Saturday 18 January 2020

சாலைகள் மாடுகளுக்கு அல்ல!

சாலைகள் மாடுகளுக்கு அல்ல! By வெ. இன்சுவை  |  நான் பள்ளியில் படிக்கும்போது கட்டுரைப் பயிற்சியில், தெருவில் சுற்றித் திரியும் மாடுகள், நாய்கள் குறித்து மாநகராட்சி ஆணையருக்குப் புகார் கடிதம் எழுதக் கற்றுக் கொடுத்தார்கள். என் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்தார்கள். இப்போது என் பெயரப் பிள்ளைகளுக்கும் இந்தப் பயிற்சி தொடர்கிறது. தலைமுறைகள் தாண்டியும் நம் நாட்டில் இந்தப் பிரச்னை தீர்வதாக இல்லை. புகார் கடிதத்துக்குப் பதில் கடிதம் எழுத இன்னமும் எவருக்கும் சொல்லித் தரவில்லைபோலும். அதனால்தான் இந்த மாடு, நாய் தொல்லை தீராத பெரிய தலைவலியாகப் போய்க் கொண்டிருக்கிறது. நிலைமையின் தீவிரத்தைக் கண்டு தார்மிகக் கோபம் கொள்ளும் பெரியவர்கள், ஊடகங்களின் ஆசிரியர் பகுதிக்கு இது குறித்து கடிதம் எழுதி தங்கள் ஆற்றாமையைத் தணித்துக் கொள்கிறார்கள். வேறு என்ன செய்ய முடியும்?

தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும், தெருக்களிலும் சுற்றித் திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுதியாக உள்ள சாலைகளில் இவை சாவதானமாக நடந்து போகின்றன; நின்று கொண்டிருக்கின்றன; படுத்துக் கிடக்கின்றன. வண்டிகள் வருவதை அவை பொருட்படுத்துவதே இல்லை. நாம் விரட்டினாலும் அசையாமல் நிற்கும். வேகமாக வாகனம் ஓட்டிக் கொண்டு வருபவர்களால் சட்டென வாகனத்தை நிறுத்த முடியாது. அதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். அதன் காரணமாக கை, கால், எலும்புமுறிவு, உயிர்ச் சேதம் என ஏற்படுகிறது. புறநகர்த் தெருக்களில் மாடுகளுக்கு நடுவே புகுந்துதான் வாகனத்தை ஓட்ட வேண்டியுள்ளது.

தெரு நாய்களின் எண்ணிக்கையும் பெருகி விட்டது. ஒரு தெருவில் குறைந்தது பத்து நாய்களாவது திரிகின்றன. அவை எப்போது யாரைக் கடிக்கும் என்று தெரியாது. திடீரென்று இரு சக்கர வாகனத்தில் வருபவர்களைத் துரத்தும். நான்கு நாய்கள் குரைத்துக் கொண்டே துரத்தும்போது குலை நடுங்கிப் போகிறார்கள். சில சமயம் அவர்களை அந்த நாய்கள் கடிக்கவும் செய்கின்றன. இந்த நாய்களுக்கு எப்போது வெறி பிடிக்கும் என்று நமக்குத் தெரியாது. அப்படி வெறி பிடித்த நாய்களிடம் கடிபட்டு ரேபீஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. பச்சிளம் குழந்தைகளைக் குதறிப் போடுகின்றன.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 17 லட்சம் பேர் நாய்க் கடிக்கு உள்ளாகிறார்கள். மருத்துவமனைகளிலும் வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி மருந்து போதிய அளவு இல்லை. 80 சதவீத அளவுக்குப் பற்றாக்குறை உள்ளதாம். உலகில் வெறிநாய் கடிக்கு பலியாவோரின் எண்ணிக்கை 36 சதவீதம் என்பதுடன், ரேபீஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் படும் அவஸ்தையைக் கண் கொண்டு பார்க்க முடியாது. அது கொடுமை.சுற்றித் திரியும் மாடுகளும், நாய்களும் சாலைகளை அசுத்தப்படுத்துகின்றன. சாலையெங்கும், தெருவெங்கும் சாணமும், நாய்களின் மலமும்தான் விரவிக் கிடக்கின்றன. அந்த அசுத்தத்தை மிதித்துக் கொண்டே மக்கள் போகும் அவலம், அருவருப்பும்கூட. போதாக்குறைக்கு மழையும் பெய்து விட்டால், சாலையில் கால் வைப்பதற்கே மனம் ஒப்ப மறுக்கிறது. ஏற்கெனவே நம் தெருக்கள் தூய்மையற்றவை. இந்த நிலையில் இந்த விலங்குகளின் கழிவுகளும் சேர்ந்து விடுகின்றன.

மாடுகள் மிரண்டு ஓடிவரும்போது வாகன ஓட்டிகள் பயந்து கீழே விழுந்து விடுகின்றனர். கடை வாசலில் நம் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே போய் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தால், வாகனத்தில் மாட்டியிருந்த பையிலிருந்து காய்கறிகளையும், பழங்களையும், கீரைகளையும் மாடுகள் தின்று கொண்டிருக்கும். காய்கறிகடைக்காரர்களுக்கும், பழக்கடை உரிமையாளர்களுக்கும் அவற்றைத் தின்ன வரும் மாடுகளை விரட்டுவதே பெரிய வேலையாகிவிட்டது. நாய்களும், மாடுகளும் குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகளை இழுத்து வெளியே போட்டு விடுகின்றன. அதனால் தெருவெல்லாம் குப்பைகள் சிதறிக் கிடக்கின்றன. அந்த இடம் முழுவதும் ஈக்கள் மொய்க்கும், துர்நாற்றம் கடுமையாக இருக்கும். நமக்குத்தான் எல்லா அசெளகர்யங்களும் சில நாள்களில் பழகிப் போய் விடுமே! "இங்கே இப்படித்தான்', "இங்கே எதுவும் மாறப் போவது இல்லை' என்ற முணுமுணுப்போடும், எரிச்சலோடும் அந்த இடத்தைக் கடந்து விடுவோம்.

சொந்தப் பிரச்னைகள் நம்மைத் துரத்தும்போது பொதுப் பிரச்னைக்குக் கொடி தூக்க நமக்கு ஏது நேரம்? முக்கியமான, போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளையாவது தொடர்புடையவர்கள் முறையாகப் பராமரிக்கலாம் அல்லவா? சாலைகளில் மாடுகளைத் திரியவிடக் கூடாது என்பது சட்டம். மீறினால் அவ்வாறு திரியும் மாடுகளைப் பிடித்துக் கொண்டுபோய் அடைத்து விடுவர், மாட்டின் உரிமையாளர் சென்று அபராதத் தொகையைச் செலுத்தி அந்த மாட்டை மீட்டுக் கொண்டு வர வேண்டும். இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டுபோல நடந்து கொண்டிருக்கிறது. மாடுகளோ நூற்றுக் கணக்கில் திரிந்து கொண்டிருக்கின்றன, இவர்களோ ஒரு சில மாடுகளை மட்டுமே பிடித்துக் கொண்டு போகின்றனர். அபராதம் செலுத்தி மீட்டு வருவார்கள். ஆனால், மறுநாளே அந்த மாடுகள் மறுபடியும் சாலைகளுக்கு வந்து விடும். காரணம், மாடு வளர்ப்பவர்களிடம் மாடுகளைப் பராமரிக்க இடம் இருக்காது.

மாட்டுத் தொழுவம் என்ற ஒன்றே இல்லாமல் நிறைய மாடுகளை வளர்க்கிறார்கள். பராமரிப்புச் செலவு மிச்சம், மாடுகளுக்குத் தீவனம் வைக்க வேண்டாம், தண்ணீர் காட்ட வேண்டாம்; சாணம் அள்ள வேண்டாம், காலையும், மாலையும் பாலைக் கறந்த பிறகு, அவற்றை விரட்டி விடுகின்றனர். அரசு என்ன சட்டம் போட்டாலும் அவர்கள் அசைந்து கொடுக்க மாட்டார்கள். அக்கம்பக்கத்தினரால் அவர்களிடம் வாயைக் கொடுத்து மீள முடியுமா? மெளனமாய் பொருமிக் கொண்டிருக்க மட்டுமே அவர்களால் முடியும். அடாவடி நபர்கள் ஏதாவது ஓர் அரசியல் கட்சியின் அடையாளத்தை வைத்துக் கொண்டு அதிகாரிகளுக்குப் பயப்படுவதில்லை.

மாநகராட்சி, பேரூராட்சி தரப்பில் உள்ள பிரச்னை என்னவென்றால் அவர்களிடம் இதற்கு போதுமான பணியாளர்கள் இல்லை. அடுத்து, பிடித்துக் கொண்டு போகும் மாடுகளை அடைத்து வைப்பதும், அவற்றுக்குத் தீவனம் கொடுப்பதும் பெரிய சவாலாக உள்ளது. அபராதத் தொகையைக் கணிசமாக உயர்த்தி அதைக் கொண்டு இன்னும் கூடுதல் நபர்களை இந்தப் பணியில் அமர்த்தலாம்.கார் நிறுத்த இடவசதி இல்லாதவர்கள் கார் வாங்கி தெருவில்தானே நிறுத்துகிறார்கள்?  தெருக்களின் இருபுறமும் கார்கள் அடைத்து நிற்க, நாம் செல்லும் வழி குறுகிப் போய் விட்டது. இன்னும் சிலர் அதிக நடமாட்டமில்லாத, வேறு ஏதாவது ஒரு  தெருவில் வாகனங்களை விட்டுச்  செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அவர்களைத் தட்டிக் கேட்க அந்த அப்பாவி தெருவாசிகளுக்குப் பயம். நம் ஊரில் நியாய தர்மங்களுக்கு இடமில்லையே? மாடு வைத்திருப்பவர்களுக்கும் தெருதான் கதி, கார் வைத்திருப்பவர்களுக்கும் தெருதான் கதி. அது பொதுச் சொத்து. எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாது.நாய்களின் தொல்லை என்று புகார் கொடுத்தால் நாய் பிடிக்க வருவார்கள்.

அந்த வாகனத்தையும், நபர்களையும் கண்டவுடன் எல்லா நாய்களும் ஓடி ஒளியும். அரும்பாடுபட்டு அவற்றைத் துரத்தி கயிறைப் போட்டு பிடிப்பதையும், அந்த ஜீவன்கள் கத்துவதையும் பார்த்தால் நமக்கு மனதைப் பிசையும்.  ஆனால், இப்போதெல்லாம் நாய்களைக் கொல்வதில்லை. அவற்றுக்குக் கருத்தடை செய்து மீண்டும் அதே இடத்தில் விட்டு விடுகிறார்கள். ஆனாலும், குட்டிகள் பெருகிக் கொண்டேதான் இருக்கின்றன. அவற்றின் தொல்லைகளும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன.இதற்கு,  மாடு வளர்ப்பவர்கள் மனம் மாறினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். இட வசதி இல்லாதவர்களுக்கு மாடு வளர்க்கும் எண்ணமே வரக் கூடாது. தாங்கள் குடி இருக்க வீடு வேண்டும் என்று நினைப்பவர்கள், மாடுகளுக்கும் கொட்டகை வேண்டும் என்று நினைக்க வேண்டும். தங்களின் வருமானத்துக்காக அடுத்தவர்களுக்கு இடையூறு செய்யக் கூடாது.

அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஒரு வழி வேண்டும் என்றால், அரசே முன் வந்து ஏதாவது ஓர் இடத்தை ஒதுக்கி அங்கே பலர் சேர்ந்து கூட்டுப் பால் பண்ணை அமைக்கவோ அல்லது ஒவ்வொருவருக்கும் மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான இடமோ தரலாம். அருகிலேயே அதற்கான தீவனத்தையும் பயிரிட்டுக் கொள்ளச் செய்ய வேண்டும். அங்கே சேகரிக்கப்படும் சாணத்திலிருந்து சமையல் எரிவாயு தயாரிக்கலாம். இது சாத்தியமில்லை என்றால், அவர்களுக்கு வேறு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யலாம்.

மாடுகளை முறையாகப் பராமரிக்காமல் சாலைகளில் அலைய விட்டு, நெகிழியையும், குப்பைகளையும், சுவரொட்டிகளையும் தின்ன வைத்து, பலரிடம் வசவும், அடியும் வாங்க வைப்பது சரியா? இவற்றால் பலர் விபத்துக்குள்ளாகி உயிர் விடுவதால் எத்தனை குடும்பங்கள் அநாதைகளாகிப் போகின்றன தெரியுமா? நம் உரிமைப் பொருள் நம் எல்லைக்குள் இருப்பதுதானே சரி? நம் சுயநலத்துக்காக நம் தெருக்களையும், சாலைகளையும் அசிங்கப்படுத்தி, மக்களுக்கு இடையூறு செய்யலாமா? மாடு வளர்ப்பவர்கள் உணர வேண்டும்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு)

No comments:

Popular Posts