Tuesday 21 January 2020

வளர்ச்சிக்கு வழிகாட்டுமா பட்ஜெட்?

வளர்ச்சிக்கு வழிகாட்டுமா பட்ஜெட்? | டாக்டர் சோம வள்ளியப்பன் | விளையாட்டுப் போட்டியோ, வியாபாரமோ, அல்லது வேறு எதுவுமோ. எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கையில், எவரும், ‘நடப்பதை ஏன் வீணாகக் கெடுத்துக்கொள்ள வேண்டும்?’ என்று மாறுதல்கள் செய்யும், ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஆனால், நிலைமை மோசமாகும்போது, வேறு வழியில்லாமல் ரிஸ்க் எடுப்பார்கள். பல சமயங்களில் அது நன்மையில் முடியும்.

நாட்டில் இப்போது நிலவும் பொருளாதார நிலை, அப்படி ரிஸ்க் எடுக்க வேண்டிய சூழல் போல் தெரிகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டும், உள்நாட்டு உற்பத்தி, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவாக, 5.5 சதவீதமாக குறைந்து முடியவிருக்கிறது. வேலை இல்லாதோர் எண்ணிக்கை சதவீதம், சென்ற டிசம்பர் மாதம், கடந்த பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு, 7.7 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

2011-12-ம் ஆண்டில், 23.6 சதவீதமாக இருந்த தனிநபர்கள் சேமிப்பு, 2017-18-ல் 17.2 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. 2011-12-ம் ஆண்டில் 34.3 சதவீதமாக இருந்த ‘கிராஸ் கேப்பிடல் பார்மேஷன்’ எனப்படும் முதலீட்டிற்கான பணம் சேர்தல், 2019-20-ல், 28.1 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.

திட்டமிட்ட அளவு ஜி.எஸ்.டி. வசூல் இல்லை. நவம்பர் மாதம் வரையில் மட்டுமே 40 சதவீதம் குறைவு. நேரடி வரி வசூலும் திட்டமிட்ட அளவு நடக்கவில்லை. மேலும், அரசே முதலீட்டைப் பெருக்குவதற்காக என்று முன்வந்து, கார்ப்பரேட் வரிகளில் 1.45 லட்சம் கோடி ரூபாய்க்கு விலக்கு கொடுத்துவிட்டது. அதேபோல திட்டமிட்ட அளவு பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை நடக்கவில்லை. அதன் மூலம் திரட்டப்பட வேண்டிய 1.05 லட்சம் கோடி ரூபாய்க்கு பதிலாக, ஜனவரி வரை திரட்டப்பட்டிருப்பது, வெறும் 17 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. இந்த காரணங்களால், நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் பற்றாக்குறை, திட்டமிட்டதை விட அதிகமாகும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. பற்றாக்குறை என்றால், அரசு வரிகளை அதிகப்படுத்த வேண்டும்; அதன் செலவுகளை குறைக்கவேண்டும்; கூடுதல் கடன் வாங்க வேண்டும்; வட்டி கட்டவேண்டும்.

இவற்றில் எதுவும் நாட்டுக்கோ, மக்களுக்கோ நல்லது அல்ல. ஆக, இதுதான் தற்போதைய சூழல். இப்படிப்பட்ட சூழலில், ‘வழக்கமான வரவு-செலவு பட்ஜெட்’ என்பது போதாது. மாற்றங்களில், ‘இன்கிரிமெண்டல்’ மற்றும் ‘ஜம்ப் ஷிப்ட்’ மாற்றங்கள் என்று இருவகைகள் உண்டு. ‘இன்கிரிமெண்டல்’ என்பது, முன்னில் இருந்து சிறிய மாற்றம். ‘ஜம்ப் ஷிப்ட்’ என்பது பெருந்தாவல் மாற்றம். இப்போது நிலவும் அசாதாரண சூழலை சமாளிக்க, பெருந்தாவல் மாற்றங்கள் தேவை. பெருந்தாவல் என்றால், அணுகுமுறைகளில், கொள்கை முடிவுகளில், நடைமுறைகளில் மாற்றம்.

வருகிற பிப்ரவரி 1-ந்தேதி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் முழு ஆண்டிற்கான பட்ஜெட், வழக்கமான பட்ஜெட்டுகள் போல, ஆங்காங்கே சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டதாக இருக்கப்போகிறதா, அல்லது சில அடிப்படைகளையே மாற்றும் சீர்திருத்த பட்ஜெட்டாக இருக்கப்போகிறதா? தெரியவில்லை. பட்ஜெட் என்பது ஒரு ஆண்டின் வரவு-செலவு கணக்கு மட்டுமே. அதற்குமேல் அதில் என்ன இருக்கிறது? அதை பற்றி ஏன் இவ்வளவு விவாதங்கள் என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால், அதிலும் மத்திய பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றும் வல்லமை கொண்டதுதான்.

அதுவரை உற்பத்தி கூடங்களின் வாசல்களில் அமர்ந்து வெளியேறும் உற்பத்தி பொருட்களுக்கு கலால் வரி முத்திரையிட்டு கொண்டிருந்த பழக்கத்தை மாற்றி, உற்பத்தியாளர்களே, அவர்கள் எவ்வளவு செய்தார்கள் என்று தெரிவிக்கும் முறையை கொண்டுவந்தது நிதி மந்திரி மொரார்ஜிதேசாய் செய்தது, 1968-ம் ஆண்டு பட்ஜெட்டில்.

இப்போதைய ஜி.எஸ்.டி.யில் ‘இன்புட் டேக்ஸ் கிரெடிட்’ என்று ஒரு அம்சம் இருக்கிறது. அந்த அம்சத்தின் முதல் வடிவம், ‘மாடுவாட்’ என்ற வரி. அது முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது 1986-ம் ஆண்டு பட்ஜெட்டில் செய்தவர் நிதி மந்திரி, வி.பி. சிங்.

தங்கத்தை அடகு வைக்கும் அளவு மோசமான நிலையில் இருந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க, அப்போதைய நிதி மந்திரி மன்மோகன் சிங் 1991-ம் ஆண்டு பட்ஜெட்டில் செய்த தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் ஆகியவை எல்லாம் இந்திய பொருளாதாரத்தின் போக்கையே மாற்றிய மிகப்பெருந்தாவல் மாற்றங்கள்.

1997-ம் ஆண்டு ப.சிதம்பரம் அறிவித்த, ‘வாலன்டரி டிஸ்குளோசர் திட்டம்’, அந்த ஒரு ஆண்டில் மட்டும் அரசுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தந்தது. தனிநபர் மற்றும் கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டன. 2000-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, 75 ஆயிரம் கோடி ரூபாய், தங்க நாற்கர தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், நாட்டில் ஏற்படுத்திய வளர்ச்சியின் அளவு மிகப்பெரியது.

2004-ம் ஆண்டு, பங்கு வர்த்தகத்திற்கு ப.சிதம்பரம், அதுவரை இருந்த மூலதன ஆதாய வரியை விலக்கி, புதிய, ‘செக்யூரிட்டி டிரன்சாக்சன் டேக்ஸ்’ அறிமுகப்படுத்தியதும் பட்ஜெட்டில்தான்.

விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது இடுபொருள் செலவைப் போல ஒன்றரை மடங்கு இருக்க வேண்டும் என்று, 2018-ல் அருண்ஜெட்லி முடிவுசெய்து அறிவித்ததும் பட்ஜெட்டில்தான்.

ஆக, பட்ஜெட் என்பது ஒரு பெரிய வாய்ப்பு. சுணக்கத்தில் தவிக்கும் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக, எதிர்வரும் பட்ஜெட்டில் அப்படி சில பெருந்தாவல் மாற்றங்கள் நிச்சயம் தேவை. புள்ளி விவரங்கள் காட்டுவது இதுவரை இருந்த நிலைமையை. இந்த நிலை மாறுவதற்கான சூழல் உருவாகி வருகிறது என்பதை காட்டும் வேறு சில தகவல்களும் உண்டு.

உற்பத்தி துறையிலும், சேவை துறையிலும் வளர்ச்சி இருக்கப்போகிறது என்பதை முன்னறிவிக்கும் சில தகவல்கள் வந்திருக்கின்றன. உற்பத்தித்துறையில் பர்ச்சேசிங் மேனேஜர்ஸ் இன்டெக்ஸ் (பி.எம்.ஐ.) கடந்த டிசம்பர் மாதத்தில், 52.7 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. சர்வீஸ் துறையின் பி.எம்.ஐ. 53. இவையெல்லாம் கடந்த பல மாதங்களில் இல்லாத உயர்வு. பி.எம்.ஐ. 50-க்கும் மேல் இருந்தாலே வளர்ச்சி என்றுதான் அர்த்தம்.

நாடெங்கிலும் பரவலாக நல்ல மழை பெய்திருக்கிறது. அதனால், விவசாய உற்பத்தி மற்றும் வளர்ச்சி நன்றாக இருக்கும். டிசம்பர் மாதத்தில் கிராமப்புற பணவீக்கம் அதிகரித்திருப்பதும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது. வங்கி வட்டி விகிதங்கள் இன்னும் குறைவாகத்தான் இருக்கின்றன. வங்கிகள் பிரச்சினை ஓரளவு தீர்ந்துவிட்டது என்று சொல்லலாம். டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக இருக்கிறது. அமெரிக்கா சீனா வர்த்தக போர் சூடு தணிந்திருப்பது. இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அன்னிய செலாவணி கையிருப்பும் தற்போது 461 பில்லியன் டாலர் என்ற உயர் அளவில் இருக்கிறது. இந்த நேரத்தில் ஒரு சரியான பட்ஜெட், நிலைமையை வேகமாக மாற்றும் வல்லமை கொண்டது. எதிர்பார்ப்போம்.

No comments:

Popular Posts