Monday, 6 January 2020

விஞ்ஞான உலகம் 2019

கடந்து போன 2019-ம் வருடத்தில் விஞ்ஞான உலகில் சாதிக்கப்பட்ட முக்கிய நிகழ்வுகள்...

ஐ.பி.எம். நிறுவனம் தனது முதல் குவாண்டம் கணினியை (IBM Q System One) வணிக ரீதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

சனி கிரகத்தின் நாட்கணக்கு துல்லியமாக அளவிடப்பட்டது. சனிகிரகம் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்டாலும், அதைச்சுற்றியுள்ள வளையம் மற்றும் துலங்காத பல உண்மைகள் அதன் நாட் கணக்கை அளவிட தடையாக இருந்தது. காசினி விண்கலம் அதன் வளையங்களை துல்லியமாக அளந்ததோடு, சனி கிரகத்தில் ஒரு நாள் என்பது 10 மணி நேரம், 33 நிமிடங்கள், 38 விநாடிகள் என்று கணக்கிட்டு கூற துணை செய்தது.

சீனாவின் சாங்க்-இ4 விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கியது. அதன் அருகேதான் வோன் கர்மென் எனும் சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய எரிமலை அமைந்துள்ளது. இதுவே நிலவின் மறுபக்கத்தில் இறங்கிய முதல் விண்கலமாகும். இது விண்வெளி வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனையாக பதிவானது. அங்கு ஆலிவின் மற்றும் கால்சியம் பைராக்சின் போன்ற தாதுக்கள் கண்டறியப்பட்டது.

புதிய மனித இனம் கண்டறியப்பட்டது. செயற்கை அறிவு தொழில்நுட்பத்துடன் நியாண்டர்தால் மற்றும் டெனிசோவன் மனித இனங்களின் மரபணுக்களை ஆராய்ந்தபோது அவற்றிலிருந்து வேறுபட்ட புதிய மனித இனம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

செயற்கை மரபணு உருவாக்கப்பட்டது. இரட்டைச்சுருள் ஏணி வடிவமைப்புடன், 8 நியூக்ளியோபேஸ்களுடன் இந்த டி.என்.ஏ. அமைந்துள்ளது. இதில் 4 நியூக்ளியோ பேஸ்கள் செயற்கையானவையாகும். இது மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கும், வேற்றுக்கிரக சூழலை தாக்குப்பிடித்து வாழும் பண்புக்கும் ஏற்றதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

வெள்ளை குள்ள நட்சத்திரம், படிக நட்சத்திரமாக மாற்றம் அடையும் முதல் சான்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விண்வெளியில் காணப்படும் அனைத்து நட்சத்திரங்களும் ஒருநாள் படிக நட்சத்திரமாக மாறும் என்பது உறுதி செய்யப்படுகிறது. நமது நட்சத்திரமான சூரியன், ஆயிரம் கோடி ஆண்டுகளுக்குப் பின்பு வெள்ளை குள்ள நட்சத்திரமாகவும், பின்னர் படிக நட்சத்திரமாகவும் மாறும் என்று மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

சூரிய குடும்பத்தின் எல்லையில் கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட பொருளுக்கு ‘பார்பார்அவுட்’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பொருள் சூரியனில் இருந்து 15 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 9-வது கிரகம் அல்லது பெரிய பாறைக்கோள் அங்கே மறைந்திருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டபோது இந்தப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

குட்டி நாடான இஸ்ரேல், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணையுடன் தனது முதல் விண்கலத்தை (பிரீஷீட் புரோப்) நிலவில் இறக்கியது. துரதிர்ஷ்டவசமாக அது விபத்துக்குள்ளாகி செயலிழந்தது.

டைனோசர்கள் விண்கல் மோதலால் அழிந்துபோனது என்று கூறப்படுகிறது. அப்படி விண்கல் தாக்குதல் நடந்தபோது தூக்கியெறியப்பட்டு ஆற்றில் விழுந்து, குப்பைகளால் அமுக்கப்பட்டு இறந்த டைனோசர் படிமம் ஒன்று கண்டறியப்பட்டது. இதையடுத்து பேரழிவை ஏற்படுத்திய அந்த ஷிக்சூலப் விண்கல் சரியாக எந்த இடத்தில், எந்த நாளில், எந்த நேரத்தில் பூமியைத் தாக்கியிருக்கும் என்பது பற்றிய கேள்விகளுக்கு விடைகாணும் ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் இறங்கி உள்ளனர்.

கடந்த ஆண்டின் முக்கிய சாதனையாகவும், 21-ம் நூற்றாண்டின் முக்கிய கண்டுபிடிப்பாகவும் அமைந்தது முதல் கருந்துளையின் தொலைநோக்கி பதிவு. ஈவன்ட் ஹாரிசன் தொலைநோக்கி மூலம் இது படம் பிடிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் இருந்து உலக வானியில் நிபுணர்கள் இதை பதிவு செய்து வியக்க வைத்தனர்.

ஆராய்ச்சியாளர்கள் ஒரு எலியின் கண்ணில், நானோ துகள்களை செலுத்தி, அதன் பார்வையை ஆராய்ந்தனர். அப்போது அந்த எலிகளால் அகச்சிவப்பு ஒளி காட்சிகளையும் காண முடிந்தது. இந்த ஊசி தற்போதைய நிலையில் 10 வாரங்களுக்கு செயல் அளிப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செல்களை மனிதனில் பயன்படுத்தினால் மனிதனும், இருளிலும் பார்வையைப் பெற்றுவிடுவான். அந்த அதிசயம் எதிர்காலத்தில் நிகழ வாய்ப்பிருக்கிறது.

மனிதனின் குறிப்பிட்ட பாகங்களின் செல், தேவைப்படாமல் செயற்கையாக மனிதனின் திசுக்களை முப்பரிமாண அச்சடிப்பு முறையில் உருவாக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

No comments:

Popular Posts