Thursday 19 December 2019

கால சூழ்நிலைக்கேற்ப இளைஞர்களை தயார் செய்வோம்

கால சூழ்நிலைக்கேற்ப இளைஞர்களை தயார் செய்வோம்

நடராஜ், ஐ.பி.எஸ்.,

சட்டமன்ற உறுப்பினர், மயிலாப்பூர்.

உ லகிலேயே அதிகமான இளைஞர்கள் கொண்ட நாடு இந்தியா. நமது இளைஞர் படை அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம். இதனால் தான் உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கிறது. உலக அளவில் இளைஞர்கள் அதிகமாக பொது வாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. 1990-களிலிருந்து உலக மயமாக்கல் திட்டம் பரவிய பொழுது வர்த்தகம் தழைக்க புதிய அணுகுமுறை தேவைப்பட்டது. கணினி புரட்சி, இண்டர்நெட் மூலம் தகவல் பரிமாற்றம், அன்றாட நடைமுறை, வியாபாரம், கல்வி, மருத்துவம் எல்லாவற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. புதிய வரவுகளை இளைஞர்கள் உடனே பிடித்து கொண்டார்கள். அனுபவஸ்தர் யோசிக்கும் நேரத்தில் இளம் வட்டங்கள் கம்ப்யூட்டர் மூலம் செய்து முடித்தார்கள். அனுபவம் எவ்வளவு முக்கியமோ அதைவிட தேவை வித்தியாசமாக சிந்தித்து பயன்பாட்டை அதிகபடுத்தும் வழிமுறைகள். இது வரவேற்கத்தக்க மாற்றம். மாற்றத்திற்கு நாம் தயாராக வேண்டும், இளைஞர்களை தயார் செய்ய வேண்டும். அவர்களது திறன் மேம்பாடு முக்கிய அரசாங்க திட்டமாக வகுக்கப்படுவது அவசியம்.

இதை மைய கருத்தாக வைத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம், இந்த வருடம் மனித உரிமைகள் காப்பதில் இளைஞர்கள் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வலியுறுத்தி அறிக்கை கொடுத்திருக்கிறது. பொது வாழ்வில் ஈடுபடுவதும் ஒரு முக்கிய உரிமையாக கருதப்படுகிறது.

அரசியலில் ஈடுபடுவதுதான் பொது வாழ்வு என்ற எண்ணம் தவறானது. அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல வேண்டும். குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றி யோசிக்க நேரமில்லை. சந்தோஷமான குழந்தை பருவத்தை அனுபவிக்க நல்ல சூழல் ஏற்படுத்துவது நம் எல்லோருடைய பொறுப்பு. ஆனால் அதை பற்றியோசிக்கவோ விவாதிப்பதோ இல்லை. ஒன்று அவர்களை புத்தக புழுவாக படிப்பை தவிர வேறொன்றும் தெரியாதவர்களாக வளர்க்கப்படுகிறார்கள். இல்லையென்றால் கவனிப்பே இல்லாது குறிக்கோள் இல்லாது ஏதோ படிக்க வேண்டும் என்று படித்துவிட்டு, படித்த கல்விக்கு தகுதியில்லா வேலை பார்த்து காலம் கழிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

எல்லோருடனும் அனுசரித்து வாழும் பண்புகள் வளர்க்கப்படுவதில்லை. அதனால் தான் குடும்பங்கள் முறிகின்றன. பெற்றோருடன் சண்டை, அவர்களை சரியாக பராமரிப்பதில்லை, கணவன் மனைவி உறவில் விரிசல், தகாத உறவு, மனைவியே கணவனை ஆளை வைத்து கொல்லும் நிகழ்வுகள் இவையெல்லம் ஒரு வித சீரழிவை நமக்கு காட்டுகின்றன. நாம் சுதாரிக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை!

“கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா” என்ற எம்.ஜி.ஆர். பாடல் நினைவுக்கு வருகிறது. கண்ணும் காலும் இழுத்து செல்லும் இடங்களுக்கு மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் வேண்டத் தகாத கொடூரங்கள் நிகழ்கிறதா என்று நினைக்கத் தோன்றுகிறது.

சமீபத்தில் காவல் துறை கூடுதல் தலைமை இயக்குனர் ஒரு அறிக்கையில் பாலியல் சம்பந்தப்பட்ட இணையதள படங்களை பார்ப்பது குற்றம், காவல் துறை யார் இவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை கண்காணிக்கிறது என்ற எச்சரிக்கை அந்த அறிக்கையில் விடுத்துளார்கள். குழந்தைகளை பாலியலில் ஈடுபடுத்தி காட்சிகளை இணையதளத்தில் வெளியிடும் சர்வதேச கயவர்கள் உள்ளார்கள். இம்மாதிரியான விரசமான காட்சி கோப்புகள் நான்கு லட்சத்திற்கும் மேல் இணையதளத்தில் உள்ளன. அவற்றை கண்காணிப்பது மிக கடினம். அதனை தடுக்க காவல் துறை எடுத்து வரும் முயற்சி பாராட்டுக்குரியது. இதுவும் சமுதாய சீர்கேட்டின் ஒரு அங்கம்.

காலம் காலமாக நமது முன்னோர்கள் பின்பற்றிய நல்லவற்றை போற்றி நடந்தாலேபோதும். ‘முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்’ என்று அந்த எம்.ஜி.ஆர். பாடல் வரிகளை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆதிசங்கரருக்குப் பிறகு இந்தியாவை நாடு என்று நேசித்த இரு பெரியவர்கள் பாரதியாரும், விவேகானந்தரும் ஆவார்கள். இருவரும் இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்று இளைய தலைமுறைக்கு ஊக்கம் தந்தவர்கள்.

அவ்வப்போது நிகழும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் பெண்கள் பாதுகாப்பு மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதை காட்டுகிறது. சமீபத்தில் தெலுங்கானாவில் நடந்த பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியது. காவல் துறை 4 குற்றவாளிகளை சுட்டு வீழ்த்தியது மக்களிடம் வரவேற்பை பெற்றது. சுட்டது சரியா? தவறா? என்பது ஒருபுறம் இருக்க கொடூரமான குற்றங்களுக்கு அசாதாரண முடிவுகள் தவிர்க்க முடியாது. காவலர்கள் தடி எடுப்பதை எதிர்க்கும் மனித உரிமை ஆர்வலர்கள் இத்தகைய முடிவுகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

துப்பாக்கி சூடு சாதாரணமாக நடத்தக்கூடாது என்பது விதியானாலும் சில சமயம் துப்பாக்கி வேலாயுதமாக சமூக விரோதிகளை அடக்க உதவுகிறது என்பதும் உண்மை. வெற்றி புனையும் வேலே போற்றி! சமூக பிரச்சினைகள் பற்றிய விவாதங்களில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, இனவெறி களைதல், தீண்டாமை ஒழிப்பு, மாற்று திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்பு, ஒருமைப்பாட்டிற்கும் சமூக ஒற்றுமைக்கும் பாடுபடுதல் போன்ற உயரிய நோக்கங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

பெற்றோர்களை பராமரித்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பிள்ளைகளுக்கு உண்டு. செய்யத்தவறினால் முதியோர் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். எல்லாவற்றையும் சட்டத்தால் மட்டும் திருத்த முடியாது. நல்வழி காட்டும் கல்வி தான் இதற்கு தீர்வாக அமையும். உலகில் பல மாற்றங்கள் இளைஞர்கள் முனைப்பாக செயல்பட்டதால் சாத்தியமானது. புதிய சிந்தனைகள், வித்தியாசமான அணுகுமுறை தேவை. நடந்த பாதையிலே பயணம் பாதுகாப்பு அளிக்கலாம்; முன்னேற்றத்திற்கு உதவாது. நிலையான வளர்ச்சி கல்வி, மருத்துவம் சுகாதாரமான குடிநீர் போன்ற அடிப்படை துறைகளில் அடுத்த பத்து வருடங்களில் உலக நாடுகள் தன்னிறைவு பெறவேண்டும் என்பது குறிக்கோளாக வைக்கப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள் தங்கள் உரிமைகளை பெற பெரியவர்கள் உதவ வேண்டும். இளம் வயதை காரணம் காட்டி அவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் மறுக்கக்கூடாது.

ஐரோப்பாவில் உள்ள பின்லாந்து நாட்டு மக்கள் 34 வயதான, சன்னா மாரின் என்பவரை பிரதம மந்திரியாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதிலும் அவர் பெண் என்பது கூடுதல் சந்தோஷமான செய்தி. பாரத சமுதாயம் வாழ்கவே என்று பாடி மகிழ்ந்தார் பாரதி. அவரது காலத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மக்கள்தொகை 30 கோடி. இப்போது 130 கோடி!

அதில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள். “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நாடே இருக்குது தம்பி சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி”. கருணை பொறுமை கடமை மூன்றும் இருந்தால் தலைவனாகலாம் என்ற நினைவில் நீங்கா பாடல் எக்காலத்திற்கும் பொருந்தும். கால சுழற்சியை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு இளைய தலைமுறையை தயார் செய்ய வேண்டும்.

No comments:

Popular Posts