Monday 6 January 2020

புற்றுநோய்களை குணப்படுத்த உதவும் புதிய ‘ஜீன் தெரபி’

வளர்ச்சி என்பது உயிர் வாழ்க்கைக்கு அவசியமானது. ஆனால் அந்த வளர்ச்சியும் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நிகழ்ந்தால் மட்டுமே அது உயிர்களுக்கு நன்மையைத் தரும். இல்லையென்றால் தீமைதான் விளையும்.

உதாரணமாக, மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்க்கைக்கு அடிப்படையான உயிரணு வளர்ச்சியைக் கூறலாம். மூளையின் கட்டளைகளுக்கு ஏற்ப, ஆரோக்கியமான உடலுக்கு தேவையான அளவு வளர்ச்சியை உயிரணுக்கள் வெளிப்படுத்தும் வரை உயிர் வாழ்க்கையானது ஆரோக்கியமாகவே தொடர்கிறது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மூளையின் கட்டளைகளை ஏற்காமல் உடலில் ‘தறிகெட்டு’ வளரும் உயிரணுக்களே புற்றுநோய்க்கான வித்திடுகின்றன. அப்படி உருவாகும் புற்றுநோய்கள் பெரும்பாலும் உயிர்கொல்லியாக (உடல் முழுக்க பரவும் ஆபத்தான புற்று நோயாக) மாறி மனித உயிர்களை லட்சக்கணக்கில் பலிகொண்டு வருகின்றன.

கடந்த பற்பல நூற்றாண்டுகளாக தொடர்ந்துவரும் புற்றுநோய் உயிரிழப்பு களை நவீன மருத்துவ முறைகள் கணிசமான அளவுக்கு இன்னும் குறைக்கவில்லை என்றாலும்கூட, பெரும்பாலான புற்றுநோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகளின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதில், சில வகை புற்றுநோய்களை முற்றிலுமாக குணப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ளன என்பது உண்மைதான். ஆனாலும், அனைத்து வகையான புற்றுநோய்களையும் குணப்படுத்துவதுதான் புற்றுநோய் மருத்துவத்தின் இலக்காகும்.

அந்த வகையில், அமெரிக்காவிலுள்ள ஓஹையோ ஸ்டேட் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் லீ தலைமையிலான புற்றுநோய் ஆய்வாளர்கள் மனித உயிரணுக்களைப் பயன்படுத்தி மூளைப் புற்றுநோயான க்ளியோமாவை (glioma) குணப்படுத்தும் நவீன ஜீன் தெரபி சிகிச்சை ஒன்றை சமீபத்தில் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

மனித உடலில் உள்ள உயிரணுக்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் திரவம் நிரம்பிய பைகள் போன்ற ஒரு அமைப்பான எக்சோசோம்ஸ் (exosomes) இந்த ஆய்வில் முக்கிய பங்கு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, இந்த எக்சோசோம்கள் நோயாளியின் உடலுக்குள் செலுத்தப்பட்ட பின்னர், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடுவது இல்லை.

அதனால், புற்றுநோய்களை குணப்படுத்தும் ஜீன் தெரபி சிகிச்சைக்கு அவசியமான ஜீன்களை (genes) எக்சோசோம்களுள் வைத்து உடலுக்குள் அனுப்பினால் அது வெற்றியடையும் விஞ்ஞானிகள் கருதினர். அத்தகைய ஒரு சோதனை சிகிச்சையானது, க்ளியோமா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளின் புற்றுநோய் வளர்ச்சியை சுமார் 80 சதவீதம் குறைத்தது இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஜீன் தெரபி சிகிச்சையில், மனித ஸ்டெம் செல்களை லட்சக்கணக்கான எக்சோசோம்களை உற்பத்தி செய்யுமாறு தூண்டும் ஒரு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படி உற்பத்தி செய்யப்படும் எக்சோசோம்களை சேகரித்து, சுத்தி கரிப்பு செய்த பின்னர் அவற்றை புற்றுநோய்களை கொல்லும் மருந்துகளை கடத்திச் செல்லும் நானோ மருந்து கடத்திகளாக பயன்படுத்துவதன் மூலம் இந்த ஆய்வில் க்ளியோமா புற்றுநோய் குணப்படுத்தப்படுள்ளது.

மேலும், நோயாளியின் ரத்தத்தில் இந்த நானோ மருந்து கடத்தி எக்சோசோம்களை செலுத்திய பின்னர் அவை முகவரி எழுதப்பட்ட தபால் அட்டைகள் போல தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குச் (புற்று நோய் பகுதிகளுக்கு) சரியாக சென்று சேர்ந்ததும் இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஜீன் தெரபி சிகிச்சையில், சுமார் 10 லட்சம் மீசென்கைமல் செல்கள் (mesenchymal cells) ஒரு நானோ அளவிலான சிலிக்கான் பட்டையில் வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மின் தூண்டுதலின் உதவியுடன் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட டி.என்.ஏ.க்கள் 10 லட்சம் மீசென்கைமல் செல்களுக்குள் அனுப்பப்பட்டன.

இந்த செயற்கை டி.என்.ஏ-வை உயிரணுக்களுக்குள் வலுக்கட்டாயமாக திணித்ததால் அவை அனைத்தும் உயிரணுக்களால் எக்சோசோம்களாக வெளியேற்றப்பட்டன. முக்கியமாக, உயிரணுக்களை மின் தூண்டுதல் மூலமாக தூண்டியதால், சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஜீன்களும் சுமார் ஆயிரம் மடங்கு இரட்டிப்பானதாகவும் இந்த ஆய்வில் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில், புற்றுநோயை குணப்படுத்தும் புரதங்களை உற்பத்தி செய்யும் மரபணு, ஜீன்களை (உதாரணமாக PTEN gene), உடலில் புற்றுநோய் உள்ள பகுதிகளுக்கு துல்லியமாகவும், எந்தவித தடைகளும் இல்லாத விதமாகவும் கொண்டு சேர்த்தால் புற்றுநோய் வளர்ச்சியை குறைக்க முடியும் என்று இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் உருவாக்கப்பட்டுள்ள எக்சோசோம்கள் உடலில் புற்றுநோயுள்ள இடங்களை தாமாகவே கண்டறிந்து, அவற்றை மட்டும் முற்றிலும் அழிக்கும் திறன்கொண்டவை என்பதால், அவற்றைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான உயிரணுக்கள் பாதிப்பு அடைவதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆபத்துகள் இல்லாத இந்த ஜீன் தெரபி சிகிச்சையானது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறுகிறார் ஆய்வாளர் ஜேம்ஸ் லீ.

No comments:

Popular Posts