Monday, 6 January 2020

கிருமிகளை அழிக்கும் நானோ எந்திரங்கள்

நம் கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு மிக மிக நுண்ணிய அளவு கொண்டவை பாக்டீரியாக்கள் மற்றும் இதர நுண் கிருமிகள். ஒவ்வொரு கணமும் நம் உடலைத் தாக்கி உள்ளே நுழைய இவை முயற்சி செய்கின்றன.

நுண் கிருமிகளை காண உதவும் ஒரு பூதக்கண்ணாடியை நம் உடலின் தோல் மீது வைத்துப் பார்த்தால், பாக்டீரியாக்கள் மற்றும் இதர நுண் கிருமிகள் நம் தோலை நோக்கி வருவதைக்காண முடியும். அத்தகைய பாக்டீரியா, கிருமிகள் எப்படியோ உடலுக்குள் நுழைந்துவிட்டாலும் கூட, நம் ரத்த நாளங்கள் மற்றும் நிணநீர் நாளங்களில் எப்போதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருக்கும் டி செல் மற்றும் மேக்ரோபேஜஸ் (T cells/Macrophages) உள்ளிட்ட நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் உடலுக்குள் நுழைந்துவிட்ட நுண்கிருமிகளை கொன்று அழித்துவிடும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் நோய் எதிர்ப்பு உயிரணுக்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள், நுண்கிருமிகள் நம் ரத்த ஓட்டத்தில் கலந்துவிட்டால், அவற்றை அழிக்க ஆண்டிபயாடிக் (antibiotics) என்று அழைக்கப்படும் மருந்துகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய மருந்துகள் பொதுவாக பாக்டீரியா உள்ளிட்ட நுண் கிருமிகளை அழிப்பதில் மிகவும் சக்திவாய்ந்தவைதான் என்றாலும், ஒரே வகையான மருந்துகளை தொடர்ந்து எடுப்பதால் அந்த மருந்துகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை சில பாக்டீரியாக்கள் வளர்த்துக்கொள்கின்றன.

அத்தகைய பாக்டீரியாக்களை விஞ்ஞானிகள் ‘சூப்பர் பக்ஸ்’ (Superbugs) அல்லது ‘சூப்பர் கிருமிகள்’ என்கிறார்கள். மனிதர்கள் எதிர்நோக்கி இருக்கும் உலக அழிவு என்பது உலக வெப்பமாதல், அல்லது பூகம்பம், எரிமலை, சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் மூலமாக மட்டுமல்லாமல், எண்ணற்ற அண்டிபயாடிக் மருந்துகளுக்கு அஞ்சாத சூப்பர் கிருமிகள் மூலமாகவும் கண்டிப்பாக ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

உதாரணமாக, வருகிற 2050-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பூமியில் இருந்து சுமார் பத்து லட்சம் மனிதர்களை கொன்றுவிடும் என்று சில கணிப்புகள் கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது. அத்தகைய உடனடி பேராபத்தான சூப்பர் கிருமிகளை அழிக்கும் சூப்பர் மருந்துகளை உருவாக்கும் முயற்சி கடந்த பல ஆண்டுகளாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் உள்ள ரைஸ், டெக்சாஸ் ஏ அண்டு எம் மற்றும் பயோலா ஆகிய பல்கலைக்கழகங்கள் மற்றும் இங்கிலாந்தில் உள்ள துர்ரம் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சூப்பர் கிருமி பாக்டீரியாக்களின் உடலில் ஓட்டையைப் போட்டு அவற்றைக் கொல்லும் திறன்கொண்ட, ‘ஒளியால் தூண்டப்படும்’ ஒருவகை நானோ எந்திரங்களை உருவாக்கி, அவை சூப்பர் கிருமிகளை அழிக்கின்றன என்றும் நிரூபித்துள்ளனர்.

முக்கியமாக, ஆண்டிபயாடிக் மருந்துகளை தங்களின் உடலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதன் மூலமாக அவற்றுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை ஏற்படுத்திக்கொள்ளும் பாக்டீரியாக்கள் நானோ எந்திரங்களை எதிர்த்து எந்தவிதத்திலும் போராட முடியாது என்கிறார் வேதியியலாளர் ஜேம்ஸ் டூர். நானோ எந்திரங்களால் துளையிடப்பட்ட பாக்டீரியாக்களின் உடலுக்குள் ஆண்டிபயாடிக் மருந்துகளால் நுழைய முடியும் என்பதால், நானோ எந்திரத் தாக்குதலுக்குப் பின்னர் அவற்றை மெரோபினெம் (meropenem) எனும் பாக்டீரியாக்கள் எதிர்ப்புத் திறன் பெற்றுவிட்ட ஆண்டிபயாடிக் மருந்துகள் மூலமே மேலும் விரைவாக கொன்றுவிட முடியும் என்றும் இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த நானோ எந்திரங்கள் ஒளியால் தூண்டப்பட்டவுடன், ஒரு நொடிக்கு சுமார் 30 லட்சம் முறை சுழலும் அசாத்திய திறன்கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் உதவியுடன் க்லேப்ஷியேல்லா நிமோனியே (Klebsiella pneumoniae) எனப்படும் ஒருவகை சூப்பர் கிருமி பாக்டீரியாக்களை சில நிமிடங்களில் அழிக்க முடியும் என்று இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் கிருமிகள் எந்த அளவுக்கு சாமர்த்தியசாலிகள் என்று கேட்டால், ஒன்று, ஆண்டிபயாடிக் மருந்துகள் தங்களின் உடலுக்குள் செல்ல அவை அனுமதிப்பதில்லை. அல்லது, உடலுக்குள் சென்றுவிட்ட மெரோபினெம் போன்ற ஆண்டிபயாடிக் மருந்துகளை செயலிழக்கச் செய்துவிடும் வல்லமை பெற்றவை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

எனவே, சூப்பர் கிருமிகளின் உடலில் (உயிரணுவில்) துளையிடும் நானோ எந்திரங்களுடன் சேர்த்து மெரோபினெம் போன்ற ஆண்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தினால் அதிகபட்சமாக சுமார் 94 சதவீத சூப்பர் கிருமி பாக்டீரியாக்களை அழிக்க முடியும் என்று இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான கண்டுபிடிப்புகளை போல அல்லாமல், இந்த நானோ எந்திரங்களை மருத்துவமனைகளில் உடனே பயன்படுத்த முடியும். மேலும், தோல், காயங்கள், கேத்தீட்டர் ஊசிகள் மற்றும் உட் பொருத்திகள் ஆகியவை மூலமாக ஏற்படும் பல்வேறு வகையான (staphylococcus aureus MRSA, klebsiella or pseudomonas) பாக்டீரியா தொற்றுகளை இந்த நானோ எந்திர மற்றும் ஆண்டிபயாடிக் கலவை சிகிச்சை மூலமாக குணப்படுத்த முடியும் என்றும் கூறுகிறார் ஆய்வாளர் ரிச்சர்டு குணசேகரா.

ஆக மொத்தத்தில், சூப்பர் கிருமிகள் மூலமாக வரவிருக்கும் உலக அழிவுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு இப்போதே தயார் என்று கூட சொல்லலாம்.

No comments:

Popular Posts