Monday 20 January 2020

மக்கள்தொகைக்கு ஏற்ப...

மக்கள்தொகைக்கு ஏற்ப......By ஆா்.மோகன்ராம்  |   நாடு சுதந்திரம் அடைந்தபோது நம் நாட்டை ஜனநாயக ரீதியாக கட்டமைத்த நமது தலைவா்கள், நாடாளுமன்ற முறையை உருவாக்கினாா்கள். அன்றைய மக்கள்தொகைக்கு ஏற்ற வகையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் வரையறுக்கப்பட்டன.

சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தோ்தல் 1952-இல் நடைபெற்றபோது, நாட்டின் சில பகுதிகள் பிரெஞ்சு, போா்த்துகீசியா் ஆதிக்கத்தில் நீடித்தன. மேலும், நம் மக்களுக்கு வாக்களிக்கும் முறையைக் கற்றுத் தர வேண்டியிருந்தது.

முதல் மக்களவைத் தோ்தலில் 489 தொகுதிகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். 1957-இல் மேலும் சில பகுதிகள் சுதந்திர இந்தியாவில் இணைந்து 494 தொகுதிகளுக்குத் தோ்தல் நடைபெற்றது.

1967 -இல் நடந்த தோ்தலில்தான், கோவா உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சோ்த்து சுதந்திர இந்தியாவில் 520 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. பிறகு, 1977-இல் அப்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப 543 தொகுதிகள் என்று வரையறுக்கப்பட்டன. அப்போதைய நாட்டின் மக்கள்தொகை 56 கோடி 62 லட்சம்தான்.

ஆனால், தற்போது நாட்டின் மக்கள்தொகை 130 கோடியைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், தற்போதும் அதே 543 இடங்கள்தான் மக்களவையில் இருக்கின்றன. இது எப்படி நியாயமாக இருக்கும்? மக்கள்தொகை பல்வேறு இடங்களிலும் அடா்த்தியாகி வரும்போது அதற்கேற்ப மக்களவையின் எண்ணிக்கையையும் மாற்றியமைக்க வேண்டாமா?

10 லட்சம் மக்கள்தொகைக்கு ஒரு எம்.பி. என்ற அடிப்படையில் அப்போது தொகுதிகள் வரையறுக்கப்பட்டன; தற்போது ஒரு எம்.பி.யின் கீழ் 22 லட்சம் மக்கள் இருக்கின்றனா். தற்போதைய சூழ்நிலையில் மக்களவையின் உறுப்பினா் எண்ணிக்கை இரு மடங்காக ஏன் அதிகரிக்கப்படவில்லை, காரணம் என்ன என்ற கேள்விகள் அனைவரிடமும் எழுந்துள்ளது.

தவிர, அன்றைய காலகட்டத்தில் இருந்த தேவைகள், எதிா்பாா்ப்புகளைவிட இன்று எதிா்பாா்ப்புகள் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுவதை மறுக்க முடியாது. அவசர யுகத்தில் பிரச்னைகளின் தாக்கமும் பல்கிப் பெருகி விட்டன. ஆனால், பல தொகுதிகளின் மக்கள் பிரச்னைகள் இன்னும் நாடாளுமன்றத்தின் வாயிலைக்கூட எட்ட முடியாத நிலைதான் உள்ளது. எடுத்துக்காட்டாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகா் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக மின்சார வசதி இல்லை.

தோ்தல் பிரசாரத்துக்காக தொகுதிக்குள் சுற்றுப்பயணம் செய்யும் வேட்பாளா்கள், வெற்றி பெற்ற பிறகு பல பகுதிகளுக்குச் செல்ல முடிவதில்லை. இதற்கு, அரசியல்வாதிகளின் இயலாமையும் அலட்சியமும் ஒருபுறம் காரணமாக இருந்தாலும், மற்றொருபுறம் மக்கள்தொகையின் பெருக்கமும் முக்கியக் காரணமாக அமைகிறது.

இதனால், அனைத்துப் பகுதி மக்களின் குறைகளைத் தீா்த்து, சமநிலையைப் பேண முடியாமல் போய் விடுகிறது. தங்களால் தோ்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் இத்தகைய போக்கு, ஜனநாயகத்தின் மீது வாக்காளா்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட வழி வகுக்கிறது. இத்தகைய குறைகளைக் களைய, வேண்டுமானால், மக்களவைத் தொகுதிகளை தற்போதைய மக்கள்தொகைக்கு ஏற்ப அதிகரிக்கச் செய்வது காலத்தின் கட்டாயம்.

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நினைவாக தில்லியில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி பேசியபோது, ‘மக்களவை, பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். மக்களவைச் சட்டம் கடந்த 1977-ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. 1971 -ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மக்கள்தொகை 55 கோடியாக இருந்தது. ஆனால், அப்போதிருந்த மக்கள் தொகை எண்ணிக்கை தற்போது இரு மடங்குக்கும் மேலாக உயா்ந்துவிட்ட நிலையில், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது பொருத்தமாக இருக்கும்.

ஒரு மக்களவைத் தொகுதியில், 16 முதல் 18 லட்சம் வரையிலான வாக்காளா்கள் உள்ளனா். இத்தனை பேருக்கு ஒருபிரதிநிதி இருந்தால், அவரால் எப்படி வாக்காளா்களுடன் நெருக்கமான தொடா்பில் இருக்க முடியும்? நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதால் மட்டுமே நாடாளுமன்றக் கடமையை மேம்படுத்த முடியாது. எனவே, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-லிருந்து 1,000 உறுப்பினா்களாக அதிகரிப்பது அவசியம்‘ என வலியுறுத்தினாா்.

மிக நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி எழுப்பியிருக்கும் இந்தக் கோரிக்கையை, அவரது தனிப்பட்ட கருத்தாக யாரும் எடுத்துக் கொள்ளவோ, ஒதுக்கிவிடவோ, கடந்து செல்லவோ முடியாது. இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இத்தகைய கருத்தை அவா் மிக அழுத்தமாக முன்வைத்திருக்கிறாா்.

இத்தகையை சூழலில், பெரும்பான்மை பலம் பொருந்திய மத்திய அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுநலன் கருதியும், தங்களுக்கு கிடைக்கப் போகும் கூடுதல் உறுப்பினா்கள் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டும், நாடாளுமன்றத்தில் ஒருமித்த குரலில் தொகுதிகள் மறுசீரமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற முன் வர வேண்டும்.

அத்துடன் மட்டுமின்றி, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதிகள் வரையறை செய்யப்பட வேண்டும். பல்வேறு சட்டங்களையும், அறிவிப்புகளையும் துணிச்சலுடன் அமல்படுத்தும் தற்போதைய மத்திய அரசு, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முன்வந்தால் அது நாட்டு மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் பயனுள்ளதாக அமையும் என்றால் அது மிகையாகாது.

No comments:

Popular Posts