Saturday 18 January 2020

எல்லையை கடந்து இதயங்களை வென்ற ஜீவா

எல்லையை கடந்து இதயங்களை வென்ற ஜீவா | வெ.ஜீவகுமார், வக்கீல், மாநில துணைத்தலைவர், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்.

இன்று (ஜனவரி 18-ந் தேதி) ஜீவா நினைவுநாள்.

பொதுவுடைமை இயக்கத்தலைவர் ப.ஜீவானந்தம் காந்திய வாதியாகவும், தலைசிறந்த இலக்கிய வாதியாகவும் திகழ்ந்தவர். 1907-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி நாகர்கோவிலுக்கு அருகே உள்ள பூதப்பாண்டியில் பிறந்தார். 18-1-1963 வரை வாழ்ந்தார். 40 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்தவர். சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு 10 ஆண்டுகள் சிறையில் கழித்தவர். தொழிலாளர்களுக்கான போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர். 1952-ம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

1961-ம் ஆண்டு திரை வானில் ஜொலித்த நட்சத்திர காதல் ஜோடி ஜெமினி கணேசன், சாவித்திரி ஜோடி. இவர்கள் எட்டயபுரத்தில் மகாகவி பாரதி விழாவை நடத்தினர். விழா மேடையில் ராஜாஜி, காமராஜர், அண்ணா, ம.பொ.சி வீற்றிருந்தனர். எனினும் கூடிய பெருங்கூட்டம் யாரையோ தேடிக்கொண்டிருந்தது. அவர்களின் விழிகள் கீழே ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றன. அங்கு உட்கார்ந்திருந்தவர் ஜீவானந்தம். மக்களின் கரகோஷம் ஜீவாவை மேடையில் தூக்கி அமர்த்தியது. பாரதியிடமிருந்து ஜீவாவை பிரிக்க முடியாது. 1947-ல் மணி மண்டப திறப்பு விழா நடந்தது. ராஜாஜி தலைமை தாங்கினார். ம.பொ.சி., கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பாரதி விழாவின் பார்வையாளராக ஜீவா வந்திருந்தார். மக்களின் வேண்டுகோளின் பேரில் கல்கி ஜீவாவை அழைத்து பாரதி பற்றி சிறிது நேரம் பேச வைத்தார். ஜீவாவின் அருஞ்சுவை மேடைப்பேச்சுகளில் அதுவும் ஒன்றானது.

காண்பதற்கு எளிய ஆனால் அரிய மனதிடம் கொண்ட ஜீவாவிடம் காந்திஜி மிகுந்த பற்று கொண்டிருந்தார். வருணாசிரம கொள்கை குறித்து காந்திஜியிடம் வேறுபட்டு ஜீவா அவருக்கு கடிதம் எழுதினார். அதற்கு காந்திஜி பின்வருமாறு பதில் அனுப்பினார். நான் இரவு 9.30 மணிக்கு உங்கள் கடிதம் படித்தேன். அதிகாலை மூன்று மணி வரை எனக்கு தூக்கம் வரவில்லை. உங்களின் கருத்துகளையே சிந்தித்தேன். இறுதியில் உங்களுக்கே வெற்றி. விரைவில் தமிழ்நாடு வருவேன். அப்போது நேரில் சந்திக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்வின் போது ஜீவாவுக்கு வயது 20 ஆகும். அஞ்சுபவர்களும், கெஞ்சுபவர்களும் சுதந்திரத்தை பெற முடியாது. ஜீவாவைப் போன்ற சிலர் இருந்தாலே சுதந்திரம் சாத்தியம் ஆகும் என வ.உ.சி. ஒரு முறை கூறினார்.

ஜீவாவின் இத்தகு உறுதி அவருக்கு வெற்றிகளை குவித்தது. 1938-ல் வத்தலகுண்டுவில் சென்னை மாநில காங்கிரஸ் மாநாடு நடந்தது.அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு தேர்தல் நடந்தது. அதிக வாக்குகள் பெற்று அதில் வென்ற தமிழர் ஜீவா தான். இந்த இடத்தை அடைய, அதை நிலைக்க வைக்க ஜீவா பெரும் எதிர் நீச்சல் அடிக்க வேண்டியிருந்தது. “நான் ஏன் நாத்திகனானேன்” என்ற பகத்சிங் நூலை ஜீவா மொழிபெயர்த்தார். ஒரு புத்தக ஆக்கத்திற்காக தமிழகத்தில் முதலில் கைது செய்யப்பட்டவர் ஜீவா ஆவார். ஜீவாவின் கால்களிலும், கைகளிலும் சங்கிலிகரணைகளை விலங்காக மாட்டி போலீசார் அவரை நடு வீதியில் இழுத்துச் சென்றனர்.

1927- களில் சிராவயல் ஆசிரமத்தில் சமபந்தி போஜனம் நடத்துவதில் ஜீவா முன்நின்றார். இதற்காக அவர் கத்திக்குத்தை சந்தித்தார். 1937-ல் மதுரை பசுமலை மில் தொழிலாளர் போராட்டம் நடந்தது. அதில் காவலரால் ஜீவா தாக்கப்பட்டார். இதேபோல் 1948-ல் சேலம் சிறைச்சாலையில் மிளகாய் பொடியை தண்ணீரில் கரைத்து அவர் மீது பீய்ச்சி அடித்தனர். தொழுநோயாளிகளை கும்பலாக கூட்டி வந்து ஜீவா உள்ளிட்டோரை தாக்கினர். கோவை மாவட்டத்தின் அனைத்து கிளை சிறைச்சாலைகளிலும் அடைக்கப்பட்டு அவர் சித்ரவதை செய்யப்பட்டார். இந்திய விடுதலைக்கு பின்னும் ஜீவாவின் மேனியில் ரணம் பட்டு கொண்டே இருந்தது.

1956-களில் தட்சணப் பிரதேச திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாடு என்று பெயரிட போராட்டத்திற்கு தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி தமிழரசு கழகம் ஆகியவை அழைப்பு விடுத்தன. அப்போது நடந்த முழு அடைப்பு வெற்றி பெற்றது. அன்று மாலையே சென்னை தீவுதிடலில் இருந்து பேரணிக்கு திட்டமிட்டிருந்தனர். ஜீவா, எம்.ஆர்.வெங்கட்ராமன், மா.பொ.சிவஞானம் ஆகியோர் வந்து சேர்ந்தனர். போலீஸ் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது. ஜீவா உள்ளிட்டோருக்கு மண்டையிலும், மார்பிலும், தொடையிலும் படுகாயங்கள் ஏற்பட்டன. இந்த சூழலில் தான் நடிகவேள் எம்.ஆர்.ராதா பின்வருமாறு கூறினார். ஜீவா பட்ட அடிக்கு ஒரு வாக்கு வாங்கிய வெட்டுக்கு 100 வாக்கு என்று கணக்கு போட்டால் கூட ஜீவாவுக்கு வாக்கு போதாது என தேர்தலில் பிரசாரம் செய்தார்.

காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர் வியந்து போற்றும் பேராளுமை கொண்டவராக ஜீவா திகழ்ந்தார். அடக்கு முறை காலங்களில் அவர் தலைமறைவாக வசித்தபோது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, அவ்வை டி.கே.சண்முகம் ஆகியோர் வீடுகளில் தங்கினார். என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டில் அவர் தலைமறைவாக இருந்தபோது மு.கருணாநிதி அவரை சந்தித்தார். அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் என்.எஸ்.கேயே அவரை அறிமுகம் செய்தார். நாடு கடத்தலையும், ஏராளமான சிறைவாசத்தையும் கண்ட ஜீவா மாற்றுத்துணிக்கு கூட வழியில்லாமல் ஓலைக்குடிசையில் வாழ்ந்தார்.

ஜீவா சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அவர் வசிக்கும் பகுதியில் அப்போது முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் ஒரு நிகழ்ச்சிக்கு போகிறார். ஜீவாவையும் உடன் அழைத்துச்செல்ல விரும்பிய காமராஜர் அவர் வீட்டுக்கு செல்கிறார். வாசலில் காமராஜரை காக்க வைத்து ஜீவா இதோ வருகிறேன் என்று உள்ளிருந்தே குரல் கொடுத்தார். நேரம் கடந்தது. காமராஜர் உள்ளே பார்த்தார். ஒரு ஈரமான வேட்டியை ஜீவா உலர்த்திக்கொண்டு இருந்தார். ஜீவாவிடம் இருந்தது ஒரே வேட்டி. வெளியில் போவதென்றால் அந்த வேட்டியை துவைத்து காய வைத்து கட்டிப்போவது ஜீவாவின் பொருளாதார நிலை ஆகும்.

கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் அவர் இலங்கை சென்றார். அங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றார். டைம்ஸ் ஆப் சிலோன் பத்திரிகை அவரின் படத்தை போட்டு தமிழக கவிஞரின் இலங்கை வருகை என எழுதியது.

கிளியோபாட்ரா மூக்கு சற்று வளைந்திருந்தால் வரலாறே மாறி இருக்கும் என்போர் உண்டு. ஜீவாவை மாரடைப்பும், மூச்சுத்திணறலும் தாக்காமல் இருந்தால் தமிழகத்தின் வரலாறும் மாறி இருக்கலாம். பாரதிதாசனால் துன்பம் தாங்கி என்று அழைக்கப்பட்ட ஜீவா தம் இன்ப வசந்தத்தை தமிழகத்திற்கு அர்ப்பணித்த தியாக தீபம் ஆவார்.

No comments:

Popular Posts