Friday, 14 February 2020

மனுதர்மமும் சில மாயைகளும்

மனுதர்மமும் சில மாயைகளும் By கோதை ஜோதிலட்சுமி  |   ஆச்சார்யரைவிட தந்தை நூறு மடங்கு உயர்ந்தவர், தந்தையைவிட தாய் ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்,

"உபாத்யாயாந் தஷாசார்யா ஆச்சர்யாணாம் ஷதம் பிதா
சஹஸ்ரம்து பித்ருநாத்மா கெளரவேணாதி  ரிச்யதே'

என்கிறது மனுஸ்ம்ருதி. இதோடு மட்டுமல்ல, தந்தையுடன் பிறந்தவள், பெரியதாய், தமக்கை ஆகியோரிடம் தாயிடம் காட்டுவது போன்ற கெளரவத்தைக் காட்ட வேண்டும். இவர்கள் அனைவரை விடவும் தாய் பூஜிக்கத் தக்கவள் என்றும் தாயைப் பெருமைப்படுத்துகிறது. இப்படி தாயின் உயர்வைச் சொல்லும் மனுஸ்ம்ருதிதான் பெண்ணை இழிவுபடுத்துவதாக அதிகம் பேசப்படுகிறது. முழுமையாக மனுஸ்ம்ருதியைப் படித்தவர்கள் இது அறம் சொல்லும் நீதி நூல் என்று கொண்டாடுகிறார்கள். மனுஸ்ம்ருதி, அதைச் சுற்றியுள்ள மாயைகள் குறித்துத் தெளிவு பெறுதல் அவசியம்.
ஸ்ருதிகள், ஸ்ம்ருதிகள் என்று இரு வகைகள் உண்டு.

ஸ்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கும் நீதி எக்காலத்திலும் மாறாதது. வேதங்களும் உபநிஷதங்களும் ஸ்ருதிகள்; அவை நிலையானவை; மாற்றம் அடையாதவை. ஆனால், ஸ்ம்ருதிகள் காலமாற்றத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுபவை; ஏட்டில் பதிவு செய்யப்பட்ட விதிமுறைகள்; அதாவது, தர்ம சாஸ்திரங்கள்.  மனுநீதி, மனுதர்ம சாஸ்திரம் என்றெல்லாம் சொல்லப்படும் மனுஸ்ம்ருதி, எழுதப்பட்ட காலத்தின் தேவைகளுக்கும் சமூக கட்டமைப்புக்கும் ஏற்பவே இருக்கும் என்பதைப் புரிந்து கொள்வது இப்போது எளிதாகும். மனுநீதி என்பது நூலா அல்லது சட்ட நூலா என்ற கேள்வியும் உண்டு; இரண்டுமே என்று சொல்வதற்கும் இடமுண்டு.

மொத்தம் 18 ஸ்ம்ருதிகள் இருக்கின்றன. ஆனால், மனுஸ்ம்ருதியே மக்களிடம் அதிக அளவில் பழக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், அதிக விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதும் அதுவே. பொதுவாக இரு பெரும் குற்றச்சாட்டுகள் மனுவின் மீது வைக்கப்படுகின்றன. வர்ணக் கட்டமைப்பை உருவாக்கி சமூகத்தில் ஏற்றத்தாழ்வை உண்டாக்குவது; மற்றொன்று, பெண்களை இழிவுபடுத்தும் நூல் என்ற குற்றச்சாட்டு.  பெண்கள் தொடர்பாக மனு என்ன சொல்கிறது என்பதை கவனித்தால், அது குறித்து இங்கே உருவாக்கப்பட்டிருக்கும் மாயையை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து இந்த 70 ஆண்டுகளுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தேவையானபோது காலத்துக்கேற்ப மாற்றங்களை ஏற்றுக் கொள்வது ஆரோக்கியமான செயல்பாடுதான்.

இந்தப் பார்வையை சற்றே விரிவுபடுத்திக் கொண்டு நம்முடைய ஸ்மிருதிகளைப் பார்க்கலாம் அப்போது அது சொல்லும் கருத்துகளை நடுநிலையோடு புரிந்துகொள்வது சுலபமாக இருக்கும். ஸ்மிருதிக்கும் ஸ்ருதிக்கும் இடையே வேறுபாடு தோன்றுமேயானால் ஸ்ருதியில் சொல்லப்பட்டிருப்பதைத்தான் சரியென்று கொள்ளவேண்டும் என மனுஸ்மிருதியே தெளிவாகக் குறிப்பிடுகிறது.

இறை மறுப்பாளர்களே தற்போது பெருமளவில் இந்த மனுஸ்ம்ருதியை எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள். எந்த ஒரு நூலையும் முழுமையாகப் படிக்காமல் அது குறித்து ஒரு முடிவுக்கு வருவது அறிவுடைமையாகாது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதம் பரப்ப வந்தவர்களே இங்கு மொழியைக் கற்றுக்கொண்டு நூல்களுக்கு விமர்சனங்களும் வைத்தார்கள். அவர்களின் நோக்கம் மதம் பரப்புவதே அன்றி நம் நீதி நூல்களுக்கும் சமய நூல்களுக்கும் விளக்க உரையும் விமர்சனமும் தருவதன்று. எனினும், அதை அவர்கள் எதன் பொருட்டு செய்தனர்? இருக்கும் நடைமுறை தவறானது என்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட்டால் தங்கள் பணி சுலபமாகும் என்பது அவர்கள் கையாண்ட அணுகுமுறை.

மனுஸ்ம்ருதி எப்போது எழுதப்பட்டது என்பதற்குச் சான்றுகள் ஏதும் இல்லை. எத்தனை காலங்களாக இந்த நீதி இங்கே பின்பற்றப்பட்டு வருகிறது என்பதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இன்றளவும் மக்களின் வாழ்வில் பல கருத்துகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.
இதில் 2,031 ஸ்லோகங்கள் இருக்கின்றன. அவை உலக உருவாக்கம் தொடங்கி அறிவியல், வானியல் உளவியல் என பலவற்றைப் பற்றியும் பேசுகின்றன. தனி நபர் பின்பற்ற வேண்டிய நெறிகள், குடும்பத்திற்கான ஒழுக்க விதிகள், ஒரு சமூக ஒழுங்குக்கான சட்ட திட்டங்கள், ஒரு தேசத்தின் அமைதிக்கும் வளத்திற்குமான தேவைகள், அவை எப்படி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்கான நடைமுறைகள், அவை மீறப்படும்போது ஏற்படும் குற்றங்களுக்கான தண்டனைகள் இவற்றை விரிவாக மனுஸ்ம்ருதி பேசுகிறது.
திருமணம் குறித்து மனு சொல்வதைப் பார்த்தால், நம் தேசத்தில் பெண்களுக்கு இருந்த மரியாதையை அறியலாம். பெண்ணுக்கு ஏற்ற மணமகனை தந்தை உரிய காலத்தில் கண்டு அவளுக்கு மணம் செய்விக்க வேண்டும். அப்படி தந்தை செய்யாதபோது,  தானே தன் துணையை பெண் தேடிக் கொள்வதற்கான உரிமை கொண்டவர். மணம் முடித்து வரும் அண்ணன் மனைவியின் பாதங்களில் அன்றாடம் விழுந்து வணங்க வேண்டும்; அவர் தாய்க்குச் சமமானவர்.

மணம் புரிந்த பெண்ணிடம் இடையறாத அன்புடன் அவளோடு கூடி வாழ வேண்டும் என்று ஆணுக்கு அறிவுறுத்தும் மனு,பெண்ணின் கைகளில் குடும்பம் பேணுவதற்கான பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. பிள்ளை பெறுபவளும் பெண்தான்; பெற்ற பிள்ளைகளை பேணி வளர்ப்பவரும் பெண்தான்; ஒரு குடும்பத்தை கட்டுக்கோப்பாக நடத்திச் செல்பவர்களும் பெண்கள்தான்; உலக வாழ்க்கையின் அஸ்திவாரமே பெண்கள்தான்.

உத்பாதநமபத்யஸ்ய ஜாதஸ்ய பரிபாலனம்
ப்ரத்யஹம் லோகயாத்ராயா: ப்ரத்யக்ஷம்   ஸ்திரி நிபந்தநம்
உத்பாதநமபத்யஸ்ய ஜாதஸ்ய பரிபாலனம்

என்று போற்றுவதோடு நின்று விடவில்லை.


"ப்ரஜநார்தம் மஹாபாஹா: பூஜாஅர்ஹா    கிருஹ தீப்தய:
ஸ்த்ரிய: க்ஷியஷ் ச கேஷேஷுந விசேஷா   அஸ்தி கஷ்சந'


அதாவது, வீட்டை விளங்கச் செய்து சந்ததிகளை உருவாக்குவது பெண்களே என்பதால் அவர்கள் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள். அவர்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மிகள். இதற்கு மேல் அவர்களைப் போற்ற வார்த்தைகள் ஏது  என்று மலைத்துப் போகிறது; இத்தகைய பெருமை மிக்க பெண்களைக் கொண்டாடச் சொல்கிறது.

 பெண்களுக்கு சொத்துரிமையை உறுதி செய்கிறது. பெண் சீதனமாகக் கொண்டுவந்த சொத்தை அழிக்க ஆணுக்கு உரிமை இல்லை. அந்தச் சொத்தினை தான் விரும்பியபடி நிர்வகித்துக் கொள்ளும் உரிமை பெற்றவர் பெண். அத்துடன் பெண்களுக்கும் பெற்றோரின் சொத்தில் பங்கு உண்டு. இந்தச் செய்தி பெண்ணின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்வதுதானே?
 பெண்களை மிக உயர்வாகப் போற்றும் மனுஸ்மிருதி, "மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்காது' என்கிறது. பெண்கள் மதிக்கப்படுகின்ற குடும்பங்களிலும் சமுதாயத்திலும்தான் சிறந்த மனிதர்கள் தோன்றுவார்கள்; பெண்களை மதிக்காத சமுதாயத்தில் நல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றால் பயன் விளையாது என்றும் அறிவுறுத்துகிறது. பிறந்த வீடும் புகுந்த வீடும் அவளை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம்; இல்லையேல் குலம் நசிந்து போகும் என்றும் எச்சரிக்கிறது. பெண்ணைக் காக்கத் தவறும் தந்தை, கணவன், மகன் இவர்கள் பாவிகள் என்றும் வசைபாடுகிறது.

பெண்ணின் மீது அபாண்டமாகக் குற்றம் சுமத்தி அதை நிரூபிக்கத் தவறுவோருக்கு தண்டனை விதிக்கப்படும். அதோடு மட்டுமல்லாது கற்புடைய அப்பாவியான பெண்ணைக் கடத்திச் செல்பவருக்கு மரண தண்டனையை உறுதி செய்கிறது மனுஸ்ம்ருதி. குற்றங்களுக்கான தண்டனைகளை நீதி நூல் வகைப்படுத்திக் கூறும்போது, குற்றம் இழைக்கும் பெண்களுக்கும் தண்டனைகளை விதித்திருக்கிறது; இதை மட்டும் எடுத்துக் கொண்டு பெண் இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறுவது அறிவுடைமையாகாது.

போர்களையும் அதன் வழிமுறைகளையும் விஸ்தாரமாகப் பேசும் மனுஸ்ம்ருதியால் ஓர் உண்மை புலப்படுகிறது. மனுஸ்ம்ருதியின் காலம் போர்கள் நிறைந்த காலம். அத்தகைய காலத்தில் பெண் தனித்து இயங்குவது பாதுகாப்பற்றது என்பதால், பெண்கள் தனித்து இயங்குவதை மனு மறுக்கிறது என்பதும் புரிந்துகொள்ளக் கூடியதே.

உளவியல் குறித்துப் பேசுமிடத்துக் கூறும் கருத்துகளையும் பொத்தாம் பொதுவில் அனைத்துப் பெண்களையும் கூறுவதாக சித்தரிப்பது உள்நோக்கமே அன்றி உண்மையாகாது. இதையே சனாதன மறுப்பாளர்களும் மதம் பரப்ப வந்த வெளிநாட்டினரும் தொடர்ந்து செய்து வந்தனர். இதை நம்பும் ஒரு தலைமுறை உருவாகி விட்டது வருத்தத்துக்குரியது.
ஓர் ஆணுக்குச் சந்ததி இல்லாமல் மோக்ஷம் இல்லை என்றும், தவங்களால் ஆண் மோக்ஷம் அடைகிறான் என்றும் சொல்கிறது மனுஸ்ம்ருதி; அதே நேரத்தில் பெண்ணைப் பொருத்தவரை சந்ததி அற்றவராக இருந்தாலும் தன் கடமைகளில் தவறாது நேர்மையுடன் வாழ்ந்திருப்பாரானால் அவர் மோக்ஷம் அடைகிறார் என்று ஒரு படி உயர்த்தியே பிடிக்கிறது.

 கண்களை மூடிக் கொண்டு அந்நியர் உருவாக்கிய மாய பிம்பங்களை நம்பிக் கொண்டிருப்பதை விடுத்து அறிவுசார் பொக்கிஷங்களைப் பாதுகாத்து, காலத்துக்கேற்ப அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதும், அடுத்த தலைமுறையினரிடம் அவற்றைச் சேர்ப்பதும் அறிவுடை சமூகத்தின் பொறுப்பு.
கட்டுரையாளர்:
ஊடகவியலாளர்

No comments:

Popular Posts