளுமை உடையவனாக இருக்கலாம். அதிகாரம் படைத்தவனாக இருக்கலாம். எல்லாம் இருந்தும் அவனிடம் மனித நேயம் இல்லாவிட்டால் தான் நினைத்த எதையும் அவனால் சாதிக்க இயலாது.

மனித நேயத்தின் மூலமே இறைவனை காண முடியும். பல ஆயிரம் ஆண்டுகளாக மனித நேய மாண்புடன் வாழ்ந்த புனிதர்கள் நிறைந்த பூமி நமது பூமி. உயர்வான ஒழுக்கம், உன்னதமான பண்பாடு, அவலக்குரல் கேட்டால் துடித்து எழும் மனித நேயம், ஆன்ம நேயம், அத்தனை நற்பண்புகளோடும் உலகம் வியக்கும் வாழ்க்கை வாழ்ந்து மனித குலம் செழிக்க வழிகாட்டினார்கள் நம் முன்னோர்கள். ஈ, எறும்பு, புழு, பூச்சி, வண்டு, பறவை, விலங்குகள் கூட துன்பப்படக் கூடாது என்ற எண்ணம் அவர்களது மனதில் மேலோங்கி இருந்தது.

சங்க காலத்து கடையெழு வள்ளல்கள் தங்களது கொடைமடைச் செயல்களால், மனித நேயத்தின் சிகரங்களாக புகழப்பட்டார்கள். குளிரால் நடுங்கிய காட்டு மயிலுக்கு இரக்கமுற்று தனது போர்வையைக் கொடுத்தான் பேகன். வாடிய முல்லைக்கொடி படர தனது தேரினை ஈந்தான் பாரி. வலிமைமிக்க குதிரைகளை இரவலர்களுக்கு கொடையாக வழங்கினான் காரி. ஒளி மிக்க நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலர்களுக்கு கொடுத்தான் ஆய். நீண்ட நாட்கள் உயிர் வாழ வைக்கும் அமிர்தமான நெல்லிக்கனியை தான் உண்ணாமல் தனது புலவர் நீண்ட நாள் வாழ்ந்தால் தமிழ் சிறப்புறும் என சிந்தித்து, அதை அவ்வையாருக்கு கொடுத்தான் அதியமான். பசியோடு வாடி வந்த இரவலர்களுக்கு வேண்டிய பொருள் வழங்கி, மன நிறைவு கண்டு மகிழ்ந்தான் நள்ளி. கூத்தாடுபவர்களுக்கு வளமான நாடுகளை வழங்கி மகிழ்ந்தான் ஓரி. இந்திரர் அமிர்தம் கிடைத்தாலும் அது இனிமையானது என தனித்து உண்ணாத தகைமையாளர்களாலும், தமக்கென வாழாமல் பிறருக்கென வாழ்கின்ற சான்றோர்களாலும்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது என நமது முன்னோர் களின் மனித நேயம் குறித்துக் கூறுகிறது புறநானூறு.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” கனியன் பூங்குன்றனாரின் மனித நேயம் எல்லைகள் தாண்டிய மனித நேயம். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார் வள்ளலார். சமநிலை சமுதாயத்தை வலியுறுத்திய பாரதியார், “மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ” என பாடுகிறார். தன்னைத்தாக்கும் பகைவர்களுக்கு கூட இம்சை செய்யாதிருப்பதை தனது போராட்ட வழியாக நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டார் மாமனிதர் மகாத்மா காந்தி. இந்த உலகில் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால், கண்களுக்கு தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பு செலுத்த இயலும் என்கிறார் தனது வாழ்நாள் முழு அர்ப்பணித்த அன்னை தெரசா. மனிதநேயத்தின் அவசியத்தை நமது மதங்களும் வலியுறுத்துகின்றன.

இன்றைய மனிதனின் மனித நேயத்தின் நிலை என்ன. மனிதனை மனிதன் மதிப்பதுமில்லை. அரவணைப்பதுமில்லை. மனிதனுக்கு மனிதன் அன்பு காட்டுவதுமில்லை. மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி, நாடு கடந்து, உயர்ந்தவன், தாழ்ந்தவன் பாகுபாடு மறந்து, விருப்பு வெறுப்பற்று, ஒன்றே குலம் ஒருவனே தேவன், எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற மனித நேய சிந்தனையோடு பவனிக்கும் மனிதர்களை இன்று தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

விபத்தில் ஒருவன் சாலையில் அடிபட்டு கிடந்தாலும், பசியால் ஒருவர் வீதியில் பரிதவித்துக் கொண்டிருந்தாலும், உதவி கேட்டு ஒருவர் கதறிக் கொண்டிருந்தாலும், கண் முன்னால் என்ன அநீதிகள் நடந்துகொண்டிருந்தாலும் காணாமல் போவதுதான் இன்றைய மனித நேயம். மனித நேயத்தின் ஊற்றுக்கண் அன்பைத் தொலைத்துவிட்டான் மனிதன் பொன்னைத் தேடுவதிலும், பொருளைத் தேடுவதிலும், மண்ணைத் தேடுவதிலும் உள்ள அவனது நாட்டம் மனிதம் காக்கும் மனித நேயத்தை தேடுவதில்லை. சக மனிதனின் வேதனை கண்டு ரசிக்கிறான். புகழ், போதை மயக்கத்தில் அவன் ஆட்டம் போடுகின்றான். பண வெறி, பதவி வெறி, மத வெறி, இன வெறி கொண்டு உயிர்களை வேட்டையாடுகிறான்.

நாம், நமது என்ற பரந்த வட்டத்தில் வாழ வேண்டிய மனிதன், நான், எனது என்ற குறுகிய வட்டத்தில் சுருங்கிக் கொண்டிருக்கிறான். சொந்தம், பந்தம், சுற்றம் மறந்து சுயநலவாதியாக சுற்றித்திரிகிறான். தன்னிடம் இல்லாத அனைவரும் அவனுக்கு எதிரிகள். இன்றைக்கு குடும்பம் தொடங்கி உலகம் வரை சாவு மணி அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பெற்றோர், பிள்ளைகள் உறவில் விரிசல். ஒன்று சேர்ந்து கூச்சல் போட்டால் எதையும் சாதித்துவிடலாம் என்ற இளைஞர்களின் தவறான சிந்தனை, மக்களை பகடைக்காய்களாக்கி தவறான வழி நடத்தி, காரியங்களை சாதிக்கும் நேர்மையற்ற அரசியல்வாதிகள், எதையும் கண்டுகொள்ளாமல் ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்ற மனநிலையில் இருக்கும் சுயநல மக்கள், காசுக்காக மனசாட்சியை விற்று வாக்களிக்கும் சிந்தனையற்ற வாக்காளர்கள், எல்லாவற்றிற்கும் லாபம் கேட்கும் இரக்கமற்ற அரசு அலுவலர்கள் போன்ற மனித நேயமற்ற மனிதர்கள் சமுதாயத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வணிக நோக்கோடும், சுயநல நோக்கோடும் செயல்படும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், அரசாங்கம் போன்ற அத்தனையும் சமுதாயத்தை சீரழிப்பதில் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளன. உலகில் மனிதநேயம் குறைய குறைய மனித நேயமற்ற மனிதர்கள் வளர வளர, உலகம் விரைவில் அழிந்து விடும். உலகை அழிவிலிருந்து காப்பாற்றுவது, மனிதனாகப் பிறந்த நமது ஒவ்வொருவரது கடமையாகும். அதில் முக்கியமான, அவசியமான கடமை பிறர் நலம் பேணும் சமுதாய கடமை.

நாம் உலகில் வாழ்வது ஒரு முறை. அவ்வாழ்வு பிறருக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். சக மனிதனிடம் அன்பு காட்டுவது, அவனைத் தன்னைப்போல மதிப்பது, எல்லைகள் கடந்து ஏழைகளுக்கு இரங்குவது, பசிப்பிணி நீக்கி அவர்களை வாழ வைப்பது போன்ற சமுதாய கடமைகளில் நாம் ஒவ்வொருவரும் நம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. “உதவுவதற்காக அன்புடன் ஓடுங்கள், அமைதி உங்களை பின் தொடரும்”.

சந்திர மண்டலத்தில் முதன் முதலில் கால் வைத்தவுடன் என்ன நினைத்தீர்கள் என, முதன் முதலில் சந்திர மண்டலத்தில் இறங்கிய ஆம்ஸ்டிராங்கிடம் கேட்டபோது “பூமியில் இருந்து லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள சந்திர மண்டலத்தில் இடம் பிடித்த மனிதனால், பக்கத்து நாட்டில், பக்கத்து வீட்டில் உள்ள மனிதர்கள் மனதில் இடம் பிடிக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன்” என்று கூறியது மனித நேயம் குறைந்து கொண்டே வருகிறது என்பதை எடுத்துக் காட்டுவதாகவே உள்ளது. உலகில் வன்முறைகளும், கலவரங்களும் அழிந்து அனேக அன்பும், அமைதியும், ஆனந்தமும் நிலைத்து நீடித்திருக்க மனித நேயத்தை விதைத்துக் கொண்டே இருப்போம்! உலகெங்கும் அன்பும், அமைதியும் மலரட்டும்.

No comments:

Popular Posts